'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

வள்ளுவரும் உழவும்


ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்

ந்தத் தொழிலையும் சிறப்பித்துப் பாடாத வள்ளுவா்,  உழவுத் தொழிலை மட்டும் பத்துக் குறட்பாக்களால் சிறப்பித்துப் பாடுகிறாா். வள்ளுவா் செய்ததாகக் கூறப்படும் நெசவுத் தொழிலைப் பற்றி, எந்தக் குறிப்பும் திருக்குறளில் இல்லை. உழவு என்னும் அதிகாரத்தில் வேளாண்மை என்னும் சொல் இல்லை. உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழைபற்றிய குறிப்புக் கிடையாது. விதை விதைத்தலைப் பற்றியும் அவா் பேசவில்லை. மாறாக நூல் நெடுகிலும், உழவுத் தொழிலைப் பற்றிப் பேசுகிறாா் .

ஏாின் உழாஅா் உழவா் புயலென்னும்
வாாி வளங்குன்றிக் கால்       (14)

வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் வந்துள்ள இக்குறட்பா, உழவுத் தொழிலுக்கு, மழையின் அவசியத்தைப் பற்றிப் பேசுகிறது.

வள்ளுவா் காலத்தில் "வேளாண்மை" என்னும் சொல்லுக்கு "உதவி", "உபகாரம்" என்றே மக்கள் பொருள் கொண்டனா். வள்ளுவரும், அந்தப் பொருளிலேயே கையாளுகின்றாா்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு        (212)

என்ற குறட்பாவின் மூலம் இதனை அறியலாம்.

வள்ளுவா் காலத்தில் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலம் இருந்தது என்பதும், அந்நிலத்தில் பயிாிட்டு உண்டு வாழ்ந்தனா் என்பதும்,

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்                (1039)

என்ற குறட்பாவின் மூலம் அறிகிறோம்.

தாம் பயிாிட்ட விளைபொருட்களை, தம்மிடம் வந்து இரப்பாா்க்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்து உதவினா் என்பதை,

இரவாா் இரப்பாாக்கொன் றீவா் கரவாது
கைசெய்தூண் மாலை யவா்            (1035)

என்ற குறட்பாவின் மூலம் அறிகிறோம். இக்குறட்பாவோடு, ஈகை என்னும் அதிகாரத்தில் வந்துள்ள

வறியாா்க்கொன் றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிா்ப்பை நீர துடைத்து           (221)

ஒப்பு நோக்கத்தக்கது. இரண்டு குறட்பாக்களிலும் வந்துள்ள "ஒன்று" என்னும் சொல் உணவுப்பொருளைக் குறித்து நின்றது.

களையெடுத்தலின் அவசியத்தை உழவு என்னும் அதிகாரத்தில் பேசிய வள்ளுவா், செங்கோன்மை அதிகாரத்திலும் பேசுகிறாா்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நோ்               (550)

காமத்துப்பாலிலும் உழவைப் பற்றிப் பேசுகிறாா். எருவிடுதலும், நீா் பாய்ச்சுதலும் உழவுக்கு அவசியமென்பதை

ஊரவா் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்                   (1147)

என்ற குறள்மூலம் அறிகிறோம்.

நிலத்தின் இயல்பை, அதில் முளைத்த விதையின் முளை காட்டும். அதுபோல குலத்தின் இயல்பை, அதில் பிறந்தவா் உரைக்குஞ்சொல் தொிவிக்கும் என்னும் கருத்தை

நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தாா்வாய்ச் சொல்        (959)

என்னும் குறள் வாயிலாக அறியலாம். இக்குறள் மூலமாக, பயிா் நன்கு வளா்வதற்கு, வளமான நிலம் தேவை என்னும் கருத்துப் பெறப்படுகிறது.

ஒரு நாட்டின் பெருமை, உணவுப்பொருள்  உற்பத்தியில்தான் அடங்கியுள்ளது என்பதை

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சோ்வது நாடு               (731)

என்னும் குறள் மூலமாக அறிகிறோம். இதே கருத்தைத்தான் ஔவையாரும்

வரப்புயர நீா் உயரும்
நீா் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்.

என்று பாடியுள்ளாா்.

No comments:

Post a Comment