'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

பகுதி – 4

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளில் மொழி முதலில் அமையும் எழுத்துகள், மொழியிடையில் அமையும் மெய்யெழுத்துகள் (மெய்ம்மயக்கம்), மொழியீற்றில் அமையும் எழுத்துகள் பற்றிப் பார்த்தோம். இவற்றால் ஒருவாறு சொற்கள் தமிழில் எவ்வாறு அமையும் என்பதையும் எவையெல்லாம் பிழையாகும் என்பதையும் அறிந்தோம்.

இப்பகுதியில் வடசொற்கள் தமிழில் வந்து அமையும் போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வடசொற்கள் தமிழில் எப்போது வரும்? வடமொழிக் காப்பியங்களைத் தமிழுக்குப் பெயர்க்கும்போது அம்மொழிப் பெயர்களைத் தமிழில் எழுத, வடசொல்லாக்கம் உதவும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இக்காப்பியங்களின் தாக்கம் ஏற்படும்போது அவற்றைத் தமிழ்ப்படுத்திச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழுக்குப் பெருந்தொண்டாகும்.

எடுத்துக்காட்டாக, இராமாயணம், மகாபாரதம் முதலிய காப்பியங்கள் தமிழில் பெயர்க்கப்பட்ட போது அவற்றை இயற்றிய புலவர்கள் தமிழெழுத்து ஒலிகளுக்கு ஏற்றவாறு சொற்களை அமைத்துத் தந்தனர். ஆனால், பிற்காலத்தில் வடசொற்களின் தாக்கம் தமிழில் நிறைந்துவிட்டது. அது தவறு என்று உணராதவர்களாலும், சமற்கிருதம் படித்த சிலர் அதைத் தேவபாடை என்று கதை கட்டி விட்டதாலும், மக்களின் பயன்பாட்டில் எளிதாக அச்சொற்கள் புகுந்துவிட்டன. அதுவும் வடசொற்களை எழுதுவதற் கென்றே சில எழுத்துகளை உட்புகுத்தும் செயல்களும் நடந்தேறின. ஆனாலும் நந்தமிழ் இலக்கணம் அவற்றை நீக்கித் தமிழைக் கட்டிக்காக்கப் பெரிதும் உதவுகிறது.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்றார் தொல்காப்பியர். அஃதாவது, செய்யுட்சொல் நான்கனுள் வடசொல்லாகி வரும் சொற்களாவன சமற்கிருத மொழிக்குரிய எழுத்தொலிகளை நீக்கித் தமிழெழுத்திற்குரிய ஒலியோடு புணர்ந்து அமையும் சொற்களாகும்.

நன்னூலார் இன்னும் ஒருபடி மேலே போய் அந்நூற்பாவை விரித்து எந்தெந்த வடவெழுத்துகளை எந்தெந்தத் தமிழெழுத்துகளாக மாற்றலாம் என்று ஒரு பட்டியலே போட்டுவிட்டார். அவர்வழி நின்று இவ்வடசொல்லாக்கத்தைக் கற்போம்.

நன்னூலார் காலத்தில் ஆரிய மொழியில் 16 உயிரெழுத்துகள், 37 மெய்யெழுத்துகள் என மொத்தம் 53 எழுத்துகள் உண்டு. தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொதுவான ஒலிப்பு உடைய எழுத்துகள் தமிழ் எழுத்துருவிலும், ஆரியத்துக்கு மட்டுமே அமைந்த  ஒலிப்புடைய எழுத்துகள் இலத்தீன் எழுத்துருவிலும் கீழே குறிக்கப் பெற்றுள்ளன.

உயிரெழுத்துகள்
1
2
3
4
5
6
7
(r/ru)
8
(r/ruu)
9
Lu
10
luu
11
12
13
14
15
Am
16
ah



மெய்யெழுத்துகள்
1

1
2
kha
3
ga
4
gha
5
2

6
7
chha
8
ja
9
jha
10
3

11
12
tta
13
da
14
dda
15
4

16
17
ttha
18
dha
19
ddha
20
5

21
22
pha
23
ba
24
bha
25
6

26
27
28
29
30
sa
7

31
Sha
32
ssa
33
ha
34
35
Ksha
8

36
shka
37
Shpa





உயிரெழுத்துகளில் தமிழுக்கு உரியவையல்லாத எழுத்துகள் ஆறும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப் பெறும்.

அவற்றுள் ஏழாம் உயிரெழுத்து இகரமாகவும் இருவாகவும் திரியும்.

rshabam – இடபம்,
mrgam - மிருகம்.

மெய்யெழுத்துகளில் தமிழுக்கு உரியவை யல்லாத 22 எழுத்துகளும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத்  திரிந்து வழங்கப்பெறும்.

 முதல் வரிசையில் இடைநின்ற மூன்று எழுத்துகள், அஃதாவது 2, 3, 4 ஆகிய எழுத்துகள் முதலாம் எழுத்தாகத் திரியும்.

Sakhi – சகி
Naaga – நாகம்
Moha - மோகம்

இது போன்றே 2, 3, 4, 5-ஆம் வரிசைகளில் அமைந்த எழுத்துகள் திரியும்.

சலவாதி, விசயம் சருச்சரை
பீடம், சடம், கூடம்
தலம், தினம், தரை
பலம், பந்தம், பாரம்

அவற்றுள் எட்டாம் மெய்யெழுத்து மொழியிடையில் யகரமாகவும் திரியும். 

Pankajam - பங்கயம்.

முப்பதாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் யகரமாகவும் திரியும்.

Sankaran - சங்கரன்,
Pasam - பாசம்,
Desam - தேயம்.

முப்பத்தொன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையிலும் கடையிலும் டகரமாகவும் திரியும்.

Shanmuga - சண்முகன்,
Visham - விடம்,
Bashai - பாடை

முப்பத்திரண்டாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் தகரமாகவும் திரியும்.

Ssabha - சபை
Vassam - வாசம்,
Maassam - மாதம்.

  முப்பத்து மூன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் அகரமாகவும் இடையிலும் கடையிலும் கரமாகவும் திரியும்.

Haran - அரன்,
Moha - மோகம்,
Mahi - மகி

  முப்பத்தைந்தாம் மெய் இரண்டு ககரமாகத் திரியும்.

Paksha - பக்கம்.
Ksheera - கீரம்.

முப்பத்து மூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகரமாகத் திரியும் என்றல் பொருந்தாது; கெடும் என்றலே பொருந்தும், அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும். இவைகளிலே h எனும் மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.

  வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது ஆகார ஈற்றுச் சொற்களை ஐகார ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல்: ஆஈறு ஐயும்.

அகல்யா - அகலிகை
அம்பா - அம்பை
அம்பாலிகா - அம்பாலிகை
அம்பிகா - அம்பிகை
ஆருத்ரா - ஆதிரை
ஊர்மிளா - ஊர்மிளை
குணமாலா - குணமாலை
கோசலா - கோசலை
சபா - சபை
சீதா - சீதை
சுபத்ரா - சுபத்திரை
சுமித்ரா - சுமித்திரை
சூர்ப்பனகா - சூர்ப்பனகை
தாடகா - தாடகை
தேவசேனா - தேவசேனை
ப்ரியா - பிரியை
மாலா - மாலை
மிதிலா - மிதிலை
மேனகா - மேனகை
யசோதா - யசோதை
ரம்பா - அரம்பை
ராதா - இராதை
லங்கா - இலங்கை
விசயா – விசயை

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது, ஈகார ஈற்றுச் சொற்களை இகர ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல் : ஈஈறு இகரமும்.

மாதுரீ - மாதுரி
மாலதீ - மாலதி
த்ரௌபதீ - திரௌபதி
தில்லீ - தில்லி
பாஞ்சாலீ - பாஞ்சாலி
மைதிலீ - மைதிலி

                       (தொடரும்)

1 comment:

  1. மிக்க நன்றி அய்யா! நான் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நூல்களை மொழி பெயர்க்கிறேன். சமயம், மெய்யியல் ஆகியன தொடர்பான நூல்களில் எண்ணற்ற வடமொழிச் சொற்கள் உள்ளன. அவற்றைத் தமிழ்ப் படுத்துவதில் தங்களின் இக் கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இக்கட்டுரையின் இறுதியில் 'தொடரும்' எனச் சொல்லி இருக்கிறீர்கள். அப்பகுதிக்குரிய இணையச் சுட்டியை weblink எனது மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete