அன்பு
நண்பர்களே! சோலைக் குயில்களே!
2015-இல் தொடக்கி இதுகாறும் சிறப்பான முறையில்
செவ்வனே தமிழைப் பரப்பிவரும் பணியில் தொய்வில்லாமல் நின்றுழைத்த எனக்கு ஆக்கப்பூர்வமான
துணையாக நீங்கள் அனைவரும் உடன்வந்ததற்கு முதற்கண் என் வணக்கத்தையும், நன்றியையும்
தெரிவிக்கிறேன்.
தனியொருவனாக
இச்சோலையை வழிநடத்தி இதுகாறும் சற்றொப்ப 200க்கும் மேற்பட்ட கவிஞர்களை மரபில்
செலுத்தி நற்றமிழியற்றும் பொற்றமிழ்ப் பாவலர்களாக மாற்றிய பெருமையும் நிறைவும்
கொண்டு மகிழும் இவ் வேளையில், கடந்த நான்காண்டுகளாக என்னோடு நிழலாகப்
பயணித்து, என்
உள்ளத்துணர்வுகளையும், ஒண்டமிழறிவையும் ஒருங்கே பெற்ற
பைந்தமிழ்ச்சோலையின் தூண்களாக விளங்கி வரும் சிலரை என் தமிழ்ப்பணிக்குத் துணையாகக்
கொள்ளவிருக்கிறேன். துணையாக என்பதைவிட என் (இன்பச்) சுமையை அவர்களின்
தோள்களுக்கும் பகிரவுள்ளேன் என்பதுதான் சரி.
ஆம்...
பைந்தமிழ்ச்சோலையின் முதன்மை மாணவர்களாகவும், பற்றறாச் சிந்தை கொண்டவர்களாகவும், சோலையின்
வளர்ச்சிக்கு முப்போதும் நல்லெண்ணங் கொண்டவர்களாகவும், பைந்தமிழ்ச்செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான், சந்தக்கவிமணி
என்பன போன்ற அனைத்து விதமான தேர்வுகளிலும் முதலிடம் பெற்றவர்களான இவர்களுக்கு
இன்னும் கற்றுத்தர என்னிடம் என்ன இருக்கிறது? எனும் சூழலில், எனக்கிணையான இவர்களை என் துணைக் கைகளாகக்
கொண்டு இச்சோலையை வளர்த்தெடுக்க வேண்டி இவர்களுக்கென்று சிறப்பும், பொறுப்பும், பதவியும்
கொடுத்து என் மகிழ்வை வெளிக்காட்டும் வேளையிது.
அவ்விதத்தில், என்னில்
சற்றும் சோராத தமிழாற்றலும், யாப்புத்திறனும், சோலைப்பற்றும், அனைவரிடத்தும்
அன்பாக, இனிமையாக, பொறுப்பாக, சளைக்காமல்
பிழை திருத்தியுதவும் ஆசானாக விளங்கும் என் ஆருயிர் நண்பர் பைந்தமிழ்ச்செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான், சந்தக்கவிமணி
மன்னை வெங்கடேசன் அவர்களை எனக்கு இணையான இணையாசிரியராக நியமிக்கிறேன். இனி இச்சோலையில் எனக்கு
நிகரான சிறப்பும், பொறுப்பும், உரிமையும், தனித்துவமும் கொண்டவராக மன்னையார்
விளங்குவார். அன்பர்கள் எனக்குக் கொடுத்துவரும் அத்துணைச் சிறப்புகளையும், ஒத்துழைப்பையும்
மன்னையார்க்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இச்சோலையை எனக்கு அடுத்தநிலையில்
வழிநடத்தும் பொறுப்பும், உரிமையும் பெற்றுவிளங்கும் மன்னை
வெங்கடேசனாரை அனைவரும் ஏற்று மகிழ்ந்து தொடர்வீர் என்ற நம்பிக்கையுடன் பைந்தமிழ்ச்
சோலை என்னும் பல்கலைக் கழகத்தின் இணையாசிரியர் மன்னை வெங்கடேசனாருக்கு உங்கள்
வாழ்த்துகளை அள்ளித் தெளித்து, எம்மோடு பயணிக்க வேண்டுகிறேன்.
பைந்தமிழ்ச்சோலை எண்பேராயம்: பைந்தமிழ்ச் சோலையின் வளர்ச்சிக்காகவும், அடுத்தகட்ட
நகர்வுகளுக்காகவும் வேண்டி,
மன்னை வெங்கடேசன்
அவர்களையும் உள்ளிட்ட எட்டுப்பேர் கொண்ட “பைந்தமிழ்ச்சோலை எண்பேராயம்"
அமைக்கப்படுகிறது. இணை யாசிரியராகப் பொறுப்பேற்கும் மன்னையாரைத் தவிர மற்றுமுள்ள
எழுவர்களையும், அவர்தம் பதவிகளையும் அறிவிப்பதில் மகிழ்வும், பெருமிதமும் கொள்கிறேன்.
முதன்மையாசிரியர்கள்
:
1. பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி
2. பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா இராசசேகர்
3. பைந்தமிழ்ச்செம்மல் அர. விவேகானந்தன்
4.பைந்தமிழ்ச்செம்மல் வள்ளி முத்து
துணையாசிரியர்கள்:
1. பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி
2. பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு
3. பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
என்றவாறாக
அமைந்த நம் சோலையின் எண்பேராயத்தின் செயற்பாடுகள் சிறக்கவும், பார்போற்றிப்
புகழவும் உங்கள் வாழ்த்தும், ஒத்துழைப்பும் வேண்டுகிறேன். என்
எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பொய்யன்று எனுவிதமாக இவர்கள் செயற்படுவர் என்று நம்புகிறேன்.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
நிறுவுநர் மற்றும் தலைமையாசான்
No comments:
Post a Comment