(பாவை பாடல்கள் –
இயற்றரவிணைக் கொச்சகக்
கலிப்பா)
பைந்தமிழ்ச் செம்மல்
ஆதி கவி (எ) சாமி.சுரேசு
அம்மா விழிதிறவாய்
அன்புடையோர் வேண்டுகிறோம்
இம்மா நிலத்தில்
இனிகொள்ள ஏதென்று
சும்மா விழிமூடிச்
சூதற்ற கண்ணயர்வோ
சிம்மா சனத்தில்
சிறக்காது தாழ்வடைந்து
நம்மவர் கோயிலிலும்
நாட்டாது தங்கொடியை
நம்மழலைப் பள்ளியிலும்
நாயகமாய் நிற்காது
அம்போ எனவிட்ட
அந்நளனின் நாயகியாய்
கும்மிருட்டில் குன்றுவ
தேனேலோ ரெம்பாவாய். 21
வேங்கட நாட்டினரோ
வெஞ்சினக் கன்னடரோ
யாங்கவர்க்குத்
தோற்றமென எத்திறத்தும் நாமறியோம்
தீங்குடைய ஆட்சியினில்
தீந்தமிழைத் தள்ளிவைத்(து)
ஓங்கிய தின்றிலா
பாலியொ(டு) இன்னபிற
தேங்கலிலாச் சென்ற
களப்பிரர் ஆட்சியிலும்
ஓங்குபுகழ் ஒண்டமிழின்
பல்பனுவல் தோன்றியதே
நாங்களெமை ஆளுகின்ற
நாட்டினிலே நீயில்லை
பூங்குவளைக் கண்ணாளே
பூக்கேலோ ரெம்பாவாய் 22
தன்னுரிமை பேசியுந்
தங்காரினித் தோழரென்று
தன்னினத்தைக்
காட்டிவிட்டுத் தங்குகிற சங்கம்போல்
என்னுயிரின் மேலாம்
தமிழென்று சொல்லிவிட்டு
நன்முறையில் மண்ணடியில்
நாட்டிவிட்ட வன்கயவர்
மின்னொளியில் மின்னுகிற
மீக்கொடுமை காண்பதற்கும்
தொன்மறத்தின் வேங்கையெனத்
தோலுரித்துக் காட்டுதற்கும்
சின்மணியே! சீரழகே!
தித்திப்பே! கொற்றவளே!
மின்னலென உன்னிமையை
மீட்டேலோ ரெம்பாவாய் 23
அண்டை அயலினத்தார்
ஆட்சிமுறை தன்னினத்தைக்
கெண்டை விழியெனவே
காப்பதையுங் காணுமம்மா
வண்டின் மலர்நாட்டம்
மாறுகிற புந்தியொடு
தொண்டு மிகச்செய்யத்
தேர்ந்தெடுத்த நாட்டரசோ
அண்டிப் பிழைப்பதையே
ஆழ்கடல் தேட்டமென
நொண்டி நடப்பதையும்
நோக்குதற் கம்மாநீ
சுண்டி யிழுக்குஞ்
சுடரொளியாம் கண்திறந்து
மண்டியுள மாசகல நோக்கேலோ
ரெம்பாவாய் 24
நெய்தல் நிலத்துறைவர்
நேற்றிருப்பா ரின்றில்லை
கொய்வார் தமக்குரியர்
கொள்கையென இங்கிருப்போர்
மெய்யை அகல்விளக்கில்
நெய்யெனவே விட்டுழைப்பார்
உய்ய வழியின்றி
ஓடுகிறார் அங்கிங்கும்
பெய்யும் மழைகூடப் பேதைமை
தானுற்றுச்
செய்யை வறுக்குதம்மா
செய்யாளுங் கெட்டாளே
குய்யோ முறையாவோ
கூட்டமாகச் சாகின்றோம்
நெய்யிட்ட கார்க்குழலோய்
நோக்கேலோ ரெம்பாவாய் 25
பென்னம் பெரிதான பேரரசு
நாட்டினர்க்கும்
முன்னம் முகிழ்த்தாளே
மூப்பில் திறத்தாளே
சின்னஞ் சிறிதான
தீவெல்லாம் நாடென்று
சின்னம் குடைசீர்
திகழ்கொடி கீதமொடு
பின்னஞ் சிதறாது
பீடுகொண் டேகுதடி
அன்னைத் தமிழர்க்கோ
அண்டவொரு திண்டுமிலை
என்ன மொழிவதடி ஏனிந்த
தன்மயக்கம்
சன்னச் சிணுங்கலிலே
தாரேலோ ரெம்பாவாய் 26
நாளுந் தமிழ்க்கூட்டம்
நாச்செற் றியங்குவதோ
ஆளுந் தமிழ்க்கூட்டம்
ஆள்மறந்து துஞ்சுவதோ
கேளுந் தகையாளர் கேடுற்
றிருப்பதுவோ
வாளுந் துருப்பிடித்து
மாண்புகெட மங்குவதோ
கோளு மொருநாளை கொள்கைக்
கியங்காதோ
மூளும் தமிழ்ப்பகைகள்
மூச்சடக்கிச் சாகாதோ
நீளும் நெடுந்துயரம்
நீர்த்துவிட லாகாதோ
கேளுந் தமிழ்த்தாயே
கேளேலோ ரெம்பாவாய். 27
சாந்தும் அகிற்புகையும்
தண்ணீரும் பூத்துண்டும்
காந்தும் மலர்ச்சாறும்
கற்பூர மென்பொடியும்
வேந்தே! உனக்காக
வெள்ளிருந்து தாங்கியுளோம்
ஏந்தே! இளையா இறையாளே
நீராடத்
தீந்தோம் இசைபாடித்
தீங்கவியும் பெய்கின்றோம்
பாந்த மலர்ப்பாதப்
பைங்கிளியே வாராயோ
சீந்துவார்
யாருமின்றித் திக்கித் திணறுகிறோம்
நீந்திக் கரையேற நீளேலோ
ரெம்பாவாய். 28
கஞ்ச விழிதிறந்த
காரிகையே வாழிவாழி
பஞ்சத் துயில்களைந்த
பார்மகளே வாழிவாழி
அஞ்சல் மருங்கழிய
ஆர்ப்பரித்தோம் அன்னைவாழி
கொஞ்சுங் குணத்தாளே
கொண்டல் திறத்தாளே
நெஞ்சில் புதுத்தெம்பு
நேருதடி ஐயைவாழி
வஞ்சப் பழிதீர்க்க
வந்தவளே வாழிவாழி
முஞ்சல் இனியில்லை
எஞ்சல் இனியில்லை
தஞ்சம் சரணடைந்தோம்
தாலேலோ ரெம்பாவாய் 29
வேலொன்றா வென்றிதரும்
வேல்விழியாள் கூட்டமின்றி
ஆலொன்றில் தங்குபடை
ஆர்ப்பரித்துத் துள்ளியெழக்
கோலுன்றன் கைக்கோர்க்கும்
கொற்றவளே ஒன்றிணைக
தோலுரித்துத் தொங்கவிடு
தொன்பகைமை யாவையும்
நூலுன்றன் நுண்புலமை
நூறாக்கும் ஆழ்ந்தறிவாய்
காலூன்றி நின்றாலே
கம்மிவிடும் எப்பகையும்
தாலாடித் தந்தமொழி
தங்கமம்மா! தங்கமம்மா!
பாலோடு தேன்கலந்தாள்
பாரேலோ ரெம்பாவாய் 30
நூற்பயன்
பெண்மையெனும் பேராற்றல்
பொங்கியெழின் இங்குள
நுண்டிறத்துப்
பன்கொடுமை நீர்மன்ற ஆவிபடும்
தண்மையொடு வன்றிறமும்
தாக்கணங் கன்னவர்க்கே
உண்மையுடன் உள்ளன்பால்
ஒன்றிணைந்து முற்பட்டால்
திண்மையுடை எத்திறமும்
தீயில்விழு தூறாமே
பண்புடைமை அன்புடைமை
பாத்தியுள் நீர்பொழியுங்
கண்ணுடைமை உள்ளோர்
கருத்தொத் தியைந்தாலே
விண்ணும் நமதாமே
மின்னேலோ ரெம்பாவாய்
முற்றிற்று
No comments:
Post a Comment