Feb 13, 2021
ஆசிரியர் பக்கம்
அன்புக்குரியோர்க்கு வணக்கம்.
அறிவியலின் வீச்சு உலகைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் இக்கணினிக் காலத்தில், பல்வேறு கலைச்சொற்களையும் பயன்படுத்த வேண்டிய சூழலில் உலகப் பொதுவாய் ஆங்கிலத்தைப் பயன்கொள்வதும், அதற்கு அம்மொழியைக் கற்றலும், பணியில் சேர்தலும் வழக்கமாகிவிட்ட செயலாயிற்று.
அயல்நாட்டிற்குப் பணிசெய்ய வேண்டித் தாய்மொழி தமிழையொதுக்குவது ஓரோவழி ஏற்கலாம்... ஆனால், இங்கிருக்கும் தமிழாசிரியர், முனைவர் உள்ளிட்ட துறைசார்ந்த 'வல்லுநர்' யாருக்கும் முழுமையான தமிழிலக்கணம் தெரியவில்லை என்பதைக் கண்ணுறும்போது உள்ளம் பதைக்கிறது.
எப்படி படித்துப் பணியில் சேர்ந்தார்கள்? இவர்கள் பங்கேற்கும் பாடநூல் தயாரிப்பின் தரம் எப்படியிருக்கும்? இனிவருங் காலங்களில் தமிழிலக்கணத்தைக் கற்பிக்கக் கூடிய யாரேனும் மிஞ்சுவரா? இவர்கள் நிலையே இப்படியென்றால் இவர்களிடம் படித்த இனிவரும் தலைமுறை எப்படியிருக்கும்? அவர்கள் கல்வித்துறையில் அமர்ந்து தமிழுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? பாடநூல்களிலாவது மரபு பாடல்களும், இலக்கணமும் அச்சேறுமா? அல்லது வசனக்கவிதை மட்டுமே இடம்பெறுமா? தமிழின் தொன்மை மண்ணாகிப் போமா? இன்னும் ஏராளமான வினாக்கள் எட்டிப் பார்த்துக் குட்டு வைக்கின்றன.
இன்றைக்கு என்னைப் போன்ற சிலரிடம் மரபையும், இலக்கணத்தையும் கற்கும் அனைவரும் இதே கற்பிக்கும் கடமையைக் கண்ணெனக் கொண்டு அவரவர் திறனுக்கேற்ற மாணவர் கூட்டத்தைப் பெருக்கி வருங்காலத்தில் தமிழ் மங்கிவிடாதிருக்கச் செய்ய வேண்டுகிறேன்.
ஓ... என் தமிழ்த்தாயே! எங்களை மட்டுமல்ல... உன்னையும் நீயே காப்பாற்றிக் கொள்.
வருத்தத்துடன்
பாவலர் மா.வரதராசன்
கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
பகுதி – 10
கண்விசிறித் தென்றலெண்ணிக் காதல் நெடுந்துயரால்
மின்விசிறிக் காற்றில் மிகநொந்நு வாடுகின்றேன்..!
ஆந்தை நிலவுடனே ஆங்கலையும் வாவல்போல்
கூந்தல் இருளெண்ணித் தூக்கம் தொலைக்கின்றேன்..!
கண்மீனை எண்ணியெண்ணி நள்ளிரவில் தூங்காது
விண்மீனை எண்ணியெண்ணி வேதனையில் தீய்கின்றேன்..!
பூவாய் மொழிகேளேன் கோரப் புயற்கடலில்
நாவாய் எனச்சிக்கி நாளும் நடுங்குகின்றேன்..!
பூக்காட்டைச் சூடும் பொழிலாளை உள்நினைத்துத்
தீக்காட்டில் நைந்துருகும் தேன்கூட்டைப் போலானேன்..!
வில்லம்பு தோற்கும் விழியாளைக் காணாது
புள்ளம்பால் மண்ணில் புரள்நிலை எய்துகின்றேன்..!
மாடன் பலிகடா மண்டையின்றித் துள்ளல்போல்
கேடோ பலவுற்றுக் கெண்டைவிழி தேடுகின்றேன்..!
அல்லும் பகலும் சமமென்று சொன்னதுயார்?
கொல்லும் இரவின்னும் கோடி மடங்காமாம்
வெண்பஞ்சு மெத்தையெல்லாம் முள்நெருஞ்சி போல்தைக்கக்
கண்துஞ்சல் நீக்கிக் கனவால் அழிகின்றேன்
ஆசை முகத்தாளை அப்படியே காட்டுவதால்
தோசை உணவதனைத் தொட்டுண்ண ஏலவில்லை..!
நெல்லரிசிச் சோறெல்லாம் முல்லையதைப் போல்தெரியப்
பல்வரிசை எண்ணிப் பசிபோக்கல் ஆகவில்லை..!
வேய்ங்குழலும் வேனில் இளங்குயிலும் வெண்ணிலவும்
பூங்குழலாள் காதல் புலப்படுத்தத் தூங்கமில்லை..!
பாற்சோறும் பச்சைப் பயறும் பசிமாற்றும்..!
நாற்சுவருள் நைந்தவென் காதலைத் தேற்றுமா..!
ஐங்கூந்தல் நின்றே அழகொளிரும் பூநாற்றம்.!
பைங்காற்றுத் தாங்கும் பலமலரும் தந்திடுமா.!?
எக்கள்ளும் போதைதரும் என்னவளின் பல்லொழுகும்
அக்கள்ளின் கால்தூசிக்(கு) ஆங்கவை ஈடாமா.!
நெய்யொழுகும் சோறும் பிடிக்கவில்லை நேற்றுவரை
பொய்யெழுதும் பாட்டும் பிடிக்கவில்லை வேறென்ன
மையெழுதும் கண்ணாளின் மையல் புயலடிக்க
மெய்யழ(கு) எல்லாம் மிகநைந்து போனதனால்...!
தண்ணீர் அடிக்காமல் கஞ்சா குடிக்காமல்
என்னுடல் இன்னும் இளைத்துருகக் காணுகின்றேன்..!
சொல்நட்டுப் பாட்டெழுதிச் சுந்தரிக்கு நானனுப்பக்
கல்நட்ட பின்னால்தான் காண வருவாளோ...!
அத்தி மரம்பழுக்க ஆங்கமரும் புள்ளினம்போல்
கத்திக் கதறுகிறேன் காதலிக்கோ கேட்கவில்லை
புத்திதடு மாறிப் புலம்புவதைக் கண்டுமக்கள்
எத்தனெனப் பார்த்திருக்க எம்வீட்டு முல்லைகூடக்
கோடி மலர்பூத்துக் கொல்லெனச்..சி ரிக்குதையே
வாடுநெஞ்சம் காணாமல் வண்டமர்ந்து பாடுதையே..!
பூக்குளம் வற்றியதால் பொய்கை வெடித்ததுபோல்
பாக்குளம் வற்றிநான் பால்நிலவுக்(கு) ஏங்குகின்றேன்..!
தூது தொடரும்...
உற்ற துணை நீயே!
பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்
தனதனன தனதனன தந்தந்த தத்ததன
தனதனன தனதனன தந்தந்த தத்ததன
தனதனன தனதனன தந்தந்த தத்ததன
தத்த தனதானா
அருவியென விழிபெருக நின்றன்றி ருப்புகழை
மொழிகுழற வுளமுருகி மன்றந்த னிற்பொழிய
அகமகிழு மறுமுகவ இன்பங்க ளைச்சொரிய
இத்த ருணம்வாராய்!
அழகனுன திருவடியை யென்றுந்து திக்குமடி
யவரிதய நிறையுமொளி பொங்குந்த மிழ்க்கடவுள்
அமரர்களும் முனிவர்களும் வந்தன்பி னைப்பொழிய
உற்ற துணைநீயே!
குருபரனு னருமழையி லங்கஞ்சி லிர்ப்படைய
நதிதவழு மலைகளென நெஞ்சம்ப னிக்கவொரு
குளிர்மதியி னொளிபடர விஞ்சுங்க விப்படைய
லிட்டு மகிழ்வேனே !
குறுநகையு மிதழ்களிடை சிந்துங்க னிச்சுவையு
மினியதென நெகிழமன மெங்குந்தெ ளிக்குமது
கொடியிடையு மசையநடை கொஞ்சுங்கு றத்திமகள்
மெட்டி யொலிகேளாய் !
வருகவென உயிர்விழைய வந்திங்கு நற்றமிழில்
இனியகவி நெயுமெழில்வ ரந்தந்து முத்தமிழின்
மணம்நுகரு மெளியவழி யுஞ்சிந்தை யிற்பதிய
வைத்த குருநாதா !
மதுரமொழி யிலழகிய சந்தங்க ளைப்பழக
ஒருநொடியி லெழுதிடநெ கிழ்ந்திங்கு நட்புமிக
மலரடியை யுரிமையில்வ ணங்குஞ்சி றப்பினையெ
னக்க ருளவேணும்!
இரவுபகல் நினைவினில்நி றைந்தன்பு மிக்கவனை
நொடியளவு பிரியமன மின்றிங்கு விக்கவுயிர்
இளகுமுனம் மயிலினில்ந டங்கொஞ்சி முத்தியருள்
வெற்றி வடிவேலா!
எழுகதிரி னொளியெனவி ளங்குந்தனிப்பொருளை
உடலிலுயி ருளவரையி லன்றன்று பற்றிடவும்
இருபுறமு மிணையரொடு வந்திங்கெ னைப்பரிவ
ளிக்கும் முருகோனே !!
தூண்டில்
கவிஞர் இரா. இரத்திசு குமரன்
இந்த முறை தேவையான அளவு அதிக மீன்களைப் பிடித்துக்கொண்டுதான் வீடு திரும்ப வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் கோதண்டம். மீன் பிடிக்கக் கட்டுவலை, சிறு பை, தூண்டில், மண் புழு, குடிநீர் ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில், மற்றும் கேழ்வரகு அடை சில துண்டுகள் - இவற்றுடன் ஆற்றங்கரைக்குத் தன் பயணத்தைத் தொடங்கினான்.
இப்பொழுதுதான் உச்சியிலிருந்த சூரியன் மேற்குப் பக்கமாக லேசாக சாயத் தொடங்கியது. வெயில் அவன் உச்சியைப் பதம் பார்த்தது.
"அப்பப்பா... வெயில் இப்படி அடிக்குது..." தனக்குத் தானே பேசிக் கொண்டான். இந்தப் பழக்கம் அவனுக்குள் வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. யாரும் தனக்காகப் பேச இல்லாதபோது தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் அவனுள் தோன்றியது. அவனைப் புரிந்துகொண்டு அவனுக்காகப் பேசும் ஒரே ஒரு ஜீவன் அவன் மனைவி மட்டும்தான். அவளும் இப்போது இல்லை. தான் வைத்திருந்த பையில் ஒரு துண்டு இருந்தது. எங்காவது கூலி வேலை செய்யும்போது தன் தலையில் கட்டிக் கொள்ளும் பரிவட்டம் அதுதான். வெயிலின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்க அதைத் தண்ணீரில் நனைத்து எடுத்துப் பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டான் தனக்குத் தானே.
சிறுவயது முதலே அவனுக்கு மீன் பிடிக்கச் செல்வதில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. சிறுசிறு கூலி வேலைகள் அவனுக்குச் சோறு போட்டது. எனினும் மீன் பிடிக்கும் ஆசைதான் அவன் உணவில் பல நேரங்களில் சுவை சேர்த்தது. வேலை இல்லாத சில நாட்களில் காலையிலேயே எழுந்து மீன்பிடிக்க ஆற்றிற்குச் சென்றுவிடுவான். வீடு திரும்ப நேரம் ஆகும். ஒரு சிறிய மண் சட்டியில் பழைய கஞ்சியை ஊற்றிக் கொள்வான். பசி வரும் நேரத்தில் இரண்டு மூன்று கைப்பிடி அளவு விழுங்கிவிட்டுத் தண்ணீர் குடிப்பான். சிறிதளவு சோற்றுப் பருக்கைகளை வீசி மீன்கள் கூட்டம் தன்பக்கம் வருமாறு ஈர்ப்பான். எந்த இடத்தில் எந்த மாதிரி மீன்கள் இருக்கும் என்று அவனால் மிகச்சரியாக கூறிவிட முடியும். ஆனால் எங்கு எந்த மாதிரியான மனிதர்கள் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. யாருக்குத்தான் தெரியும்? சில தருணங்களில் அவர்கள் மனிதர்கள்தானா என்ற கேள்விகள் அவனுக்குள் எழும். மீனைப் பற்றி நன்கு தெரிந்த அவனுக்குத் தன் இனத்தைப் பற்றிய அறிவு மிகக் குறைவுதான். யார் எங்கு எப்படி இருப்பார்கள் என்று யாருக்குத்தான் தெரியும்?
பள்ளத்தை நோக்கிய நீர்போல் ஆற்றை நோக்கிக் கோதண்டம் வந்தடைந்தான். ஆற்றின் குறுக்கே வலையைக் கட்டிவிட்டு மேலே கரை ஏறும் சமயத்தில் முள் ஒன்றைத் தன் இடது காலில் ஏற்றிக்கொண்டான்.
"இது வேற கொடையுது...". முள்ளைப் பிடுங்கி எறிந்தான். அவன் கவனம் முள்ளின் மீதோ அல்லது அது ஏற்படுத்திய வலியின் மீதோ செல்லவில்லை. சிறு சிறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால் அவையெல்லாம் பெரிய ஆலமரம்போல்தான் தெரியும் என்பதை அவன் அனுபவத்தில் உணர்ந்தவன் போலும். அவன் கவனமெல்லாம் அந்தப்பக்கம் கூட்டமாக வந்து மேலே காற்றைச் சுவாசிப்பதுபோல் பாவனை செய்துகொண்டு தொபுக்கென்று தலையை உள்ளே இழுத்துக்கொண்டு தமக்கு முன் செல்லும் மீனைப் பின்தொடரும் ஜிலேபிகளின் மீதுதான்.
"வந்துட்டீங்களா வாங்க வாங்க" விருந்தினர்களை வரவேற்றான்.
மற்ற மீன்களைவிட ஜிலேபி மீன்கள் மீது அவனுக்கு ஒரு உறவு இருந்தது. சிறுவயது சம்பவம்தான் என்றாலும் அவன் மனத்தை அது வெகுவாகப் பாதித்தது. அந்தச் சம்பவத்தின் தாக்கம் ஒரு வினாடி எட்டிப்பார்த்துச் சென்றுவிட்டது. பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும் அப்போது கோதண்டத்திற்கு. தூண்டிலுடன் அவன் கரையில் கவனம் தக்கையில். தண்ணீர் நல்ல தெளிவாகத் தெரியும் இடத்தில் இரண்டு ஜிலேபி மீன்கள் இணையாக நீந்திக் கொண்டிருந்தன இங்குமங்குமாய்ச் சென்றுகொண்டு வட்டம் அடித்தபடி. உடனே தன் தூண்டிலை அவ்விடத்தில் இலகுவாக இறக்கிவிட்டான். எங்கோ சென்று விட்டன அந்த ஜோடி மீன்கள். இருப்பினும் காத்திருந்தான் மீண்டும் திரும்பும் என்று அவன் யூகித்து இருந்தான். ஆம், அவை வந்தன இணையாகவே. அவற்றில் ஒன்றுமட்டும் தூண்டில் புழுவை விழுங்கி மாட்டிக்கொண்டது. வலி உணர்வை அந்த மீன் நீருக்கு மேலே வந்துதான் உணர்ந்து இருக்கும்; அவ்வளவு விரைவாகத் தன் தூண்டிலை உயர்த்தித் தன் கைக்கு அந்த மீனைக் கொண்டு வந்தான். தன் பைக்குள் அந்த மீனைப் போட்டுக்கொண்டு புழுவை சரி செய்துவிட்டு மீண்டும் அவ்விடத்தைப் பார்த்தால் இந்த முறை ஒரு மீன்மட்டும் அந்த இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் அது தன் துணையைத் தேடி அலைந்தது. அவன் மனம் ஏதோ ஒரு வலியை உணர்ந்தது. சில நேரங்களில் "ச்சே... தப்புப் பண்ணிட்டேன்" என்று தன் செயலினை விமர்சித்துக் கொள்வான்.
இப்போது தூண்டிலை வீசினான். தூண்டில் தக்கையின் ஒருமுனை நீருக்குள்ளும் மறுமுனை மேலேயும் நடனமாடத் தொடங்கியது. அவன் கண்கள் உற்றுநோக்கும் தவத்தை மேற்கொண்டிருந்தன. தவத்தின் பலனைக் காண ஆரம்பித்தான். தக்கை முழுமையும் உள்ளே சென்றது. ஏனோ இந்த முறை தூண்டிலை மெதுவாக வெளியே இழுத்தான். ஒரு சிறிய ஜிலேபி மீன் தூண்டிலில் புழுவின் முனையை அப்படியே விழுங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.
"ஓ… நீதானா? ஏதோ பெரிய மீனோனு நினைச்சேன்" வரவேற்றுக்கொண்டு தூண்டிலில் இருந்து அதை மெதுவாக விடுவித்தான். "நல்ல பெருசா வளர்ந்து வா.. அப்புறம் பிடிச்சுக்கறேன்". சிறு மீன்களின்மீது அவனுக்கு நாட்டம் இல்லை. அதற்குக் காரணம் அவனும் இல்லை. தன் கை கட்டைவிரல் அளவே இருந்த அந்த ஜிலேபி மீனைத் தண்ணீரில் மெதுவாக விட்டான். தன்னைப் பிடிக்க வருபவரிடம் இருந்து தப்பிக்க நான்கு வயது சிறுவன் சர்ரென ஓடுவதுபோல் இருந்தது அந்த மீனின் ஓட்டம்.
சிறுவயதில் தன் தட்டில் இருந்து ஒரு சிறு மீனை விளையாட்டுத்தனமாய் எடுத்துக்கொண்டு தாயின் மடியில் தொப்பென்று விழுந்த தன் மகனின் நினைவு அவனுக்கு வந்தது. ஹா ஹா என சிரித்துக்கொண்டே அதை வாயில் போட்டுக்கொண்டதுதான் தாமதம். ஆ... வென கத்த முயன்றான் சிறுவன். முடியவில்லை. மீன் முள் தொண்டையில் மாட்டிக்கொண்டு தவித்தான். மரகதம் பிள்ளையின் வாயில் விரல்விட்டுத் துழாவினாள். பலன் இல்லை. வெறும் சோற்றுப் பருக்கை சிறிய உருண்டை என உருட்டி அவன் வாயில் திணித்து விழுங்க வைத்தாள். இப்போது பரவாயில்லை என்பதுபோல் குழந்தை உணர்ந்தாலும் இரவு தூக்கம் வரும் வரையிலும் அழுகை ஓய்ந்தபாடில்லை. முள்ளோடு மீனைப் பையனுக்கு கொடுக்காதே என்று எவ்வளவு முறை சொல்லுறது என்பதுபோல் மரகதம் கோதண்டத்தை முறைத்தாள். குழந்தைதான் அவனே எடுத்துக்கிட்டான் என்று கோதண்டத்துக்கு விளக்கம் கொடுக்கவும் தோன்றவில்லை. தன் கணவனை யாருக்கும் முன் விட்டுக் கொடுக்காமல்தான் இருந்தாள் எனினும் அவள் இறுதியாகக் கண்மூடும் வரையில் தன் மகனுக்காகப் பரிந்து பேசுவதை இயல்பாக கொண்டிருந்தாள். அதுநாள் முதல் ஒவ்வொரு முறையும் மீன் குழம்பு வைக்கும்போது முள்ளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொடுப்பான் தன் பிள்ளைக்கு. இப்போது அப்படியில்லை . "அப்பா எனக்கு... எனக்கு..." என்று தன் அப்பாவோடு சேர்ந்து சாப்பிட்டு விளையாடிக் கொண்டிருந்த அவன் இன்று காலை கேட்ட கேள்வி கோதண்டத்தின் காதுகளில் இன்னும் அடித்துக் கொண்டே இருக்கிறது.
"எனக்காக என்ன செஞ்ச?" காலையில் நடந்தது மனதில் ஓடியது.
"இருக்கிறதே கால் காணி அதையும் விட்டுச் சும்மா கிடக்கிறதா?" சலிப்புக் கலந்த கோபத்துடன் கோதண்டம் கேட்டான்.
"நான் என்ன வித்து வீண்செலவு பண்ணவா கேட்கிறேன்? பிசினஸ் பண்ணத்தானே கேட்கிறேன். எனக்குக் கல்யாணத்துக்கு ஆன செலவுகூட நான் சம்பாதிச்சது தானே. எனக்கு இன்னும் என்ன செஞ்சுட்ட நீ?" மகனின் வாக்குவாதம் தொடங்கியது.
"உன்ன காலேஜ் வரைக்கும் படிக்க வச்சேன். அதுக்கு எல்லாம் காசு எப்படி வந்துச்சு. பாதி நான் கூலி செஞ்சு சம்பாதிச்சதுனா மீதி அந்த நிலத்துல வெளஞ்சது. இப்ப அத விக்க நெனச்சா எப்படி?"
தன் மகனால் எப்படி இதுமாதிரி பேச முடிகிறது என எண்ணினான்.
"இப்போ என்ன பெருசா அதுல வெளைஞ்சி கிடைக்குது?" தன் வாதத்தை நியாயப்படுத்தும் விதமாகத் தன் தந்தையிடம் கேள்வி கேட்டான். தன் தகப்பனின் தூண்டிலில் தான் மாட்டிக் கொண்டு ஏதும் செய்ய முடியாமல் இருப்பதாக மகன் நினைத்தான்.
"சும்மா கருப்பா இருந்தாலும் பரவாயில்லை அது அப்படியே இருக்கட்டும்." அருகில் நின்று கொண்டிருந்த தன் மருமகளைப் பார்த்துக்கொண்டே கோதண்டம் பேசினான்.
அவன் அதை நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தூண்டில் தக்கை மெதுவாக உள்ளே சென்றது. சட்டெனத் தூண்டில் மேலே எடுத்துப் பார்த்தான். ஒரு பெரிய மீன் தண்ணீர் மேற்பரப்புவரை வந்து உள்ளேயே விழுந்துவிட்டது. அந்தப் பெரிய மீன் தப்பித்துவிட்டது. சில மணி நேரங்கள் கடந்தன. சூரியன் மறைந்துவிட்டான். இருள் அதிகமாகப் படரத்தொடங்கியது. தூண்டில் நரம்பை இழுத்துக் கட்டிக்கொண்டு, பிடித்த மீன்களைப் பத்திரமாகத் தரையின் மேற்பகுதியில் வைத்துவிட்டு ஆற்றின் குறுக்கே கட்டி இருக்கும் வலையை எடுத்து ஆராய்ந்தான். தூண்டிலில் மாட்டியவற்றைவிட வலையில் அகப்பட்டவை குறைந்தவைதான் எனினும் இரண்டையும் சேர்த்தால் குழம்புக்கு ஆகும். தன் துணிகளை எடுத்துக்கொண்டு வீடு வந்தான் கோதண்டம்.
மீன்களைச் சுத்தம் செய்ய வீட்டின் பின்புறம் உள்ள பலகைக் கல்லின்மீது கொட்டி அவற்றின்மீது சாம்பல் போட்டான். மீன்களிலும் தன் கைகளிலும் இருந்த வழவழப்புத் தன்மை போனது. எவ்வளவுதான் மகனின் வாழ்க்கைக்குத் தன் உழைப்பைப் போட்டாலும் இருவருக்கும் இடையில் உள்ள வழவழப்பைப் போக்க முடியவில்லையென வருந்தினான்.
"என்ன செஞ்சிட்ட எனக்குன்னு கேட்கிறான். நன்றி கெட்ட பையன் நன்றி கெட்ட பையன்." ஒரு பெரிய மீனின் செதில்களை உரசித் தேய்த்துச் செவுள்களை உடைத்து எறிந்தான்.
"எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுச் சாப்பாடு போட்டு இருப்பேன், படிக்க வச்சிருப்பேன்." வயிற்றைக் கிழித்து அதில் இருந்த அழுக்கு மற்றும் குடலை அப்புறப்படுத்தினான்.
"ஏதோ என் பொழப்புள அவ்வளவுதான் முடிஞ்சது. அவன் பொழப்பு அவன் கையிலதான். நான் என்ன பண்ணப் போறேன்? தத்துவமாக சலித்துக் கொண்டான். மீனின் இறக்கை, வாலைத் துண்டித்துச் சுத்தமான நீரில் மீனோடு கையைச் சேர்த்துக் கழுவினான்.
பிடித்து வந்த அத்தனை மீன்களையும் சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு அடுப்புப் பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே நடமாடினான். ஒன்று கூடி ஊர்க்கதைகள் பேசும் இடத்தில் ஒரு மவுனியாக அமர்ந்துவிட்டுத் திரும்பவும் வீட்டிற்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து. பாதித் தலைகளோடு ஒரு பக்க உடம்பை மட்டும் காட்டிக்கொண்டு குழம்பு சட்டியில் விருந்தாக மாறி இருந்தனர் கோதண்டத்தின் விருந்தாளிகளான மீன்கள்.
"அவன் சாப்பிட்டானாம்மா?" தன் மருமகளைப் பார்த்துக் கேட்டான் கோதண்டம்.
"இல்ல அவரு சாப்பாடு வேண்டாமுன்னு சொல்லிட்டாரு." பதிலைக் கூறிவிட்டுத் தன் கணவன் இருந்த அறைக்குச் சென்று கதவைத் தடாலெனச் சத்தத்துடன் சாத்திக்கொண்டாள்.
தனக்குத்தானே தூண்டில் போட்டுக்கொண்டு மேலும் கஷ்டத்தில் மாட்டிக்கொள்வானோ தன் பிள்ளை என நினைத்தான் தகப்பனாகிய கோதண்டம். சில நேரங்களில் தூண்டில் புழுவாய் மாறிவிடும் அப்பன் பிள்ளை உறவை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் கோதண்டம்.
திருமுருகாற்றுப்படை
உரையாடல் - பகுதி - 9
பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்
புலவர்: எப்படியெல்லாம் முருகப் பெருமானைப் பாடி வணங்கலாம்?
நக்கீரர்: எங்கெல்லாம் திருமுருகப் பெருமானைக் காணும் நற்பேறு பெறுகிறாயோ அங்கெல்லாம், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்திக் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி அவர்தம் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கிப் போற்றிப் பாடுவாயாக!
எவ்வாறெல்லாம் வாழ்த்தலாம் என்றால்,
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான தீயானவர், தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டு வந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப் பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே!
கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே!
இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே!
தீயோராகிய பகைவர்களுக்கு யமன் போன்றவரே!
வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின் மைந்தரே!
அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின் குழந்தையே!
வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே!
கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே!
அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும் புலமை உடையவரே!
போர்த்தொழிலில் ஒப்பற்றவரே! உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப் போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே!
அந்தணர்க்குச் செல்வமாக விளங்குபவரே!
புலமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே!
தெய்வயானை, வள்ளி அம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே!
வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே!
ஞான சத்தியாகிய வேலினைப் பெற்று விளங்கும் பெருமை பொருந்திய கையினை உடைய செல்வரே!
கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே!
வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடைய தலைவரே!
உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்களுக்கெல்லாம் தலைவரே!
மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன் என்னும் திருப்பெயரை உடையவரே!
விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும் கொடை வள்ளலே!
பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தர வேண்டியே பொன்னால் ஆகிய அணிகளை அணிந்துள்ளவரே!
பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து அருள்பவரே!
அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே!
மிகச்சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே!
உண்மையான தலைவரே!
இவ்வாறு திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குதலில் யான் அறிந்த அளவு கூறுகிறேன். இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது. நீயும் அறிந்தவா றெல்லாம் திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குவாயாக!
புலவர்: நன்றி ஐயனே! நற்பேறுடையேன்! ஒப்பில்லாத மெய்யறிவை உடைய பெருமானே! நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன் என்றும் உரைப்பேன் ஐயனே!
நக்கீரர்: நன்று. நன்று. அவ்வாறு உரைத்து நீர் எண்ணிய பரிசிலைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே அவருடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது போலப் பொலிவுடன் தோன்றித், திருமுருகப்பெருமானை நோக்கி என்ன உரைப்பார்கள் தெரியுமோ?
புலவர்: அவர்கள் யாது உரைப்பர் ஐயனே?
நக்கீரர்: 'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன் இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி வந்துள்ளான்' என்று இனிய உறுதி பயக்கும் சொற்களைக் கூறி நிற்பார்கள்.
அப்போது தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய வானத்தைத் தொடும் வடிவுடைய திருமுருகப்பெருமான் நின்முன்னே எழுந்தருள்வான். ஆயினும் காண்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக் கொண்டு முந்தைய மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய வடிவினைக் காட்டி, 'நீ அஞ்ச வேண்டா; உன்னைக் காத்தருள்வேன்; நின்வருகையை யான் முன்னரே அறிவேன்' என்று அன்புகூர்ந்த சொற்களைக் கூறி அருள்வான்.
மேலும் இருண்ட கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய பரிசிலைத் தந்தருள்வான்.
புலவர்: அருமை. நன்றி ஐயனே! திருமுருகப் பெருமானைக் காணும் ஆவலோடு செல்கிறேன்.
நக்கீரர்: இன்னுமோர் அழகிய இடத்தில் திருமுருகப்பெருமானைக் காண்பீராக!
புலவர்: அஃது எவ்விடம் ஐயனே?
நக்கீரர்: பல சிறு ஊற்றுகள் இணைந்து வெவ்வேறான துகிலால் ஆகிய பல கொடிகளைப் போன்று மலை உச்சியிலிருந்து அசைந்து அருவியாக வரும். அஃது, அகிற்கட்டையைச் சுமந்து கொண்டு வரும். பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளும். சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு தனிப்பட வேரைப் பிளந்துகொண்டு வரும்.
புலவர்: அடடா! அஃது வளப்பமுடைய அருவியாயிருக்கும் எனத் தோன்றுகிறதே.
நக்கீரர்: ஆம். அதனால் என்னவெல்லாம் நிகழும் தெரியுமா?
வானத்தைத் தொடுவது போன்ற நெடிய மலை மீது கதிரவனைப் போல் சிவந்து தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதைவுறும்.
பலாப்பழத்தின் பல முற்றிய சுளைகள் அருவியில் விழுந்து கலக்கும்.
மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின் பூக்கள் உதிரும்.
கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கும்.
நெற்றியில் புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான குளிர்ச்சியை உணரும்.
பெரிய யானையின் முத்தினை ஒத்த கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கும்.
வாழை மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழும்.
தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரும்.
மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயும்.
அழகான இறகைப் புறத்தேயுடையதும் இளமையுடன் கூடிய நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறும்.
வலிமையுடைய பெண் கோழிகளும் அஞ்சி ஓடும்.
ஆண் பன்றியும், கரிய பனையின் புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரும்.
கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால் கதறும்.
இத்தகு விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும்.
அவ்வாறு மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய சோலைகளைப் பெற்று விளங்கும் குறிஞ்சி நிலமாகிய பழமுதிர்சோலைக்கு உரிமை உடையவர் திருமுருகப்பெருமான்.
புலவர்: நன்றி ஐயனே! தாங்கள் என்னைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய விதம் என்னுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே திருமுருகப் பெருமானைக் காணச் செல்கிறேன்.
நக்கீரர்: நன்று. நன்று. திருமுருகப் பெருமானின் திருவருளால் நற்பேறு பெறுக. வாழிய நலம்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் புலவர் ஒருவரைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய 'திருமுருகாற்றுப்படை உரையாடல்' நிறைவுற்றது.
எடுத்தாண்ட நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை உரை - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) (http://www.kaumaram.com/)
2. திருமுருகாற்றுப்படை விளக்கம் - கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்
நடுப்பக்க நயம்
கம்பனைப் போலொரு…
பகுதி – 11
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
கம்பருக்கு முன்னரே நம் சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய சிலப்பதிகாரத்திலும், பழமொழி நானூறு போன்ற பிற இலக்கியங்களிலும், எல்லாவற்றுக்கும் மேலாக பக்தி இலக்கியக் காலமான 6-8ஆம் நூற்றாண்டு இலக்கியங்களிலும் இராமாயணச் செய்திகள் மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிறப்பென்ன வெனில், இவற்றில் "இராமனைக் கடவுளாகவே" காட்டப்பட்டுள்ளன.
புறநானூற்றில் 378 ஆம் பாடல்... ஊண்பொதிப் பசுங்குடையார், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பற்றிப் பாடிய பாடல்.
அரசன் அளித்த பெருஞ்செல்வத்தையும், பொன்னகைகளையும் பெற்ற புலவரின் குடும்பத்தார் அந்த நகைகளை எப்படி எங்கெங்கு அணிய வேண்டும் என்றறியாமல், விரலில் அணிய வேண்டியவற்றைச் செவியிலும், செவியில் அணிய வேண்டியவற்றை விரலிலும், இவ்வாறே அனைத்து நகைகளையும் இடம்மாற்றி அணிந்து மயங்கினர். இக்காட்சி... “சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் இராமனுக்காக அடையாளத்திற் காகச் சீதை அவிழ்த்தெறிந்த நகைகளைச் செம்முகக் குரங்குகள் மாற்றி மாற்றி அணிந்ததைப் போலிருந்தது" என்று சோழனின் வள்ளண்மையைக் கூறுவார்.
தென்பரதவர் மிடல்சாய
. . . . .
. . . . .
இனிதுபெற் றிகுமே...
(புறம். 378) என்கிறது அந்தப் பாடல்.
***
அகநானூறு 70ஆம் பாடல். மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது.
"இராமன் தன் படைவீரர்களுடன் போர் பற்றிய வியூகத்தின்போது இரைச்சலிட்ட பறவைகள் ஒரு சேர அமைதியாயின போல், தலைவன் உன்னை வரைவு முடித்த பின் இப்போதுள்ள அலர் நீங்கும்" என்று தோழி கூறுவதாய் அமையும் பாடல்...
கொடுநிமிர் பரதவர் வேட்டம் வாய்த்தென
. . . . .
. . . . . அழுங்க லூரே!
(அகம் 70.
***
கலித்தொகையில் கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடல்.
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமையமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல...
(கலி. குறி.38)
இப்பாடலில் இராவணன் சிவபெருமானின் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போன செய்தி இடம்பெற்றுள்ளது.
****
முன்றுரையரையனாரின் பழமொழி நானூறு 92ஆம் பாடல்.
பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்(து)
இலங்கைக் கிழவற்(கு) இளையான்-இலங்கைக்கே
போந்(து)இறையாயதூஉம் பெற்றான்பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்.
இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இராமனுக்குத் துணையாகப் போந்த வீடணன் இலங்கைக்கே அரசன் ஆனான். ஆதலால் பெரியாரைச் சார்ந்தவர் பெருமை பெறாமல் போனதில்லை.
***
சிலப்பதிகாரத்தில் இராமாயணச் செய்தி:
ஊர்காண் காதையில் வருகின்ற ஒரு காட்சி. தன்னூரை விட்டுக் கண்ணகி மற்றும் கவுந்தியடிகளுடன் மதுரை நோக்கிச் செல்லும் போது மனம் வருந்தும் கோவலனைத் தேற்றும் கவுந்தியடிகள்...
"தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதலோன் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ? நெடுமொழி யன்றோ?"
(சில. ஊர். 46-49)
என்று கேட்கும் கவுந்தியின் பேச்சில் இன்னொரு உண்மை தொக்கி நிற்பதைக் காணலாம்.
அது...
"இராமாயணம் சிலப்பதிகாரத்திற்கு முன் நெடுங்காலத்திற்கு முன்பே யாவரும் அறிந்த கதை" என்பதாம்.
இன்னுமோர் இடத்தில் இராம இலக்குவன் சீதையுடன் காடு சென்ற காட்சியைக் காட்டுவார் இளங்கோ... அது ஆய்ச்சியர் குரவையில் 35 ஆம் பாடலாக வருகிறது.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!
(சில. ஆய். 35)
என்று கூறும் இளங்கோ இராமனைத் திருமாலாகக் காட்டுவதையும் நோக்குக.
****
இவை போக...
உருகியுருகிப் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடப்பட்ட ஆழ்வார் பாசுரங்களில் பலவாறாக இராமாயணச் செய்திகள் பேசப்பட்டுள்ளன. அவற்றைத் தேடிக் காண்க. மேலும் சில நாயன்மார் பாடல்களிலும்கூட இராமாயணச் செய்திகள் உள்ளன.
★
எனவே... கம்பருக்கு முன் 900 ஆண்டுகளுக்கு முன்பே இராமன் கடவுளாக்கப்பட்டுவிட்டதால் தன் காப்பியத் தலைவனைக் கம்பரும் கடவுளாகக் காட்ட வேண்டியதாயிற்று என்பதாலேயே இராமனைக் கடவுளாகக் காட்டினார். அவ்வாறின்றி மாற்றி எழுதியிருப்பாரேயானால் கம்பனுக்குப் புகழும் கிடைத்திருக்காது... இவர்கள் கம்பனை இகழவும் வாய்ப்பில்லாது போயிருக்கும். (எப்படியோ நமக்கு அருமையான பைந்தமிழ்ப் பனுவல் ஒன்று கிடைத்தது).
சங்க இலக்கியக் காலத்திற்குப் பின் பௌத்தம், சமண சமயங்கள் வளர்ச்சி பெறத்தொடங்கி வலுப்பெற்றிருந்தன. அவை பல்லவர் ஆட்சிக் காலத்தில் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்க, சைவமும், வைணவமும் செழிக்கலாயின. அக்காலத்தில் எழுந்த சமய இலக்கியங்கள் சிவனையும், திருமாலையும் பரவலாக்கின. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைமையை இலக்கியங்களின் வழியே வளர்த்தனர். அக் கால நீட்சியில்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் காப்பியத்தைப் படைக்கிறார்.
முன்பே குறிப்பிட்டதைப்போல், ஒரு இலக்கியம் என்பது அவ்விலக்கியம் எழுந்த காலத்தின் கண்ணாடியாகும். எனவே கம்பர் காலத்தில் நிலைத்த செல்வாக்கு பெற்ற வைணவமும், இராமனும் அவருடைய காப்பியத்தில் கருப்பொருளானமைக்கும், இறைமையைப் போற்றியமைக்கும் வேறெந்தக் காரணமும் தேவையில்லை என்றுணர்க.
மாறாகக்... கம்பனை எதிர்க்கிறோம், கம்ப ராமாயணத்தை எரிக்கிறோம் என்று பரப்புரை செய்ததால்தான், படித்த புலவர்களிடத்தே மட்டும் உலவிக் கொண்டிருந்த கம்பராமாயணத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்த 'பெருமை' பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்கட்குமே சேரும்.
எந்தவொரு செயலையும் "செய்யாதே" என்றால்தான் அச்செயலில் நம்மை யறியாமல் நம்மனம் ஆர்வங் காட்டும். இது மாந்தரியல்பு. இவ்வியல்பின் காரணத்தாலேயே இவர்கள் 'படிக்காதே... படிக்காதே' என்று கம்ப ராமாயணத்தை எதிர்த்ததால்தான் கம்ப ராமாயணத்தின் புகழ் மிக்கோங்கியது என்பதே உண்மை.
அடுத்த பகுதியில் இவர்கள் கம்பராமாயணத்தை எதிர்க்கும் காரணங்களில் அடுத்த காரணத்தைப் பார்ப்போம்.
...தொடரும்...
மயானம்
பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்
வரவேற்க ஆளில்லா வாச லென்றும்
வழிகாட்ட யாருமில்லா வனந்தா னென்றும்
தரமற்ற தானவிடந் தானஃ தென்றும்
தனியாகச் செலவியலா தென்றும் கூறி
வரமாட்டே னெனச்சொல்ல வியலா தந்த
வனந்தேடிச் செலவேதான் வந்தோ மிங்கே
வரமாகக் கேளாமல் வாய்க்கு மிந்த
வாசலிலே தானெவர்க்கும் வாழ்வின் முற்று
இற்றைத் திங்கள் இவரைப் பற்றி
கட்டுரையாக்கம்:
பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்
கன்னல் மொழியாம் கன்னித் தமிழைக்
காதல் செய்பவன்!
கண்ணில் பட்ட காட்சி யெல்லாம்
கவியாய் நெய்பவன்!
மின்னல் வேகத் தோடு யாக்கும்
மேன்மை பெற்றவன்!
மீசைக் காரப் புலவன் பாட்டை
விரும்பிச் சுவைப்பவன்!
அன்னை சக்தி தாள்வணங்கி
அகங்கு ளிர்பவன் !
அன்பி லுருகிப் பாட்டுப் பாடி
அமைதி பெறுபவன்!
தென்றல் போலும் சோலை தன்னில்
தேனைப் பொழிபவன்!
செல்வம் யாவும் பெற்று வாழச்
சேர்ந்து வாழ்த்துவோம் !!
இற்றைத் திங்கள் தமிழ்க்குதிரை அலங்கரிப்பவர் கவிஞர் விவேக்பாரதி அவர்கள்!
வைகை நதி பாயும் கோயில் நகரமாம் மதுரையில் 1998-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 22-ஆம் நாள் பிறந்தவர். காவிரி பாயும் மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் வளர்ந்தவர். இவரது பெற்றோர் திரு. ஸ்ரீனிவாசன் - திருமதி. ஜானகி. உடன்பிறந்த தம்பி ஸ்ரீவத்ஸ்.
இளம் வயதில் மகாகவி பாரதியாரின் கவிதைகள் படித்த தாக்கத்தால் கவிதை எழுதத் தொடங்கியவர். 13 வயதிலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். 15 வயதிலிருந்து பைந்தமிழ் மரபு கவிதைகளை எழுதி வருபவர்.
திருச்சி எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளியில் பயின்றவர். சென்னை து.கோ. வைணவக் கல்லூரியில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தவர். கல்கி வார இதழில் பணி புரிந்தவர். தினமலர் (திருச்சிப் பதிப்பு) நிருபராகப் பணி செய்பவர். மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயருக்குப் பின்னடையாக அவர் பெயரைச் சேர்த்துக் கொண்டவர். பாரதி பக்தனான இவர் மாகாளியின் செல்லப்பிள்ளை.
நினைத்த மாத்திரத்தில் அருவியாய்க் கொட்டும் கவிஞானம் பெற்றவர். மரபு கவிதைகளில் மனமொன்ற எல்லா வகைமைகளிலும் திறம்படப் பாடும் வல்லமை படைத்தவர். இந்த இளங்காளைக்குப் பராசக்தி மேல் தீராக் காதல்! கொஞ்சுதமிழ்ச் சொற்களால் சந்தங்கள் துள்ளிவர இவர் பாடும் அழகில் அம்பிகையே சொக்கிவிடுவாள்.
சந்தவசந்தம், பைந்தமிழ்ச்சோலையில் மரபு பயின்றவர். மரபு மாமணி பாவலர் மா.வரதராசனாரின் மனங்கவர்ந்த மாணவர். குரு காணிக்கையாய் 2017-ல் "பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை" என்ற நூலைப் படைத்துள்ளார். எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. பெரியோர்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தொடர்ந்து பெறுபவர். பணிவு மிக்கவர். பண்பிற் சிறந்தவர்.
“தேசமும் தெய்வமும் ஒன்று” என்ற மகாகவி பாரதியாரின் கருத்துகளை ஆழமாக நம்பிச், செயலாக்கி வருபவர். காட்சித் தொடர்பியல் (Visual
Communication) பட்டதாரி, இதழியலாளர்.
❖ முதல் சிறகு (2016)
❖ பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017)
❖ ககனத்துளி (2018)
❖ பேசுபொருள் நீயெனக்கு (2018)
❖ சுதந்திர தேவி (2018)
❖ காலமா வனத்தில் (2020)
என்ற ஆறு நூல்களின் ஆசிரியர்.
தமிழக அரசின் மாநில அளவு கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்றவர். எண்ணற்ற கவியரங்கங்களில் கலந்து கொண்டவர். பல கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியவர். இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாகத் தொகுத்து வழங்கி வருபவர். “பாரதி யார்?” என்ற நாடகம் மூலம் 50 மேடைகளைக் கண்டவர்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழும் அரவணைக்கத், தமிழ்வானில் நம்பிக்கை நட்சத்திரமாய் வளைய வருபவர்.
துபாய் தமிழ்ச்சங்கம் உட்பட பல அமைப்புகளிலிருந்து,
⭐ வித்தக இளங்கவி பட்டம் (2015)
⭐ கவியருவி
⭐ தமிழன்பன் - 80 விருது (2015)
⭐ பைந்மிழ்ப் பாமணி பட்டம் (2016)
⭐ பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017)
⭐ ஆசுகவி பட்டம் (2017)
⭐ பைந்தமிழ்க் குருத்து விருது (2018)
⭐ மரபு ஆளுனர் விருது
(தொன்மைத் தமிழ்ச் சங்கம்)
⭐ விரைகவி வேந்தர் (2019)
⭐ சந்தக்கவிமணி(2019)
உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர்.
🌷 அமெரிக்காவின் தென்றல் இதழில் இவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
🌷 விஜய பாரதம் வார இதழிலும் இவரது நேர்காணல் வெளியாகியுள்ளது.
🌷 பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ‘படித்ததில் பிடித்தது’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர்.
🌷 இவை தவிர பல நேரலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கவிபாடியவர்.
🌷 கவிதைகளோடு, கட்டுரை, இசைப்பாடல்கள், சிறுகதைகள் என்று வெற்றித்தடம் பதிப்பவர். இவரது படைப்புகள் பல இதழ்களிலும், மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன.
கவிஞர் விவேக்பாரதி அவர்கள் தமிழன்னை அருளால் சீரோடும், சிறப்போடும் எல்லா வளமும் பெற்று நூறாண்டு வாழ மனம்நிறைந்து வாழ்த்துவோம்.
குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 24
வெண்பா
1. கவிஞர் செல்லையா வாமதேவன்
செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்
அந்தமிழ் மாண்பை அயன்மொழி முந்துமா?
சந்தமும் சாந்தமும் சார்ந்ததெந் தாய்மொழி
சிந்தையும் சீர்பெறுந் தேர்.
2. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்
செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்
சந்தத் தமிழினைச் சார்கவே - எந்நாளும்
நற்றமிழ் நன்றாய் நவின்றால் நலமேநீ
வற்றாத் தமிழினை வாழ்த்து.
3. கவிஞர் பா.இந்திரன்
செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்
விந்தை யுலகில் விரைவாகும் - சிந்தனையும்
நற்கவி யாகுமே நாளெல்லாம் கூடிடக்
கற்றவர் கல்வியே காண்
கலிவிருத்தம்
செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்
சொந்தமா யாயிரம் சோர்விலா நற்கவி
தந்தவ ராகுவர் தங்கமாய்ப் போற்றவே
சிந்தையை வென்றுடன் சீரென வாழ்கவே
4. கவிஞர் சுந்தரா
அந்தமி ழோடுள மாழ்தலே நல்லறம்!
செந்தமி ழோடுளஞ் சேர்தலே யின்பமாம்!
நந்தமி ழோடுளம் நண்ணுதல் நற்பொருள்!
எந்தமி ழோடுள மின்புறல் வீடதே!
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
பகுதி – 1
குரல்வழிக் கவியரங்கம்
தலைப்பு: கதவைத் திறந்துவை
திருவள்ளுவராண்டு 2052 சுறவத் திங்கள் முதல் நாளிலிருந்து பைந்தமிழ்ச்
சோலை முகநூல் குழுவில் வெளியிடப்பட்ட குரல்வழிக் கவியரங்கம். கவிதையை அவரவருடைய குரலில்
கேட்கக் கீழுள்ள இழையைச் சொடுக்குக.
தலைமை
பைந்தமிழ்ச்
செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
பங்கேற்போர்
1.
பைந்தமிழ்ச்செம்மல்
மன்னை வெங்கடேசன்
2.
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி
3.
பைந்தமிழ்ச்செம்மல்
சியாமளா ராஜசேகர்
4.
பைந்தமிழ்ச்செம்மல்
வள்ளிமுத்து
5.
பைந்தமிழ்ச்செம்மல்
பரமநாதன் கணேசு
6.
பைந்தமிழ்ச்
செம்மல் சாமி.சுரேஷ்
7.
பைந்தமிழ்ச்செம்மல் நெடுவை இரவீந்திரன்
8.
பைந்தமிழ்ச்செம்மல்
செல்லையா வாமதேவன்
9.
பைந்தமிழ்ச்
செம்மல் இரா.கண்ணன்
10.
பைந்தமிழ்ச்செம்மல்
உமாபாலன் சின்னதுரை
12. பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி
13.
பைந்தமிழ்ப்
பாமணி ஷேக் அப்துல்லா அ
14. பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ்
முனியப்பன்
15.
பைந்தமிழ்ச்
சுடர் சோமு சக்தி
16.
பைந்தமிழ்ச்
சுடர் விசு. இம்மானுவேல்
18.
பைந்தமிழ்ச்
சுடர் வே.அரவிந்தன்
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
கவியரங்கத் தொடக்கக் கவிதை
பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
தமிழ் வாழ்த்து
முத்தமிழே செம்மொழியே தமிழத் தாயே
முன்னவர்கள் முத்தென்றே உன்னைக் காத்தார்
தித்திக்கும் இன்தமிழாற் கவிதை பாடத்
தீந்தமிழின் சொற்களினைத் தேடி வந்தேன்
சித்திக்க வந்தென்றன் அருகில் நின்று
சிறப்பாக அருள்தந்து வாழ்த்த வேண்டும்
எத்திக்கும் முழங்கட்டும் உன்றன் மாட்சி
எழிலாக எனைக்காத்தே அருளு வாயே
ஆசான் வாழ்த்து
தரணியினில் சிறக்கின்ற மரபு பாக்கள்
தனித்துவமாய் மிளிர்கின்ற சோலை கண்டேன்
கரங்கொடுத்து வழிநடத்தும் ஆசான் நாடிக்
கனிவாக என்விருப்பம் சொல்லி நின்றேன்
குருவருளின் கருணையோடு மரபைக் கற்கக்
குதூகலத்தில் நாள்தோறும் வடித்தேன் பாக்கள்
வரந்தந்தப் பைந்தமிழின் சோலை தன்னை
மகிழ்வாகக் கரங்குவித்துப் போற்று வேனே
நற்றமிழின் சொற்களினால் மாலை கோத்து
நறுந்தமிழால் பாவகைகள் கற்றுத் தந்தார்
ஒற்றுக்கள் வருமிடமும் வகையாய்ச் சொல்லி
உன்னதமாய்ப் பாட்டியற்றும் பயிற்சி தந்தார்
பற்றுடனே திருத்தங்கள் செய்தே எம்மைப்
பாவகைகள் பாங்காக வடிக்கச் செய்தார்
குற்றமறக் கற்பித்த நல்ல ஆசான்
குருவருளின் துணையோடு தொடரு கின்றேன்
அவை வாழ்த்து
பைந்தமிழின் சோலையினுள் நுழைந்து நானும்
பாங்காகக் கதவுதனைத் திறந்து வைத்தேன்
செந்தமிழின் சொற்களினால் மாலை கோத்துச்
சிறப்பாகக் கவிபாட மகிழ்வாய் வாரீர்
அந்தமிழா லனைவருக்கும் வணக்கம்சொன்னேன்
அகமகிழ்வாய் எண்ணமதைப் படைக்க வாரீர்
செந்நெறியில் விருப்புடனே திறந்த தாளைச்
சிந்தையுடன் படைத்திடுவீர் மகிழு மாறே
தொடக்கம்
கதவுதிறந் துவையென்னும் தலைப்புத் தந்து
கவியரங்கத் தலைமையினைத் தாங்கச்
சொன்னார்
உதயமாகும் கற்பனைகள் பலவும் கண்டே
உள்ளத்தின் கதவுதனைத் திறந்து விட்டேன்
விதவிதமாய்க் கதவுகளும் இருக்கக் கண்டு
வியப்புற்று மகிழ்வுற்றேன் தலைப்பில் நானும்
மதுவருந்தும் வண்டாகச் சுவைக்க எண்ணி
மகிழ்வுடனே கவிதைகளைப் பார்க்க வந்தேன்
புதுமையான கருத்துதன்னைப் படைக்க வாரீர்
புறப்படட்டும் புதுப்புதிதாய்க் கவிதைப்பாய்ச்சல்
நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும் வலிகள் தன்னை
நேர்மையாக எடுத்துரைக்க வலிகள் மாறும்
பஞ்சமின்றி வாழ்வதற்கு வழிகள் கூறப்
பட்டினியால் வாழ்வோரின் உள்ளம் ஆறும்
வஞ்சமின்றி அறிவுதனைப் பகிர்ந்து விட்டால்
வளத்துடனே வாழ்வார்கள் உலகில் மாந்தர்
கொஞ்சிடுமே விழுகின்ற சொற்க ளெல்லாம்
குதூகலமாய்க் கவிவரியாய் வந்து துள்ளும்
முத்தமிழ்ச் சொற்களால் முத்தாய்த் தொடுத்துத்
தித்திக்கும் மனத்தைத் திறக்க லாமே
உரிமை தன்னை உரத்துக் கேட்டு
விரைவாய்ச் சொல்லி வேட்கை தணிப்பீர்
அறிவு கத(வு)அ னைத்தையும் திறக்கச்
செறிவாய் ஓடும் அந்தமிழ்ச் சொற்கள்
அன்பைக் காட்டும் அறவழி திறக்க
நன்றே தெரியும் நல்லோர் வழிகள்
எண்ணக் கதவைத் திறந்து வைத்துப்
பண்பாய் வந்து பகரு வீரே
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
1. பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்
பெயர் : மன்னை வெங்கடேசன்
பணி : மைய அரசு பணி
• பைந்தமிழ்ச்சோலை நிறுவிய காலந்தொட்டு உறுப்பினர்.
•பைந்தமிழ்ச்சோலை இணைஆசிரியர்
• சோலையின் ஆண்டுத்தேர்வில் முதல் 'பைந்தமிழ்ச் செம்மல்' பட்டம் பெற்றவர்
• நற்றமிழாசான், ஆசுகவி பட்டங்கள் பெற்றவர்.
• மடக்கு, சிலேடைக் கவிதைகளில் ஆர்வமிக்கவர்.
கவிஞர் அழைப்பு
பண்பில் சிறந்த கவிஞரிவர்
பாங்காய்க் கவிகள் பலதருவார்
எண்ண மதனில் தோன்றுவதை
எளிதாய் மடக்கில் வடித்திடுவார்
கன்னல் மொழியால் கவிபாடக்
கனிவு பொங்க அழைக்கின்றேன்
இன்பத் தமிழால் இவ்வரங்கும்
எழிலாய் முழங்கி அதிரட்டும்
பைந்தமிழ்ச் செம்மல் வெங்கடேசன் ஐயா வருக !
செந்தமிழ்ப் பாக்கள் அள்ளித் தருக !
தமிழ் வணக்கம் (நேரிசை வெண்பா)
மற்ற மொழியெலாம் வந்து வணங்குமால்
உற்ற சிறப்புடை ஒண்டமிழே - சற்றே
கதவைத் திறக்கக் கவிபாட வந்தேன்
உதவுவாய் சொற்கள் உதிர்த்து
தலைவர் - அவை வாழ்த்து (எழுசீர் விருத்தம்)
பைந்தமிழ்ச் செம்மல் நிருமலா இங்குப்
பாங்கொடு தலைமையை ஏற்கப்
பைந்தமிழ்ச் சோலைத் தளத்தினில் உள்ள
பழகுநல் அவையினர் முன்னே
ஐந்திணைத் தமிழில் அகமகிழ் கவிகள்
அளிப்பதற் கென்றுநான் வந்தேன்
மைந்தனைக் கண்ட தாயென மகிழ்ந்து
வருபிழை பொறுத்திடு வீரே
கதவைத் திற (அறுசீர் விருத்தம்)
அன்பே உலகில் அனைவர்க்கும்
ஆணி வேராய் இருப்பதனால்
என்பும் உருக்கும் அன்பதனை
எப்போ தும்கை விடவேண்டா
பண்பாய்ப் பழகி வேண்டுமட்டும்
பலரும் மகிழ்ந்து வாழ்வதற்காய்க்
கண்போல் அன்பைக் கடைப்பிடிக்கக்
கதவைத் திறப்பாய் என்மனமே!
உன்னைப் போலே பிறருக்கும்
உணர்ச்சி உண்டென் றறிந்தாலே
தன்னால் பணிவும் உண்டாகும்
தானென் றெண்ணல் மறைந்தோடும்
இன்னார் அணுவும் செருக்கில்லார்
என்றே உலகோர் உனையுவப்பர்
கன்னல் பணிவை வெளிக்காட்டக்
கதவைத் திறப்பாய் என்மனமே
அறிவே உலகில் உனைக்காட்டும்
அதனால் அதுவே தலையாகும்
அறிவைப் பெருக்கிக் கொள்வதனால்
ஆன மட்டும் பயன்பெறலாம்
அறிந்த வற்றை வெளிப்படுத்தி
அனைவ ருக்கும் உதவிடலாம்
கறையில் லாத அறிவுபெறக்
கதவைத் திறப்பாய் என்மனமே
உயர்த்தும் குணங்கள் பலவிருக்க
உன்னைக் குழியில் விழவைக்கும்
கயமைக் குணங்கள் பலவுண்டாம்
களிப்பைக் கொடுத்துக் கெடுத்துவிடும்
அயர்ந்தால் உன்னை அழித்துவிடும்
அதனால் அவற்றை வெறுத்தொழித்துக்
கயமைக் குணங்கள் வெளியேறக்
கதவைத் திறப்பாய் என்மனமே
கதவைத் திறந்து வைப்பதனால்
களவும் போக வாய்ப்புண்டே
கதவைத் திறக்க மறுப்பாயேல்
காற்றும் வாரா நிலையுண்டே
கதவைத் திறந்து நல்லவற்றைக்
கண்டு கொண்டு வரவேற்பாய்
கதவைத் திறந்து தீயெண்ணம்
காணா வண்ணம் ஒழிப்பாயே
நன்றி நவிலல் (அறுசீர் விருத்தம் - வேறு)
இதுவரை என்றன் நெஞ்சில்
இருந்தவை கொட்டி விட்டேன்
மதுவிலே மயக்கம் கண்ட
வண்டென மகிழ்வுற் றோர்க்கும்
இதுபுது வகையென் றெண்ணி
இதுவரை கேட்ட வர்க்கும்
பொதுவிலே என்றன் நன்றி
புகல்கிறேன் வணக்கம் வாழ்க!
வாழ்த்து
உயர்த்தும் குணங்கள் பலவற்றை
உலகோர் அறிய வைத்தீர்கள்
மயக்க வைக்கும் அன்புடனே
வாழ்தல் உலகில் பண்பாகும்
வியக்க வைக்கும் வரிகளினால்
விருந்தை அளிக்க மகிழ்ந்தோமே
வயங்க வைத்தார் வெங்கடேசர்
வாழ்த்தி வணக்கம் சொல்வோமே
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
2. பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி
புனைபெயர்: தமிழகழ்வன்
படிப்பு: இளநிலை - தகவல் தொழில்நுட்பம், இளநிலை - தமிழிலக்கியம்
பணி: மென்பொறியாளன்.
கவிஞர் அழைப்பு
சுடராய் மின்னும் தமிழ்க்குதிரில்
சுழலும் இவரின் பணியெல்லாம்
இடர்கள் சுமையைக் கொடுத்தாலும்
எழிலாய் இதழ்கள் பளபளக்கும்
மிடுக்காய்க் கவிதை மழைபொழிவர்
விருப்பாய்க் கேட்க வாருங்கள்
அடுக்காய்ப் பாக்கள் ஒளிரட்டும்
அரங்கம் அதிர்ந்து நிற்கட்டும்
பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் வருக
தண்டமிழ்க் கவிதை தருக
தமிழ் வாழ்த்து
அன்னைத் தமிழே! அமிழ்தாய் இனிப்பவளே!
உன்றன் அருளால் உயிர்வாழ்வேன் - என்றும்
இயக்குங் கதிரே! இருந்தென்றன் நாவில்
நயக்கும் படிமொழிய நாட்டு
ஆசான் வாழ்த்து
பாமணியால் பண்புடைத்தால் பைந்தமிழச் சோலையினால்
மாமனித! மன்னவனே! மாமணியே வாழியவே!
கவியரங்கத் தலைமை வாழ்த்து
தூயநற் பாக்களால் துன்பம் துடைக்கின்ற
மாயஞ்செய் நிர்மலா மாதவத்தாள் வாழியவே!
அவையடக்கம்
தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!
கதவைத் திறந்து வை
எல்லை இலாத வெளியெங்கும் உம்முடைய
எல்லை விரித்தலுக் கேற்பனசெய் - முல்லை
அரும்பி அழகாகும் அம்மாலை போலத்
திருந்துக எண்ணத்தைத் தேர்ந்து 1
தேர்ந்தன எண்ணங்க ளாய்மட்டும் நில்லாமல்
ஆர்ந்தின்னும் சொல்லில் அமைத்தலொடு-நேர்ந்து
செயலாய் முறையாய்ச் செதுக்கத் திடமாய்
முயல்வாய் முயற்சி முதல் 2
முதலொடு திட்டம் முழுதும் வரைந்து
பதமாய்ப் பகுத்துப் பழக - விதமாய்க்
குறுக்கம் நெடிதெனக் கொள்க குறிக்கோள்
நறுக்கிச் செயலாற்று நன்கு 3
நன்கு விரிவுசெய் நல்லறிவை நானிலத்தின்
நன்மை விரிவுசெய் நாடியது - பொன்னும்
பொருளும் பெரிதுசெயப் போராடா தேயங்(கு)
இருளே இருக்கும் இரி 4
இரிப்பாய் முதலில் இதுவேண்டா இன்றென்
அரிப்பாய் அரிக்கும் பழக்கம் - சிரிப்பாய்த்
தொடங்கின்றே இல்லை தொடலாகா என்றும்
வடம்பிடிப்பாய் தேர்நகர வாய்ப்பு 5
வாய்ப்புகள் வாய்ப்பதில்லை வாய்திறவாதாருக்கு
வாய்ப்புகள் தானே வருவதல்ல - போய்ப்புகல்
போய்ப்புகல் இவ்விரண்டும் பொய்யாக்கா
துன்வாய்ப்பை
ஏய்ப்புகள் ஏமாற்றி ஏறு 6
ஏற்றமே உன்வாழ்வில் எள்ளளவும் ஐயமில்லை
மாற்றம் மனக்கத வைத்திறக்க - ஊற்றாய்
உலக நலன்போற்றும் உன்றன் அறிவுக்(கு)
உலகம் தலைவணங்கும் ஓர்ந்து 7
ஓர்ந்துயரும் நோக்கம் உடைத்தாயி னுன்வாழ்வில்
ஆர்ந்துயரும் ஆக்கம் அதன்வழியில் –
தேர்ந்தமைந்(து)
எல்லாம் இயங்குமுன் எண்ணம் வழிநடத்த
எல்லார்க்கும் நீயாவாய் எல். 8
வாழ்த்துப்பா !
நல்ல வழிகள் பற்பலவும்
நயமாய் உரைத்தார் வெண்பாவில்
வெல்லும் உலகில் வாழ்வதற்கு
விரைந்து வாய்ப்பைத் தேடென்றார்
எல்லை இலாத வெளியெங்கும்
எல்லை வகுத்துச் செய்யென்றார்
சொல்லிச் சென்ற செம்மலுக்குத்
தூவி விடுவோம் நல்வாழ்த்து
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
3. பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்
• இதுவரை 1800 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். ‘எழுத்து.காம்’ வலைத்தளத்தில் பதிந்துள்ளார்.
• சிறுகதைகள் எழுதுவார். வாரமலர், மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளாய் வெளிவந்துள்ளன.
• தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். முகநூல் குழுமங்களில் பல விருதுகள் பெற்றுள்ளார்.
• பரிசுக்காக அன்றிப் புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்றே முன்வந்து கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.
• மரபு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கவிஞர் அழைப்பு
வண்ணம் மிளிரும் இவர்கவியில்
மகிழ்ந்து நிற்பாள் தமிழன்னை
கண்கள் வியக்க நற்கவிகள்
கன்னல் மொழியில் பலதருவர்
பண்பில் சிறந்த கவியரசி
பாசம் பொங்கும் இவர்பேச்சில்
எண்ணம் மகிழ அழைக்கின்றேன்
இனிதே வந்து பாடுங்கள் !
வண்ணப்பா அரசியே வருக
வண்டமிழ்க் கவிதை தருக
தமிழ் வாழ்த்து
உள்ளம் நிறைந்தாய் உவப்பளித்தாய் இன்றமிழே!
கள்ள மழித்தாய் கனிவுடனே! - பிள்ளைநான்
கற்றோர் அவையில் கவிபாட வந்தேனுன்
வற்றா வருட்பொழிய வா.
அவை வாழ்த்து
பைந்தமிழ்ச் சோலை வாசம்
பாரெலாம் மணந்து வீசும்!
சந்தமும் கொஞ்சி யாடும்
சந்ததம் பாக்கள் கூடும்
வந்தவர் யாவ ருக்கும்
மரபிலே பயிற்று வித்துச்
சொந்தம்போல் அரவ ணைக்கும்
சோலையின் வரதன் வாழி !!
தலைமை வாழ்த்து
சந்தக் கவிமணி நின்றன் தலைமையில்
தங்கக் கவியரங்கம்
சிந்தை குளிர்ந்திடும் கவிதைப் பொழிவிது
செந்தேன் தமிழ்ச்சுரங்கம்
சொந்த நாட்டினை விடுத்தே வாழினும்
சொக்கத் தமிழ்மணக்கும்
சந்தித் திடவுளம் விழைந்தேன் கவிதையில்
தந்தேன் முதல்வணக்கம் !!
கதவைத் திறந்து வை
மனக்கதவைத் தாழிட்டுப் பூட்டிக் கொண்டால்
வருந்துன்பம் தட்டாமல் திரும்பிப் போமோ ?
இனம்புரியா அச்சத்தி லுறையு முள்ளம்
இளைப்பார வழியின்றிச் சோர்ந்து போகும்!
கனவிலேனும் இன்பத்தைக் கண்கள் தேடும்
கலைந்தமுகிற் கோலமென நிலையா தோடும்!
முனம்செய்த வினைப்பயனால் பிறப்பெடுத்தோம்
முடிவொன்று மறியாமல் மயங்கு கின்றோம்!
வருவதெல்லாம் வரட்டுமெனத் துணிந்தி ருப்பாய்
வழிபிறக்கும் தைபிறந்தால் நம்பி நிற்பாய்!
இருக்குமட்டும் பிறர்க்குதவி செய்தி ருப்பாய்
எப்போதும் ஆசைகளைக் குறைத்துக்கொள்வாய்!
கரும்பாக இனிக்குமோஎல் லோர்க்கும் வாழ்வு
கவலைகளால் கசந்தாலும் பொறுமை காப்பாய்!
மருந்தாகிக் காலமொன்றே காய மாற்றும்
மனக்கதவைத் திறந்துவைத்துக் காத்தி ருப்பாய்!
(வேறு)
நெஞ்சக் கதவைத் திறந்தேவை
நெடுநாள் புழுக்கம் மறையட்டும்!
தஞ்ச மடைந்த தீக்குணங்கள்
தானாய் வெளியே செல்லட்டும் !
வஞ்சம் விட்டு விலகட்டும்
வந்த வழியே போகட்டும் !
கஞ்சம் போலும் மலரட்டும்
கனிவில் விரிந்து மணக்கட்டும் !
உள்ளே பொறாமை புகுந்துவிட்டால்
உன்னைக் கனலாய்ப் பொசுக்கிவிடும் !
கள்ளம் தானே குடியேறும்
கருணை விடைபெற் றோடிவிடும்!
முள்ளாய்த் தைக்கும் பெருஞ்சினமும்
மூர்க்கத் தனமாய்க் குதித்தாடும்!
அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தமனம்
அமைதி இழந்து தவித்திருக்கும்!
இதயக் கதவைத் திறந்துவிட்டால்
இருளும் விலகி ஒளிபிறக்கும்!
இதமாய்த் துடிப்பின் இசைகேட்கும்
இறையு மங்கே குடியிருக்கும்!
உதய மாகும் புதுவிடியல்
உறவின் பலத்தில் நலம்விளையும் !
புதைந்த நச்சு வெளியேறப்
பூக்கும் வாழ்வு பொலிவுடனே!
வாழ்த்து
நெஞ்சக் கதவைத் திறந்துவைக்க
நெடுநாள் புழுக்கம் மறையுமென்றார்
அஞ்சி நடுங்கத் தேவையில்லை
ஆசை ஒழித்து விட்டுவிட்டால்
வஞ்ச மின்றி அறிவுரைகள்
வகையாய் அடுக்கித் தானீந்தார்
கொஞ்சும் தமிழால் போற்றுவமே
கூடி நின்று வாழ்த்துவமே
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
4. பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து
• தமிழாசிரியர்
• பைந்தமிழ்ச் செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான் எனும் பட்டங்களைப் பெற்றவர்.
• தற்காலக் காளமேகப் புலவர். சிலேடை இவருக்குக் கைவந்த கலை.
• வெளியீட்ட நூல்கள் - காக்கை விடு தூது, எழிற்பாவை, 'இரட்டுற மொழிதல் நூறு'
• கற்பனைத் திறன் மிகுந்த இயற்கைக் கவிஞர்.
• கவித்துவத்தை அள்ளிக்கொட்டும் கம்பன்
கவிஞர் அழைப்பு
இயற்கை கொஞ்சும் அழகெல்லாம்
இவரின் கவியில் புரண்டோடும்
வியக்க வைக்கும் காட்சியெலாம்
விழிகள் முன்னே நிறுத்திடுவார்
தயக்க மின்றித் தூதனுப்பித்
தமிழின் சுவையில் மகிழ்வுறுவார்
நயந்து வடித்த கவிதைதனை
நவின்று ரைக்க வாருங்கள்
பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து வருக!
வண்டமிழ்க் கவியைத் தருக
வணக்கம்
வற்றாத் தமிழமுதை வகைவகையாய்ச்
செய்துதரும்
பைந்தமிழ்ச் சோலைக்கு வணக்கம்
கற்ற அறிவமுதைக் கண்விரிய யாவருக்கும்
ஓதுகின்ற பாவலருக்கு வணக்கம்
பற்றித் தமிழ்பயின்று பைந்தமிழின் செம்மலான
நிர்மலா சிவராச சிங்கம்
இற்றைக் கவியரங்கை இன்முகத்தால்
தலைமையேற்று
நடத்துகின்ற அம்மையார்க்கும் வணக்கம்..!
கதவைத் திறந்துவை
ஏர்பிடித்துத் தொழிகலக்கிக்
கொழுமுனையால் பசிபோக்கும்
உயர்கவியை வயல்வெளியில் எழுதினோம்..!
நார்முடிச்சை உடனவிழ்து
நடுவையெனும் பெயர்தொடுத்து
வளர்கோலப் புள்ளிகளாய் எழுதினோம்..!!
கார்விடுத்த நெடும்புனலைக்
கரைதடுக்க மதகுவழி
மடைமாற்றிக் கழனிவயல் செலுத்தினோம்..!
வேர்பிடித்துச் சுருள்விரித்து
வெளிர்மஞ்சள் நிறமகல
எருவதனைத் தேர்ந்தெடுத்துப் புகுத்தினோம்..!
நண்டுழக்கும் பயிரிடையே
நகராமல் மிதந்தபடி
பலகுரலில் தவளையது பாட்டிசைக்கும்
வண்டுழக்கும் பூவினம்சூழ்
வரப்பமர்ந்து கொக்கினங்கள்
பண்ணிசையைக் கண்மயங்கிக் கேட்டுறங்கும்...!
பெண்டுழக்கிக் களைபறிக்கப்
பெருஞ்சாரை சரசரத்துப்
பேரிரைச்சல் அலையெழுப்பி இடம்பெயரும்..!
உண்டுழக்கி வாழுகின்ற
நத்தையெலி ஆமையுடன்
ஊர்க்குருவி கழனிதனில் வாழ்ந்துவரும்..!
பயிர்முற்றிச் சூல்வெடித்த
பசுங்காய்கள் பால்பிடித்துப்
பளபளக்கும் செந்நெல்லாய்க் கதிர்விளையும்...!
உயிரொட்டி உடலியங்க
உணவாகும் கதிரடித்து
உழவர்பொலி தூற்றலின்றேல் என்னாகும்..!
தயிர்முற்றிக் கடைகின்ற
மத்தொலியாய்ச் சலசலக்கும்
மீன்புரளும் கழனியிலே உழைக்கின்றோம்..!
வயிறொட்டிக் கிடந்தாலும்
வளமிக்க உலகதனை
ஏர்க்கலப்பை முனையாலே படைக்கின்றோம்..!
வியர்வையாலே உடல்குளித்து
விளைச்சலெல்லாம் பெருகவைத்துக்
கதிரறுத்துப் பொலிதூற்றி வருகின்றோம்..!
வயல்முத்தால் வறுமைபோக
வளமெல்லாம் செழிக்கவைத்த
இயற்கைக்கு நன்றிசொல்லிப்
பொங்கவைப்போம்...!
புயல்பொழியும் கண்ணகற்றிப்
புவியெங்கும் புன்னகையே
மலர்கவென்று குலவையிட்டுப்
பொங்கவைப்போம்..!.
கயல்புரளும் விழியழகீர்
கதவையெல்லாம் திறந்துவைப்பீர்..!
கருணையன்பு கரும்பைப்போல்
இனிக்கட்டும்...!
சாதிமதம் புதைக்கின்ற
சமத்துவத்தைப் பொங்கவைப்போம்
ஆணுக்குப் பெண்சமமாய் அங்குவைப்போம்..!
பாதியிலோ வந்துதித்த
பழமைமூடத் தனமொழித்துப்
பகுத்தறிவை ஊரெல்லாம் ஏற்றிவைப்போம்
ஆதிக்கச் சுரண்டலெல்லாம்
அடுப்பெரித்துப் பாரிலுள்ள
அத்தனையும் பொதுவுடமை ஆக்கிவைப்போம்..
நாதியற்று நிற்பவரை
நமதென்போம் பசியில்லா
நாடென்றி தயக்கதவைத் திறந்துவைப்போம்..!
வாழ்த்து
சாதி மதத்தைப் புதைக்கின்ற
சமத்து வத்தை வேண்டுமென்றார்
நாதி யற்றோர் நலம்பெற்றால்
நாட்டில் நீதி கிடைக்குமென்றார்
ஓதிச் சென்ற வரியெல்லாம்
உலகில் நடக்கும் அநீதிகளே
காதில் மெல்ல ஒலிக்கவிட்டார்
கரங்கள் தட்டி வாழ்த்துவமே
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
5. பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு
• பிறந்த இடம் ஈழம். வாழ்விடம் டென்மார்க்கு.
• சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுபவர்.
• மூன்று மரபு கவி நூல்களை வெளியிட்டுள்ளார்
• பெற்ற பட்டம்: பைந்தமிழ்ச்செம்மல்,
• பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழில் ‘புலம்பெயர் நாடும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை எழுதியுள்ளார்.
கவிஞர் அழைப்பு
நற்கவி படைக்கும் செம்மல்
நயத்துடன் மிளிரும் பாக்கள்
சொற்சுவை செறிவாய் மின்னும்
சுடரென ஒளிரும் பாக்கள்
நற்றமிழ்க் கவிதை பாட
நாட்டமாய் வரவேற் கின்றேன்
பற்றுடன் வருக மன்றம்
பாக்களைத் தருக நன்றே
பரமநாதன் ஐயா வருக!
பைந்தமிழ்ச் சொட்டும் பாக்கள் தருக !
கதவைத் திறந்து வை!
தமிழ்வாழ்த்து
நேரிசை வெண்பா
செந்தமிழே! சிங்காரச் சீரெழிற் கோபுரமே!
சந்தனமே! சங்கத் தமிழ்த்தாயே! - வந்தேன்
கவியரங்கில் பாமாலை கட்டியுன் தாளில்
குவியலாய் இட்டேன் குழைந்து!
நேரிசை ஆசிரியப்பா
தலைமைக் கவியே! தகைசார் அவையே!
உலகார் போற்றும் உன்னதச் சோலையில்
வந்தேன் கவிப்பூ மணக்கத்
தந்தேன் வணக்கம் தமிழால் இனிதே!
எண்சீர் ஆசிரிய விருத்தம்
புத்தாண்டே வந்திந்தப் பூமிப் பந்தில்
பொங்கியின்பம் பெருகியோட வைத்தே நிற்பாய்!
புத்தொளியில் உலகத்தார் சிலிர்த்துப் பூத்துப்
புரண்டுகிடந்(து) ஆடநீயும் வழிகள் செய்வாய்
இத்தரையில் வாழுமுயிர் அத்த னையும்
இன்புற்றி ருக்கவாசை கொண்டேன் மண்ணில்
தித்திக்கும் எந்நாளும் திண்ணம் வாரீர்
திறந்துவைப்பீர் நெஞ்சமெனும் கதவைத் தானே!
வஞ்சனையில் கிடந்துழலும் வாழ்க்கை யாலே
வரும்காலம் என்னாகும் எண்ணிப் பாரீர்
கொஞ்சிக்கு லாவிமக்க ளோடு நாளும்
கூடிக்க ளித்தாட வேண்டி நிற்பீர்
நெஞ்சுக்குள் நீள்பகையும் சேரா தென்ற
நிறைவினைக் கொண்டாலே இன்பம் தேங்கும்
விஞ்சிடுமாம் அத்தனையும் வீடு வந்தே
விரைந்தெழுந்து திறந்துவைப்பீர் கதவைத் தானே
பகையோடு வன்மத்தைக் கூட்டுச் சேர்த்துப்
பாரிதிலே நடக்கலாமோ எண்ணிப் பாரீர்
நகையில்லா முகம்காட்டல் நன்றா சொல்வீர்
நடத்தையிலும் அழுக்காமே அகற்று வீரோ
சிகரங்கள் தொடுதற்காய்த் தகாத தெல்லாம்
செய்திடுதல் திறம்தானோ மறப்பீர் எல்லாம்
பகருங்கள் நன்மொழிகள் பண்பாட் டோடு
பயணிப்போம் திறந்துமனக் கதவைத் தானே
கொடுநோய்கள் சூழ்வதுவும் வீட்டுக் குள்ளே
குந்தாமல் கண்ணீரில் குளிக்க லாமோ
தடுக்கவழி யில்லையென்று தவிக்க லாமோ
தகர்த்திடுவோம் துயரனைத்தும் ஓடி வாரீர்
தொடுக்கவேண்டும் போர்பலவாம் கண்ணின் முன்னே
தோற்றவரைக் காத்திடலே சிறந்த எண்ணம்
நடுங்கலாமோ தொல்லைகண்டு சுரக்க அன்பு
நல்லோராய் மனக்கதவைத் திறந்து வைப்பீர்
வாழ்த்து
நெஞ்ச மதனில் நிறைவிருந்தால்
நினைவு நன்றே சிறக்குமென்றார்
வஞ்சம் தீர்க்க நினைப்பதெல்லாம்
மகிழ்வைக் கெடுத்து மாய்க்குமென்றார்
செஞ்ச முறவே இவ்வரங்கில்
சிறப்பா னதொரு கவிதந்தார்
கொஞ்சும் தமிழில் வாழ்த்துவமே
கூடி நின்று போற்றுவமே
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
6. பைந்தமிழ்ச்செம்மல் சாமி.சுரேஷ்
• புனைபெயர் - ஆதி கவி
• படிப்பு - முதுகலை வரலாறு
• பணி - நடுவணரசு துறை, பாதுகாப்புப் பிரிவு
• பட்டம் - பைந்தமிழ்ச் செம்மல் (பைந்தமிழ்ச் சோலை), கவியருவி ( தடாகம் கலை இலக்கிய வட்டம், இலங்கை)
கவிஞர் அழைப்பு
பண்பில் சிறந்த கவிஞரிவர்
படைக்கும் பாக்கள் அனல்கக்கும்
கன்னற் சுவையில் பாவிருக்கும்
கனலும் பாய்ந்து தெறித்தோடும்
அன்னைத் தமிழாள் மகிழுமாறே
அவைக்கு வருக ஆதிகவி
மன்றம் சிறக்கும் உம்வரவால்
மகிழ்வாய்க் கவிதை தாருங்கள்
கதவைத் திறந்து வை
தமிழ் வாழ்த்து
வானி லுறையும் மீன்களெல்லாம் - நாளை
வளரும் வெடிக்கும் வடிவிழக்கும்
தேனி லுறையும் இனிப்பெல்லாம் - ஓர்நாள்
தேயும் திகட்டும் சிறப்பிழக்கும்
காயுங் கதிரும் நிலவொளியும் - என்றோ
கருமைக் குழியில் புகுந்தொழியும்
தாயாய்த் திகழுந் தமிழ்மொழிதான் - பல
தடையை உடைத்துப் புகழடையும்
தலைமை வாழ்த்து
சோலை மலரில் வீற்றிருந்து - தமிழ்த்
தேனைச் சொரியும் வண்டமிழாள்
காலைப் பனிபோல் கள்ளமில்லாப் - பெருங்
கருணை விரியும் பெண்டகையாள்
குடியை இயக்கும் அரும்பணிபோல் - தமிழ்க்
குதிரை இயக்கும் நேரிழையே
அடியும் தொடையும் அணிவகுக்கும் - கவி
அழகு தலைமை வாழியவே
கதவைத் திறந்து வை
யாப்பில் சொல்லைக் கட்டிவிட்டால் - சில
எதுகை மோனை ஒட்டிவிட்டால் - பாட்டு
எல்லாம் தெரியும் என்கின்ற - மன
இருண்ட கதவைத் திறந்துவிடு
தோப்பில் பழங்கள் விளைந்திருக்கும் - அதன்
தோலும் அழகாய் சிவந்திருக்கும் - எல்லாத்
தோட்டக் கனியும் இனிக்குமென்ற - உன்
தொல்லைக் கதவைத் திறந்துவிடு
மூப்பில் திளைக்கும் முதியவர்க்கு - வெள்ளை
முடியைக் கொண்ட கிழவருக்கு - அட
மூன்று காலமும் தெரிந்திருக்கும் - எனும்
முட்டாள் நினைவை மறந்துவிடு
காப்பில் நிலத்தைக் கன்னியரைப் - பல
காளை மேய்ந்து தின்னவரும் - உன்
காவல் ஒன்றே உயர்ந்ததெனும் - சிறு
கன்றின் குணத்தைக் கழட்டிவிடு
பாட்டில் வீரம் காட்டிவிட்டுப் - பின்னால்
பம்மி வாலை ஆட்டிவிட்டு - நான்
பாயும் புலியினம் என்பவரின் - கொடும்
பசப்புச் சொற்களைக் கொன்றுவிடு
நாட்டில் நடக்கும் கொடுமைகளைக் - கண்டும்
நடித்துப் பிழைக்கும் அடிமைகளை - நம்
நலத்தைக் காக்கும் தெய்வமென - நீ
நம்பும் மடமையைக் கொளுத்திவிடு
ஆக்கங் கருதி உடனிருக்கும் - நாம்
அசந்த போதில் படையெடுக்கும் - சில
ஐயப் பிறவியை நம்புதற்கு - நீ
ஆற்றில் மூழ்கிப் பிறந்துவிடு
நோக்கம் தெளிவாய் இருந்தாலும் - உடல்
நோகும் வண்ணம் உழைத்தாலும் - நீ
நொண்டிக் குதிரை ஏறிவிட்டுக் - குறை
நொட்டைச் சொல்லைக் களைந்துவிடு
தத்தித் தவழும் கிள்ளைகளை - மடியில்
தாவிப் பரவும் பிள்ளைகளைக் - கல்விச்
சாலையில் தந்தால் போதுமென்றே - எண்ணும்
சள்ளை அறிவைக் கிள்ளிவிடு
அத்தி மலர்போல் அரிதனெவே - சில
ஆன்றோர் சான்றோர் வாழுகிறார் - நீ
அவரைப் புரத்தல் இல்லெனினும் - அவர்
அறிவைப் புறத்தலைத் தள்ளிவிடு
பச்சைக் குழந்தை போல்முகத்தை - இப்
பாரில் காட்டும் கருஞ்சிறுத்தை - நீ
பதிந்த கருத்தே உண்மையெனும் - உன்
பாழு மனத்தைக் கொட்டிவிடு
நச்சிப் பிழைத்து நலம்பெற்றுப் - பின்
நடையைக் கட்டும் குலமுண்டு - தெரு
நாயைப் பொன்னால் அலங்கரித்தும் - அது
நம்மைக் குரைக்கும் அவிழ்த்துவிடு
எரியுந் தழலைக் கொண்டுவந்து - இழி
எண்ணக் கனவை எரித்துவிடு - இன்னும்
எழுத முடியா இருள்வெளுக்க - உன்
இடுக்குக் கதவைத் திறந்துவிடு
அரிய வாழ்வை வாழ்கின்றாய் - ஏன்
அடிமை போலச் சாகின்றாய் - உன்
அடியைக் கவனி நிமிர்ந்துவிடு - நல்
ஆற்றல் மதகைத் திறந்துவிடு
வாழ்த்து
உள்ளம் வருந்த உரைத்த யாவும்
உன்னதக் கருத்தாய் எடுக்கின்றோம் - அதில்
அள்ளித் தெளித்த அநீதி யெல்லாம்
அகத்தில் ஏற்றுத் தடுக்கின்றோம்
எரியுந் தழலை எடுத்து வந்தே
இடுக்கண் அனைத்தையும் வீழ்த்துகிறோம்- அதை
அறியத் தந்த ஆதிகவி பாடலை
அனைவரும் சேர்ந்து வாழ்த்துகின்றோம்
பாட்டியற்றுக 25
அன்பான கவிஞர்களே!
இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.
2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும்.
3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.
4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.
“நீதி தவறாத ஊழி புகழ்கின்ற
நேயன் றாளிணை நண்ணுவமே”