'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

குறித்தபடி தொடுத்த பாடல்கள் - 6

வான்புகழ் வள்ளுவமே சான்று

வஞ்சி விருத்தம்

1. பைந்தமிழ்ச் செம்மல் மன்னை வெங்கடேசன்

ஈன்றதாய் பசிகாண்பாள் எனினும்
சான்றவர் பழிகாணும் செய்கை
மாண்பினைச் சீரழிக்கும் காணீர்
வான்புகழ் வள்ளுவமே சான்று

நேரிசை வெண்பா

2. பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர் 

நன்னெறி கற்பித்து நானிலத்தில் மிக்குயர்வாய்  
முன்னிற்கும் முத்தான செம்மொழியாம் - தொன்மைமிகு
தேன்தமிழ் என்றென்றும் சிந்தைக்கு நல்விருந்தாம்
வான்புகழ் வள்ளுவமே சான்று.

3. செல்லையா வாமதேவன் 

ஆதி சிவனார் அருளிய செந்தமிழ்
நீதி மொழியாய் நிறையுமே - சோதியாய்த்
தேன்சுவை தித்திக்கத் தெய்வீக வாழ்வுரைக்கும்
வான்புகழ் வள்ளுவமே சான்று

4. பசுங்கிளி மணியன்

தேனுறை தார்வண்டு தேடியே பாடிடும் 
வானுறை தேவரும் வாழ்த்திடும் - தானுயர் 
தேன்தமிழ் திக்கெட்டும் தீயாய்ப் பரவிடும் 
வான்புகழ் வள்ளுவமே சான்று

5. மதுரா

தேனாகத் தித்திக்குந் தீந்தமிழை நாம்பயின்றால்
தானாகத் தேடிவருந் தன்னடக்கம் - வானேத்தும்
மேன்மக்கள் வாழ்த்துவரு மின்தமிழைக்
கொள்வோர்க்கு
வான்புகழ் வள்ளுவமே சான்று.

6. மாலா மாதவன் , சென்னை

பாரதம் போற்றும் பலகுறட் பாக்களும்
பாரத மாகப் பவனியில் ! - ஈரடித்
தேன்பலா! ஈவதோ தேன்சுவை ; தேடாயோ?
வான்புகழ் வள்ளுவமே சான்று

7. வ.க.கன்னியப்பன்

சோழவந்தா னூரின்வாழ் சொக்கத்தங் கம்போலே
தோழமை யோடென்றுந் தொண்டுசெய்(து) – 
ஆழித்தேர்
போன்றனை வர்நெஞ்சிற் போற்றநின்றார்
கன்னியப்பர்
“வான்புகழ் வள்ளுவமே சான்று” 

இன்னிசை வெண்பா

8. புனிதா கணேசு

தேன்றிகழ் இன்றமிழ் தேடிப் பருகவுங்      
கோன்மகிழ்  கோட்டமுங்  கோணாது  கொள்ளவும்   
ஊன்றிகழ்  வாழ்விலும் உண்மையாய் உய்யவும்  
வான்புகழ் வள்ளுவமே சான்று

9. சுப முருகானந்தம்

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
நம்மி லெவர்க்கும் நனிதே துணையாகும்
வீண்பழி வாராது வெற்றியுங் கிட்டுமாம்
வான்புகழ் வள்ளுவமே சான்று

No comments:

Post a Comment