பைந்தமிழ்ச் செம்மல்
அழகர் சண்முகம்
கண்ணில் தெரியாக் கருவூட்ட உள்ளோடி
மண்ணுள் மறைந்தே மடுவாகி - எண்ணில்
துளியும் வெதுப்பின்றித் தூய்மையாய்த் தன்னை
வெளிக்காட்டாத்
தண்மையுடை வேர் 1
எரியாய்! எரிக்குதவ எண்ணெயுள் மூழ்கும்
திரியாய்த் திருவுடல் தீய்ந்து - கரியாய்!
வளிக்கணையாப் பூத்து வளமையிளம் தேய்த்து
வெளிச்சமே ஈகும் விளக்கு 2
வெய்யோன் கதிரால் வெதுப்பினும் வேரறுத்துக்
கொய்வோன் கொடுவாள் குறுக்கினும் - தொய்யா
அழகொடுதோள் தாங்கி அடிஇறுத்தி நன்றின்
நிழல்தந்தே காக்கும் நிறை 3
வேரோடி நாற்று விளைந்தாடப் பெய்மழை
நீரோடி வந்து நிறைந்தாடத் - தூரோ
டடிபடர் புல்அறுகும் ஆலும் செழிக்க
மடியேந்தித் தாங்குநெகிழ் மண்! 4
மீனாய் இமைதுறந்து மேதினிசெ ழிக்கச்செய்
வானாடு காராய் வடிவிழந்து - தேனாய்
மணம்கொடுக்க நாளும் மலர்நெருப்பில் நின்றே
உணர்வடக்கிச் சுற்றும் உலகு 5
சேற்றில் முளைத்தாலும் செந்தேன் மணமதனைக்
காற்றில் பரப்பிக் களித்திடும் - ஆற்றலுற்றுப்
பொற்றா மரைக்குளத்துப் பூக்கள் மகிழ்ந்தாட
வற்றா வளமளிக்கும் வான் 6
சிற்பமாய்ச் சேய்மனை சீராய்ச் செதுக்கக்கற்
பற்கள் பிடிக்கிடை பட்டுழன்றும் - வற்றாத்
திருவுளம் கொண்டு தினம்வலி தாங்கி
உருவிழந்து தேயும் உளி
7
தொன்மை மரபருமை தோய்ந்து மனமிறுக
நன்மையே ஈகுவ நன்னூலின் - பொன்வரியால்
கண்ணைத் திறந்துவைத்துக் காணும் வழியதனை
எண்ணில் பதித்த எழுத்து 8
எண்ணில் பதியும் எழுத்தேந்தி ஏடுறைந்தே
உண்மை உரைக்கும் உறுதியெனும் -பண்ணில்
படர்ந்த பெருபொருளாய்ப்
பற்றுமொழி தந்தே
உடல்மறைத்து வாழும் உயிர்! 9
கோள்சுமந்த வானில் கொலுவிருக்கும் தெய்வத்தை
தோள்சுமந்து காட்டும் தொடக்கமாய்த்-தாள்நடக்க
ஆற்றுப் படையீட்டி ஆழ்ந்த நெறியூட்டும்
மாற்றிலாப் பண்பின் மறை 10
No comments:
Post a Comment