Nov 15, 2020
ஆசிரியர் பக்கம்
அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிர் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல சிறப்பான படைப்புகளை உருவாக்கித் தமிழ்க்குதிர் மின்னிதழுக்கு ஆதரவு அளிக்கும் படைப்பாளர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.
கவிஞரே ஆயினும் பிழைகளின்றிக் கவிதை, கதை, கட்டுரைகள் இயற்றல் இக்காலத்தில் அரிதாகி வருகிறது. இலக்கணம் என்பது ஒரு மொழி எப்படிப் பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவும் அம் மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுவதாகும். ஒரு மொழியின் இயல்புத்தன்மை கெடுவது அம்மொழியைச் சரியாய்க் கல்லாததாலும் பிறமொழிகளின் கலப்பாலும் ஏற்படுகிறது.
பைந்தமிழ்ச் சோலையின் நோக்கம் இவ்வாறு ஏற்படும் பிழைகளைக் களைந்து மொழியைக் கற்க உதவுவதாகும். பைந்தமிழ்ச்சோலை பாட்டியற்றுக பயிற்சிகளின் மூலம் கவிஞர்களைச் செம்மைப்படுத்தி வருகிறது. தமிழ்க்குதிருக்கு அனுப்பப்படும் படைப்புகளிளும் பிழைகள் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே வெளியிடப் படுகின்றன. இது கவிஞர்கள் தம் படைப்புகளில் காணும் பிழைகளைத் திருத்திக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
தமிழைத் தமிழாய்ப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும். தாய்மொழியாம் தமிழைப் பிழையின்றிக் கற்றுக்கொண்டு வளருங்கள். சமுதாயத்தைச் சீர்திருத்தும் நோக்கம் கொண்டு படைப்புகளை உருவாக்குங்கள். மகிழ்ந்திருங்கள்.
வாழ்க
தமிழ்! பரவுக மரபு!
தமிழன்புடன்
மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
Nov 14, 2020
கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது
பகுதி - 7
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
காதலியின்
அடையாளம் கூறல்
(கேசாதிபாதம்)
கொண்டல் சுருட்டிவைத்த கொண்டையில்.! வெள்ளியன்ன
வண்ணமுத்தைச் சூடிவைத்துக் கொண்டவள்...! கொண்டைமுத்தைக்.!
கொண்டல் இடைப்பறக்கும் கொக்கென்றே கண்டுகண்டு
கெண்டைரெண்டும் உண்ணுமென்(று) அங்கிங்(கு)ஓடிக்கலங்கும்..!
வான்பிறையாய் நெற்றியது தோன்ற..! நிறைகுழலில்
தேனொழுகும் முல்லைமலர் ஊன்ற..! இரவெழிலாய்
வந்ததுபோல் மின்மினியைக் காட்டும்.. கழுத்தொளிரும்
அந்தமணிப் பேரொழுங்கின் தோற்றம்..! அடடடடா.!
காமன் படைக்கலமோ? கண்மை எழுதிவைத்த
ஏமன் கொலைப்பொருளோ? ஏந்திழையாள் வாள்விழிகள்
தாக்கத் தடுக்கும் உறையோஒ?! நீள்கரையோ.?
பார்க்கப் பலபொருளைக் காட்டுவது தான்முறையோ..!
என்போல வேகருத்(து)..! இன்னும் உடல்சிறுத்துக்.!
கண்மேல் புருவம் இருக்கும் கலைமிகுத்துக்..!
காவிமலர் பூந்த கருப்புவண்டைப் போல்.!உயிர்
ஆவி குடிக்கும் அவள்விழிகள்..! தூவியுடன்
அஞ்சனம் பூசி அழகு மொழிபேசி
வஞ்சனை தீர்க்கவந்த வாள்விழிகள்..! பூங்கிளிகள்..!
ஈரிதழ்ப் பூப்போல் இருக்கும்...! அதனழகில்
ஊரிலுள்..ளோர் கண்வண்(டு) ஓயாது வந்துமொய்க்கும்..!
செம்பவளம் போலவெழில் மின்னும்... உதடுகளைச்
செங்கழுநீர்ப் பூவெனலாம் இன்னும்... இதழுள்ளே
பாலில் குளிந்ததோ பால்நிலவில் தோய்ந்ததோ
நீலக் கடல்பிறந்த நித்திலமோ யானறியேன்
நாலெட்டும் பல்லோ நடுகல்லோ நான்சாக
ஏழெட்டுத் திங்களாய்த் தீட்டியொளி கூட்டினளோ..!
தங்கம் படையெடுப்புக் கொள்ளும்..! கழுத்தழகின்
அங்கம் மறைத்தபடி மாலை மணிதுள்ளும்..!
கண்ணை உருத்தும் முலைகள் கவின்கலைகள்
முன்னம் கருத்தவிளந் தெங்கின் சிறுகுலைகள்..!
கட்டெறும்பைப் போல இடையாள் எழிலுடையாள்
எட்டுமட்டும் தேடினும் காணக் கிடையாஅ..!
கொங்கைகுழைந் தாட இடையொடியும் என்றஞ்சித்
தங்கவிழை மேகலையால் தானிறுக்கிக் கட்டுவாள்..!
வாழைத் தொடையேறித் தோற்றதோ வாய்புலம்பித்
தாளில் கிடந்து கொலுசரற்றித் தள்ளாடப்!
பஞ்சிதழைப் பாதமாக்கிக் கொண்டாள்வான் பால்நிலவை
அஞ்சிரண்டு கால்விரலாய் ஆங்கமைத்துச் சென்றவள்..!
வஞ்சியவள் பேரழகை வாய்த்தவெழிற் சீரழகைச்
செந்தமிழில் செப்பச் செவிகொடுத்துக் கேட்டிருந்தாய்..!
வானிலவைக் காட்ட வகுப்பெடுக்க வேண்டுமோ..!
தேனிலவாம் தேவதையின் தேகவெழிற் பார்த்தாலே..!
என்னவள் என்றே அறிவாய்.! எடுத்துநான்
சொன்னவை எல்லாம் சரிதானெ னப்புரிவாய்.!
வள்ளிமுத்துச் சொல்லித்தான் வந்ததாய் வாயெடுத்துச்
சொல்லிப்பார் தோற்றத்தில் மாற்றத்தைக் கூட்டுவாள்..!
கண்ணிரண்டைக் காதுவரை நீட்டுவாள் அங்கிலங்கும்
பொன்குழையில் மின்னற் பொலிவுறக்கூர் தீட்டுவாள்..!
(கொண்டல் – மேகம்,
காவிமலர் – தாமரைப்பூ, குழை - கம்மல்)
தூது தொடரும்...
காதலோடு கண்மயங்கும்
கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை
காதலோடு கண்மயங்கும் காமரசம் உள்முயங்கும்
ஆதரவாய்க் கவிதைகளோ பொங்கும் - மனம்
ஆசையலை ஆடிடவே தங்கும்.
பாதமுதல் கேசமீது பார்த்தலையும் கண்களுடன்
வாதம் செய்து வம்பிழுக்கும் நெஞ்சம் - அவள்
வடிவழகைக் கண்டுமிகக் கெஞ்சும்
மோதவரும் முன்னழகும் மோகமூட்டும் பின்னழகும்
காதலோடு கவிதைசொலத் தூண்டும் - அடடா
காத்திருக்கும் சொற்களெலாம் வேண்டும்
பாதரசம் போலமின்னும் பார்வைகளோ போதையூட்டும்
மாதவளோ தேன்வழியும் கிண்ணம் - எனை
மயக்குதடி நினைவிலெழும் எண்ணம்
சிவ நடமாமே!
பைந்தமிழ்ச் செம்மல் செல்லையா வாமதேவன்
தத்தத்தன தத்தத்
தனதன
தத்தத்தன தத்தத்
தனதன
தத்தத்தன தத்தத்
தனதன தனதானா
நட்டத்தொளிர்
முத்துத் திருமுகம்
நக்கச்சடை சித்தத் தவநெறி
நற்சத்தியும் அச்சத் தழிவதும் நிறைவாக
நச்சுப்பட நட்புப்
பெறுநதி
நத்தப்பிறை மொத்தச் சரணென
ஒத்துக்கொள அற்பத் தனமவை இலையாமே
இட்டத்தொடு சொக்குப்
புருவமும்
அட்டிக்குனி வுற்றுக் குறைகறை
எத்தத்தடை மக்கற் கருணையின் வடிவாமே
இச்சைக்கொரு
முற்றுத் திரையென
அத்தக்கரம் பற்றிப் பணிபவர்
எக்குற்றமும் அற்றுப் பொலிவுறு நகையாமே
பட்டப்பகல் ஒப்பத்
தகுநிறம்
பத்திப்படை கொட்டுக் கொடுமலம்
பற்றிப்புனி தத்தைத் தருபவ ளமதாமே
பெற்றுப்பதி
விட்டுக் கழிபொருள்
இற்றுக்கடை சிச்சக் கரவழி
மற்றெப்பொருள் அற்றுப்புனிதவெ(ண்) ணிறமாமே
வெட்டிப்பகை
வெட்டப் பெருவிழி
நெற்றிக்கலை நிற்கத் தலைநிமிர்
வெற்றித்திரு முக்கட் பரமனின் அருளாமே
மெச்சப்படை வட்டத்
தமருகம்
கட்டுத்தளை பற்றத் திருவடி
முத்திக்கனி கொட்டித் தருசிவ நடமாமே
( நச்சு – விரும்பு,
நத்து – வளர், அத்தம் – தங்கம், அட்டி
- பொருத்தமாகச் சேர்ந்து)
கீழ்த்திடும் மனை
(மாறுரையும் நேருரையும்)
பைந்தமிழ்ப் பாமணி பொன். இனியன்
‘பெண்மை வாழ்க’வென்று கூத்திட்டவர் மகாகவி பாரதியார். காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினுங் கைகொடுத்து மாதரறங்கள் யாவையும் மாண்புறச் செய்யும் பெண்கள் சமூகத்தின் சரிபாதி என்பதால், பெண்ணுக்கு வரும் பீழை எதுவாயினும் அது ஆணுக்குமாம் என்று காட்டினார். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் என்று உறுதி காட்டினார். ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’ என்று ரௌத்திரம் காட்டினார்.
20ஆம் நூற்றாண்டு பாரதியார் கொண்ட பாடுபொருளை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ எனப்பெருமை பேசி தம் குறளில் காட்டிய வள்ளுவர், மகளிரே போல தானும் ஒருமை கொண்டு தன்னை ஒழுகின் பெருமை உண்டு (974) எனக் கற்பை ஆணுக்கு மாக்கிக் கற்பித்தார்.
குறட்டொகுதியுள் அமைந்த,
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது (901)
எனும் குறளுக்கு எழுந்த உரைகள் யாவிலும், ‘மனைவியின் சொற்கேட்டு’ நடப்பவன் மாட்சி யடைதல் இல்லை’ எனும் கருத்தையே முன்னிருத்திக் காட்டுகின்றன. இப்படியானதொரு கருத்தை வள்ளுவர் வைத்திருப்பாரா எனும் ஒரு திகைப்பைத் தருவனவாய் உள்ளன இவ்வுரைகள்.
அது கொண்டு, முன் உரைகள் சிலவற்றைச் சற்றே உரசி அவற்றின் உண்மையறிய முயலுதலும் இக்கருத்துக்கு இயைபுடையவா றாகவோ அன்றி இதனைத் தாங்குமா றாகவோ குறட்டொகுதியுள் வேறெதுவும் கூறப்பட்டுள்ளதா என ஆய்வதும் இக்குறட்பாவுக்கான நேரிய பொருளைத் தேர்தலும் இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
மங்கலம் என்ப(து) மனைமாட்சி (60) என இல்வாழ்வின் சிறப்பை எடுத்தியம்புகிறது குறள். இல்லதென் இல்லவள் மாண்பானால் (53) எனக் குறித்த வள்ளுவர் அத்தகைய இல்லாள் சொற்கேட்டு நடத்தலை இழிவாகக் குறித்திருப்பாரா என்பது சிந்தித்தற் குரியதொன்றாகும்.
அன்பும் அறனுமே இல்லறத்துக்கு அடிப்படையாவ தும் ஒருவன் தன் மனையாளை இன்றுணையாக் கொண்டே இல்லறத்தை நடத்த வேண்டி யிருப்பதும் கருத, தன் மனைவியை விரும்பாமை எனுங் கருத்து ஒப்புமாறில்லை. இல்லாள் தோள் அமையார் இமையாரின் வாழினும் பாடிலரே (906) எனுங் குறளை ஈண்டு நினைக.
மனையாளைக் காதலித்து ஒழுகுவார் நற்பயனைப் பெறார்; யாதானும் ஒரு வினையைச் செய்து முடிக்க வேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை என்பது மணக்குடவர் உரை.
இன்பம் காரணமாகத் தன் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை எய்தார் இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையூறென்று இகழும் பொருளும் அவ்வின்பம் என்பது பரிமேலழகருரை
அவ்வின்பம் அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது அவளாற் பயனாய அறத்தினும் அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம் என உரை விளக்கம் வைத்துள்ளார்.
இன்பம் பற்றி மனைவியை அளவிறந்து காதலித்து அவர் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார். இன்பத்திற்கும் அறத்திற்கும் ஏதுவான பொருள் ஈட்டுதலை விரும்புவார் அதற்குத் தடையெனக்கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் பெண் பித்தமே என உரைக்கிறார் பாவாணர்.
மேற்கண்ட உரைக்கருத்துகள் திருக்குறளோடு எத்துணை இசைவும் நெருக்கமும் உடையன என்பதையும், திருக்குறளில் அமைந்துள்ள சொற்கு இவர்கள் பொருள்காட்டிய விதங் குறித்தும் காண்போம்.
மனைவியை விழையாமை எனும் கருத்தை உன்னுகையில் கீழ்க்காணுமாறான கேள்விக்கு அது இடந்தருவதாகிறது. இயல்புடைய மூவருள் ஒருத்தியாகிய தன் துணையை விழையாதிருத்தல் தகுவதாமா? அது மனைத்தக்க தாகுமா? விரும்பாத ஒருவரைத் துணைக்கொண்டு இல்லறம் நடத்துதலாவது, கூடினுங் கூடாத செப்பின் புணர்ச்சி போலாவதாம். அது குடங்கருள் பாம்பொடு உடனுறைதலை ஒக்குமாதலின் இவர் இல்புரிந்த புகழ் (59) எட்டுதல் எவ்வாறாம்?
தன் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை எய்தார் எனும் பரிமேலழகர் கூற்று குறளிலிருந்து கற்றதன்றாம்; மனு முதலிய நூல்களிலிருந்து பெற்றதாகும். அவை தாம் பெண்ணை அறிவிலி யாகவும் உரிமையிலியாகவும் பாவிப்பன. தமிழிலக்கிய வரலாற்றில் ‘வாழ்க்கைத் துணை’ என்ற சொல்லை வடிவமைத்துக் கொடுத்த முதற் பாவலராகிய வள்ளுவர் தம் நூலில் வாழ்க்கைத் துணைநலம்’ என ஓர் அதிகாரத்தை வைத்தமைத்தவராகவும் திகழ்கிறார் என்பதை எண்ணுங்கால் மனைவியைப் பழிக்குமாறான ஒரு கருத்தை கூறினாரெனக் கொள்ளுதற் கிடமில்லை.
குறட்டொகுதியுள், விழைவு என்பதைச் சொல்லடியாகக் கொண்டமைந்த பாக்கள் 18 உள்ளன. பிற எல்லாப் பாக்களுக்கும், விழைவு எனற்கு விரும்புதல் என்ற பொருளை (மட்டுமே) காட்டிய உரையாளர்கள் 901, 902 ஆகிய இரு பாக்களுக்கு மட்டும் வரம்பற்ற/அளவிறந்த/ அடிமை யாகும் அளவு என முன்னடைவு கொண்டு வலிந்து நீட்டித்துக் காட்டினர்.
வள்ளுவர் கருத்து அதுவாமாயின், கடிதோச்சி (562), இறந்தமைந்த (900) என்பன போல அவரே தக்கதொரு முன்னடைவைத் தந்து அமைத்திருக்க மாட்டாரா என்பதும் கருதத் தக்கதாம். விழைவார் என்பதே குறள் குறிப்பாயிருக்க அதனை ‘அவள் தன்மையராய் ஒழுகுவார்’ எனத் திரித்தும், ‘இன்பம் காரணமாக’ எனப் புறத்திருந்து வருவித்துப் பொருத்தியும் காட்டுதல் வேண்டற்பாலதின்றாம்.
இவ்வாறு குறள் குறிப்பின்றியே புறத்திருந்து கொண்டுவந்து பொருத்திக் காட்டிய தம் உரைக் கருத்துக்கு முட்டுக்கொடுக்கக் கருதி, ‘இன்பங் காரணமாக / காம வேட்கையால் அவட்கு அடிமைப் பட்டு’ என்ற ஒரு காரணத்தை உரையாசிரியர்கள் கற்பிக்கிறார்கள்.
இது முறையானதா என்பது ஒருபுறமிருக்க, இதை ஒருவாறு ஒப்புவதெனினும், கடிந்தொர வேண்டியது மனைவிக்கு அடிமையாக்கும் பெண் பித்தமே யாவதும் அக்குற்றத்தைத் துடைத்துக்கொள்ள வேண்டுவது அவனேயாவதும் பெறப்படும்.
காமம் வேண்டப்படுவதொன்றாயினும் அது வரைகடவாது காத்தல் வேண்டும் எனுங் கருத்துடையராகி, ‘அளவிறந்த காம விச்சையால்’ என்ற ஒரு தொடரையும் உரையில் வைத்துக் காட்டுவாரும் உளர். உண்ணலில் (943) தொடங்கி ஊடுதல் (1302) வரையிலும் எல்லா நிலையிலும்; அளவறிந்து வாழ்தலையும் (479) எவ்விடத்தும் அளவின்கண் (அமைந்து) நிற்றலையும் ஓர் ஆற்றலாகவும் (287) ஒழுக்காறாகவும் (286) திருவள்ளுவர் குறிக்கிறார். அதனால் எதையும் முறையோடும் நிறைவோடும் துய்த்தலைக் குறள் தடைப்படுத்துதல் இல்லை என்பதும் ஈண்டு ஓர்தற்குரியதாம்.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூவும் மேவற் றாகும்
- தொல்காப்பியம் பொருள் (27)
விடுதலையும் இன்ப நாட்டமும் எல்லா உயிர்க்கும் இயல்பான தொன்றாவதும், இவ்வின்ப நாட்டமே உயிர்களின் தொடர் அறாது நிலைபெறச் செய்யும் இயற்பு உத்தியாதலும் ஓர்க.
கடல்மற்றுக் காமவின்பம் (1166) எனவும், பனைத் துணையும் காமம்வரின் தினைத்துணையும் ஊடாமை வேண்டும் எனவும் குறளில் குறித்திருப்பது(ம்) கருதின், ‘மனைவியை அளவிறந்து காதலித்து அவள் எண்ணப்படி நடப்பவன் சிறப்படையமாட்டான்’ என்பது எவ்வாற்றானும் வள்ளுவத்தோடு பொருந்திய கருத்தாகாதென்பது தேற்றமாம்.
‘பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையூறென்று இகழும் பொருளும் அவ்வின்பம்’ என்பது பரிமேலழகர் உரை. பொருள் ஈட்டுதலை விரும்புவார் அதற்குத் தடையெனக்கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் பெண்பித்தமே என்பது பாவாணர் உரை.
காதலும் வீரமும் தம்மிரு கண்களாய்ப் போற்றியது தமிழர் வாழ்வியலாகும். வினையாற்றலும் காமந் துய்த்தலும் ஒன்றற்கொன்று பகையாவதில்லை என்பதை ‘வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து’ (1268) எனக் குறளே குறித்துக் காட்டியிருப்பது கருதின், யாதானும் ஒரு வினையைச் செய்துமுடிக்க வேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை என்றது உரையன்மை யென்க.
‘மனை’ எனும் குறள் குறிப்பை மனையாள் எனும் கருத்தின் அடிப்படையிலேயே அனைவரும் காட்டியுள்ளனர். வள்ளுவர்தம் எண்ணம் மனைவியைப் பற்றியதாயிருப்பின் மனையாள் (904) என இவ்வதிகாரத்திலேயே பிறிதோர் பாடலில் உள்ளது போல இதிலும் குறித்திருப்பார் என்க.
குறட்டொகுதியுள், இல் (41), இல்லாள் (52) எனவும் மனை (521), மனையாள் (904) எனவும் வேறுபாடு காட்டிச் சொற்களை இடமறிந்து ஆண்டுள்ளதுங் காணலாம். மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் (820) என்பதிற்போல இக்குறட்பாவிலும் மனை என்றது இடப்பொருளாவதன்றி உறவுமுறை பற்றியதன்றாம்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணலை அவட்கு வைத்துக்காட்டியது போல வாழ்க்கைத் துணைவ னாகிய அவற்கும் தன்மனைவியை விழைதலே தகுவதும் உரியதுமாம். அதனால் தன் மனைவியை விரும்புவார் மாண்பயன் எய்தார் எனும் கருத்து முறையின்றாம் என்க. மனை என்பது ஆகுபெயராய் மனைவியைக் குறித்தற்கு மொழியிலக்கணம் இடந்தருவதாயினும் ஈண்டு அதன் பொருந்தாமையை அறிக.
இவை இவ்வாறாக,
மனை யென்பது இல்லாளைக் குறிப்பதெனில் தன்மனையைத் தானே விழையாமை எனலும் பொருந்தாது. மேலும், இது பிறன் மனைவியைக் குறித்தோ எனில் அதுவுமின்றாம். என்னை, தன்மனைவியை என்பது கூறாமலே பெறப்படும். முன்னிலையும் படர்க்கையும் குறித்துக் காட்டப்படும். அதனால், இதனைப் பிறன் மனைவி எனப் பொருள் காட்டற்கும் இடமாவதில்லை.
பின், எவர் மனை அல்லது எந்த மனை எனும் கேள்வி எழுவதாகிறது. அதனால் மனை யென்றது எதன் பொருட்டாம் என்பது அறியவேண்டுவதாகிறது.
மனை என்பது தன் மனையும் அன்று, தன் மனையாளும் அன்று என்பதானால் இக்குறட்காம் நேர்ப்பொருள்தான் என்னாம் என்பது இனிக் காண்பாம்.
கரவாடுங் கழகம் புகுவார் தம் கைப்பொருளையும் பண்பையும் இழந்து போவர் (937) எனவும் கள்ளுண்பவர் தம் நற்பெயர் கெடுவதோடு எல்லாராலும் எள்ளப்படுவார் (921) என்றதும் போல பொருட்பெண்டிர் வாழ்மனை புகுவார் (சமூகத்தில்) மாண்பிழந்து போவார்; பயத்தக்க வினையாளர் எவரும் அதை (அவ்வாறு போதலை) விரும்பார் என்றவாறிது.
இப்பாடல் ‘பெண்வழிச் சேறல்’ எனும் அதிகாரத்தின் கீழமைவது. சேறல் எனற்குப் பின் செல்லுகை என்பது பொருளாகும். பெண்விழைவு, பெண் சேர்ந்தொழுகுதல், பெண்ணேவல் என்பவற்றையும் கருதின் மனைவிழைவு என்றது மனைவியைக் குறித்ததன்று என்பது நன்கு புலப்படும்.
‘பெண்பொறுக்கி’ என்ற நாட்டுப்புற வழக்குச் சொல்லையே பெண்வழிச்சேறல் என இலக்கிய நடையில் குறித்தார் என்க.
பெண்ணுக்கும் பெண்டாட்டிக்கும் உள்ள பொருள் வேறுபாட்டைப் பாராட்டிக் கொள்ளாததாலேயே “மனைவியே கதியென்று மயங்கிக் கிடப்பவன் வாழ்வின் மேன்மையடைய மாட்டான்” என்றெல்லாம் உரை எழுதுவாரும் உளரானாரென்க.
இக்குறட்பா, பொருளும் மனை விழைவார் ‘மாண்’ பெய்தார் பயன்வினை விழைவார் வேண்டாரது எனும் வைப்பு கொளத் தக்கதாம்.
உருள் பெருந்தேர் (667) - உருளும் பெருந்தேர் என்னுமாப்போல, பொருள்மனை என்பதே பொருளும் மனை எனக் குறிக்கப்பட்டது.
பொருளும் மனை - பொருள்கின்ற மனை - பொருளையே பொருட்டாக்கொள்ளும் மனை பொருட்பொருளார் (914) வாழும் மனை.
அருள் - அருளுதல் – அருட்செய்வு
பொருள் - பொருளுதல் - பொருட்செய்வு.
இம்னை வாழ் மகளிர் பொருள் விழைபுடையவரே யாதலன்றி அன்பின் விழைவற்றவராவர் (911).
பொருட்பொருளார் வாழ்மனையை விரும்பிச் செல்பவர் தன் மதிப்பிழந்து போவார்; பயன் விளைக்குஞ் செயலைப் பாராட்டுவாரெவரும் (பழிக்கத்தக்க) இம்மனையைக் கருதார் என்பது இதனுரையாகும்.
தூய அன்பு
பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
உள்ளமதை இதமாக்கும் தூய அன்பே
உணர்வினிலே என்றென்றும்
கலந்து நிற்கும்
கள்ளமற்ற பாசத்தால் நெருங்கி வந்து
கலக்கமது தெளிவுறவே பேசி
நிற்கும்
தள்ளிநின்று வேடிக்கை பார்ப்ப தில்லை
தள்ளாடும் வேளையினில் துணையாய்
நிற்கும்
எள்ளுதல்கள் மனத்தினிலே எழுவ தில்லை
ஏற்றமுற வழிவகைகள் உவந்து
நல்கும் 1
நல்வழியில் செல்வதற்கே உதவி செய்து
நலமுறவே வாழ்வதற்குக் கரங்கள்
நல்கும்
ஒல்லாதார் நட்புதனை எடுத்துக் கூறி
உறவுதனைத் தகர்த்தெறிய வழியும்
செய்யும்
தொல்லைதனை அகற்றிடவே துணிந்து நின்று
துயரமதை வென்றிடவே மகிழ்ந்து
நிற்கும்
எல்லையில்லா இன்பமதில் திளைத்து நிற்க
இதயமது மலர்ந்திருக்கும்
உண்மை அன்பு 2
அன்பினாலே பேசுவதில் மிளிரும் பண்பில்
ஆணவமும் ஒருபோதும் எழுவ
தில்லை
இன்னலினைக் கொடுப்பதற்கு நினைப்ப தில்லை
இன்முகமே என்றென்றும் காட்டி
நிற்கும்
தன்னலமே கருதாத உயர்ந்த பண்பைச்
சாய்த்துவிட எவராலும் முடியா
தன்றோ
நன்றிதனை எதிர்பார்த்து நிற்ப தில்லை
நயமுறவே பழகிடுமே என்றும்
வாழ்வில் 3
வாழ்வுதனைச் சிறப்பிக்கும் உண்மை அன்பு
நலமுறவே வாழ்வதற்கும் துணையாய்
நிற்கும்
தாழ்வுற்ற வேளையிலும் அருகில் நிற்கும்
தலைகுனியும் போதினிலும்
முன்னே நிற்கும்
ஆழ்கடலைப் போலவொரு தோற்றம் காணும்
ஆனந்தம் பெருகியோட வழிகொ டுக்கும்
வாழ்வாங்கு வாழ்வதற்கே உதவும் அன்பு
வலிகளையும் நீக்கிநிற்கும்
தூய நெஞ்சம் 4
நெஞ்சமதை நெகிழவைக்கும் அன்பொன் றேதான்
நினைவினிலும் நிழலாகத் தொடரும்
நம்மை
வெஞ்சினத்தைத் தணித்துவிடும் சக்தி உண்டு
வேதனைகள் ஆற்றிவிட மருந்தாய்
நிற்கும்
வஞ்சமது மனத்தினிலே சற்று மில்லை
வாழ்த்துகின்ற எண்ணங்கள்
நிலைத்து நிற்கும்
செஞ்சுடரைப் போன்றவொரு உண்மை அன்பு
சிறப்புறவே கிடைத்திட்டால்
வாழ்வே ஓங்கும் 5
ஓங்குகின்ற புகழதனைக் காணும் நெஞ்சம்
உவகையுற்று வாழ்த்துதனைச்
சொல்லி நிற்கும்
ஏங்குகின்ற காலமதில் அருகில் நின்றே
ஏமாற்றம் தவிர்த்திடவே யுக்தி
சொல்லும்
பாங்காக எடுத்தியம்பும் முன்னோர் சொற்கள்
பதறாமல் பொறுமைதனைப் பேணச்
சொல்லும்
ஊங்களிக்கும் வார்த்தைதனை என்றும் ஓதி
ஊக்குவிக்கும் உள்ளன்பு
குறையா வண்ணம் 6
வண்ணமுறக் குறைநிறைகள் சுட்டிக் காட்ட
வசந்தங்கள் வாழ்வினிலே என்றும்
வீசும்
உண்மையான அன்புதனைக் காட்டி நிற்கும்
உலகத்தோர் முன்னிலையில்
போற்ற வைக்கும்
எண்டிசையும் புகழுமாறு மிளிர்ந்து நின்றால்
எள்ளளவும் பொறாமைகளும் எழவும்
மாட்டா
நண்ணலரும் நெருங்காமல் காத்து நிற்கும்
நயப்புடனே என்றென்றும் துணையாய்
நிற்கும் 7
துணையாகச் செயல்படுமே துயர்கள் தீர்க்கத்
தொல்லைகளை நீக்குவதில் மகிழ்வு
கொள்ளும்
துணிவுதனைச் செவிகளிலே என்றும் ஓதிச்
சோர்வுற்ற வேளைகளில் கரத்தை
நல்கும்
பணிவுதனைப் பாசமாகக் காட்டி நிற்கும்
பதறாமல் அறிவுரைகள் என்றும்
சொல்லும்
முணையின்றி என்றென்றும் பழகும் அன்பு
முயற்சிக்குத் தோள்கொடுத்து
வழியும் காட்டும் 8
வழிகளையும் காட்டிநிற்கும் தூய அன்பு
வாழ்வினிலே வென்றிடவும்
இடர்கள் நீக்கும்
அழிவற்ற பாதையினில் அழைத்துச் செல்லும்
அச்சமின்றிப் பயணிக்கத்
துணையாய் நிற்கும்
நிழலாகத் தொடர்ந்துவந்து துன்பம் நீக்கும்
நெஞ்சமது மகிழ்வுறவே வாழ்த்தும்
சொல்லும்
இழுக்கின்றி வாழலாமே பாரில் என்றும்
இன்பமான அன்பொன்று கிட்டி
விட்டால் 9
இன்பமான அன்பொன்று கிட்டி விட்டால்
இனிதாக வாழ்ந்திடலாம் பாரில்
என்றும்
புன்கண்மை தூயன்பால் ஒழித்து விட்டால்
பொய்மைகளும் அழிந்துவிடும்
உலக மெங்கும்
அன்புதனைப் பொழிவதற்குப் பஞ்சம் ஏனோ
அகிலமதில் குறைவுற்று வருவ
தேனோ
வென்றிடலாம் வாழ்வுதனை அன்பால் மேவி
மேதினியில் புகழுடனே வாழ
லாமே 10
முணை – வெறுப்பு; புன்கண்மை – துன்பம்.
அவள் கொடுத்த கடிதம்
(தீபாவளிச் சிறுகதை)
பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்
அறிமுகமில்லாத முகங்கள். சம்பந்தமில்லாத பேச்சுகள். சகிக்க / தவிர்க்க முடியாத சூழ்நிலை. ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடிக்கவில்லை என்று சொல்லி மழுப்பி நகர்ந்து விடுவதற்குமுன் போதும்போதும் என்பதுபோல் இருக்கிறது இந்தச் சம்பிரதாயச் சடங்கு. இன்னும் சிறிது நேரத்திற்குள் பட்டுச்சேலைஉடுத்தி அலங்கார பொம்மையெனக் கையில் பலகாரத் தட்டும் தேநீருமாய் அவன் முன் வந்து நாணிக் கோணி நிற்கப் போகிறாள் யாரோ ஒரு பெண்.
அவளை எள்ளளவும் பார்க்கப் பிடிக்காமல் குடும்பத்தாருடன் பெண்பார்க்க வந்திருக்கும் குமார் வாட்டசாட்டமானவன். ஊரில் உயர்தரம் வரை படித்துவிட்டுக் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே கம்பியூட்டர் கல்வி ஒன்றைக் கற்றுத் தேறி இப்போது வருவாய்க்குக் குந்தகமில்லாத தொழில் ஒன்றில் இருக்கிறான். குடும்பத்தில் மூத்தவன். அப்பா அரச உத்தியோகத்தில் இருக்கிறார். அம்மாவுக்கு வேலையில்லை. குடும்பத்தலைவி. சென்ற வருடம் தங்கைக்கு ஒரு வரன் அமையவே நல்ல இடமாக இருந்ததால் உடன் கல்யாணத்தை வைத்துப் புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்பா பென்சன் வாங்க இன்னும் ஒருசில வருடங்களே பாக்கியிருக்கும் நிலையில் மகனுக்கும் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தவனை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. ‘கடவுளே… பொண்ணு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லணும்’என்று மனத்துக்குள் வேண்டிக்கொள்ளும் குமாருக்கோ இதில் துளியும் உடன்பாடில்லை.
கொரோனாவின் இரண்டாம் அலையடிக்கத் தொடங்கிய நாளில் இருந்து மக்கள் சற்று கவனமாகவே இருக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக வீட்டு வராந்தையில் வந்திருப்பவர்கள் அமர்வதற்காக சமூக இடைவெளிவிட்டுப் போடப்பட்டிருந்தன நாற்காலிகள். மிக நெருங்கிய உறவுகளுக்கு மாத்திரம் சொல்லி அழைத்திருக்கிறார்கள் போலும். பெண்களில் ஒரு ஐந்தாறு பேரும், ஆண்களில் நான்கு பேரும் மற்றும் ஒருசில குழந்தைகள் என அளவான கூட்டமாக இருந்தது. திடீரென்று பெருக்கெடுத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எங்குப் பார்த்தாலும் முகக்கவசம் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டிருந்ததன் காரணத்தால் எல்லோரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். அவர்களின் முகக்கவசப் பாதுகாப்பைப் பார்த்ததும் குமாரும் குமாரின் வீட்டாரும் அணிந்து வந்திருந்த முகக்கவசத்தை எடுக்காமலேயே இருந்தார்கள். எல்லோருக்கும் மாப்பிள்ளையின் முகத்தைப் பார்க்கும் ஆவல். வந்தவுடனேயே முகக்கவசத்தை அகற்றச் சொல்வது முறையல்ல என்பதற்காக பேசாமல் இருந்துவிட்டார்கள். முகத்தைக் காட்டாமல் இருப்பது இப்போதைக்கு நல்லதாகவே இருந்தது குமாருக்கு. முகத்தைப் பார்த்துப் பெண்ணுக்குக் குமாரைப் பிடித்துப்போய்க் கல்யாணத்திற்கு சம்மதித்துவிட்டால் அதுவும் பிரச்சினை. சும்மா இருந்தவளைப் பெண்பார்க்க வந்து அவளுக்கு ஆசைகளையும் கனவுகளையும் வழங்கிவிட்டு பின்பு வேண்டாம் என்று சொல்லி அவள் மனத்தைப் புண்படுத்திப் பார்ப்பதும் பாவம். ஒரு வார்த்தைகூட சொல்லாமல் திடீரென இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்ட அப்பாவின்மேல் கோபம் ஒரு எரிமலையைப்போல் வெடித்திருந்த போதும் அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தான்.
குமாரும் தீபாவும் இரண்டு வருடத்திற்கு மேலாகவே காதலிக்கிறார்கள். கூடிய சீக்கிரமே வீட்டில் சொல்லி, வீட்டார் சம்மதத்துடன் அவளைக் கரம்பிடிக்க வேண்டும் என்று கற்பனைகள் வளர்த்திருந்தான். தீபாவளி முடிந்ததும் மெதுவாக அம்மாவின் காதில் விசயத்தைக் கூறி அப்பாவின் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்தான். ஆடிக்கு வீட்டுக்குவந்து தலைப் பிரசவத்தையும் தாய்வீட்டிலேயே நடத்திக் கொண்ட தங்கையை அவளது வீட்டிற்குக் கொண்டுவிட வேண்டி இருந்ததால் அவளுக்கும் அவள் குழந்தைக்கும் தேவையான சாமான்களை எல்லாம் அம்மா சொன்னபடிக் கேட்டு வாங்குவதற்கு அங்குமிங்கும் அலைந்ததில் தீபாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லத் தகுந்த நேரம் அமையவில்லை. சொல்லலாம் என்று ஒரு சந்தர்ப்பம் கூடிவந்த வேளை அப்பா பேச்சை ஆரம்பித்தார்.
‘தெய்வானை... நீ அவன்கிட்ட சொன்னியா..’
‘எதைச் சொல்லுறீங்க’
‘உனக்குத்தான் எல்லாத்திலேயும் ஞாபக மறதியாச்சே.. அதான் அந்திக்குப் பொண்ணு பார்க்க போகணும் என்று சொன்னேனே..’
‘ஓ.. அதுவா.. இதோ இப்போ சொல்லிடுறேன்’ என்றவள் குமாரின் காதில் அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டாள். விசயத்தைக் கேட்டதும் பதறிப் போய் ‘அம்மா யாரைக் கேட்டு இந்த ஏற்பாட்டைப் பண்ணுனீங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்’
‘என்னடா இப்படி பேசுற.. வீட்டுக்கு ஒரு மருமக வேண்டாமா.’
‘அதுக்காக இப்படி திடுதிப்பென்னு கூப்பிட்டா எப்படிம்மா..’
‘இப்போ என்ன பொண்ண பார்த்து நாங்களே முடிவு செய்து உன்ன தாலி கட்டவா கூப்புடுறோம்? பொண்ணுபார்க்கத்தானே கூப்புடுறோம்”
‘ஐயோ அதுக்கு இல்லம்மா’ என்று அவன் மழுப்பும்போதே அவனது அப்பாவிற்குப் புரிந்து விட்டது. ஒரு வார்த்தை அவனிடம் இதுபற்றிக் கூறிவிட்டு இந்த ஏற்பாட்டை நிகழ்த்தியிருக்கலாம் என்று. இப்போது அவர் யோசிப்பதில் இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை. எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களை ஏமாற்றவும் முடியாது. முதலில் பெண்ணைப் பார்ப்போம். பெண் லட்சணமாக குடும்பத்திற்கு ஏற்றாற்போல் இருந்தால் இவனே மனசு மாறக்கூடும் என்ற அசாத்திய நம்பிக்கையில் ஒரு சம்பிரதாயத்திற்காக இந்தப் பெண்பார்க்கும் நிகழ்வுக்குக் குமாரைப் பிடிவாதமாக அழைத்து வந்துவிட்டார்.
மனைவியாக தீபாவை எண்ணி மனத்தால் தாலி கட்டிவிட்ட குமாருக்கு மற்ற பெண்ணை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க மனசு கூசியது. இருந்தாலும் நிலைமையை சமாளிக்க வேண்டும் என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான். இடையிடையே தீபா கைப்பேசியில் குறுந்தகவல்கள் அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தாள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒருநாள் கோல்பேஸ் கடற்கரைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தபோது ‘குமார் எங்க வீட்டிலே ஒரு சோதிடர்கிட்ட என்னோட சாதகத்தைக் கொடுத்துப் பார்த்தாங்களாம் சொந்தத்திலேதான் எனக்கு மாப்பிள்ளை அமையும் என்று அந்த சோதிடர் சொன்னாராம்’
‘அப்படீனா நல்லதா போச்சு நான் வேற நல்ல பொண்ணா பார்த்து..’ பேசி முடிக்கும் முன்பே குமாரின் வாயை கைகளால் பொத்தியவள் ‘இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் நான் உண்மையாதான் சொல்றேன் எனக்கு எங்க வீட்டிலே மாப்பிள்ளை தேடுறாங்களாம். சீக்கிரமா வந்து என்ன பொண்ணு கேளு’
‘நீ ஒன்னு இந்தக் காலத்திலேயும் சோசியம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு... அதெல்லாம் பழைய பஞ்சாங்கம். இந்த தீபாவளிக்கு நான் வீட்டுக்குப் போவேன் அப்போ நம்ம விசயமா பேசி ஒரு நல்ல முடிவோடு வருவேன்’
‘இல்ல குமாரு அந்த சோதிடர் கணிச்சி சொன்னாருன்னா அது சரியாக இருக்கும் எங்க ஊர்ல மிகவும் பேர் போனவர். அதுதான் பயமா இருக்கு.’
‘சரி சரி மனசப் போட்டுக் குழப்பிக்காத. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம்தானே இருக்கு. அதுக்குள்ளே உன்ன எந்த முறைமாமன் வந்து கட்டுறான்னு பார்ப்போம்’
‘நடக்கனுமுன்னு இருந்தா ஒரு நாள் இல்ல ஒரு நிமிசத்திலேகூட நடந்திடும் அசட்டையா இருந்திடாத, மறக்காம நம்ம விசயத்துக்கு ஒரு முடிவோடு வா.’ அவள் அவனோடு பேசியது வேறு இப்போது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. ஒரு வேளை அப்படி நடந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது. இங்கு வருவதற்கு ஒரு மணித்தியாலத் திற்கு முன்பும் தீபா குறுந்தகவல் அனுப்பி இருந்தாள். ‘இக்கட்டான நிலையில் இருக்கிறேன். கல்யாண ஏற்பாட்டோடு வா. இல்லாவிட்டால் நமது வாழ்க்கை திசைமாறிவிடும். போன் பேசமுடியாத சூழ்நிலை. விபரத்தைக் கொழும்புக்குத் திரும்பியதும் கூறுகிறேன்’ என்று அவள் வேறு குழப்பியிருந்தாள்.
‘இன்று நல்ல மழை பெய்யும்’என்ற தொலைக் காட்சி அறிவிப்பை நம்பிக் கையில் குடையை எடுத்துச்செல்லும் நாட்களில் மழை வராமல் போவதும், இன்று மழை வராது என்று எண்ணிக் குடையை விட்டுச் செல்லும் நாட்களில் அடைமழை பெய்துவிடுவதும்போல வாழ்க்கையிலும் நம் எதிபார்ப்புகளைத் தாண்டிப் பல விசயங்கள் நடந்து விடுகின்றன. இதைத்தான் விதி என்று இந்த மனிதர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள் போலும். ஒருவேளை என் வாழ்விலும் அப்படி ஏதேனும் நடந்து விடுமோ என்று எண்ணிய குமாருக்குப் படபடப்பாக இருந்தது. தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாததை எல்லாம் தேவைக்கு அதிகமாகக் சிந்திக்க வைத்துவிடும் சிந்தனையின் தேவையை தேவையில்லாது செய்துவிடுவது இப்போதைய தேவை என்ற நினைப்புக்குத் திருப்பியவன் சூழ்நிலைக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டான்.
வயதானவர்கள் அவரவர்களுக்கு ஏற்றவர்களுடன் நாட்டு நடப்பு, கொரோனா, வருமானக் குறைவு என்று ஏதேதோ சம்பாசித்துக் கொண்டிருந்தனர். தன் வயதை ஒத்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா எனக் கண்களால் நோட்டமிட்டான். ஒருவரும் அகப்படவில்லை. வீட்டுச் சுவரில் ஒரு பழங்காலக் கடிகாரம் இவன் மனதைப்போல ‘டொக் டொக்’ எனத் துடித்துக் கொண்டிருந்தது. கூடவே கடந்துபோகும் நேரத்தைக் காட்டி எச்சரிக்கை செய்தது. குமாரின் அப்பா பேச்சை ஆரம்பித்தார்.
‘நாங்க சீக்கிரமா போகணும். பொண்ண வரச் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்’, ‘இதோ கொஞ்சம் இருங்க.. இப்ப வந்துரும்..’ யாரோ ஒருவர் பதிலளித்துவிட்டு ‘இன்னும் என்ன செய்யிறீங்க.. கொஞ்சம் சீக்கிரமா அவளை அனுப்புங்க.’ குரல் கொடுத்துக்கொண்டே ஒரு அறைக்குள் நுழையவும் பெண் தேநீர்த் தட்டுடன் தலை கவிழ்ந்து வரவும் சரியாக இருந்தது. நல்ல லட்சணமானவள் என்பது அவள் அணிந்திருந்த முகக் கவசத்தையும் தாண்டி வெளிப்பட்டது. தட்டுத்தடுமாறி அவனருகே வந்து தேநீரை நீட்டியவளின் முகத்தைப் பார்த்தும் பாராதவனாய் தேநீரை வாங்கிக் கொண்டான்.
‘பொண்ண நல்லா பாத்துக்கடா’ என்று அம்மா கூற தலையாட்டியவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவனது விருப்பமின்மையை விளங்கிக் கொண்டவளாய்க் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தவள் பெண்ணின் குடும்பத்தாருடன் ஏதோ பேசுவதுபோல நிலைமையைச் சமாளித்தாள். தேநீரைக் கொடுத்த பெண் குமாரின் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள். ‘நல்லா இரும்மா நல்லா இரு’ என்ற குமாரின் அம்மா அவளின் தலையை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தார். பெண்ணை அவருக்குப் பிடித்துவிட்டது. அருகில் இருந்த கணவரின் காதில் பெண் பிடித்திருப்பது பற்றிக் கிசுகிசுத்தார். அவருக்கும் அதே எண்ணமாக இருந்தது. ஆனால் குமாரின் விருப்பம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதனால் இருவரும் மௌனமானார்கள். ஒரு சில நிமிடங்கள் அங்கு நின்றிருந்த பெண் மேலும் அங்கு நிற்க சங்கோஜப் பட்டவளாய்த் தனது அறைக்குள் சென்றுவிட, அதே நேரம் பெண்ணின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் ‘என்ன மாப்பிள்ள முகக் கவசத்தைக் கழட்டாமலேயே இருக்கிறார். நாங்க அவர் முகத்தை முழுசா பார்க்கக் கூடாதா’
‘அதெல்லாம் இல்லேங்க… இந்தக் கொரோனா யாருகிட்ட இருந்து யாருக்குத் தாவும் என்று சொல்ல முடியாது. நாளைக்கு மறுநாள் கொழும்புக்கு வேலைக்குப் போகணும் இல்லையா… இங்கே இருந்து சாதாரண காய்ச்சல் தடுமனோட போனாலும் இவன் வேலை செய்கிற கம்பனியிலே உள்ளே எடுக்க மாட்டாங்களாம். அதுதான் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கிறான்’ நிலைமைக்கு ஏற்றாற்போல் அவன் அம்மா பேசியது சற்று ஆறுதலாக இருந்தது குமாருக்கு. பெண் அறைக்குள் போய்விட்டாள் என்பதை நோட்டமிட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டு முகக் கவசத்தை அகற்றினான். எல்லோரும் ஒருமுறை குமாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். அந்நேரம் குமாரின் அம்மா வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் ‘பொண்ணையும் முகக்கவசத் தோடுதானே அனுப்புனீங்க நாங்களும் முகக் கவசம் இல்லாமல் ஒருமுறை பொண்ணோட முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
‘அதனால என்ன பார்த்துட்டாப் போச்சு. பொண்ணு பார்க்கத்தானே வந்தீங்க பொண்ணோட முகக்கவசத்தையா பார்க்க வந்தீங்க’ யாரோ துடுக்கான பெண்மணி ஒருவர் கேலியாகக் கூற எல்லோர் முகத்திலும் சிரிப்பு. தன்பங்கிற்கு ஒப்புக்காக சிரித்து வைத்த குமாருக்கு இப்போது தலைசுற்றுவது போலிருந்தது. எப்படியாவது தப்பித்துப் போய்விடலாம் என்று பார்த்தால் வீண் வம்பை விலைகொடுத்து வாங்கின மாதிரி அம்மாவின் ஆசை இப்போது மேலும் சங்கடத்திற்குள்ளாக்கி விட்டது. அதற்குள் ‘இதோ கூட்டிக்கொண்டு வர்ரேங்க..’ அவசரமாகப் பெண்ணின் அறைக்குள் நுழைந்தார் அவளின் அம்மா.
இப்போது குமாரின் நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது. ‘கடவுளே எப்படியாவது காப்பாற்று’ வேண்டிக்கொண்டான். கோடிக்கணக்கில் கொரோனா நோயாளர்களை உருவாக்கி லட்சக்கணக்கான பேர்களை மரணிக்க வைத்துவிட்டு, இருக்கின்ற உலகத்து மக்களில் ஒருவருக்கேனும் இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் உத்தியைக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கடவுள் அவ்வளவு சீக்கிரத்தில் இவனுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொள்வாரா என்ன…? குமார் வேண்டி முடிப்பதற்குள் ஓடிவந்த பெண்ணின் தாயார் ‘அவ மறுபடியும் வாரத்துக்குக் கூச்சப்படுறா.. வாங்க உள்ளே போய்ப் பார்ப்போம்’ எனக் குமாரின் அம்மாவை அழைத்தார். அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ஒரு வயதானவர், ‘அட அவுங்க பாத்து என்னவாகப் போகுது. பொண்ண பார்க்க வேண்டியவரைக் கூட்டிப்போய் காட்டு. இது நம்ம காலம் இல்ல. பொண்ணும் மாப்பிள்ளையும் பரஸ்பரம் பார்த்துப் பேசி விருப்பப்பட்டுக் கிட்டான்கன்னா நாம மேற்கொண்டு ஆக வேண்டியத பார்க்கலாம்’ என்றதும் ‘அட அதுவும் சரிதான்’ என்று எல்லோரும் ஏகோபித்துக் குரல் கொடுத்துக் குமாரைப் பெண்ணின் அறைக்குள் கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள். இவன் அறைக்கு வருகிறான் என்று தெரிந்த கணமே பெண்ணுக்கும் படபடப்பு அதிகமாக முகத்தைச் சுவர்ப்பக்கம் வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். இருவருக்கும் வியர்த்துக் கொட்டியது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சரி எது வந்தாலும் பரவாயில்லை என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்ட குமார் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்துப் பேச ஆரம்பித்த வேளை பெண் சற்றுத் திரும்பித் தலைகவிழ்ந்த வண்ணம் தன் மடியில் சொருகி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். வாங்கிப் படித்தான். அதில் ‘என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள்’ என்று மட்டும் எழுதியிருந்தது. கடிதத்தை வாசித்த குமாரின் மகிழ்ச்சி ஆகாயத்தில் பறப்பதுபோல் இருந்தது. அவளிடம் ‘ஏன்’ என்று கேட்க நினைத்தவன் வாயை மூடிக்கொண்டு சற்றுநேரம் வரை இருந்தான். உடனே வெளியேறினால் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை என்று எண்ணிவிடுவார்கள் என்பதனால் மௌனமாகவே இருந்துவிட்டு வெளியேறினான். உள்ளே செல்லும்போது படப்படப்போடு சென்றவன் வெளியே வந்தபோது புன்னகையோடு வருவதைக்கண்ட எல்லோரும் மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது என்பதாக ஊர்ஜிதம் செய்துகொண்டார்கள். அதே நேரம் குமாரின் அம்மா, அப்பாவுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போக வில்லை. ‘பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா பேசி முடிச்சிருங்க. கல்யாணத்தைக் கொரோனா சற்று ஓயும் நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்’ என்றான். அதே நேரம் அறையின் கதவோரம் நின்று இதைக் கேட்ட பெண் இடியோசைக் கேட்ட நாகம் போலானாள். ‘என்ன பைத்தியக்காரன் இவன்… பிடிக்கவில்லை என்று சொல்லச் சொன்னா பிடிச்சிருக்கு என்று சொல்கிறானே… என்று யோசிப்பதற்குள் குடும்பமே ஓடி வந்து ‘நீ அதிர்ஷ்டக்காரி. பார்க்க வந்த முதல் மாப்பிள்ளைக்கே உன்ன பிடிச்சிரிச்சி’ என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்களின் அந்த மகிழ்ச்சியை மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்கவில்லை என்ற வார்த்தைக்குண்டால் தகத்தெறிய முடியாதவளாய் மௌனமானாள். அதற்குள் குமாரின் வீட்டார் புறப்படுவதற்குத் தயாராகவே எல்லோரும் வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள்.
வந்திருந்த வாடகை வண்டியின் முன் ஆசனத்தில் அப்பாவை ஏற்றிவிட்டு அம்மாவுடன் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான் குமார். வண்டி ஒரு நூறு இருநூறு மீற்றர் தூரம் கடப்பதற்கு முன்னதாகவே அவன் அம்மா பேச்சை ஆரம்பித்தாள்.
‘பொண்ணு லட்சணமா குடும்பத்திற்கு ஏற்றவளா இருந்தா. பார்த்ததுமே எங்களுக்குப் பிடிச்சிருச்சி. நீ வேண்டா வெறுப்பா இருந்ததினாலே நாங்க பேசாம இருந்தோம்’.
‘சரிம்மா இந்தப் பொண்ணு யாரும்மா? எப்படி இந்த ஏற்பாட்ட செய்தீங்க?’
‘அது உங்க அப்பா வழியில நமக்குத் தூரத்து சொந்தம். அதான் பதுளைக்கு அங்கால ஏதோ ஒரு ஊர்ல இருக்க உங்க சின்ன தாத்தாவோட மூணாவது மகளோட மகளாம்... அதெல்லாம் விபரமா உங்க அப்பாவுக்குத்தான் தெரியும் நீ அவரைக்கேட்டுத் தெரிஞ்சிக்க’
‘அப்படீன்னா இங்கே எப்படிம்மா பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்தீங்க’
‘இப்போ நாம போனது பொண்ணோட அத்தை வீடாம் நம்ம வீடும் இவுங்க வீடும் பெரிய தூரத்தில் இல்லைங்கிறதால் தீபாவளிக்கு அவங்க வீட்டுக்கு வந்த பொண்ண இங்கே கூட்டிவந்து இந்த ஏற்பாட்டை நடத்தினாங்க... அதுசரி அது எப்படிடா உள்ளே போய் அவள் முகத்தைப் பார்த்ததும் உன் முடிவை மாத்திக்கிட்ட?’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லே. மாத்தல அம்மா. முதல்ல அவ அங்கே எனக்குக் கொடுத்த இந்த கடிதத்தை வாசி’
சட்டைப்பையில் இருந்து எடுத்து நீட்டினான். ‘என்னது கடிதம் கொடுத்தாளா.. அது எதுக்குடா..’ பதற்றத்துடன் வாங்கிப் படித்தாள். அதில் ‘என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள்’ என்று மட்டும் அவள் எழுதியிருந்ததை வாசித்துவிட்டு ‘என்னடா அவ இப்படி எழுதி இருக்கா.. இதைப் பார்த்த பின்பும் நீ எதுக்காக பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்ன? ‘இல்லம்மா… இந்தப் பொண்ண எனக்கு ஏற்கனவே தெரியும். இவளைக் கட்டிக்கிறதா ஏற்கனவே வாக்குக் கொடுத்திருந்தேன். அதனாலத்தான் வேண்டா வெறுப்பாக இருந்தேன். ஆனா இவளைத்தான் பெண் பார்க்கப் போறேன் என்று தெரிஞ்சிருந்தா சந்தோசமாகவே வந்திருப்பேன்’ ‘அப்போ எதுக்குடா பொண்ணு அவளைப் பிடிக்கல என்று சொல்லச் சொல்லிக் கடிதம் கொடுத்தா.’ ‘அவளும் என்ன மாதிரியே என்ன மனசில வச்சிக்கிட்டு வேறு யாரையோ மாப்பிள்ளை பார்க்கிறதா நினைச்சுக்கிட்டு முகத்தைக்கூடத் திருப்பாமல் இந்தக் கடிதத்தைக் கொடுத்தாள். கடிதத்தில் இருந்த இந்த அழகான கையெழுத்தை நான் ஏற்கனவே பார்த்திருந்ததால் கடிதம் கொடுத்தது இவள்தான் என்று புரிந்துகொண்ட நான், நான் யாரென்பதைக் காட்டிக்கொள்ளாமல் எதுவுமே பேசாமல் முகத்தையும் காட்டாமல் உங்ககிட்ட பொண்ண புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்துவிட்டேன். நீ பாரு இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குப் போன் வரும்’ என்றான். அவன் சொன்னதுபோலவே அவனது கைப்பேசி சிணுங்கியது.. அது அவள் அவளேதான். அம்மா ‘சரி எடுடா எடுத்துப் பேசு.’
‘கொஞ்சம் இரு அம்மா. கொஞ்சம் காக்க வச்சிப் பிறகு சொல்லிக்கிறேன்’ என்றவாறு அழைப்பைத் துண்டித்தான். அது மறுபடியும் மறுபடியும் சிணுங்கிக்கொண்டே இருந்தது.