பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
இருளை விரட்டும் பரிதியொளி
இரவின் அமைதி போக்கிடுமே
தெருவும் அமைதி காண்பதில்லை
தீங்கும் நிறைந்து வழிந்திடுமே
அருவி பாயும் சத்தமெல்லாம்
அருகிப் போகும் அழகின்றி
இருளின் அழகில் உள்ளமெல்லாம்
இதமாய் இருக்கும் அமைதியொடு
இனிமை தருமே நிலவினொளி
இதயம் நிறைவு காணுமதில்
அனலும் தகிக்க குளிர்மைவர
அமைதி காணும் உள்ளமெல்லாம்
சினமும் தீரும் மனத்தினிலே
சிந்தை மகிழும் பொழுதன்றோ
கனிவா யிருக்கும் உள்ளமது
கலங்கும் நெஞ்சம் ஓய்வுபெறும்
புதுமை தவழும் இரவினிலே
பூத்து மலரும் மல்லிகையும்
இதழ்கள் விரிய நறுமணமும்
இனிமை கொடுக்கும் மனத்தினிலே
கதறும் பசுக்கள் ஓய்வெடுத்துக்
கன்றின் அருகில் உறங்கிடுமே
புதரில் பூச்சி வெளியேறி
புதிய ஒளியைப் பாய்ச்சிடுமே
சிறக்கும் வானில் விண்மீன்கள்
சிதறி எங்கும் தோன்றிடுமே
தெறிக்கும் ஒளிகள் தெருவெங்கும்
செம்மை யாக ஒளிபாய்ச்சும்
பிறையும் ஆங்கே மிளிர்ந்திடுமே
பின்னால் நிலவும் முழுமதியாய்
நிறைவு பெற்று வானத்தை
நேராய் எங்கும் வலம்வருமே
மேல்கை எங்கும் குளிர்க்காற்று
மேவி அமைதி கொடுத்திடுமே
ஏல்வை யெல்லாம் அழகாக
இருளில் மின்னி ஒளிர்ந்திடுமே
மால்பு வைத்தே தேன்கூட்டில்
மறைந்து தேனும் எடுத்திடுவார்
சால்பு நிறைய இலக்கியத்தில்
சான்றோர் சொன்னார் பாட்டினிலே
No comments:
Post a Comment