அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள்,
சிறுகதைகள், பைந்தமிழ்ச் சோலையின் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத்
தாங்கிவரும் தமிழ்க்குதிரின் ஏழாம் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
இலக்கியச் செழுமையும் அதற்கேற்ற இலக்கண வளமும் ஒருங்கே
கொண்டது நம் செந்தமிழ். கவிதைகளின் பாடுபொருள் காலந்தோறும் மாறலாம். காலத்திற்குத்
தேவையான மாற்றங்களைத் தருவதே கவிதையின் முதன்மை நோக்கம் எனலாம்.
கவிதையின் எழுச்சியும் கவிஞனின் உள்ளத்து உரமும்
மலையையே மடுவாக்கும் திறன் கொண்டவை. காலத்திற்கும் நின்று பயன்தருவதில் மரபு கவிதையே
சிறந்த வழி எனலாம். நினைவில் நிறுத்துவது எளிது; மறந்துவிட்டாலும் மீண்டும் நினைவுகூரல்
எளிது; மிகுந்த கருத்துகளையும் குறைந்த சொற்களில் அடக்கிவிட முடியும்; ஏற்ற இடங்களில்
விரும்புமாறு கூட்டவும் முடியும்; குறுக்கவும் முடியும்.
அத்தகு மரபு வடிவங்களைக் கற்பித்துப் பரப்புதலையே
தலையாய நோக்கமாகக் கொண்ட நம் பைந்தமிழ்ச்சோலையின் நான்காம் ஆண்டு விழா வரும் ஆகத்துத்
திங்கள் 25-ஆம் நாள் சென்னையில் நடைபெறும்.
அருந்தமிழ் பருக அனைவரும் வருக!
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment