Jul 15, 2019
ஆசிரியர் பக்கம்
அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள்,
சிறுகதைகள், பைந்தமிழ்ச் சோலையின் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத்
தாங்கிவரும் தமிழ்க்குதிரின் ஏழாம் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
இலக்கியச் செழுமையும் அதற்கேற்ற இலக்கண வளமும் ஒருங்கே
கொண்டது நம் செந்தமிழ். கவிதைகளின் பாடுபொருள் காலந்தோறும் மாறலாம். காலத்திற்குத்
தேவையான மாற்றங்களைத் தருவதே கவிதையின் முதன்மை நோக்கம் எனலாம்.
கவிதையின் எழுச்சியும் கவிஞனின் உள்ளத்து உரமும்
மலையையே மடுவாக்கும் திறன் கொண்டவை. காலத்திற்கும் நின்று பயன்தருவதில் மரபு கவிதையே
சிறந்த வழி எனலாம். நினைவில் நிறுத்துவது எளிது; மறந்துவிட்டாலும் மீண்டும் நினைவுகூரல்
எளிது; மிகுந்த கருத்துகளையும் குறைந்த சொற்களில் அடக்கிவிட முடியும்; ஏற்ற இடங்களில்
விரும்புமாறு கூட்டவும் முடியும்; குறுக்கவும் முடியும்.
அத்தகு மரபு வடிவங்களைக் கற்பித்துப் பரப்புதலையே
தலையாய நோக்கமாகக் கொண்ட நம் பைந்தமிழ்ச்சோலையின் நான்காம் ஆண்டு விழா வரும் ஆகத்துத்
திங்கள் 25-ஆம் நாள் சென்னையில் நடைபெறும்.
அருந்தமிழ் பருக அனைவரும் வருக!
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
இரவின் எழில்
பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
இருளை விரட்டும் பரிதியொளி
இரவின் அமைதி போக்கிடுமே
தெருவும் அமைதி காண்பதில்லை
தீங்கும் நிறைந்து வழிந்திடுமே
அருவி பாயும் சத்தமெல்லாம்
அருகிப் போகும் அழகின்றி
இருளின் அழகில் உள்ளமெல்லாம்
இதமாய் இருக்கும் அமைதியொடு
இனிமை தருமே நிலவினொளி
இதயம் நிறைவு காணுமதில்
அனலும் தகிக்க குளிர்மைவர
அமைதி காணும் உள்ளமெல்லாம்
சினமும் தீரும் மனத்தினிலே
சிந்தை மகிழும் பொழுதன்றோ
கனிவா யிருக்கும் உள்ளமது
கலங்கும் நெஞ்சம் ஓய்வுபெறும்
புதுமை தவழும் இரவினிலே
பூத்து மலரும் மல்லிகையும்
இதழ்கள் விரிய நறுமணமும்
இனிமை கொடுக்கும் மனத்தினிலே
கதறும் பசுக்கள் ஓய்வெடுத்துக்
கன்றின் அருகில் உறங்கிடுமே
புதரில் பூச்சி வெளியேறி
புதிய ஒளியைப் பாய்ச்சிடுமே
சிறக்கும் வானில் விண்மீன்கள்
சிதறி எங்கும் தோன்றிடுமே
தெறிக்கும் ஒளிகள் தெருவெங்கும்
செம்மை யாக ஒளிபாய்ச்சும்
பிறையும் ஆங்கே மிளிர்ந்திடுமே
பின்னால் நிலவும் முழுமதியாய்
நிறைவு பெற்று வானத்தை
நேராய் எங்கும் வலம்வருமே
மேல்கை எங்கும் குளிர்க்காற்று
மேவி அமைதி கொடுத்திடுமே
ஏல்வை யெல்லாம் அழகாக
இருளில் மின்னி ஒளிர்ந்திடுமே
மால்பு வைத்தே தேன்கூட்டில்
மறைந்து தேனும் எடுத்திடுவார்
சால்பு நிறைய இலக்கியத்தில்
சான்றோர் சொன்னார் பாட்டினிலே
தமிழச்சி திருப்பள்ளியெழுச்சி
(பாவை பாடல்கள் –
இயற்றரவிணைக் கொச்சகக்
கலிப்பா)
பைந்தமிழ்ச் செம்மல்
ஆதி கவி (எ) சாமி.சுரேசு
அம்மா விழிதிறவாய்
அன்புடையோர் வேண்டுகிறோம்
இம்மா நிலத்தில்
இனிகொள்ள ஏதென்று
சும்மா விழிமூடிச்
சூதற்ற கண்ணயர்வோ
சிம்மா சனத்தில்
சிறக்காது தாழ்வடைந்து
நம்மவர் கோயிலிலும்
நாட்டாது தங்கொடியை
நம்மழலைப் பள்ளியிலும்
நாயகமாய் நிற்காது
அம்போ எனவிட்ட
அந்நளனின் நாயகியாய்
கும்மிருட்டில் குன்றுவ
தேனேலோ ரெம்பாவாய். 21
வேங்கட நாட்டினரோ
வெஞ்சினக் கன்னடரோ
யாங்கவர்க்குத்
தோற்றமென எத்திறத்தும் நாமறியோம்
தீங்குடைய ஆட்சியினில்
தீந்தமிழைத் தள்ளிவைத்(து)
ஓங்கிய தின்றிலா
பாலியொ(டு) இன்னபிற
தேங்கலிலாச் சென்ற
களப்பிரர் ஆட்சியிலும்
ஓங்குபுகழ் ஒண்டமிழின்
பல்பனுவல் தோன்றியதே
நாங்களெமை ஆளுகின்ற
நாட்டினிலே நீயில்லை
பூங்குவளைக் கண்ணாளே
பூக்கேலோ ரெம்பாவாய் 22
தன்னுரிமை பேசியுந்
தங்காரினித் தோழரென்று
தன்னினத்தைக்
காட்டிவிட்டுத் தங்குகிற சங்கம்போல்
என்னுயிரின் மேலாம்
தமிழென்று சொல்லிவிட்டு
நன்முறையில் மண்ணடியில்
நாட்டிவிட்ட வன்கயவர்
மின்னொளியில் மின்னுகிற
மீக்கொடுமை காண்பதற்கும்
தொன்மறத்தின் வேங்கையெனத்
தோலுரித்துக் காட்டுதற்கும்
சின்மணியே! சீரழகே!
தித்திப்பே! கொற்றவளே!
மின்னலென உன்னிமையை
மீட்டேலோ ரெம்பாவாய் 23
அண்டை அயலினத்தார்
ஆட்சிமுறை தன்னினத்தைக்
கெண்டை விழியெனவே
காப்பதையுங் காணுமம்மா
வண்டின் மலர்நாட்டம்
மாறுகிற புந்தியொடு
தொண்டு மிகச்செய்யத்
தேர்ந்தெடுத்த நாட்டரசோ
அண்டிப் பிழைப்பதையே
ஆழ்கடல் தேட்டமென
நொண்டி நடப்பதையும்
நோக்குதற் கம்மாநீ
சுண்டி யிழுக்குஞ்
சுடரொளியாம் கண்திறந்து
மண்டியுள மாசகல நோக்கேலோ
ரெம்பாவாய் 24
நெய்தல் நிலத்துறைவர்
நேற்றிருப்பா ரின்றில்லை
கொய்வார் தமக்குரியர்
கொள்கையென இங்கிருப்போர்
மெய்யை அகல்விளக்கில்
நெய்யெனவே விட்டுழைப்பார்
உய்ய வழியின்றி
ஓடுகிறார் அங்கிங்கும்
பெய்யும் மழைகூடப் பேதைமை
தானுற்றுச்
செய்யை வறுக்குதம்மா
செய்யாளுங் கெட்டாளே
குய்யோ முறையாவோ
கூட்டமாகச் சாகின்றோம்
நெய்யிட்ட கார்க்குழலோய்
நோக்கேலோ ரெம்பாவாய் 25
பென்னம் பெரிதான பேரரசு
நாட்டினர்க்கும்
முன்னம் முகிழ்த்தாளே
மூப்பில் திறத்தாளே
சின்னஞ் சிறிதான
தீவெல்லாம் நாடென்று
சின்னம் குடைசீர்
திகழ்கொடி கீதமொடு
பின்னஞ் சிதறாது
பீடுகொண் டேகுதடி
அன்னைத் தமிழர்க்கோ
அண்டவொரு திண்டுமிலை
என்ன மொழிவதடி ஏனிந்த
தன்மயக்கம்
சன்னச் சிணுங்கலிலே
தாரேலோ ரெம்பாவாய் 26
நாளுந் தமிழ்க்கூட்டம்
நாச்செற் றியங்குவதோ
ஆளுந் தமிழ்க்கூட்டம்
ஆள்மறந்து துஞ்சுவதோ
கேளுந் தகையாளர் கேடுற்
றிருப்பதுவோ
வாளுந் துருப்பிடித்து
மாண்புகெட மங்குவதோ
கோளு மொருநாளை கொள்கைக்
கியங்காதோ
மூளும் தமிழ்ப்பகைகள்
மூச்சடக்கிச் சாகாதோ
நீளும் நெடுந்துயரம்
நீர்த்துவிட லாகாதோ
கேளுந் தமிழ்த்தாயே
கேளேலோ ரெம்பாவாய். 27
சாந்தும் அகிற்புகையும்
தண்ணீரும் பூத்துண்டும்
காந்தும் மலர்ச்சாறும்
கற்பூர மென்பொடியும்
வேந்தே! உனக்காக
வெள்ளிருந்து தாங்கியுளோம்
ஏந்தே! இளையா இறையாளே
நீராடத்
தீந்தோம் இசைபாடித்
தீங்கவியும் பெய்கின்றோம்
பாந்த மலர்ப்பாதப்
பைங்கிளியே வாராயோ
சீந்துவார்
யாருமின்றித் திக்கித் திணறுகிறோம்
நீந்திக் கரையேற நீளேலோ
ரெம்பாவாய். 28
கஞ்ச விழிதிறந்த
காரிகையே வாழிவாழி
பஞ்சத் துயில்களைந்த
பார்மகளே வாழிவாழி
அஞ்சல் மருங்கழிய
ஆர்ப்பரித்தோம் அன்னைவாழி
கொஞ்சுங் குணத்தாளே
கொண்டல் திறத்தாளே
நெஞ்சில் புதுத்தெம்பு
நேருதடி ஐயைவாழி
வஞ்சப் பழிதீர்க்க
வந்தவளே வாழிவாழி
முஞ்சல் இனியில்லை
எஞ்சல் இனியில்லை
தஞ்சம் சரணடைந்தோம்
தாலேலோ ரெம்பாவாய் 29
வேலொன்றா வென்றிதரும்
வேல்விழியாள் கூட்டமின்றி
ஆலொன்றில் தங்குபடை
ஆர்ப்பரித்துத் துள்ளியெழக்
கோலுன்றன் கைக்கோர்க்கும்
கொற்றவளே ஒன்றிணைக
தோலுரித்துத் தொங்கவிடு
தொன்பகைமை யாவையும்
நூலுன்றன் நுண்புலமை
நூறாக்கும் ஆழ்ந்தறிவாய்
காலூன்றி நின்றாலே
கம்மிவிடும் எப்பகையும்
தாலாடித் தந்தமொழி
தங்கமம்மா! தங்கமம்மா!
பாலோடு தேன்கலந்தாள்
பாரேலோ ரெம்பாவாய் 30
நூற்பயன்
பெண்மையெனும் பேராற்றல்
பொங்கியெழின் இங்குள
நுண்டிறத்துப்
பன்கொடுமை நீர்மன்ற ஆவிபடும்
தண்மையொடு வன்றிறமும்
தாக்கணங் கன்னவர்க்கே
உண்மையுடன் உள்ளன்பால்
ஒன்றிணைந்து முற்பட்டால்
திண்மையுடை எத்திறமும்
தீயில்விழு தூறாமே
பண்புடைமை அன்புடைமை
பாத்தியுள் நீர்பொழியுங்
கண்ணுடைமை உள்ளோர்
கருத்தொத் தியைந்தாலே
விண்ணும் நமதாமே
மின்னேலோ ரெம்பாவாய்
முற்றிற்று
வள்ளுவரும் உழவும்
ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்
எந்தத் தொழிலையும் சிறப்பித்துப் பாடாத
வள்ளுவா், உழவுத் தொழிலை மட்டும் பத்துக்
குறட்பாக்களால் சிறப்பித்துப் பாடுகிறாா். வள்ளுவா் செய்ததாகக் கூறப்படும் நெசவுத்
தொழிலைப் பற்றி, எந்தக் குறிப்பும் திருக்குறளில் இல்லை. உழவு என்னும் அதிகாரத்தில் வேளாண்மை
என்னும் சொல் இல்லை. உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழைபற்றிய குறிப்புக் கிடையாது. விதை விதைத்தலைப்
பற்றியும் அவா் பேசவில்லை. மாறாக நூல் நெடுகிலும், உழவுத்
தொழிலைப் பற்றிப் பேசுகிறாா் .
ஏாின்
உழாஅா் உழவா் புயலென்னும்
வாாி
வளங்குன்றிக் கால் (14)
வான்சிறப்பு
என்னும் அதிகாரத்தில் வந்துள்ள இக்குறட்பா, உழவுத் தொழிலுக்கு, மழையின்
அவசியத்தைப் பற்றிப் பேசுகிறது.
வள்ளுவா்
காலத்தில் "வேளாண்மை" என்னும் சொல்லுக்கு "உதவி", "உபகாரம்"
என்றே மக்கள் பொருள் கொண்டனா். வள்ளுவரும், அந்தப் பொருளிலேயே கையாளுகின்றாா்.
தாளாற்றித்
தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு
வேளாண்மை
செய்தற் பொருட்டு (212)
என்ற
குறட்பாவின் மூலம் இதனை அறியலாம்.
வள்ளுவா்
காலத்தில் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலம் இருந்தது என்பதும், அந்நிலத்தில்
பயிாிட்டு உண்டு வாழ்ந்தனா் என்பதும்,
செல்லான்
கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின்
ஊடி விடும் (1039)
என்ற
குறட்பாவின் மூலம் அறிகிறோம்.
தாம்
பயிாிட்ட விளைபொருட்களை, தம்மிடம் வந்து இரப்பாா்க்கு இல்லையென்று
சொல்லாமல் கொடுத்து உதவினா் என்பதை,
இரவாா்
இரப்பாாக்கொன் றீவா் கரவாது
கைசெய்தூண்
மாலை யவா் (1035)
என்ற
குறட்பாவின் மூலம் அறிகிறோம். இக்குறட்பாவோடு, ஈகை என்னும் அதிகாரத்தில்
வந்துள்ள
வறியாா்க்கொன்
றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிா்ப்பை
நீர துடைத்து (221)
ஒப்பு
நோக்கத்தக்கது. இரண்டு குறட்பாக்களிலும் வந்துள்ள
"ஒன்று" என்னும் சொல் உணவுப்பொருளைக் குறித்து நின்றது.
களையெடுத்தலின்
அவசியத்தை உழவு என்னும் அதிகாரத்தில் பேசிய வள்ளுவா், செங்கோன்மை
அதிகாரத்திலும் பேசுகிறாா்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நோ் (550)
காமத்துப்பாலிலும்
உழவைப் பற்றிப் பேசுகிறாா். எருவிடுதலும், நீா் பாய்ச்சுதலும் உழவுக்கு அவசியமென்பதை
ஊரவா்
கெளவை எருவாக அன்னைசொல்
நீராக
நீளுமிந் நோய் (1147)
என்ற
குறள்மூலம் அறிகிறோம்.
நிலத்தின்
இயல்பை, அதில்
முளைத்த விதையின் முளை காட்டும். அதுபோல குலத்தின் இயல்பை, அதில்
பிறந்தவா் உரைக்குஞ்சொல் தொிவிக்கும் என்னும் கருத்தை
நிலத்திற்
கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற்
பிறந்தாா்வாய்ச் சொல் (959)
என்னும்
குறள் வாயிலாக அறியலாம். இக்குறள் மூலமாக, பயிா் நன்கு
வளா்வதற்கு, வளமான நிலம் தேவை என்னும் கருத்துப் பெறப்படுகிறது.
ஒரு
நாட்டின் பெருமை, உணவுப்பொருள் உற்பத்தியில்தான்
அடங்கியுள்ளது என்பதை
தள்ளா
விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சோ்வது நாடு (731)
என்னும்
குறள் மூலமாக அறிகிறோம். இதே கருத்தைத்தான் ஔவையாரும்
வரப்புயர நீா் உயரும்
நீா் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்.
என்று
பாடியுள்ளாா்.
இடையினம்
சிறுகதை
சரஸ்வதிராசேந்திரன்
“ஏய் சரோஜா! மணி என்ன ஆகுது, இன்னும் தூங்கிக் கிடக்கிறே. அங்கே உன் அன்பு
பிள்ளை செய்யற வேலையைப் போய்ப் பார்”, கணவன் சுகுமார் சொன்னான்.
“அடடே! என்னவோ அசதி, தூங்கிட்டேனே!
ஆரவ் என்ன செய்யறான்?”, பதட்டமாகக் கேட்டுக் கொண்டே தண்ணீர் வாளியைத் தூக்கிக் கொண்டு
வாசல் தெளிக்க ஓடினாள். அங்கே அவள் மகன் அழகாக வாசல் தெளித்துக் கூட்டிக் கோலம் போட்டுக்
கொண்டிருந்தான்.
“ஏம்ப்பா, என்னை எழுப்பி விடலாம்ல,
நீயேன் இதைச் செய்யறே. நான் செய்ய மாட்டேனா?”
“அம்மா நீதான் தினமும் செய்யறே. இன்னைக்கு
அசந்துட்டியேன்னு நான் செஞ்சேன். இதில் என்ன தப்பு?” ஆரவ் கேட்டான்.
“இல்லப்பா, தெருவிலே எல்லோரும் பார்க்கிறாங்க. உன்னை வேலை வாங்கிறதப் பார்த்துக் கேலி பேசுவாங்களே,
உங்க அப்பாவுக்கே இது பிடிக்கலையே”
“அப்பாவுக்கு நான் எது செஞ்சாலும் பிடிக்கலே.
பெத்த அம்மாவுக்குத் தானே செய்யறேன். அவர் எது சொன்னாலும் எனக்கு கவலையில்லே”
அவன் சொல்வதும் நியாயம்தானே. ஏற்கனவே இரண்டு பெத்து வச்சிருக்கேனே.
அது எதுவும் கவலைப்படுதா என்னைப் பற்றி? ஆண்பிள்ளை யானாலும் இவன்தானே எனக்கு எல்லா வேலைகளிலும் உதவியா இருக்கான். அது பொறுக்கலையே இவருக்கு. நினைத்துக்
கொண்டே உள்ளே போனாள்.
“ஏங்க அவனுக்கு இருக்கும் அக்கறை மத்த
இரண்டுக்கும் இருக்கா? ஏகத்துக்குச் செல்லம் கொடுத்து வச்சிருக்கீங்களே. உங்க பெண்பிள்ளை
ப்ரியா அவள் செய்ய வேண்டியதுதானே. இன்னமும் தூங்கிட்டிருக்காளே அவளைப் பற்றிப் பேச
மாட்டீங்களே”
“ஏண்டி, நீ என்ன பைத்தியமா? அவன் ஏண்டி
பொம்பளை செய்யற வேலையைச் செய்யறான்? வெளியிலே தலை காட்ட முடியலே. சுகுமாருக்குப் பிறந்திருக்கானே,
அவனை கவனீச்சீங்களா. பொம்பளை மாதிரி நடக்கிறான்; பொம்பளை வேலையெல்லாம் கூடச் செய்யறான்;
எனக்கு என்னவோ சந்தேகமா இருக்குன்னு கூடி கூடிப் பேசறாங்கடி”
“ஆமாம்மா, ஸ்கூலிலே இவனை ஒரு மாதிரியா
பார்க்கிறாங்க. இவனாலே எங்க மானம் போகுது, பேசாம வீட்டு வேலைக்கு வச்சுக்கம்மா. படிக்க
அனுப்பாதே”. அக்கா ப்ரியா ரிப்போர்ட் கொடுத்தாள். அம்மாவிடம் படுத்திருந்த நாதனும்கூட
ஒத்துப் பாடினான்.
“ஆமாம்மா இவனோட நாங்க இனி, பள்ளிக்கூடம்
போக மாட்டோம்; பாசத்திலே உனக்கு அவனின் வித்தியாசம் தெரியலே. பொம்பளை பிகேவியர் தான்
அவனுக்கு ரொம்ப இருக்கு”.
“அதுக்கு அவனை என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க”
கேட்டாள்.
“என்னத்தைச் செய்யறது? யார் கண்ணிலும்
படாம வீட்டுக்குள்ளேயே வச்சுக்க, வெளியில் விட்டனா எங்க மானம்தான் போகும்”.
சுகுமார் தன் மன விருப்பத்தைக் கூற
ஆரவுக்கு அழுகை வந்தது. ஏனெனில் பெண்கள் பள்ளியில் படித்தவரை அவனுக்குத் துன்பமில்லை.
கோ-எஜிகேஷன் போனதிலிருந்து எல்லோருமே அவனை ஒருமாதிரியாய் பார்ப்பதோடு நாடகத்திலும்
பெண்வேடம் கொடுத்து நடிக்க வைத்துக் கேலி பேசுவது அவனுக்கும் வேதனையைத்தான் தந்தது.
இதற்கு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. வீட்டிலும் தாயைத் தவிர மற்றவர்கள் அவனை வெறுத்தார்கள்.
ஒரு நாள்… யாரிடமும்
சொல்லாமல் சென்னைக்குக் கிளம்பி விட்டான்.
அலைந்து திரிந்து அவனைப் போல் உள்ள கூட்டத்தில் சேர்ந்து விட்டான். ஏதோ ஒரு வேகத்தில்
வந்து விட்டானே தவிர அடுத்து என்ன செய்வது என்று புலப்படவில்லை. வாழ்வதற்கு வழி வேண்டுமே.
அவர்கள் எல்லாம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்ட்டேஷனில் நின்று போவோர் வருவோரிடம் கையேந்துவது
பிடிக்க வில்லை. அதனால் அவர்கள் கொண்டுவரும் பணத்தில் சிக்கனமாகச் சமைத்துப் போடுவதாக
அக்ரீமெண்ட் போட்டு வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்டான். அடுத்து மேலே எப்படியாவது
படித்து ஒரு வேலை தேடிக் கொண்டால் நல்லது என நினைத்தான். அங்கே ஆரவைக் காணாமல் சரோஜா
தவித்தாள்; பெத்த மனமாயிற்றே.
“சனியன் விட்டொழிஞ்சுத்துன்னு இருக்காம
தவிக்கிறியே. போம்மா, போய் வேலையைப் பார்” திட்டினார்கள் நாதனும் ப்ரியாவும்.
காலம் ஓடியது. ஒரு பெரிய மனிதர் வீட்டில்
வேலை பார்த்துக் கொண்டே படித்து ஒரு வேலையும் வாங்கிவிட்டான். அவரின் தயவால். ஆனால்
அவர் அவனிடம் நடந்து கொண்ட விதமோ அருவருப்பானது. என்ன செய்வது இப்படியொரு பிறவி எடுத்ததற்கு?
இதில் அவன்பிழை என்ன? கடவுள் செய்த பிழைக்கு அவன் என்ன செய்வான்? அதற்குள் அவன் அக்காவும்
அண்ணனும் திருமணம் செய்து கொண்டு வேறு ஊர்
போய்விட்டதை அறிந்தான். பெற்றோர்கள் ஜீவனத்துக்கே கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்ததும்
கவலை ஏற்பட்டது ஆரவுக்கு. அதனால் தாய்ப்பெயருக்கு மாதா மாதம் பணம் அனுப்பினான். ரகசியமாகப்
பெற்றுக் கொண்டாலும் ஆரவைப் பார்க்க ஆசைப்பட்டாள். ஆரவுக்கும் தாயைப் பார்க்க ஆவல்.
அதனால் ரகசியமாக அவளைச் சந்தித்தான். தாயும் மகனும் கட்டிக்கொண்டு அழுதார்கள்.
சரோஜா சொன்னாள், “உன் அண்ணனும் அக்காவும்
எங்களைப் பார்ப்பதுகூடக் கிடையாது. ஆனால் அவர்களால் வெறுக்கப்பட்டாலும் நீதான் குடும்பத்தைக்
காக்கிறாய். உன்மனசு அவர்களுக்கு இல்லையே”. சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுகுமாரன்
வருவது தெரிந்து ஆரவ் “அம்மா, அப்பாவுக்கு நான் வருவது பிடிக்காது; நீ என்னைப் பற்றிக்
கவலைப்படாதே, உனக்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறேன். அடுத்த ஜென்மத்திலாவது கடவுள்
என்னை ஆணாகவோ பெண்ணாகவோ படைக்கட்டும். இதுமாதிரி இடையினமாகப் படைக்க வேண்டா. இதிலே
உன்பிழை ஏதுமில்லை. என் பிழையும் ஏதுமில்லை. கடவுளின் பிழை தானேம்மா. நான் வருகிறேன்”.
தாயைப் பிரிய முடியாமல் மனக் கலக்கத்துடனே
சென்றான். பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள் சரோஜா கணவனின் வருகையால். அவன் கொடுக்கும்
பணம் மட்டும் வேண்டும்; அவன் வேண்டா என்று நினைக்கும் இவர் என்ன மனுஷன்? முதல்முறையாகக்
கணவன் மேல் வெறுப்பு வந்தது சரோஜாவுக்கு.
உத்தம குரு
பைந்தமிழ்ச்செம்மல்
விவேக்பாரதி
மன்னன் சிறப்பு
வாளுடையன்! அமரர் போன்ற
வனப்புடையன்!
வெற்பு முட்டும்
தோளுடையன்! பகைமைச் சூளைத்
தோற்கடிக்கும்
வலியன்! பட்டு
நீளுடையன்! கரிய மேக
நிறமுடையன்!
தம்மைப் போற்றித்
தாளடையும் அன்பர்க் கெல்லாம்
தாயாகும்
பத்ம நாபன்!
யானைகள் வென்று, தந்தம்
யாழென
ஆக்கிப் பாட்டின்
மோனைகள் எதுகைக் கெல்லாம்
முழுசுதி
கூட்டிப் பாடும்
ஞானியல் புலவன்! செல்வ
நற்றமிழ்க்
கவிதை பாடும்
தேனுடை நாவுக் காரன்!
தேருடை பத்ம
நாபன்!
இளமையில் அரச னாகி
இருநிலம்
முழுதும் தன்றன்
வளமைசால் குடைக்குக் கீழே
வளைத்தவன், குழந்தை
என்றால்
உளமிகக் குழையும் பண்பன்!
உலகினோர் உவந்து
போற்றும்
தளமெனத் தமிழ கத்தைத்
தனியர சாண்ட
வேந்தன்!
பாரியும் கபிலர் போல
பாவலர்
வள்ளல் போல
மாரியும் இடியும் போல
மணிமுடி
செங்கோல் போல
நேரிய சிந்தை கொண்ட
நிறைமதிப்
புலவன், தர்க்க
சூரியன் விஜய ராஜன்
துணையென
வாழ்ந்த வேந்தன்
திருமகள் தங்கும் மார்பன்
திரண்டபாற்
கடலோன் நாமம்
நிரந்தர மாக நாவில்
நித்தியம்
சொல்லும் பக்தன்!
பெருமது ராந்த கத்தைப்
பெற்றியோ
டாண்ட மன்னன்
தரங்களைக் கண்டோம்! ஊரின்
தன்மைகள்
இனிக்காண் போமே!
ஊரின் தன்மை
கேள்வியே சிறந்த செல்வம்!
கேள்வியால்
மனிதர் வாழ்வில்
வேள்விபோல் வரங்கள் சேரும்,
வேதனை மாயும்
என்று
சூளுரை சொல்லும் மக்கள்
சூக்குமம்
கற்ற மக்கள்
வாளுடன் கற்கும் கல்வி
வாக்கிலும்
தீமை மாய்ப்பார் !
குருகிடம் பாலைத் தந்தால்
குடிக்குமுன்
அதிலே நீரைப்
பிரித்திடும் பண்பைக் கொண்டார்
பிழையெனப்
புரளி பேசார்
குருகுலக் கல்வி கற்பார்
குறையென
விரத்தல் கண்டால்
பரிவொடு பலகொ டுப்பார்!
பகலவனுடன்
விழிப்பார்!
பஞ்சமாம் பசிக்கு! அங்கே
பணிவன நெல்க
ழுத்து!
வஞ்சமோ பகைக்கு! அங்கே
வாடுவன
வெயிலில் வற்றல்!
தஞ்சமாம் அமரர்க்! கிங்கே
சரிவன
சரிகைச் சேலை!
நெஞ்சமே நிறைக்கும் தென்றல்
நெற்றிநீர்
துடைக்கும் ஊராம்!
மேலைவான் ராணி வெண்மை
மேனியள்
திங்கள் தூங்கக்
காலையாம் பெயரில் அங்கே
கதிரவன்
விரியும் நேரம்
சேலையார் இடையில் வண்ணச்
செப்புசெய்
கலன்கள் ஆட
வேலைக்கு விரையும் காட்சி
மிகவெழில்
வாய்ந்த காட்சி!
கூவிடும் குயிலும்! பூவில்
கூடுவண்
டினமும், நீரில்
தாவிடும் கயலும்! அந்தத்
தண்ணீரில்
சுழியும்! வானை
மேவிடும் நிறமும்! கையில்
மேழியோ
டேகும் மக்கள்
ஏவிட நகரும் மாடும்
எழுதவே
இனிக்குங் காட்சி!
வாயிலில் கோலம் போடும்
வஞ்சியர்
வளையின் ஓசை!
கோயிலில் ஒலிக்கும் சந்தம்
கொள்திருப்
புகழ்பாட் டோசை!
வேயிடை தென்றல் ஓசை
வெய்யிலில்
சருகின் ஓசை!
ஆயிரம் ஓசை அந்த
அணிநகர்
ராகத் தூரே!
அந்தியாம் பெண்ணைப் போற்றி
அழகுறுந்
தீபம் ஏற்றிச்
சந்துகள் தெருக்கள் எல்லாம்
சங்கதிக்
கூத்துக் கட்டி
இந்திர ஜாலம் செய்யும்
இன்நகர்
காட்சி கண்டோம்
விந்தையா யவர்க்கு ளிங்கே
விரிகிற
கதைகாண் போமே
-சிறப்புரைப் படலம் முற்றும்-
Subscribe to:
Posts (Atom)