'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

விரிஞாலத்து வேண்டிலம் இரவே!

(மாறுரையும் - நேருரையும்)

பொன் இனியன்

இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்              (1062)

‘இரவச்சம்’ அதிகாரத்துள் இரண்டாவதாக அமைந்த இக்குறட்பாவுக்கெழுந்த உரைகளின் கருத்தாக, ‘இரந்தும் ஒருவன் உயிர்வாழுமாறு வேண்டியிருப்பின் அவ்வாறு படைத்தவன் அலைந்து கெட்டு அழிவானாக’ என்றே இருக்கக் காண்கிறோம்.

இதுவே இக்குறட்பாவின் கூறுபொருளாகுமா என்பது நம் ஆய்வுக்குரியதாகிறது. குறளில் பயிலப்பட்டுள்ள தொடர்களின் சொற்பொருள் காணல் மற்றும் குறளின் ஒட்டுமொத்த உட்பொருள் காணல் என இருவகையானும் இதைக் கொண்டு செலுத்தலாம்.

வேள் என்பதை வேரடியாகக் கொண்ட சொல் வேண்டல். ‘வேண்டின் எனற்கு விரும்புவதாயின் என்பதே நேர்ப்பொருளாம். தாம்வேண்டின் நல்குவர் யாம்வேண்டும் கௌவை (1150) என்பதிற் போல இக்குறளிலும் ‘விருப்பம்’ எனப் பொருள்படுவதாகிறது. இதனை, ‘வேண்டி யிருப்பின், வேண்டும் நிலை உண்டாயின்,  வேண்டி (இறைவன்) விதித்தானாயின் என்றெல்லாம் உரைகளில்  விரித்துக் காட்டினர்.
 
முந்தை உரைகள் யாவும், ‘பரந்து கெடுக’ என்பதை ஒற்றைத் தொடராகக் கொண்டு ‘எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக’ எனக் காட்டின. ‘பரத்தல்’ எனற்குப் பரவுதல், அகலுதல், விரிதல் என்பன பொருளாம். காண்க: நின் பரத்த மார்பு (1311).  கெடுதல் எனற்கு அழிதல், பழுதுபடல், குன்றுதல்,  என்பன பொருளாம். பரத்தல், கெடுதல் ஆகிய இரண்டும் ஒன்றற்கொன்று எதிர்ப்பொருள் காட்டுவனவாதலை உன்னுக. பொருள்கோள் வைப்பில் இவை பிரித்துக் கூட்டப்பட வேண்டுவன.

கல்வி, ஒழுக்கம், அறம், அறிவு, ஊக்கம், மானம் ஆகிய வாழ்வியல் விழுமியங்களை முன்னிருத்திக் காட்டுவது குறளியல். வையத்து வாழ்வாங்கு வாழும் வகைகாட்ட எழுந்த நூல் வள்ளுவம்.  தனிமனித ஒழுக்கத்தையும் தளராத ஊக்கத்தையும் தாங்கி நின்று அறம் ஓவாது வாழ்தலை அறிவுறுத்த எழுந்தது குறள். இலமென்று அசைஇ இராதே (104), செய்க பொருளை (759), அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் (611), உடையரெனப்படுவது ஊக்கமே (591) எனப் பலவாறாய் மனித ஆற்றலை ஒல்லுமாறெல்லாம் உயர்த்திக் காட்டியவர் வள்ளுவர்.

‘சிவிகை ஊர்ந்தானோடு பொறுத்தான் என இடை இது வேண்டா அறத்தாறு’ (37) என்பதில், சமூக  ஏற்றத் தாழ்வுகளுக்கு அறம், ஊழ் ஆகியவற்றைக் காரணங் காட்டுதல், தன் கடமைப் பொறுப்பை மனிதன் தட்டிக்கழிப்பதாகும் என்பதைக் காட்டும். வள்ளுவர், தனியொருவனுக்கு உணவில்லை யெனில் அதைப் படைப்பின் குற்றமாகக் குறித்திருப்பாரா  என்பது  ஐயத்துக்குரியதாம்.

சில மானமில்லாச் சோம்பேறிகள் “இது எம் தலை யெழுத்து” என்றும், “அன்றெழுதினவன் அழித்தெழுதான்” என்றும் சொல்லிக்கொண்டு திரிந்தனர். அச்சோம்பேறிகள் கூற்றை யொப்புக் கொள்வதுபோல், இறைவன்மேல் வைத்து வன்மையாகக் கண்டித்தார் எனத் தம் உரை விரிவில் குறிக்கிறார் பாவாணர்.

தாம் கண்டன, கருதுவன, உணர்ந்தன, ஒப்பாதன என்பவற்றை இனங் காட்டுமாறு பன்னூல் துணிவு (21), நூலோர் எண்ணிய (941), என்ப அறியார் (76), யாமறிவதில்லை (61), யாமெய்யாக் கண்டவற்றுள் (300) என்பன போன்ற முன்னொட்டுகளை வைத்துச் செலுத்தும் குறளின் மொழிநடையை நோக்கின் வள்ளுவர் எவர் கூற்றையும் ஒப்புக் கொள்வதுபோல் காட்டிக்கொண்டாரில்லை என்பது துணியலாம்.
 
வறுமையில் உழன்று யாசித்துத்தான் உயிர்வாழ வேண்டியிருப்பின் அவ்வாறு படைத்த இறைவனே கெடுதற்குரியவன் என்றது வள்ளுவர் இறைவன்பாற் கொண்ட அறச்சீற்றம் எனக் குறித்தாருமுளர்.

வள்ளுவர் இறை மறுப்பாளர் அல்லராயினும், ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் (505)’ என நாட்டியவர்.   மெய்வருத்த முயற்சி தன் கூலி(யைத்) தரும் (619) என உறுதி காட்டியவர்; ஒல்லானை ஒல்லாது ஒளி (870); அதனால் முயலுதலே வாழ்வில் தலையாயது (47) என்பதை  அறிவுறுத்தியவர்.

இக்குறளில், உலகியற்றியான் என்பதை ‘உலகைப் படைத்தவனாகிய’ இறைவன் எனக் கொண்டமைந்த உரைகளே பெரும்பான்மையின. சிலரதை ‘உலகியலை நடத்துபவனாகிய’ அரசன் எனக் காட்டியதும் உண்டு. அரசன் நடத்துவது ஆட்சியியலேயாகும். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் (385) எனும் பொருளியல் (மட்டும்) அரசனுக்கு உரியதாம். உலகின் விரிவு கொண்டு கருதின் அஃதியற்றுதல் அரசனுக்கு எவ்வாற்றானும் ஏலுவதில்லை என்பதும் அது இறைவனைச் சுட்டுவதாகக் கொள்வதே இயல்பாம் என்பதும் பெறப்படும். ஆயினும் குறளின் கருத்து அதுவுமின்றாம். 

உலகியற்றியான் என்பது யாரைக் குறித்ததெனத் தெளியச் சுட்டாமலேயே, அதற்குக் காரணமாக இருந்தவன் எனப் பொதுப்பட அமைந்த உரைகளும் உள. அது யார் என்பது விளக்கக் கூடாததாயினும்  ‘கெடுக உலகியற்றியான்’ எனும் தொடர் அப்படி ஒருவன் இருப்பதை உறுதி காட்டுவதாகவே  உரைகள் அமைந்தன. அதனை, இவ்வுலகைப் ‘படைத்தவன் என ஒருவன் இருந்தால்’ என வேண்டாது நீட்டித்துத் தம் இறைமறுப்புச் சிந்தனையை வலிந்து திணித்துரை செய்தனர் நன்னன் போன்றோர்.

படைப்புகள் யாவும் இருமைத் திறத்தன; எந்த ஒன்றும் அதன் எதிரதா இல்லாதது இல்லை என்பதே இயற்பு. உலகத்தியற்கை இருவேறு (374) எனக் குறள் குறிப்பது காண்க. நிலையாமையைப் போல இருமைப்பண்பும் இயற்பின் பெருவன்மை யுடையதொன்றாகும். இரந்துயிர் வாழ்தற்கு இறைவனைப் பொறுப்பாக்கி உரைசெய்தா ரெல்லாம், கரவாது உவந்து ஈவாரைப் படைத்தவனும் அவனே என்பதை எண்ணாது போதல் என்? இருமை வகைதெரிந்து (23) நிற்பார் எவரும் ‘இறைவன்பால்’ அறச்சீற்றம் காட்டினார் வள்ளுவர் எனக் கருதுதற் கிடமில்லையாம்.

அடுபுற்கை தெள்நீர் ஆயினும் தாள்தந்தது உணலே இனிது (1065) என்றும் உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும் உப்பக்கம் காண்பர் (620) எனவும் தன்மான உணர்வையும் தன்முயற்சியின் வலிவையும் எடுத்துகாட்டிய குறளாசான், வறிய(வன்) நிலைக்கு இறைவனை வசைபாடுவார் என எண்ணுதற் கிடமில்லை என்க.

‘உலகியற்று பரந்தியான், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், கெடுக’ எனும் வைப்பில் இக்குறட்பொருள் சிறந்து விளங்குதல் காண்க.

உலகம் பரந்துபட இயற்றப் பட்டிருத்தலான் இரந்து வாழ்வேம் என விரும்புபவன் ஒழியக்கடவன் என்பதே இதன் பொருளாம்.

‘இது, இரக்குமதனின் இறத்தல் அமையும் என்றது’ என இக்குறட்பாவின் கருதுகோளை மிகத் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறார் மணக்குடவர். ஆயினும், இதனை இரந்துண்டு வாழ்வானை நோக்கியது எனக் கொள்ளாமல், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக என உரையில் பிறழ்வு காட்டியது குறளின் நுவல் நோக்கத்துக்கு மாறுபட்டது.

வேண்டுதலாய் இதில் குறிக்கப்பட்டது ‘இரந்தும் உயிர்வாழ்தலை’. வாழ்தல் வேண்டி இரத்தலை மேற்கொள்பவன் முயற்றுதல் அற்றவனேயாவான். ‘ஆள்வினையின்மையே’ (618) பழித்தற்குரிதாய்க் குறள் காட்டுகிறது. இன்மை யிடும்பை இரந்து தீர்வாம் எனும் வன்மையின் வன்பாட்டது என இரப்பானுக்கு (ஏற்கனவே) எடுத்துரைத்திருப்பதும்  எண்ணத் தக்கது.

காண்க: பின்குறிப்பு: இக்குறட்பாவில்,  பரந்துபட இயற்றப்பட்டுள்ளது இவ்வுலகம் என்பதைத் தெரியக் காட்டினார். அதில் பல்லாற்றான் வாய்ப்புகளும் பலப்பலவாதலைக் குறிப்பா லுணர்த்தினார். அவரவர் அறிவுக்கும் திறனுக்கும் தக்க வினைசெய்து பொருளீட்டவும் பொருந்தி வாழவும் வகையுண்டு என்பதை அருத்தாபத்தி யாக்கினார்.

உள்ள வெறுக்கையே ஒருவர்க்கு உரமாவது, அஃதின்றி இரந்துண்டு ஊனோம்புதலை ஒருவன் விரும்புவானாகில் அவன் இழிந்து கெடத்தக்கவன் எனக் காட்டுகிறார்.

‘ஒட்டார் பின் சென்று வாழ்தலின் அந்நிலையே ஒருவன் கெட்டான் எனப்படுதல் நன்று’ (967) என்னுமாப் போல இலம் என்று உளம்பொன்றி இரந்துயிர் வாழ்தலின் கெடுதல் நன்று என்றவாறு. வள்ளுவர் இக்குறளில், படைத்தவனையும் பழிக்கவில்லை; பாராள்பவனையும் இழித்தா ரில்லை; உழைத்துண்டு வாழப் பழகுமாறு உணர்த்தக் காட்டியதா மன்றி உலகைப் படைத்தவனைப் பழிக்குமாறான அறச்சீற்றமாகா.

பின்குறிப்பு: கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள எண்கள் பரிமேலழகர் கொண்டு குறித்தபடியான குறள்வரிசை எண்கள்.  மணக்குடவர் காட்டியுள்ள குறள் வரிசையில் இவ்வதிகாரம் ‘இரப்பாரை யெல்லாம் இரவன்மின் என்று இரப்பன் (1) எனும் தோற்றுவாய் கொண்டும், எந்நிலையிலும் இரப்புக்கு இடந்தராமை சால்புடையது (10) எனும் ஈற்றினைக் கொண்டும் அமைந்துள்ளது. (தனக்காக என்றில்லாமல்) ஆவிற்கு நீரென் றிரப்பதும் இளித்தக்கது (2), இன்மையை இரந்து தீர்வாம் என்றெண்ணுவதே கொடிது (3), இரப்பு ஏமாப்பில்லது (4), உவந்தீவார் கண்ணும் இரவாமை நன்று (7) என்றெல்லாம் குறித்துக் காட்டிய பின்னரும் அவற்றை உள்வாங்காமலும் உற்று உணராமலும், இரந்தும் உயிர் வாழ்தலை ஒருவன் விரும்புவா னாயின் அவன் கெடுக (8) என்கிறார்.

இதனை, அழச்சொல்ல இடித்துரைக்கும் பெரியார் தம் பான்மையதாக் கொள்ளலாகும். இவ்வாறு கடிதோச்சிய வள்ளுவர் அடுத்த இருபாக்களில், தன்னுழைப்பால் பெற்ற உணவு எத்துணை எளியதாயினும் அதுவே இனிமையுடையது (9), எந்நிலையிலும் இரப்புக்கு இடந்தராமை சால்புடையது (10) எனச் சொல்லி மெல்ல எறிவதைக் காணலாம். 

இவற்றோடு, பிறர் நம் முன் நின்று இரக்கும்நிலை மனம் இளகத்தக்கது. (அந்நிலையில்) ஈயாது கரப்பார்க்கு இருப்பதும் கெடும் (5); அவ்வாறு கரப்பவர் கூற்றுவன் வரும்போது தம் உயிரை மறைத்தற்கேலுவதில்லை (6) என்று கரப்புடைய செல்வர்க்கு உரைக்கிறார். இவ்வதிகாரப் பாடல்கள் யாவும் இல்லென்றிரப்பாரையும் ஈயாத கரப்பாரையும் நோக்கியும் நோக்கி உரைக்கப் பட்டவையே.

No comments:

Post a Comment