'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


பைந்தமிழ்ச்செம்மல்
அழகர் சண்முகம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் புகழ் வாய்ந்த ஊராகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாகத் திகழ்ந்த இவ்வூர் இற்றைநாளில் திருப்புத்தூர் என வழங்கப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தவம் செய்வதற்கு ஏற்ற சிறந்த பேறு பெற்ற ஊராக அமைந்து, எண்ணற்ற முனிவர்களும் சாதுக்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து தவம் செய்தமையால் அவர்களைச் சுற்றிக் கரையான் புற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்விடம் முழுவதும் பல புற்றுகள் காணப் பட்டுள்ளன. ஆகையால் திருப்புத்தூர் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.

அத்தகு பெருமை வாய்ந்த திருப்புத்தூர் வட்டத்தில் ப.கருங்குளம் என்னும் ஊரில் 1966ஆம் ஆண்டு அழகர்சாமி – கருப்பாயி அம்மாள் அவர்களுக்குத் தவச் செல்வனாய்ப் பிறந்தவர் அழகர் சண்முகம் அவர்கள். இவருடைய பெயர் சண்முகநாதன். தந்தையார் பெயருடன் இணைத்து ‘அழகர் சண்முகம்’ என வழங்கப்படுகிறார். இவருடைய துணைவியார் திருமதி மல்லிகா அவர்கள். இவர்களுக்கு மூன்று மக்கள்.

பத்தாம் வகுப்புவரை படித்த அவர் எந்திரவியல் சார்ந்த தொழில் நுட்பங்களில் (welding, fitting) சிறந்து விளங்குகிறார். அது மட்டுமன்றி அவர் சிறந்த தையற்கலைஞரும் ஆவார். தற்போது குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பள்ளியில் படிக்கும்போதே தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதே நண்பர்களுடன் சேர்ந்து ஊர்த் திருவிழாவில் ஊர்த் தெய்வமான பரநாச்சி அம்மன்மீது எழுதிய கவிதை சிறுநூலாக வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற கவிதையே முதல் கவிதையாகும். அதைப்படித்த நண்பர்களின் ஊக்குவிப்பால் மரபைக் கற்க வேண்டும் என்ற ஆவல் பிறக்க, ஆசான் திரு.பூ.நா.மந்தையன் அவர்களின் நெறிகாட்டலோடு வெண்பா எழுதவும் சில விருத்தங்கள் எழுதவும் தெரிந்து கொண்டார். அப்போது அருட்பா என்ற நூலைத் திரு.மந்தையன் அவர்களே வெளியிட்டார்.

முகநூலில் மரபுமாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களின் நட்பால் மரபின் பல வகைகளையும் கற்றார். பைந்தமிழ்ச் சோலையும் பாவலரும் சோலைக் கவிஞர்களும் அவருடைய கவிப் பயணத்திற்கு ஊக்கமும் உயிரும் கொடுத்தவர்கள் என எண்ணும்போது உள்ளம் இறும்பூது எய்துகிறது. திரு.பூ.நா.மந்தையன் அவர்களும் திரு. பாவலர் மா.வரதராசனார் அவர்களுமே அவருடைய ஆசான்கள் ஆவர்.

அவர் வெளியிட்ட நூல்கள்:

·        பரநாச்சி அம்மன் அருட்பா

·        பரநாச்சி அம்மன் திருக்குரவைப் பாடல்கள்

·        பரநாச்சி அம்மன் அந்தாதி

·        விடியலின் கோலங்கள்

பைந்தமிழ்ச் சோலையின் முதல் பாவலர் பட்டத் தேர்விலேயே (2016) பைந்தமிழ்ச்செம்மல் பட்டம் பெற்ற பெருமைக்கு உரியவர் அவர். பைந்தமிழ்ச் சோலையின் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டு நற்றமிழாசான் என்னும் விருதும் பெற்றவர். பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவையின் குவைத் கிளையான மாத்தமிழ் மரபு பா பட்டறையின் முதன்மை ஆசிரியராக விளங்குகிறார். அதன்மூலம் பல செம்மையான கவிஞர்களை உருவாக்கி வருகிறார். தற்போது பைந்தமிழ்ச் சோலையில் ‘யாப்பறிவோம்’ என்னும் தொடரைச் சிறப்பாகத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவர் செந்தமிழில் ஆழ்ந்த புலமையும் பரந்த சிந்தனையும் உடையவர் என்பது அவரது பாடல்களிலிருந்தே புலப்படும். காட்டாக, அவரது சில பாடல்களைக் காண்போம்.

முத்தே மரகதமே மூப்பறியாச் சீரிளமே
சொத்தே சுடரொளியே சோர்வறுத்த கார்முகிலே
வித்தே விடிகதிரே வீழாத வெற்றிமலர்க்
கொத்தே தமிழுனையே கொண்டாடிப் போற்றுவமே!

பூத்த பெருந்தவத்தைப் பூட்டாத பெட்டகத்தைக்
காத்த திருக்கரத்தைக் கண்கொடுத்த சித்திரத்தை
யாத்த கருதிறத்தால் யாப்பிசையை மீட்டியன்பு
கோத்த மணிகுலுங்கக் கொண்டாடிப் போற்றுவமே!

இல்லா வறியநிலை ஈகையினால் ஓடிமண்ணில்
எல்லா மரபுகளும் ஏட்டினிலே ஏற்றமுறக்
கல்லா மடவழக்குக் காணாமல் போயுயிரைக்
கொல்லா நிலைபெருகக் கொண்டாடிப் போற்றுவமே!

தேடாச் சிறுமையினைத் தேடாமல் மேதினியில்
கூடாக் குடியதனைக் கூடாமல் கோபுரமாய்
வாடா வளத்துடனே வாழவைக்கும் பேருழைப்பே
கோடான கோடியெனக் கொண்டாடிப் போற்றுவமே!

பஞ்சம் பறந்தோடிப் பால்பொங்கி ஏர்நெகிழ
வஞ்சம் வழியேகி வாழ்வோங்கிப் பார்மகிழ
மஞ்சள் குருத்தோடு மாதெங்கு பூங்கருப்பும்
கொஞ்சும் திருநாளைக் கொண்டாடிப் போற்றுவமே!

இத்தகு சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த நயமிகு பாடல்களை இயற்றும் அவர் பண்பிலே சிறந்தவர்; பழகுதற்கினியவர்;

அன்புடன் அறிவையும் அனைவரும் பெறுவதே இன்பமாய்க் கொண்டவர்; தன்னலம் சிறிதுமற்ற தகைமையாளர்; தண்டமிழ்ச்சான்றோர்; காட்சிக்கு எளியர்; கடுஞ்சொல்லன் அல்லர்; மாட்சிமை படைத்தவர்; பேச்சில் அதிகமின்றிச் செயல்வீரராய் ஒளிர்பவர்; அமைதியே வடிவாய் மிளிர்பவர். அடக்கத்தின் உறைவிடமாக விளங்குபவர்; அதே நேரம் ஆற்றலின் பேரூற்றாய் விளங்குபவர்; தெளிவார்ந்த தமிழ்த் தேசியப் பார்வையுடையவர்.

அவரைச்

சொல்லாலும் கொண்ட துணிவாலும் செந்தமிழ
வல்லாரைப் போற்றும் மனத்தாலும் - நல்லாராம்
எல்லா வளங்களும் ஏற்றே அழகரவர்
பல்லாண்டு வாழ்க பணைத்து.
எனப் பாவலர் மா.வரதராசனார் அவர்கள் வாழ்த்துவார். 

பாவலரோடிணைந்து பைந்தமிழ்ச் சோலையும் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது. 

No comments:

Post a Comment