பைந்தமிழ்ச்சுடர் கந்தையா நடனபாதம்
ஊரில்
உள்ள அந்தப் பாடச்சாலையின்
தலைமை ஆசிரியர் சண்முகம்பிள்ளை. மாணவர்களைத் தன் பிள்ளைகளாக நேசிக்கும் ஓர்
அன்பின் வடிவமவர். கற்பித்தல் அல்லாமல் பிள்ளைகளின் நலனிலும் அக்கறை
கொண்ட நல்லாசிரியர்.
பாடச்சாலை விட்டு எல்லோரும் போன
பின்பு, அவர் தன் குடையைப் பிடித்துக்கொண்டு வீதி ஓரமாகக்
கையில் சில புத்தகங்களுடன் மெல்ல நடந்து வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அது
நடந்துவிட்டது! ஆம்! அவர் பின்னால் வந்த மோட்டார் வண்டி மோதித் தள்ளி விட்டது.
சுற்றிப் பார்வையாளர்கள் அதிகம். அவர் உடலில் இரத்தம் வடிந்து மயங்கிய நிலையில்,
ஒருவரும் எதிர்பாராத வகையில் ஓர் இளைஞன் அவரைக் கையால்
அணைத்துத் தூக்கி, "ஐயோ! இவர் எம்
சண்முகம் சார்" எனக் கத்தினான்.
விரைந்து அருகேயிருந்த வைத்தியச் சாலையில் சேர்த்து அவரது விபரமும் கொடுத்தான்.
சண்முகம்
ஆசிரியரின் நிலையைப் பரிசோதித்த வைத்தியர், அவரது வீட்டுக்கு அறிவித்து, ‘அவரது
உடலில் இரத்தம் குறைந்துள்ளது; உடனடியாகக் குருதி ஏற்ற வேண்டும்' என வேண்டினார். எந்தத் தயக்கமும் இன்றி அந்த
இளைஞன் உடனே தன் இரத்தத்தை வழங்க முன்வந்தான். வைத்தியர் தன் கண்களை அகல விரித்து 'இக்காலத்தில்
இப்படியும் ஓர் இளைஞர்?' என எண்ணினார்.
ஆம்!
அந்த இளைஞன் யாருமல்லன். ஓர் ஏழை விவசாயக்
குடும்பத்தின் மைந்தன். ஏழ்மையால் தன் படிப்பை இடையில் நிறுத்தியபோதும் தன் அன்பு
ஆசான் சண்முகம் ஆசிரியரின் சிறு உதவியுடன் கல்வியைத் தொடர்ந்தும் தன் விவசாயத்தைத் தொடரும் அதே 'சக்திவேல்' தான் இந்த
இரக்க சிந்தனையுள்ள இளைஞன்.
சிறிது
நேரத்தில் விசாரணைக்கெனக் காவல் துறையினரும், பத்திரிகைத்
துறையினரும், ஆசிரியரின் உறவினரும் ஆசிரியரைச் சுற்றி நின்றனர். "இரத்தம் உடனே
வழங்கியமையால் ஆசிரியருக்கு ஆபத்து நீங்கி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில்
கண்விழிப்பார்; அவசரம் வேண்டா" என்ற வைத்தியர் தொடர்ந்து, “இப்படியான இளைஞர்களே
எம் சமுதாயத்தின் கண்கள்" என்றார்.
கண்விழித்த
சண்முகம் ஆசிரியர் மெல்லச் சுற்றுமுற்றும் பார்த்து நிலைமையை உணர்ந்து கண்கசிந்தார்.
இப்போது
அவரது கண் சக்திவேலின் கண்ணைச் சந்தித்தது. ஆச்சரியமாகக் கண்களால் வினாத் தொடுத்தார். வைத்தியர்
சம்பவத்தை விபரமாக விபரிக்கக் காவல் துறையினரும், பத்திரிகை யாளர்களும்
தகவலாகச் சேகரித்தனர். சண்முகம் ஆசிரியர் தன் இரு கரங்களையும் மெல்ல அசைத்துச் சக்திவேலை அருகே அழைத்து அணைத்து "ஆயிரம் ஆண்டு காலம்
வாழும் வாழ்க்கையை இந்த ஒருநிமிடத்தில் வழங்கிய என் அன்பு மகனே!" என ஆதங்கத்துடன்
கண்சொரிந்தார். பக்கம் நின்ற அனைவரும் நெஞ்சு நெகிழ்ந்து சக்திவேலைப்
பாராட்டினார்கள். நேற்றுவரை யாரென்று தெரியாமல் இருந்த சக்திவேல்தான் இன்று
செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் முக்கியச் செய்தியாக
இருந்தான்.
No comments:
Post a Comment