(மாறுரையும் நேருரையும்)
பைந்தமிழ்ப்பாமணி
பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659
திருக்குறள் காமத்துப்பால் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்துப் பாடலான
அனிச்சப்பூ(க்) கால்களையாள் பெய்தா
ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை (1115)
எனலை, ‘நல்ல பறை படாஅ’ எனும் வைப்புக் கொண்டு, அனிச்ச மலரின் காம்புகளைக் களையாமல் சூடியதால் அவளிடைக்கு மங்கலப் பறை ஒலிக்காது என்பதாக உரை வரைந்தனர். அதன் பாரம் தாங்காது இடை முறியக் கூடுமாத லால் இடை ஒடிதலாற் சாவு நேரும்; அதனாற் சாப்பறை ஒலிக்கும் என விரித்துக் காரணம் கற்பித்தும் மக்கட்குரிய சாக்காடும் பறைபடுதலும் நுசுப்பின் மேலேற்றப்பட்டது எனும் இலக்கணக் குறிப்பும் வைத்துள்ளனர்.
இது குறித்த ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.
மயிரில் அளைந்தாள் என்பது மணக்குடவருரை. சூடினாள் என்பது பரிமேலழகருரை. தலைக் கணிந்தாள் என்கிறார் பாவாணர்.
அளைதல் எனற்கு விரவுதல், கலத்தல் எனப் பொருளாகிறது. காண்க: அளாவிய கூழ் (64), அளாவு அளவு (523).
அணிதல் என்பது புனைதல், அலங்கரித்தல் எனவுமாம். ஈண்டுச் சூடுதல் என்பதே தகுவதாகும். கருதுக: பிறைசூடி, முடிசூட்டுதல். தலையில் செருகுதல், பொருத்துதல் எனற்குரிய சொல் சூடுதல் என்பதே. காண்க: கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் (1313).
பெய்தாள் எனும் குறளின் சொல்லாட்சி ஊன்றி யுன்னுதற் குரியது. பெய்தல் எனற்குச் சொரிதல்/ சிந்துதல் என்பது பொருளாகும். இது மேலிருந்து கீழ் இரைத்தல்/கொட்டுதல் என்றே பொருள் படுவதாம். காண்க: வானம் பெயல் (559), பெய்யும் மழை (55), பீலிபெய் சாகாடு (475), கலத்துள் நீர் பெய்து (660), நஞ்சு பெயக் கண்டும் (580), பெயலாற்றாக் கண் (1174). இவை மேலிருந்து கீழ்நோக்கி வருவன. அதனால் பெய்தாள் என்பதற்குத் தலையில் சூடிக்கொண்டாள் எனப் பொருள் (வருவித்துக்) காட்டியது இயல்பின்றாம்.
குறளின் சொற்பொருள் காணற்கும் அதன் உட்பொருள் தேடற்குமான நமது முயற்சிக் கிடையில் அனிச்சத்தின் இயற்புக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் ஒன்றுண்டு. தம்மை அணி செய்தற்கு உரித்தான மலர், நல்ல மணமும் மலர்ச்சியும் உடையதொன்றா யிருப்பதையே மகளிர் விரும்புவர்.
அனிச்சமோ மோப்பக் குழையும் மென்னீரது. உடனே வாடி வதங்கிப் பொலிவிழந்து போய்விடக் கூடிய அனிச்சத்தைப் பெண்கள் சூடக் கருதார் என்பதே நிதரிசனம்; கருதார் என்பதினும் அது சூடத்தக்கதாக இல்லை என்பது உன்னுக.
குறளின் குறிப்பு தலையிற் சூடிய பூ எனப் பொருள்படாது என்பது மேற்குறித்த இரண்டானும் தெரிதரும். பின் என்னாம் எனின், பறித்த அம் மலரைத் தரையில் சிந்தினாள் என்றதாம்.
கால் எனற்குக் காலம் என்பது நேர்ப்பொருள். காலத்தின் இயற்பு நில்லாத ஓட்டம். மாந்தரும் விலங்குகளும் இடம்பெயர்தற்கு உதவுதலான் உடலுறுப்பாகிய காலும் அப்பெயர் கொண்டு வழங்கப்பட்டது. தேர்க்கால் ஏர்க்கால் என்பனவும் உன்னுக. தரையைத் தொட்டிருப்பதும் உடற்கு அடிப்பகுதியாயமைந்திருப்பதும்கொண்டு அதற்கு அடி என்பதும் ஒரு பெயராயிற்று. மலரின் அடிப்பாகமா யமைந்திருப்பதைக் கருதிக் கால் எனும் குறள் குறிப்பைக் காம்பிற்காக்கிக் காட்டி உரை செய்தனர். இக்குறட்பாவில் கால் என்றது மலரின் காம்பைக் குறியாமல் அது பெய்தாளின் கால் எனும் பொருட்டாம்.
முயங்கிய பைந்தொடி கைகளை ஊக்கப் பேதை நுதல் பசந்தது (1238) என்பதில் கை விலகல்/ பெயர்தல் என்புழிப் போல, கால் விலக்காது அம்மலர்மேல் நடந்தாளாயின் அது அவட்கு நல்ல படாஅ என்றது. நல்ல படாஅ - நன்றாகா(து) (128) – நன்றா யமையாது என்பது குறள். நன்றா யமையா தென்றது அவள் கால்களை வருத்தும் எனல். மாதர்ப்பழ அடிக்கு அனிச்சமும் அன்னத்தின் தூவியும் நெருஞ்சி (1120) என இவ்வதிகார ஈற்றுப் பாடல் குறித்துள்ளது(ம்) கருதி இதனை யுறுதி கொள்க.
இக்குறட்பாவோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கவாறாக,
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை…
எனும் குறுந்தொகை (159) அடிகளும்
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற மாட்டாதிடை
எனும் நளவெண்பா அடிகளும் காணத் தகுவன.
குறுந்தொகை மற்றும் நளவெண்பாப் பாடல்களில் வண்ணத் தனபாரம் தாங்காமையின் இடைக்குத் துன்பம் நேரும் என்பது குறிக்கப் பட்டது. ஆனால் இக்குறட்பாவில் குறிக்கப்படுவதாகிய அனிச்சம் தொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே மிகுத்துத் தலையிற் சூட முடியும். மோப்பக் குழையும் அளவு மென்மைத்தான அனிச்சத்தை நார்கொண்டு தொடுக்க முடியுமா என்பது எண்ணற்குரியதாகும் .
ஆணின் வலிமையைக் குறிக்க. திண்தோள்/ திரள்புயம், விரிமார்பு / பரத்த மார்பு எனவும் பெண்ணின் மென்மையைக் குறிக்க வேய்தோள்/ நூலிடை எனவும் நயம்பட உரைப்பது இலக்கிய வழக்கு. இக்குறட்பா தலைவியின் இடை எழில் நுண்மை குறித்தானது. தலைவன் தலைவி ஆகியோர், தாமுற்ற புணர்ச்சி இன்பத்தை உள்ளுள்ளுவந்து ஒருவர் நலனை மற்றவர் பாராட்டித் திளைத்திருப்பதைக் குறிப்பனவாகவே இவ்வதிகாரப் பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வாறான காதல் அழகியல் உணர்வாகிய இன்ப
மெய்ப்பாட்டியலில் அமங்கலப் பறை என்பது இடக்கர் நெடி வீசற் கிடந்தருவதாகிறது. திருக்குறள் சொல் நடையில் இவ்வாறானதொரு முரணிலை வேறெப்பாடலிலும் அமைந்திலது என்பது கருத இக்குறட்பாவில் பாடபேதம் ஏதும் இருக்கக் கூடுமோ எனும் எண்ண முண்டாகிறது.
முன்னுரையாசிரியர்கள் ‘நல்ல பறை படா’ எனும் வைப்பில் மங்கலப் பறைகள் முழங்கா வாதலால் அது அமங்கலச் சாப்பறையைக் குறித்ததெனக் கொண்டு உரை செய்தனர்.
உரையாசிரியர்களின் கூற்றாகிய பாரம் தாங்காது இடைமுறியக்கூடும் என்பதற்கியைய, இப் பாடலின் ஈற்றுச்சீர் பொறை எனக் கொள்ளக் கூடுமோ வெனில் அனிச்சம் தலையிலணிதற்கான ஒன்றன்றென்பதால் பாரம் எனும் நிலை யீண்டில்லை யாயிற்று.
இப்பாடல்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா
ணுசுப்பிற்கு
நல்ல படாஅ படை (1115)
எனப் பாடங்கொளின், அது நன்றமையாத ஒரு படை(யாகும்) எனப் பொருள் படுவதாகிறது.
குழல் போலும் கொல்லும் படை (1228), பெண்மை யுடைக்கும் படை (1258), உள்ளம் உடைக்கும் படை (1324) என்பன போல ஈண்டும் அவளைக் கொல்லுதலால் அது படையாயிற்று. கை கொல்லும் முள் (879) என்னுமாப் போல இவள் காலைக் கொல்லும் அனிச்சம் என்றவாறு.
அனிச்சம் காலுக்கு நெரிஞ்சி போல் உறுத்துதலின் இடறி வீழ்தலும் அதனாற் இடைமுறியக் கூடுமென்றதாம்.
பெய்தல்/சொரிதல் என்பதற்கு நேரிதாக, அனிச்ச மலரைச் சிந்தியவாறாகப் போகிறவள் கால் விலகாது அதன்மேல் நடந்தால் அவள் இடைக்கு அது நலம் பயவாது; படைபோல வருத்தும் என்பதே இக்குறட் பொருளாகும்.
No comments:
Post a Comment