'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

இடையினம்


சிறுகதை

சரஸ்வதிராசேந்திரன்

“ஏய் சரோஜா! மணி என்ன ஆகுது, இன்னும் தூங்கிக் கிடக்கிறே. அங்கே உன் அன்பு பிள்ளை செய்யற வேலையைப் போய்ப் பார்”, கணவன் சுகுமார் சொன்னான்.

“அடடே! என்னவோ அசதி, தூங்கிட்டேனே! ஆரவ் என்ன செய்யறான்?”, பதட்டமாகக் கேட்டுக் கொண்டே தண்ணீர் வாளியைத் தூக்கிக் கொண்டு வாசல் தெளிக்க ஓடினாள். அங்கே அவள் மகன் அழகாக வாசல் தெளித்துக் கூட்டிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.

“ஏம்ப்பா, என்னை எழுப்பி விடலாம்ல, நீயேன் இதைச் செய்யறே. நான் செய்ய மாட்டேனா?”

“அம்மா நீதான் தினமும் செய்யறே. இன்னைக்கு அசந்துட்டியேன்னு நான் செஞ்சேன். இதில் என்ன தப்பு?” ஆரவ் கேட்டான்.

“இல்லப்பா, தெருவிலே எல்லோரும் பார்க்கிறாங்க.  உன்னை வேலை வாங்கிறதப் பார்த்துக் கேலி பேசுவாங்களே, உங்க அப்பாவுக்கே இது பிடிக்கலையே”

“அப்பாவுக்கு நான் எது செஞ்சாலும் பிடிக்கலே. பெத்த அம்மாவுக்குத் தானே செய்யறேன். அவர் எது சொன்னாலும் எனக்கு கவலையில்லே”

அவன் சொல்வதும்  நியாயம்தானே. ஏற்கனவே இரண்டு பெத்து வச்சிருக்கேனே. அது எதுவும் கவலைப்படுதா என்னைப் பற்றி? ஆண்பிள்ளை யானாலும்  இவன்தானே எனக்கு எல்லா வேலைகளிலும் உதவியா  இருக்கான். அது பொறுக்கலையே இவருக்கு. நினைத்துக் கொண்டே உள்ளே போனாள்.

“ஏங்க அவனுக்கு இருக்கும் அக்கறை மத்த இரண்டுக்கும் இருக்கா? ஏகத்துக்குச் செல்லம் கொடுத்து வச்சிருக்கீங்களே. உங்க பெண்பிள்ளை ப்ரியா அவள் செய்ய வேண்டியதுதானே. இன்னமும் தூங்கிட்டிருக்காளே அவளைப் பற்றிப் பேச மாட்டீங்களே”
“ஏண்டி, நீ என்ன பைத்தியமா? அவன் ஏண்டி பொம்பளை செய்யற வேலையைச் செய்யறான்? வெளியிலே தலை காட்ட முடியலே. சுகுமாருக்குப் பிறந்திருக்கானே, அவனை கவனீச்சீங்களா. பொம்பளை மாதிரி நடக்கிறான்; பொம்பளை வேலையெல்லாம் கூடச் செய்யறான்; எனக்கு என்னவோ சந்தேகமா இருக்குன்னு கூடி கூடிப் பேசறாங்கடி”

“ஆமாம்மா, ஸ்கூலிலே இவனை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க. இவனாலே எங்க மானம் போகுது, பேசாம வீட்டு வேலைக்கு வச்சுக்கம்மா. படிக்க அனுப்பாதே”. அக்கா ப்ரியா ரிப்போர்ட் கொடுத்தாள். அம்மாவிடம் படுத்திருந்த நாதனும்கூட ஒத்துப் பாடினான்.

“ஆமாம்மா இவனோட நாங்க இனி, பள்ளிக்கூடம் போக மாட்டோம்; பாசத்திலே உனக்கு அவனின் வித்தியாசம் தெரியலே. பொம்பளை பிகேவியர் தான் அவனுக்கு ரொம்ப இருக்கு”.

“அதுக்கு அவனை என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க” கேட்டாள்.

“என்னத்தைச் செய்யறது? யார் கண்ணிலும் படாம வீட்டுக்குள்ளேயே வச்சுக்க, வெளியில் விட்டனா எங்க மானம்தான் போகும்”.

சுகுமார் தன் மன விருப்பத்தைக் கூற ஆரவுக்கு அழுகை வந்தது. ஏனெனில் பெண்கள் பள்ளியில் படித்தவரை அவனுக்குத் துன்பமில்லை. கோ-எஜிகேஷன் போனதிலிருந்து எல்லோருமே அவனை ஒருமாதிரியாய் பார்ப்பதோடு நாடகத்திலும் பெண்வேடம் கொடுத்து நடிக்க வைத்துக் கேலி பேசுவது அவனுக்கும் வேதனையைத்தான் தந்தது. இதற்கு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. வீட்டிலும் தாயைத் தவிர  மற்றவர்கள் அவனை வெறுத்தார்கள்.

ரு நாள்… யாரிடமும் சொல்லாமல்  சென்னைக்குக் கிளம்பி விட்டான். அலைந்து திரிந்து அவனைப் போல் உள்ள கூட்டத்தில் சேர்ந்து விட்டான். ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டானே தவிர அடுத்து என்ன செய்வது என்று புலப்படவில்லை. வாழ்வதற்கு வழி வேண்டுமே. அவர்கள் எல்லாம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்ட்டேஷனில் நின்று போவோர் வருவோரிடம் கையேந்துவது பிடிக்க வில்லை. அதனால் அவர்கள் கொண்டுவரும் பணத்தில் சிக்கனமாகச் சமைத்துப் போடுவதாக அக்ரீமெண்ட் போட்டு வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்டான். அடுத்து மேலே எப்படியாவது படித்து ஒரு வேலை தேடிக் கொண்டால் நல்லது என நினைத்தான். அங்கே ஆரவைக் காணாமல் சரோஜா தவித்தாள்; பெத்த மனமாயிற்றே.

“சனியன் விட்டொழிஞ்சுத்துன்னு இருக்காம தவிக்கிறியே. போம்மா, போய் வேலையைப் பார்” திட்டினார்கள் நாதனும் ப்ரியாவும்.

காலம் ஓடியது. ஒரு பெரிய மனிதர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே படித்து ஒரு வேலையும் வாங்கிவிட்டான். அவரின் தயவால். ஆனால் அவர் அவனிடம் நடந்து கொண்ட விதமோ அருவருப்பானது. என்ன செய்வது இப்படியொரு பிறவி எடுத்ததற்கு? இதில் அவன்பிழை என்ன? கடவுள் செய்த பிழைக்கு அவன் என்ன செய்வான்? அதற்குள் அவன் அக்காவும் அண்ணனும்  திருமணம் செய்து கொண்டு வேறு ஊர் போய்விட்டதை அறிந்தான். பெற்றோர்கள் ஜீவனத்துக்கே கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்ததும் கவலை ஏற்பட்டது ஆரவுக்கு. அதனால் தாய்ப்பெயருக்கு மாதா மாதம் பணம் அனுப்பினான். ரகசியமாகப் பெற்றுக் கொண்டாலும் ஆரவைப் பார்க்க ஆசைப்பட்டாள். ஆரவுக்கும் தாயைப் பார்க்க ஆவல். அதனால் ரகசியமாக அவளைச் சந்தித்தான். தாயும் மகனும் கட்டிக்கொண்டு அழுதார்கள்.

சரோஜா சொன்னாள், “உன் அண்ணனும் அக்காவும் எங்களைப் பார்ப்பதுகூடக் கிடையாது. ஆனால் அவர்களால் வெறுக்கப்பட்டாலும் நீதான் குடும்பத்தைக் காக்கிறாய். உன்மனசு அவர்களுக்கு இல்லையே”. சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுகுமாரன் வருவது தெரிந்து ஆரவ் “அம்மா, அப்பாவுக்கு நான் வருவது பிடிக்காது; நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே, உனக்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறேன். அடுத்த ஜென்மத்திலாவது கடவுள் என்னை ஆணாகவோ பெண்ணாகவோ படைக்கட்டும். இதுமாதிரி இடையினமாகப் படைக்க வேண்டா. இதிலே உன்பிழை ஏதுமில்லை. என் பிழையும் ஏதுமில்லை. கடவுளின் பிழை தானேம்மா. நான் வருகிறேன்”.

தாயைப் பிரிய முடியாமல் மனக் கலக்கத்துடனே சென்றான். பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள் சரோஜா கணவனின் வருகையால். அவன் கொடுக்கும் பணம் மட்டும் வேண்டும்; அவன் வேண்டா என்று நினைக்கும் இவர் என்ன மனுஷன்? முதல்முறையாகக் கணவன் மேல் வெறுப்பு வந்தது சரோஜாவுக்கு.

No comments:

Post a Comment