பகுதி – 3
பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ-க-பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து...
மருத்துவம்
இந்நாட்டில் அனைவருக்கும் கல்வி எப்படி இலவசமாகக் கிடைக்கிறதோ அதே போல
மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்கின்றது.
அரச மருத்துவமனைகள் அனைத்து வசதிகளும் கொண்டவைகளாக அமைந்துள்ளதோடு,
அம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்த காரணத்தால் பல தகவல்களின்
உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டவனாய் இத்தொடருக்குள் நுழைகின்றேன்.
மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கினாலும் எவரினது தலையீடுமின்றிச்
சுதந்திரமாக முடிவெடுத்து இயங்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவரை
அல்லது எந்தப் பணியாளரையும் நியமிக்கும் உரிமை மருத்துவமனையில் இயங்கும் ஒவ்வொரு பகுதியினருக்கும்
தரப்பட்டுள்ளது. எ.கா. நான் கதிரியலாளராகப்
பணிபுரிவதற்காக ஒரு மருத்துவமனையை அணுகியபோது, அப்பகுதிக்குப் பொறுப்பானவர்கள் மூலமான
நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு நியமனம் பெற்றேன். ஆனால் இலங்கையில் சுகாதார
அமைச்சினால் மட்டுமே அனைத்து ஊழியர்களும் நாட்டின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நியமிக்கப்
படுகிறார்கள். இதேபோன்றுதான் அரச திணைக் கழகங்களில் நியமனங்கள் நடைபெறுகின்றன. டென்மார்க்கில்
அதிகாரம் என்பது விரிவு படுத்தப்பட்டு அதற்கேற்ப நியமனங்களும் இடம்பெறுகின்றன.
இதே போன்றுதான் ஒருவரின் நடத்தையோ, செயல்பாடோ தவறாக இருக்குமிடத்து
அவரைப் பணியிலிருந்து நீக்கும் உரிமையும் அவர்களுக்கே தரப்பட்டுள்ளது.
மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்வாழும் பகுதிகளில் சிறுசிறு வைத்தியச்
சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தனியார் மருத்துவமனைகள் போல இயங்கினாலும், நோயாளிகள்
எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இங்குக் கடைமை புரியும் வைத்தியர்கள் ஆரம்ப
நோய்களுக்கான மருத்துவத்தினை அளிப்பார்கள். ஒருவருக்கு மிகப்பெரிய ஆபத்தான நோயோ அல்லது
மருத்துவனையில் தங்க வைத்து மருத்துவமளிக்க வேண்டும் எனக் கருதுமிடத்து அந்நோயாளியைப்
பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். ஒருவரின் நோயினை மிகத்துல்லியமாக அறிய
வேண்டும் என வைத்தியர் கருதுமிடத்து நோயாளியினைக் கதிரியக்கப் பரிசோதனை (x-ray,
CT-scanning, MR-scanning etc) போன்றவற்றிற்காகப் பெரிய மருத்துவனைகளுக்கு அனுப்பி
வைக்க முடியும்.
ஒரு நோயாளி இப்பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு, அவரின் உடலில் வீரிய
நோய்க்கான அறிகுறி காணப்படுமிடத்து அப்பகுதி மருத்துவரால், அந்நோய்க்கான சிகிச்சையளிக்கப்
படக்கூடிய பகுதிக்குக் காலத் தாமதமின்றி அனுப்பிவைக்கப் படுவார். அதனால் காலத் தாமதமின்றி
நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடி யாகச் சிகிச்சைக்கும் உட்படுத்தப்படுவார்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான அனைத்தும் (தேவையான மருந்து, உடை,
உணவு உட்பட) கட்டணமின்றி வழங்கப்படும்.
ஐரோப்பா நாடுகளுள் டென்மார்க் நாட்டில் மட்டுமே இவ்வகையான செயல்பாடு
நடைமுறையிலுள்ளது. ஏனெனில் இங்கு ஒருவர் தனது மாத வருமானத்தில் 46 சதவீதம் வரியாக அரசிற்குச்
செலுத்த வேண்டும். மற்றைய ஐரோப்ப நாடுகளில் வித்தியாசமான முறையில் வரியளவுகள் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் அந்நாடுகளில் குறைந்த அளவு வரி செலுத்துவதனால் ஒவ்வொருவரும்
மருத்துவக் காப்புறுதியைத் தாமே கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
மருத்துவப் பாதுகாப்பானது இந்நாட்டு அரசக் குடும்பத்தவரிலிருந்து அனைத்து
மக்களுக்கும் ஒரே மாதிரியாகவே உள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது. முக்கியமாக ஒருவருக்குரிய
சரியான மருத்துவத்தினை இங்குள்ள மருத்துவர்களால் கையாள முடியாது அல்லது அந்நோயினை அமெரிக்க
மருத்துவமனையில்தான் சரிசெய்ய முடியும் என்னுமிடத்து அந்நோயாளி அங்கு அனுப்பி வைக்கப்படுவார்.
இதற்கான அனைத்துச் செலவுகளும் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படும். சென்ற ஆண்டு என்னைப்போல்
ஏதிலியாக இந்நாட்டில் வாழ்ந்துவந்த ஓர் ஈழத்தமிழர் குடும்பத்தில் 18 அகவையான இளைஞர்
ஒருவருக்கு மூளையில் ஏற்பட்ட பாரிய நோயினை இங்குச் சரிசெய்ய இயலாது என்பதனால் அமெரிக்காவிற்கு
அனுப்பி மருத்துவம் மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.
(தொடரும்...)
No comments:
Post a Comment