'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

மொழியின் இடைவெளி - சிறுகதை


பைந்தமிழ்ச்செம்மல்
ஆதிகவி (எ) சாமி.சுரேசு

அங்கீகாரம் - அனைவரும் வேண்டுவது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாவரும் தனது தரப்பை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். கூடுதலோ குறைவோ கட்டாயம் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அங்கீகாரத்தின் உளவியல் யாதெனில், நாம் இங்குத் தனித்து விடப்படவில்லை, இந்த உலகம் நமக்கானதுதான் என்று தனக்கான தனிப்பட்ட நிறுவதலே. ஏனிந்த மாந்த மனம் தனித்து இருக்க அல்லது இயங்க விரும்புவதில்லையெனில், அதன் இருப்பே அப்படித்தான். மனம் என்பதே எண்ணங்களின் கூட்டுக் கலவைதாம். கூட்டாக இருப்பதே பாதுகாப்பு உணர்வைத் தரும் என்பதற் காகத்தான் எனச் சொல்கிறார் ஓஷோ.

எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் கணவன் மனைவி உறவில் கட்டாயம் அது வேண்டும். கணவனின் கலை, இலக்கிய, தொழில்நுட்பப் படைப்பை  யார் வேண்டுமானாலும் அங்கீகரித்துப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். ஆனால், அவன் மனைவியால் அஃது அங்கீகரிக்கப்படவில்லை எனில் அது சிறந்த படைப்பென்று சொல்லுவதற் கில்லை. உள்ளீட்டளவில் அவன் வெறுமையைத் தான் உணர்வான். அது முழுமையான வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியாது. மனைவிக்கும் அப்படித்தான். அவளது சமையலை ஊரே பாராட்டலாம். ஆனால், கணவனால் கண்டு கொள்ளப்படவில்லை எனில் அது சாரமற்றதே.

இரவு உணவு உண்ட பின்னர் சிறு குறுநடை பயிலும் பழக்கம் அவனுக்குள்ளது. இது யாரும் சொல்லித் தந்தோ அல்லது யாரையாவது பார்த்தோ பழகிக் கொண்டதல்ல. பதினென் சித்தர்களில் ஒருவரான தேரையாரின் பாடலிலிருந்து அவன் கற்றுக்கொண்டது. அவனது இந்த நடையை அக்கம்பக்கத்தினர் கேலியும் கிண்டலும் செய்வ துண்டு. அவன் அதை பொருட்படுத்தினானில்லை. 'நான் வெள்ளைச்சட்டை அணிவது என் பக்கத்து வீட்டாருக்குப் பிடிக்கவில்லை எனில், வெள்ளைச் சட்டையைப் பொறுத்தவரையில் எனது வாழ்வை அவர்கள்தாம் வாழ்கிறார்கள்' என வேடிக்கையாகத் தன் மனைவியிடம் அடிக்கடி அவன் சொல்லுவ துண்டு. அன்றும் அப்படித்தான்; இரவு உணவுக்குப் பிறகு சிறிது காலார நடந்து கொண்டிருந்தான். இந்த நடையிலே அவ்வப்போது அவனது மனைவியும் கலந்து கொள்வாள். அது பெரும்பாலும் புகார் வாசிப்பதற்கும் அண்டை அயலாரின் உளவு செய்தியை ஒலிபரப்பும் பயனாகவும் இருக்கும்.

'ஏங்க'
'ம்.. சொல்லு'
'நம்ம பக்கத்துவீட்டுக்குப் புதுசா குடிவந்திருக்காளே வனஜா..'
'ம்'
'சரோஜா கூட என்னமா குழையுறா தெரியுமா? அவ துணிய இவ காயப் போடறதும், இவ துணிய அவ மடிச்சு வெக்கிறதும்... ப்பாப்பா.. காண கண்ணு பொறுக்கல'
'அதில உனக்கென்ன பிரச்சினை?'
'எனக்கென்ன பிரச்சினை? நான் நல்லாத்தான் இருக்கேன். அந்த சரோஜா கூட எவளும் ரொம்ப காலம் சேர்ந்திருக்க முடியாது. அப்படியே சிலும்புவா. இது எத்தனை நாளைக்கோ' ஒரு ஆத்ம திருப்தியோடு முடித்தாள்.

தற்குறியோ மெத்தப் படித்தவரோ, ஊரார்க் கதையைச் சொல்வதும் கேட்பதும் அளவற்ற இன்பம். வெளியில் எல்லாம் அறிந்தவர் போலவும் நடுநிலையாளராகவும் உலவினாலும் உள்ளுக்குள் ஊர்க்கதையைப் பேசும் அந்தக் குரூர சுகானுபவம் எல்லாருக்கும் உண்டு. பெண்கள் அவற்றைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறார்கள். ஆண்கள் நாசூக்காக. இவற்றில் இருபால் பேதம் ஏதுமில்லை.

அவள் அப்படி அங்கலாய்த்துக் கொண்டதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஒரு காலத்தில் இவளும் அப்படி இருந்தவள்தான். என்றோ ஒருநாள், மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தவள், அவளுக்குத் தெரியாதவாறு உள்ளே எடுத்துச் சென்றுவிட்டாளாம். அதனைக் கண்டுகொண்ட சரோஜா அவளிடம் ‘நாங்கெலாம் மிளகாய் பஜ்ஜியைப் பார்த்ததே இல்லையா? ஏன் இப்படி மறைத்து எடுத்துப் போன?’ அப்படின்னு கேட்டுட்டாளாம். ‘நான் எதுக்கு பஜ்ஜியை மறைச்சு எடுத்தாருனும்? நானென்ன திருடிட்டா வரேன்? புள்ளைங்களுக்குச் சூடா தரணுமுனு மூடி எடுத்தாந்தேன். அத ஒரு குத்தமா சொல்லிக் காட்றா இவ' என்றவள் அன்று சொன்னது காதில் ஒலித்தது. அன்று விழுந்த சிறு விரிசல் இன்று ஒட்டமுடியாதபடி எட்டி விட்டது. சரோஜாவையும் சும்மா சொல்லக்கூடாது, அவ குழந்தைகளை அப்படி பாத்துப்பா. உரிமை எடுத்துக்குவா. அது இவளுக்குப் பிடிக்கவில்லை போலும். இவளுடைய புலம்பல்களுக்குக் காரணமே நாம இருக்க வேண்டிய இடத்துல நேத்து வந்தவ இருக்கா என்பதுதான். அடிப்படை அன்புதான். ஆனால், அதை இருவரிடமும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. சரியாயிடும், அப்படின்னு நினைச்சு விட்டது; இன்று சுத்தமாய்ப் பசையற்றுப் போய்விட்டது. சிந்தனை எங்கெங்கோ போனதைத் தடுத்து நிறுத்தினாள்.

'என்ன யோசிக்கிறீங்க?'
'ஒண்ணுமில்ல... நீ சொல்றது சரிதான். அவகூட யாராலும் நீண்டநாள் நட்புப் பாராட்ட முடியாது தான்' என்றான். அவள் கூற்றை ஆமோதித்தவனாய். அவளுக்குத் தன் கணிப்பு அங்கீகரிக்கப்பட்டதில் ஓர் ஆன்ம திருப்தி.

ஆம் என்று சொல்லிவிட்டால் பல பிரச்சினைகளி லிருந்து தப்பி விடலாம். இல்லை, முடியாது எனச் சொன்னால்தான் சிக்கலே. அதனாலே பெரும் பான்மையான ஆத்திகர்கள் அனைத்தையும் மவுனமாய் ஏற்றுக் கொள்கிறார்கள். அறிஞர்கள் மறுக்கிறார்கள். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இந்த உலகம் கண்ட எல்லாப் பிரிவினைகளும் போர்களும் போராட்டங்களும் அழிவுகளும் அறிஞர்களால் ஏற்படுத்தப் பட்டவையே. அப்படியாயின் ஆக்கம் இல்லையா என்ற கேள்விக்கு இடமேயில்லை. அழிவுடன் ஒப்பிடுகையில் ஆக்கம் சிறிதே. மிகச் சிறிதே. எல்லாம் அவன் செயல் என்று காலை நீட்டிக் கொண்டு படுப்பதென்பது எல்லாத் தளைகளி லிருந்தும் உடனடியாக விடுபெறும் மந்திரம் என்பது அவன் அனுபவத்தில் அறிந்துகொண்டது தான்.

வேறெதுவோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் பிள்ளை அழைக்கவே போய்விட்டாள். ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குக் கருத்தியல் மாற்றத்திற்கு நம்மால் உடனே செல்ல முடியவில்லை. இவளெப்படி உடனே மாறுகிறாள். இவ்வளவு நேரம் காத்திரமாகப் பேசியவள் பிள்ளை அழைத்ததும் சட்டென மாறி ஓடிவிட்டாளே எனச் சிந்தனை வயப்பட்டான்.

சிறு நேர நடைக்குப் பின்னர் இல்லம் திரும்பி, பின்னாலிருக்கும் தொட்டியில் காலைக் கழுவினான். முன்பெல்லாம் வெளியே சென்று பின் வீட்டிற்கு திரும்புகையில் கால்கழுவி உள்ளே செல்லும் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலும் யாரும் கடைப் பிடிப்பதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையில் எங்க போய் காலைக் கழுவுவது? என்று எண்ணியவன் தன்னை ஒரு பழமை வாதியாக - பிற்போக்குச் சிந்தனையாளனாக நினைத்துக் கொண்டான். அதை உறுதி செய்யும் வகையில் இன்றும் அவன் சட்டைப்பையில் இருக்கும் அந்தப் பழைய கால மையூற்றி எழுதும் பேனா சட்டென நினைவில் வந்துபோனது. ‘உங்களில் யார் யோக்கியர்களோ அவர்களே முதலில் கல்லெறியுங்கள்’ என்ற வாசகம் நினைவுக்கு வரவே முகத்தில் மெல்லிய புன்னகையைப் படர விட்டான். அன்பும் அறமும் தழைத்தோங்கிய இந்த நாட்டில் சீர்திருத்த வாதிகளும், சிந்தனாச் சிற்பிகளும், புரட்சிக் காரர்களும் வந்த பின்னரே அதெல்லாம் கெட்டழிந்து போனது எனத் திடமான நம்பிக்கை அவனுக்குண்டு. இந்த முட்டாள்களின் கூட்டம் பெருகப் பெருகவே பல்லாண்டு காலம் பார்த்துப் பார்த்து பண்படுத்தப்பட்ட இந்த நிலம் பாழ்படுத்தப் பட்டது என்பதில் எள்முனையளவும் அவனுக்கு அவநம்பிக்கை இருந்ததில்லை. உள்ளக் குமுறலை ஒற்றை மூச்செரிந்து கடக்கலானான்.

உள்ளே சென்று படுக்க, பாயை விரித்தான். சூடான பாலைக் கொண்டுவந்து நீட்டினாள். பாலை அருந்தியவனிடம், உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான் அவன் மகன். என்ன என்பதை போன்று விழியுயர்த்தினான்.

'நாம எப்போ சொந்த வீட்டுக்குப் போவோம்?'
'கூடிய சீக்கிரம்'
'அதான் எப்போ?' இது அவளது குரல்.

குரலில் சற்றுக் கடுமையும் ஏளனமும் இழையோடியது. ‘இவள்தான் அவனைத் தூண்டி விட்டாளோ?’ என்றெண்ணினான்.

இந்தக் கேள்விக்கு ஒரு நடுத்தரக் குடும்பத்துத் தலைமகனிடம் இருந்துவரும் பதில் பல பொருளாதார அறிஞர்களையே குழப்பிவிடக் கூடும். இது பலமுறை அவன் ஆளுமையின் மீது தொடுக்கப்பட்ட கணைதான். அந்தக் கையறு நிலையில் அவன் நெளிவதை அவள் இரகசியமாய் இரசிக்கக்கூடும். வெறுமனே அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனெனில் அதில் அவளின் இடமாற்றக் குறிக்கோள் புதைந்துள்ளது. அவளைச் சொல்லிக் குறையில்லை. அவளுக்குள் வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் என்ன இருக்கிறதோ? பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவால் உலகில் நடுத்தர வர்க்கம் என்று ஒன்று உருவானது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் படும்பாட்டை சொல்லில் வடிக்கவியலாது. ஏற்கனவே அவள் வீடு மாற்றலாம் என்று சொல்லும்போதெல்லாம் 'அங்குமட்டும் என்ன? பக்கத்தில் புத்தரும், எதிரில் காந்தியுமா வசிக்கிறார்கள்? எல்லா இடத்திலும் இந்த வகையான மனிதர்கள்தாம் இருக்கிறார்கள். தெரியாத தேவதையைவிடத் தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல்' என அவளின் குறிப்பறிந்து சொல்லுவான். இப்போதெலாம் அப்படிச் சொல்வதில்லை. எவ்வளவு காலந்தான் அதையே சொல்லிச் சமாளிப்பது? அதுவில்லாமல் இப்போது சொந்த வீட்டுக்குப் போகணும் என்றுதானே சொல்கிறாள்.

'அப்பா.. சொல்லுப்பா' என்றான் மகன் மீண்டும். நினைவிலிருந்து மீண்டவனாய்ப், 'போலாம் பா...' என்று இழுத்தான்.
'அட போப்பா' என்று சொல்லிவிட்டு இழுத்துப் போர்த்திப் படுக்க யத்தனித்தான் குழந்தை. அவளும் விளக்கை அணைத்துவிட்டு உறங்குங்கள் என்று சொல்லிவிட்டு ஒருக்களித்துப் படுக்கலானாள்.

அனிச்சையாய் விளக்கணைத்துப் பாயில் சரிந்தான். மனம் இப்போது முழுவேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இவர்களை நான் மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையோ? என ஒருகணம் சிந்தித்தவன், எந்தக் குற்றவுணர்வும் இந்த வாழ்க்கையில் இல்லை. எனவே மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறோம். அதிலும் அக்கம் பக்கத்தார் களைவிடக் குடும்ப உறுப்பினர்களிடம் நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம். ஏதேதோ சொல்லி மனத்தைத் தேற்றியவனுக்குச் சின்னப் பையனின் 'அட, போப்பா' என்னும் சொல் முள்ளாய்க் குத்தியது.

சிந்தனைப்புரவி தறிகெட்டோடத் துவங்கியது. நாம் எவ்வளவோ தேவலாம். அங்கங்கு அவனவன் காலைநீட்டிப் படுப்பதற்கும் வழியில்லாமல் இருக்கிறார்கள். நமக்கென்ன என்று மனத்தைத் தேற்றியவன், சிந்தனைத்தடம் மாறினான். அவள் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. வீடே உலகம் என்று வாழும்போதே பொறாமைத் தீயில் பொசுக்கப் படுகிறாள். இன்னும் அலுவலகம் செல்லும் பெண்களின் நிலையை நினைத்தால்... அப்பப்பா... பாவம் அவர்கள் என்றெண்ணியவன் கண்களில் கண்ணீர் அரும்பியது. நமக்கேகூட இது நிகழ்கிறதே. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் என்னென்ன நினைக்கிறார்கள்? நாம் உண்பதுதான் உணவு. மற்றோரெல்லாம் உண்பது குப்பை. தாம் உடுத்துவதுதான் உடைகள். மற்றோரெல்லாம் உடுத்துவது கந்தல். தன் மனைவி மட்டுந்தான் கற்புடையவள்...

உணவுக்காக ஓடோடி இரைதேடும் இந்த அவல வாழ்க்கையிலும் பெரும்பாலான ஆடவர்களின் எண்ணமும் இப்படித்தானே இருக்கின்றன. ச்சே... இவர்களெலாம் என்ன படித்து என்ன புண்ணியம் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

தூக்கம் பிடிக்கவில்லை. மெல்ல எழுந்து, ஒலி எழுப்பாமல் கதவைத் திறந்து வெளியே வந்தான். புதிய காற்று நெஞ்சில் நுழைந்ததும் சற்று கனம் வெளியேறியதாய் உணர்ந்தான். மீண்டும் ஒரு சிறுநடை நடக்கலானான். நிலா தண்ணொளியை வாரி இறைத்தது. மரங்கள் நிசப்த தவமியற்றின. நடுநிசி அமைதிப் பேரழகைச் சமைத்து வைத்திருந்தன. கண்களாலும் காதுகளாலும் அவற்றை உண்டவன், திருப்தியடைந்தவனாய் வீட்டிற்குத் திரும்பினான். பக்கத்து வீட்டின் மூடப்பட்டிருந்த கதவு கண்ணில் பட்டது. இனித் திறப்பதற்கு வழி இல்லை என்றவாறே உள்ளே நுழைந்தான். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மெல்லப் படுக்கையில் சரிந்தான்.

உள்ளம் ஒப்பிட்டும் உதடுகள் திறக்க நேரமின்றி உறவுகளை இழந்தவர்கள் நாட்டிலே கோடி கோடி.

1 comment: