'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

விழி விழியே… (அந்தாதி)

பைந்தமிழ்ப் பாமணி
ஜெனிஅசோக்

(நேரிசை வெண்பா)

காலம் வருமென்று காலங் கடத்துங்கால்
ஞால மழிந்தாலும் ஞானமிரா; - பாலமதாய்
வாழ வழிசெய்கும் வாய்மை யுனைக்காக்கும்
சூழல் விரட்டின் துரத்து. 1

துரத்துந் துயரினாற் றூய்மை யிழப்பின்
சிரத்திற் சகதியைச் சேர்ப்பாய் - பரத்தைக்
கரத்திற் கொணருமாம் காசில் மனங்கள்
சிரத்தை யுடன்பணி செய். 2

செய்வதை நாடோறும் செவ்வனே செய்குதல்
செய்வன யாவிலுஞ் சீரலோ - செய்தபின்
உய்யுமுன் னாவியு மூனுமே மண்தொடு
பெய்மழை போற்செழிக்கும் பேறு 3

பேற்றினைக் காத்திரு பெண்மையாய்ச் சிந்தையை
மாற்றிலி யாக்குவாய் மானிடா – மாற்றிடாய்
ஊருளார் வாய்மொழி ஊடறுத் தாலுமே
ஆருளா ரென்றழா யாறு. 4

ஆற்றொணாக் காயமோ ஆற்றுப் படுத்தலாம்
ஏற்றொணா வேணியென் றேதுள – கீற்றொணா
வோவியம் தானிலை ஓவியன் நீயலோ
காவிய மாக்குன் கனா. 5

கனவுக் குயிரூட்டக் கண்சொரியும் சோர்வேன்
கனஞ்செய் கனமடையக் காண்பாய் - நனவில்
குணமுடைப் பன்முகங் கொண்டோங்கக் காண்பாய்
பணத்தாசை விட்டொழித்துப் பார். 6

பார்போற்றும் பெண்மையைப் பக்குவமாய்க் காக்குங்கால்
பேர்சேர்க்கும் பண்பினால் பேறலவோ - மார்தட்டி
ஆணென் றுரைத்துன் அகத்தன்பைக் காட்டுங்கால்
வீணென் றகங்காரம் வீழ்த்து. 7

வீழ்த்தும் பெருமையது விட்டகலத் திட்டமிட்டுத்
தாழ்த்துன் தலைக்கனம் தாழாயே - ஆழ்த்தும்
சலிப்பென்ப வந்துறையச் சாய்க்கும் விழிப்பாய்
வலிக்குள் விளையும் வழி. 8

வழிசொல்லாப் பாருளரின் வஞ்சனையில் மாளாய்
பழிசொல்லும் வாய்மூடார் பாசம் - அழியாமை
அன்பென் றுணர வகத்தொளி கொஞ்சுமே
என்புடைய ராவா ரெவர். 9

எவரா யிருந்து மெரிமலைக் கோப
மவரைக் கொளுத்து மதிலே - தவற்றை
யுணர்வார் செழிப்பா ருடையார் மகிழ்வார்
உணவா யுருக்க முளார். 10

உளரொடு கூடு முலகினி லுள்ளோம்
உளமுடைக் காய முறுவோம் - தளரா
முயற்சியி லுண்டொரு முத்தியென் றின்றே
முயல்வதாற் றோல்விக்கு முற்று. 11

முற்றுகை யிட்டவுன் முற்கோபங் கேடாகும்
பற்றிய விச்சையும் பாழாக்கும் - தொற்றுநோய்
போலவுன் னாயுளைப் போராட வைப்பதெலாம்
வாலாக்கும் வாழ்வில் வரின் 12

வருமென் றறிந்து வருமுன் தடுத்துக்
கருகாதுன் வாழ்வினைக் காப்பாய் - மெருகே
அடிமை விலங்குடைத் தாற்றலைக் காட்டிப்
படியேறப் பாரிற் பழகு. 13

பழகுதல் நன்று பழுதிலா வெல்லாம்
அழகுசே ரீகை யருமை - தொழவெழும்
மற்றவர் கைகள் மகுடஞ் சிரமேறும்
நற்செய லாற்றல் நலம் 14

நலமா னதையே நனவினி லெண்ணி
நலமுறு வாய்நனி நண்ப - நிலமே
உனதடி தேடும் உயர்வுகள் கூடும்
தினமுனை யாய்ந்தே தெளி. 15

தெளிதலின் முன்னர் திரளுமே யின்னல்
ஒளிவரு முன்ன ரொழியாய் - களியுறும்
நாள்வரும் நாடிநல் நாற்றுனைத் தேடிநில்
தோள்தரும் நட்புத் துலங்கு 16

துலங்கவே தூண்டல் சுமக்கவே சோகம்
விலங்கல நீயும் விளங்கு - கலங்கிய
நீரும் தெளியும் நிலவும் வளரும்பார்
சேரும் பலகொற்றம் தேடு 17

தேடலிற் காணொணாச் சேதியென் றொன்றுளதோ
நாடக மேடையே நம்வாழ்க்கை - ஆடுவோம்
நாளை விடியும் நமக்கெனப் பாடுவோம்
காளையர் பூவையர் காத்து 18

காத்துத்தன் கற்பினைக் கன்னியர் வாழ்கவே
ஆத்திரந் தாழ்த்துவீ ராடவர் - மாத்திரை
தப்பினால் மாளுவீர் தண்டனை மாறாநீ
ருப்பிலா வுண்டிக்கே யொப்பு 19

ஒப்பிலா வாழ்க்கை யொருமுறை வாழுங்கால்
வெப்பங் குளிரெலாம் வேண்டுமே - இப்பூவில்
விட்டகண் ணீரெல்லாம் வீணாகா விண்ணீராய்
நட்டத்தைப் போக்குங்கா லம். 20

2 comments:

  1. எனது வெண்பா பிரசுரமாகியிருப்பது பேருவகை! நன்றி தமிழ்க்குதிர் மின்னதழ்!!!

    ReplyDelete