'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

வேண்டாவென வேண்டுவது


கவிஞர் மெய்யன் நடராஜ்

முகநூலே தஞ்சமெனக் கிடக்க வேண்டா
    முடிதன்னைக் காடாக வளர்க்க வேண்டா
நகங்கூட வெட்டாம லிருக்க வேண்டா
    நாகரிக மோகத்தில் மூழ்க வேண்டா
சுகமாகப் பகல்பொழுது தூங்க வேண்டா
    சோம்பேறித் தனமாக இருக்க வேண்டா
தகராறு செய்துன்னைத் தாழ்த்த வேண்டா
    தனித்திருந்து குற்றங்கள் புரிய வேண்டா            1

சீதனத்து வரவெண்ணிச் சிலிர்க்க வேண்டா
    சினங்கொண்டு சாதிக்கும் செய்கை வேண்டா
நாதனெனுங் கருவத்தில் நடக்க வேண்டா
    நடுவழியில் விடுகின்ற நண்பர் வேண்டா
வேதனத்தை நாடுதலில் விரக்தி வேண்டா
    வெட்டியாகக் காதலிக்கும் வேட்கை வேண்டா
காதகத்திற் கொத்தாசை காட்ட வேண்டா
   கைக்கொடுத்தோர் கையுடையக்காணவேண்டா
2
பாக்குவெட்டிக் குள்சிக்கும் பாக்கைப் போலே
    பகைமுடிக்கக் கழுத்தாகும் பாவம் வேண்டா
நாக்குனதே என்பதனால் நாளும் பேசி
    நன்மூக்கை நீயுடைக்கும் நோக்கம் வேண்டா
வாக்கென்று கொடுத்தபின்னே வாகாய் அஃதை
    வாழ்நாளில் காப்பாற்ற மறக்க வேண்டா
ஏக்கங்கள் பலநூறாய் இருந்தால் கூட
    எழில்முகத்துச் சிரிப்பின்றி இருக்க வேண்டா     3

No comments:

Post a Comment