'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2020

தமிழ்க்குதிர் - 2051 ஆடவை மின்னிதழ்


ஆசிரியர் பக்கம்


அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!

அனைவரையும் அடுத்த மின்னிதழின் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கொரோனா தீநுண்மி தீதிலும் நல்லதாக மிகப்பெரிய வாழ்வியல் மாற்றத்தையும் உண்டாக்கி விட்டிருக்கிறது.

ஆம்... முன்பெல்லாம் நிற்கவும் நேரமின்றி உழைப்புக்காக ஓடிக்கொண்டிருந்த அப்பாக்கள் தத்தம் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடவும், அக்குழந்தைகளின் உள்ளத்தைப் புரிந்துகொள்ளவு மாகிய "உறவு பிணைப்பைத்" தந்திருக்கிறது.

அண்டை வீட்டிலிருப்போர் யாரென்றே தெரியாமல் வாழ்ந்திருந்த காலம்போய் அண்டை வீட்டா ருடனான நட்பும், புரிதலும் மிகுந்திருக்கிறது.  

வருவாய்க்குத் தக்கபடி வாழாமல் ஆடம்பர வாழ்க்கையில் சிக்கி அதனால் பணச் சிக்கலுக்கு ஆளாகியிருந்தவர்கள் இன்று சிக்கனமாகக் குடும்பத்தை நடத்தும் முறையைக் கற்றுக் கொண்டுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,

“இன்னும் இரண்டு நாளில் அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து" என்னும் அச்சத்தையூட்டிப், பெருந்தொகையை நம்மிடம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்ட மருத்துவ வணிகர்களின் மாயத் திரையிலிருந்து விடுபட்டு நான்கு திங்களாக மருத்துவமனைப் பக்கமே போகாமல் இயற்கையோடியைந்த நல்வாழ்வு  வாழ முடிகிறது நம்மால்.

இவைபோல் இன்னும் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும் கொரோனா கொடியதுதான் என்றாலும், அதனால் ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றத்தை நிலையான நல்வாழ்வுக்குப் பயன் படுத்திப் பழகுவோம். மாந்தநேய வாழ்வின் இன்றியமையாமையை இனியாவது உணர்வோம்.!
                                                                         என்றும் தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

Jul 14, 2020

தந்தை


பைந்தமிழ்ச் செம்மல்
அழகர் சண்முகம்

கண்ணில் தெரியாக் கருவூட்ட உள்ளோடி
மண்ணுள் மறைந்தே மடுவாகி - எண்ணில்
துளியும் வெதுப்பின்றித் தூய்மையாய்த் தன்னை
வெளிக்காட்டாத்  தண்மையுடை வேர்                       1

எரியாய்! எரிக்குதவ எண்ணெயுள் மூழ்கும்
திரியாய்த் திருவுடல் தீய்ந்து - கரியாய்!
வளிக்கணையாப் பூத்து வளமையிளம் தேய்த்து
வெளிச்சமே ஈகும் விளக்கு                                          2

வெய்யோன் கதிரால் வெதுப்பினும் வேரறுத்துக்
கொய்வோன் கொடுவாள் குறுக்கினும் - தொய்யா
அழகொடுதோள் தாங்கி அடிஇறுத்தி நன்றின்
நிழல்தந்தே காக்கும் நிறை                                         3

வேரோடி நாற்று விளைந்தாடப் பெய்மழை
நீரோடி வந்து நிறைந்தாடத் - தூரோ
டடிபடர் புல்அறுகும் ஆலும் செழிக்க
மடியேந்தித் தாங்குநெகிழ் மண்!                                4

மீனாய் இமைதுறந்து மேதினிசெ ழிக்கச்செய்
வானாடு காராய் வடிவிழந்து - தேனாய்
மணம்கொடுக்க நாளும் மலர்நெருப்பில் நின்றே
உணர்வடக்கிச் சுற்றும் உலகு                                     5

சேற்றில் முளைத்தாலும் செந்தேன் மணமதனைக்
காற்றில் பரப்பிக் களித்திடும் - ஆற்றலுற்றுப்
பொற்றா மரைக்குளத்துப் பூக்கள் மகிழ்ந்தாட
வற்றா வளமளிக்கும் வான்                                          6

சிற்பமாய்ச் சேய்மனை சீராய்ச் செதுக்கக்கற்
பற்கள் பிடிக்கிடை பட்டுழன்றும் - வற்றாத்
திருவுளம் கொண்டு தினம்வலி தாங்கி
உருவிழந்து தேயும் உளி                                               7

தொன்மை மரபருமை தோய்ந்து மனமிறுக
நன்மையே ஈகுவ நன்னூலின் - பொன்வரியால்
கண்ணைத் திறந்துவைத்துக் காணும் வழியதனை
எண்ணில் பதித்த எழுத்து                                            8

எண்ணில் பதியும் எழுத்தேந்தி ஏடுறைந்தே
உண்மை உரைக்கும் உறுதியெனும் -பண்ணில்
படர்ந்த பெருபொருளாய்ப்   பற்றுமொழி தந்தே
உடல்மறைத்து வாழும் உயிர்!                                     9

கோள்சுமந்த வானில் கொலுவிருக்கும் தெய்வத்தை
தோள்சுமந்து காட்டும் தொடக்கமாய்த்-தாள்நடக்க
ஆற்றுப் படையீட்டி ஆழ்ந்த நெறியூட்டும்
மாற்றிலாப் பண்பின் மறை                                      10

காக்கைவிடுதூது - பகுதி - 3


பைந்தமிழ்ச் செம்மல் 
வள்ளிமுத்து

வண்டு
கண்ட இடமெல்லாம் கள்வடிக்கும் பூவினங்கள்!
வண்டு தடுமாறி வாய்வைத்துப் போதைமிகின்          46

தூதாகச் சொல்லியதைத் தோதாகச் சொல்லுமோ.!
ஏதோ உளறிவிட்டால் என்னிலை..என் னாகுமோ..!      47

கள்ளுண்பான் பேச்செல்லாம் காலையிலே போச்சென்பார்
உள்ளுணர்வு ஓதியது வண்டுவேண்டா வென்றெனக்கு!                                                                        48

அன்னம்
அன்னத்தைத் தூதாக்க ஆசையதும் இருந்தது..பால்
வண்ணத்தைப் போல்முகத்தாள் வாள்விழியைக் கண்டஃது                                                                 49

வில்லொன்றில் அம்பிரண்டை வேட்டையாட வைத்தளென்று
சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டால் என்னிலைமை                                                                      50

ஆகாதாம் ஆகாதாம் அன்னம் அவளிடம்செல்
தூதுக்குத் தோதாகா என்பது..வே திண்ணம்                51


கிளி.!
பச்சைக் கிளியதனைப் பாவைக்குத் தூதனுப்ப
இச்சையொன்று கூட. இருந்ததென்னுள் ஆனாலும்..!  52

பூவை நிகர்த்தவளின் புன்முறுவல் செய்யிதழைக்
கோவைப் பழமென்றே கொத்திவிட்டால் ஐயையோ 53

கிள்ளைசொல்லும் பிள்ளைமொழி கேட்பாளோ.? இல்லையில்லை
தொல்லைதான் தொல்லைதான் தூதுக்குக் கிள்ளைதான்..!  54

மயில்.
தோகை மயிலொன்றைத் தூதாக்க எண்ணினேன்
மோக ஒயிலாளின் மொத்தழகைக் கண்டுவிட்டால்   55

ஒத்த கருத்துடையார் உள்ளங்கள் நட்பாகும்
ஒத்த அழகுடையோர் எப்போதும் ஒன்றாகார்..!           56
போறாமை கொண்டு பொதுவாகக் கூறாமல்
வேறாகக் கூறிவிட்டால் வேண்டாம் மயிலிதற்குத்..!   57

தென்றல்
தென்பொதிகை வந்திறங்கும் தென்றலையே தேவதைக்கு
முன்பதிவாய்த் தூதாக்க முன்பே நினைத்திருந்தேன்   58

தண்பொருநை நீர்குளித்துத் தாதவிழ் பூத்துடைத்துக்
கண்மகிழ் சோலைவயல் காவில் விளையாடித்          59

தென்றலது தேவதையாள் வீடுசென்றாள் மெல்லிடையாள்
கண்மயங்கித் தூங்கிடுவள் காதலை..யா கேட்பள்..!  60

மேகம்
நீலக் கடல்குளித்து நீள்வானில் பந்தலிட்(டு)
ஓலம் எதுவுமின்றி ஓடுகின்ற மேகத்தை                      61

ஏகுமென்று தூதாக்க ஏதோ நினைத்திருந்தேன்
போகும் வழியில் புயலாய்ப் பொழிந்துவிட்டால்?        62

மின்னல் கொடிபரப்பி வானில் இடியெழுப்பும்
கன்னல் மழைமேகம் கைவிட்டேன் வேறென்ன..!        63

நெஞ்சம்
கட்டாத பூங்குழலின் காட்டுக்குள்..! தேயாத
ஒற்றைநிலா ஓடவிடும் வெண்முகத்தாள்.! ஓங்குமெழிற்                                                                       64

சிட்டாகக் கண்சிமிட்டிச்.! சிந்தையெல்லாம் போர்மூட்டி
மொட்டிரண்டால் மோகத்தீ மூட்டுவாள்.! பெண்ணவளைக்                                                                   65

கண்டால் குலைநடுங்கும் காலிரண்டும் தள்ளாடும்
உண்ட உணவுகூட உள்ளே கடமுடங்கும்..!                   66

நெஞ்சத்தைத் தூதனுப்ப நிச்சய..மாய் ஆகா(து)
அஞ்சித்தான் போகும் அவளிடம் பேசாது..!                  67

குயில்
குக்கூஉ! குக்கூஉ! குக்கூஉ! குக்குக்குக்
பக்கமெல்லாம் நின்று பலவாறு கூவும்                        68

குயிலொன்றைத் தூதனுப்பக் கொஞ்சம் நினைத்தேன்
வெயிலொழுகும் ஈதோ இளவேனிற் காலம்..நான்      69

பேசும் மொழிமறந்து பேடைதேடிப் போய்விட்டால்
வீசும் எழிற்கனவு வீணாகிப் போகாதா..!                    70

காக்கைதான் காக்க வேண்டும் காதல்
முப்பொழுதும் கற்பனையில் முன்நிற்கும் காதலிக்குத்
தப்பின்றித் தூதுசெல்லும் ஆற்றல் உனக்குண்டு         71

காக்கையே நீயின்றி என்காதல் வெல்லாது
காக்கவேண்டித் தூதுசென்று நானுரைக்கும் சொல்லோது...!                                                                 72
தூது தொடரும்....!

அறைபறையும் அழிபடையும்


(மாறுரையும் நேருரையும்)

பைந்தமிழ்ப்பாமணி 
பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659

திருக்குறள் காமத்துப்பால் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்துப்  பாடலான
அனிச்சப்பூ(க்) கால்களையாள் பெய்தா
ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை                                          (1115)
எனலை, ‘நல்ல பறை படாஅ’ எனும் வைப்புக் கொண்டு, அனிச்ச மலரின் காம்புகளைக் களையாமல்  சூடியதால் அவளிடைக்கு மங்கலப் பறை ஒலிக்காது என்பதாக உரை வரைந்தனர்.   அதன் பாரம் தாங்காது இடை முறியக் கூடுமாத லால் இடை ஒடிதலாற் சாவு நேரும்; அதனாற் சாப்பறை ஒலிக்கும் என விரித்துக் காரணம் கற்பித்தும் மக்கட்குரிய சாக்காடும் பறைபடுதலும் நுசுப்பின் மேலேற்றப்பட்டது எனும் இலக்கணக் குறிப்பும் வைத்துள்ளனர்.
இது குறித்த ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.

மயிரில் அளைந்தாள் என்பது மணக்குடவருரை. சூடினாள் என்பது பரிமேலழகருரை. தலைக் கணிந்தாள் என்கிறார் பாவாணர்.

அளைதல் எனற்கு விரவுதல், கலத்தல் எனப் பொருளாகிறது. காண்க: அளாவிய கூழ் (64), அளாவு அளவு (523).

அணிதல் என்பது புனைதல், அலங்கரித்தல் எனவுமாம். ஈண்டுச் சூடுதல் என்பதே தகுவதாகும். கருதுக: பிறைசூடி, முடிசூட்டுதல். தலையில்  செருகுதல், பொருத்துதல் எனற்குரிய சொல் சூடுதல் என்பதே. காண்க: கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் (1313).

பெய்தாள் எனும் குறளின் சொல்லாட்சி ஊன்றி யுன்னுதற் குரியது. பெய்தல் எனற்குச் சொரிதல்/ சிந்துதல் என்பது பொருளாகும். இது மேலிருந்து கீழ் இரைத்தல்/கொட்டுதல் என்றே பொருள் படுவதாம். காண்க: வானம் பெயல் (559), பெய்யும் மழை (55), பீலிபெய் சாகாடு (475), கலத்துள் நீர் பெய்து (660), நஞ்சு பெயக் கண்டும் (580), பெயலாற்றாக் கண் (1174). இவை மேலிருந்து கீழ்நோக்கி வருவன. அதனால் பெய்தாள் என்பதற்குத் தலையில் சூடிக்கொண்டாள் எனப் பொருள் (வருவித்துக்) காட்டியது இயல்பின்றாம்.

குறளின் சொற்பொருள் காணற்கும் அதன் உட்பொருள் தேடற்குமான நமது முயற்சிக் கிடையில் அனிச்சத்தின் இயற்புக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் ஒன்றுண்டு. தம்மை அணி செய்தற்கு உரித்தான மலர், நல்ல மணமும் மலர்ச்சியும் உடையதொன்றா யிருப்பதையே மகளிர் விரும்புவர்.

அனிச்சமோ மோப்பக் குழையும் மென்னீரது. உடனே வாடி வதங்கிப் பொலிவிழந்து போய்விடக் கூடிய அனிச்சத்தைப் பெண்கள் சூடக் கருதார்  என்பதே நிதரிசனம்; கருதார் என்பதினும் அது சூடத்தக்கதாக இல்லை என்பது  உன்னுக.

குறளின் குறிப்பு தலையிற் சூடிய பூ எனப் பொருள்படாது என்பது மேற்குறித்த இரண்டானும் தெரிதரும். பின் என்னாம் எனின், பறித்த அம் மலரைத் தரையில் சிந்தினாள் என்றதாம்.

கால் எனற்குக் காலம் என்பது நேர்ப்பொருள்.  காலத்தின் இயற்பு நில்லாத ஓட்டம். மாந்தரும்  விலங்குகளும் இடம்பெயர்தற்கு உதவுதலான் உடலுறுப்பாகிய காலும் அப்பெயர் கொண்டு வழங்கப்பட்டது. தேர்க்கால் ஏர்க்கால் என்பனவும் உன்னுக. தரையைத் தொட்டிருப்பதும் உடற்கு அடிப்பகுதியாயமைந்திருப்பதும்கொண்டு அதற்கு அடி என்பதும் ஒரு பெயராயிற்று. மலரின் அடிப்பாகமா யமைந்திருப்பதைக் கருதிக் கால் எனும் குறள் குறிப்பைக் காம்பிற்காக்கிக் காட்டி உரை செய்தனர். இக்குறட்பாவில் கால் என்றது மலரின் காம்பைக் குறியாமல் அது பெய்தாளின் கால் எனும் பொருட்டாம்.

முயங்கிய பைந்தொடி கைகளை ஊக்கப்  பேதை நுதல் பசந்தது (1238) என்பதில் கை விலகல்/ பெயர்தல் என்புழிப் போல, கால் விலக்காது  அம்மலர்மேல் நடந்தாளாயின் அது அவட்கு நல்ல படாஅ என்றது. நல்ல படாஅ - நன்றாகா(து) (128) – நன்றா யமையாது என்பது குறள். நன்றா யமையா தென்றது அவள் கால்களை வருத்தும் எனல்.  மாதர்ப்பழ அடிக்கு அனிச்சமும் அன்னத்தின் தூவியும் நெருஞ்சி (1120) என இவ்வதிகார ஈற்றுப் பாடல் குறித்துள்ளது(ம்) கருதி இதனை யுறுதி கொள்க.

இக்குறட்பாவோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கவாறாக,
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை
எனும் குறுந்தொகை (159) அடிகளும்              

மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற மாட்டாதிடை
எனும் நளவெண்பா அடிகளும் காணத் தகுவன.

குறுந்தொகை மற்றும் நளவெண்பாப் பாடல்களில்  வண்ணத் தனபாரம் தாங்காமையின் இடைக்குத் துன்பம் நேரும்  என்பது  குறிக்கப் பட்டது. ஆனால் இக்குறட்பாவில் குறிக்கப்படுவதாகிய அனிச்சம் தொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே மிகுத்துத் தலையிற் சூட முடியும். மோப்பக் குழையும் அளவு மென்மைத்தான அனிச்சத்தை நார்கொண்டு தொடுக்க முடியுமா என்பது எண்ணற்குரியதாகும் .

ஆணின் வலிமையைக் குறிக்க. திண்தோள்/ திரள்புயம், விரிமார்பு / பரத்த மார்பு எனவும் பெண்ணின் மென்மையைக் குறிக்க  வேய்தோள்/ நூலிடை எனவும் நயம்பட உரைப்பது  இலக்கிய வழக்கு.  இக்குறட்பா தலைவியின் இடை எழில் நுண்மை குறித்தானது. தலைவன் தலைவி ஆகியோர், தாமுற்ற புணர்ச்சி இன்பத்தை  உள்ளுள்ளுவந்து ஒருவர் நலனை மற்றவர் பாராட்டித் திளைத்திருப்பதைக் குறிப்பனவாகவே  இவ்வதிகாரப் பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வாறான காதல் அழகியல் உணர்வாகிய இன்ப


மெய்ப்பாட்டியலில் அமங்கலப் பறை என்பது  இடக்கர் நெடி வீசற் கிடந்தருவதாகிறது. திருக்குறள் சொல் நடையில் இவ்வாறானதொரு  முரணிலை வேறெப்பாடலிலும் அமைந்திலது என்பது கருத இக்குறட்பாவில் பாடபேதம் ஏதும் இருக்கக் கூடுமோ எனும் எண்ண முண்டாகிறது.

முன்னுரையாசிரியர்கள்நல்ல பறை படாஎனும்  வைப்பில் மங்கலப் பறைகள் முழங்கா வாதலால் அது அமங்கலச் சாப்பறையைக் குறித்ததெனக் கொண்டு உரை  செய்தனர்.

உரையாசிரியர்களின் கூற்றாகிய பாரம் தாங்காது இடைமுறியக்கூடும் என்பதற்கியைய, இப் பாடலின் ஈற்றுச்சீர் பொறை எனக் கொள்ளக் கூடுமோ வெனில் அனிச்சம் தலையிலணிதற்கான ஒன்றன்றென்பதால் பாரம் எனும் நிலை யீண்டில்லை யாயிற்று.

இப்பாடல்   
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா
ணுசுப்பிற்கு
நல்ல படாஅ படை            (1115)
எனப் பாடங்கொளின், அது நன்றமையாத ஒரு படை(யாகும்)  எனப் பொருள் படுவதாகிறது.
குழல் போலும் கொல்லும் படை (1228), பெண்மை யுடைக்கும் படை (1258), உள்ளம் உடைக்கும் படை (1324) என்பன போல ஈண்டும் அவளைக்  கொல்லுதலால் அது படையாயிற்று. கை கொல்லும் முள் (879) என்னுமாப் போல இவள் காலைக் கொல்லும் அனிச்சம் என்றவாறு.

அனிச்சம் காலுக்கு நெரிஞ்சி போல் உறுத்துதலின் இடறி வீழ்தலும் அதனாற் இடைமுறியக் கூடுமென்றதாம்.

பெய்தல்/சொரிதல் என்பதற்கு நேரிதாக, அனிச்ச மலரைச் சிந்தியவாறாகப் போகிறவள் கால் விலகாது அதன்மேல் நடந்தால் அவள் இடைக்கு அது நலம் பயவாது;  படைபோல வருத்தும் என்பதே  இக்குறட் பொருளாகும்.