'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ – 5


பைந்தமிழ்ச்செம்மல்

தமிழகழ்வன் சுப்பிரமணி



தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

வடசொற்கள் தமிழில் வந்து அமையும்போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக, இன்னும் சில விதிகளை மனத்திற் கொள்வோம்.


ü  தமிழில் 'ர'கர, 'ல'கரம் மொழிமுதலில் வராது என்பதனால், 'ர'கர முதல் வடசொற்கள் தமிழில் அ, இ, உ என்ற எழுத்துகளை முதலாகப் பெறும். 'ல'கர முதல் வடசொற்கள் தமிழில் இ, உ என்ற எழுத்துகளை முதலாகப் பெறும்.

நன்னூல்:
ரவ்விற்கு அம்முதல் ஆமுக் குறிலும்
லவ்விற்கு இம்முதல் இரண்டும்
                மொழிமுதல்
ஆகிமுன் வருமே.

குறிப்பு: 
௧. கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில், சில தமிழ்ச் சொற்களும், வடசொற்களைப் போல் ரகர முதலோடு திரிக்கப்பட்டிருக்கலாம்.
௨. வடசொற்கள் மட்டுமின்றிப் பிறமொழிச் சொற்களையும் இந்த விதிப்படி ஆளலாம்.

Raktha - அரத்தம், இரத்தம்
Rathana – இரத்தினம்
Ramba - அரம்பை
Ramya - அரமியம்
Rahasya - இரகசியம்
Rakshashaa - இராக்கதன்
Radha - இராதை
Ram - இராமன்
Ramayana - இராமாயணம்
Ravana - இராவணன்
Raj – இராசன்
Revathi - இரேவதி
Roman - உரோமம்

Lagna - இலக்கினம்
Laksha - இலக்கம், இலட்சம்
Lakshana - இலட்சணம்
Lakshman - இலக்குவன்
Lakshmi - இலக்குமி
Lanka - இலங்கை
Laddu - இலட்டு
Latin - இலத்தீன்
Laya - இலயம்
Lalitha - இலலிதை
Lavanga - இலவங்கம்
Laada - இலாடம்
Laaba - இலாபம்
Laavanya - இலாவண்யம்
Ligitha - இலிகிதம்
Linga - இலிங்கம்
Leela - இலீலை
Loga - உலகம்
Loba - உலோபன்
Loha - உலோகம்


ü  தொல்காப்பியர் காலத்தில், ‘ய’கர வரிசையில் யா என்னும் நெடில் ஒன்றே மொழிமுதலாகும். மற்ற பதினொன்றும் மொழிமுதலாகா.

தொல்காப்பியம்:
ஆவோடு அல்லது யகரம் முதலாது.

யா, யாண்டு, யாணர், யாத்தல், யாப்பு, யாம், யார், யாழ், யாறு, யான், யானை…

நன்னூலார் காலத்தில், யகர வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ என்னும் ஆறும் மொழிமுதலாகும். யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறும் மொழிமுதலாகா.

நன்னூல்: அஆ உஊ ஓஔ யம்முதல்.

நன்னூலின்படி, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது, யகர வரிசையை முதலெழுத்தாகக் கொண்ட சொற்களுக்கு, இகரம் மொழிமுதலாக வரும்.

நன்னூல்: யவ்விற்கு இய்யும் மொழிமுதல் ஆகிமுன் வருமே.

Yaksha – இயட்சன், இயக்கன்
Yasodha – இயசோதை
Yandhra – இயந்திரம்
Yama – இயமன்
Yamaga – இயமகம்
Yesu (Jesus) – இயேசு (பிறமொழிச்சொல்)

ü  ஆனாலும் பல வடசொற்கள் இகரம் சேர்க்கப்படாமலும் வழங்கப்படுகின்றன.
Yaaga – யாகம்
Yathriga – யாத்திரிகன்
Yadhava – யாதவன்
Yuga – யுகம்
Yukthi – யுத்தி
Yudha – யுத்தம்
Yuva – யுவன்
Yuvaraja - யுவராசன்
Yoga – யோகம்

ü  யகரம் அகரமாகவும், எகரமாகவும் திரிக்கப்படுவதும் உண்டு.

Yasodha – அசோதை
Yandhra – எந்திரம்
Yama – எமன்
Yajamana – எசமான்

ü  வடமொழியில் ‘மெய்யை அடுத்து யகரமோ, ரகரமோ, லகரமோ’ இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, இகரம் தோன்றும்.

நன்னூல்:
இணைந்தியல் காலை யரலக்கு இகரமும்

௧. மெய்யை அடுத்துவரும் யகரம்

‘த்யா’க – தியாகம்
வா’க்ய’ - வாக்கியம்
பா’க்ய’ – பாக்கியம்
ச’த்ய’ – சத்தியம்
நி’த்ய’ - நித்தியம்
வா’த்ய’ – வாத்தியம்
ஆர்ய – ஆரிய
ரம்ய – அரமியம்

௨. மெய்யை அடுத்துவரும் ரகரம்

‘க்ர’ம – கிரமம்
வ’க்ர’ம் – வக்கிரம்
வ’ச்ர’ – வச்சிரம்
ச’த்ர’ – சத்திரம்
சு’க்ர’ன் – சுக்கிரன்
மந்’த்ர’ – மந்திரம்
யந்’த்ர’ – யந்திரம்
தந்’த்ர’ – தந்திரம்
காய’த்ரி’ – காயத்திரி

௩. மெய்யை அடுத்துவரும் லகரம்

‘க்லே’ச - கிலேசம்
சு’க்ல’ம் – சுக்கிலம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் சிலவிடங்களில்

௧. ஒற்று இரட்டிக்க, இரண்டாம் ஒற்றோடு இகரம் சேர்ந்து உயிர்மெய் ஆனது. இங்கே ஒற்று இரட்டித்தது மெய்ம்மயக்க இலக்கணப்படி.

௨. ஒற்று இரட்டிக்காமல், ஓரொற்றாகவே அமைய இகரம் சேர்ந்து உயிர்மெய் ஆனது.

௩. வடமொழியில் ‘மொழிமுதல் தனிமெய்’ அமைந்தால், தமிழில் உயிரோடு ஒன்றி உயிர்மெய்யாக வழங்குகிறது.

தொல்காப்பியம் :
பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்

உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா

என்னும் நூற்பாக்களினின்று நாம் அறிய வேண்டியது: தனித்த மெய்யெழுத்துகள் தமிழில் மொழிமுதலில் வாரா.

ü  ரகர ஒற்றும், ழகர ஒற்றும் தனிக்குறில் எழுத்தை அடுத்து வாரா. அவற்றை உகரத்தோடு சேர்த்து எழுதலாம்

நன்னூல்:
1.   ரழத் தனிக்குறில் அணையா.
2.   ரவ்வழி யுவ்வும்.

கர்நாடகா - கருநாடு, கருநாடகம்
கர்மா - கருமம்
கர்ணன் - கருணன், கன்னன்
தர்மம் - தருமம்
தர்பூசணி - தருபூசணி
மெர்சல் - மெரிசல், மெருசல்
கர்த்தர் - கருத்தர்
அர்த்தம் - அருத்தம்
 
துர்லபம் - துருலபம்
வர்த்தமானம் - வருத்தமானம்
வர்ணம் - வருணம், வண்ணம்
நர்த்தனம் – நருத்தனம்

என இவற்றையெல்லாம் தமிழின் ஒலிநயத்தைக் காக்கும் பொருட்டுத் திருத்தி எழுத வேண்டும்.

ü  வடமொழியில் ‘மெய்யை அடுத்து கரமோ, கரமோ’ இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, கரம் தோன்றும்.

பத்மம் - பதுமம்
பக்வம் - பக்குவம்

ü  வடமொழியில் ‘மெய்யை அடுத்து கரம், இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, கரம் தோன்றும்.

ரத்ந - அரதனம்

ü  இன்னும், வடமொழியிலிருந்து தமிழுக்கு வரும் ஆண்பாற் பெயர்களை னகர ஒற்றை ஈறாகக் கொண்டு எழுதுவோம்.

தொல்காப்பியம்:
னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்

Ram        - இராம்–இராமன்
Yama       – இயம - இயமன்
Rakshashaa   – இராக்கத - இராக்கதன்
Raj         – இராசன்
Loba        – உலோப – உலோபன்

இவ்வாறு தமிழுக்கு வரும் வடசொற்களைத் தமிழின் ஒலிப்பியல்பு மாறாமல் மாற்றிப் பயன்படுத்துவோம். முடிந்தவரை வடசொற்களின் பயன்பாட்டைக் குறைப்போம். தமிழைக் காப்போம்.

No comments:

Post a Comment