'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

ஆசுகவிச்சுழல்


அமர்வு : 3

தலைவர்: கவிஞர் வள்ளிமுத்து
தலைப்பு : மழலைக் குறும்பு
வாய்பாடு : விளம் விளம் காய் (அரையடிக்கு)

உள்ளமும் மகிழ்வரே தங்குழந்தை
உடனுடன் செய்பல குறும்புகண்டு
வெள்ளமாய் மண்ணிலும் விளையாடி
வேங்கையின் குட்டியாய்க் கரைபுரண்டு
துள்ளுவர் மானெனத் தரைதனிலே
தூக்கமும் கெடுப்பதும் அவர்செய்கை.!
கொள்வதும் பாரினில் மகிழ்வுண்டோ.?
குழந்தைகள் செய்சிறு குறும்பைவிட

விடுவிடு விடுவென ஓடுவராம்
விளைகதிர் காற்றென ஆடுவராம்
திடுதிடு திடுவென வீட்டுக்குள்
திரையெனக் கடலென முழங்குவராம்
குடுகுடு குடுவென விரைந்தோடிக்
குப்புற விழுந்துடன் அலறுவராம்..!
தொடுதொடு நிலவெனக் குழந்தைகளின்
தொல்லைகள் இல்லற மேன்மைகளாம்..!

இல்லறம் செழிப்பது யாராலே
இனிமைகள் திறப்பதும் எவராலே
நல்லறம் நலமெலாம் ஓங்குவதும்
நம்திரு குழந்தையின் செயலாலே
பல்திறக் குழந்தைகள் பற்பலவாய்த்
பயன்மிகு செயல்களின் இடையிடையே
தொல்லைகள் மிகுப்பதும் இன்பந்தான்
துயர்பல போவதும் அவராலே..!

போவதும் வருவதும் கடலலைபோல்
புலபுல கலகல குழந்தைகளால்
ஆவது பற்பல துன்பந்தான்
ஆழ்ந்ததை நோக்கினால் இன்பந்தான்
பூவதை வண்டுகள் குடைந்தாடிப்
புலர்வெளிக் காலையில் முரல்வனபோல்
சாவதை விலக்கிடும் மருந்துண்டு
சத்தியம் குழந்தைகள் குறும்பதுவே..!

                        ***

கவிஞர் ஏகாபுரம் வெங்கடேசு

சத்தியம் குழந்தைகள் குறும்பதுவே
சஞ்சல மிலாதநல் வாழ்வதுவே
நித்தமும் பலபல விளையாட்டே
நினைவிலே சர்க்கரை தேன்கூட்டே
அத்தையின் மடியினில் நிதம்பாட்டே
அக்கரை இக்கரை அதைக்கேட்டே
முத்துகள் போலுமே பற்களிலே
முன்வரும் புன்னகை ஒளிவிளக்கே

ஒளிவிளக் காகிய குழந்தைகளை
உணர்ந்துகொண் டனைவரும் ஏத்துவமே
தெளிவுடன் சிந்தையில் அருந்தமிழைத்
தென்றலைப் போலவே புகுத்துவமே
பளிங்கென விளங்குவார் பாலகரும்
பாரிலே அவர்பெயர் மேல்விளங்கும்
களிப்புடன் அவர்விளை யாட்டுகளைக்
கண்டுநாம் உளம்மிகப் பூத்திருப்போம்

பூத்திருக் கின்றனர் மலர்போலப்
புதுவெளம் அனையநல் லுள்ளத்தில்
காத்திருக் கின்றனர் களிப்புடனே
கனிமுகம் காட்டிநம் துன்பங்களை
வீழ்த்தியோர் கின்றனர் பலநேரம்
விந்தையே அதுவென மனமோதும்
மாத்தமிழ் அன்னையின் குழந்தைகளின்
மணிமொழி கேட்டபோ தெல்லாமே

கேட்டபோ துடனவர் விரைந்தோடிக்
கேள்விகள் பலபல எழுப்பியபின்
வீட்டிலே அவர்செயும் குறும்பெல்லாம்
மென்மழை பெய்வதாய் மனமெண்ணும்
காட்டிலே நாய்நரி எல்லாமும்
காணலாம் நடிப்பிலே கண்முன்னால்
கூட்டிலே குயில்களின் குரலொலிபோல்
குழந்தைகள் மொழியிலே தான்வருமே

                    ***

கவிஞர் பாலாஜி சஞ்சீவி

குழந்தைகள் மொழியிலே தான்வருமே
   குறுநகை வார்த்தைகள் தான்தினமே
பழகிடப் பழகிட மகிழ்வளிக்கும்
   பலாச்சுளை போலது மனமினிக்கும்
அழகிய வாயினைத் தான்திறந்தே
   அனுதினம் வீட்டினைக் குதூகலிக்கும்
மழலையைப் போலெது யாவரையும்
   மயங்கிடச் செய்திடும் உரைத்திடவும்

உரைத்திடப் பலவித குறும்புகளே
   உள்ளது மழலையர் வீட்டினிலே
மறைவிடம் நின்றவர் நமையேய்ப்பார்
   மறுநொடி முன்வர எத்தனிப்பார்
வருவது யாரென உள்ளிருந்து
   வழக்கமாய்த் திறம்படத் தானுரைப்பார்
உருகிடும் மனமதும் அவர்செயலால்
   உண்மையை உணர்ந்தவர் உரைத்திடுவீர்.

உரைத்திட உரைத்திடக் கோடியின்பம்
   உணர்வினை வருடிடும் உண்மையன்றோ
நுரைத்திடப் பாலினைப் பருகிவிட்டு
   நினைத்திடும் பொழுதினில் ஓடிடுவார்
அரைத்துளி நிமிடமும் ஓய்வின்றி
   அழுகுற குறும்புகள் தான்புரிவார்
கரைத்திடும் மனத்தினைக் கயவருக்கும்
   கலந்துற வாடிடத் துயர்பறக்கும்.

                             ***

கவிஞர் மெய்யன் நடராஜ்

கலந்துற வாடிடத் துயர்பறக்கும்
   காற்றென மழலைகள் இருப்பதனால்
உலகமும் சுழலுது மகிழ்வுடனே!
   ஒவ்வொரு வீட்டிலும் இனிப்புடனே
பலபல குறும்புகள் படைப்பதினால்
   பசுமையை விதையென விதைத்தெம்மில்
கலகலப் பதுகுறை யாதுசெயும்
   கடவுளைப் போலவர் வாழ்கின்றார்

வாழ்கிற கடவுளை வீட்டினிலே
   வளர்க்கிற போதினில் நமக்குள்ளே
சூழ்கிற துன்பமும் மறைந்திடவே
   துடுக்குடன் அவர்செயும் குறும்புகளே
ஆழ்கடல் அலையெனக் கரைவந்தே
   அடிமனந் தழுவிடப் பார்க்கின்றோம்
பாழ்படும் வாழ்வினில் அவரிலையேல்
   பாரினில் நம்மனம் பாலைமரம்!

மரத்தினில் தாவிடும் வானரமாய்
   மனத்தினில் தாவிடும் குறும்புகளை
வரமெனக் கொண்டிடும் குழந்தைகளே.
   வாழ்வினில் பரிசென இருப்பதனால்
சிரசினில் ஆயிரம் சுமையிருந்தும்
   சிரிக்கிற பாக்கியம் நமக்கிருக்கு
சுரங்களில் இனியநற் சுரமாகிச்
   சுவைப்பது மழலையின் குறும்பாகும்.

குறும்புகள் செய்திடும் கொடையாகிக்
   குடும்பமும் மகிழ்வுற விதையாகும்
நறுமலர் மலர்கிற சோலையவர்
   நடத்திடும் நாடகம் ஒருபோதும்
வெறுப்புகள் தருவது கிடையாது
   வேதனை யகழ்வது மவராலே
பொறுப்புடன் குறும்புகள் புரிகின்ற
   பூவினம் தானவ ருணர்வோமே !

                         ***
         கவிஞர் மாலதி திரு

பூவினம் தானவ ருணர்வோமே
   புன்னகை மொழியதைச் சுவைப்போமே
கூவிடும் குயிலதன் குரலினிமை
   குதூகலம் தந்திடும் புதுவுறவு
தாவியே நடந்திடும் தத்தைபோல
   தளிர்நடை காணவே கோடியின்பம்
பாவினை வரையலாம் பலநூறு
   பழகுநல் பச்சிளம் மகிழ்வினிலே!

மகிழ்வினைத் தருவது மழலைமுகம்
   மானுடம் செதுக்கிய சிற்பமென
அகிலமு மியக்கிடும் குழந்தைகள்தான்
   ஆண்டவன் படைப்பிலும் விந்தைகளாம்
பகிரவும் பழகிடும் பட்டுகளாம்
   பதுமையி னழகிலே சிட்டுகளாம்
முகிழ்நகை தந்திடும் மொட்டுகளாம்
   முத்திரை பதித்திடும் பிள்ளைகளே.

                              ***

கவிமாமணி சேலம்பாலன்

முத்திரை பதித்திடும் பிள்ளைகளே!
முதன்மையாம் நலம்தரும் கிள்ளைகளே!
சித்திரைத் திங்களின் நிலவினைப்போல்
சீர்மிக நிறைத்திடும் மழலைகளே!
இத்தரை மீதினில் மானிடர்க்கே
இன்வர வாய்வரும் வாரிசுகாள்!
பத்தரை மாற்றெனும் பசும்பொன்னாய்ப்
பாரினில் வளருவாய் துள்ளியேதான்!

துள்ளியே மிகவுமே ஓடிடுவாய்
துடிப்புடன் பின்வரும் எவரையுமே
தள்ளியே போவெனச் சொல்லிடுவாய்
தள்ளியே நிற்கிறேன் எனச்சொலினும்
வள்ளெனக் கத்தியே முரண்டிடுமே
வாவெனப் பக்கமே சென்றிடிலோ
வெள்ளமாய் இன்பினை ஈவதுவோ
வீறுடன் கோபமாய்க் கத்திடுமே!

கத்திடும் மழலையை என்செய்ய?
கலகல வெனமிகப் பலசொல்லி
நித்தமும் அதனையே சமன்படுத்த
நேரமே போவதோ தெரியாதே
பித்தமே பிடித்ததாய்க் குறும்பாக
பேசிடும் செய்திடும் அதன்குணத்தை
எத்திற மானவர் செப்பிடினும்
ஏதுமே கேட்டிடாள் சின்னவளே!

சின்னவள் என்றுதான் நினைத்தாலும்
செய்கிற குறும்புகள் மிகவதிகம்
என்னவும் சின்னதாய்ச் செய்வதுவோ
இல்லையே என்பரே பெற்றவரே
கன்னலாய்ப் பேசுவாள் கற்கண்டாய்க்
கருத்தினில் இனித்திடும் கனிமுத்தாய்ப்
பன்முக வகையினில் மகிழ்வீவாள்
பனிமலர் கனிமுக மழலையவள்!
                                  ***

No comments:

Post a Comment