'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 14


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

ஆட்சியும் நம்பகத் தன்மையும்

நான் டென்மார்க் நாட்டில் வாழ்ந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியமைப்பும் நம்பகத்தன்மையும் டென்மார்க் போன்றே உயிர்ப்புடன் வாழ்கின்றது என்பதே உண்மை. க்களுக்குத் தேவை எதுவாயினும் அதனை அவர்களின் பெரும்பான்மை யினரின் ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வருதல் சிறப்பான ஜனநாயகத் தன்மைவாய்ந்ததாக அமைந்துள்ளது. இதனைப் பொதுவாகப் புரிந்து கொள்வதற்காக சில எடுத்துக் காட்டுகளைச் சுட்டிக் காட்டுவது சிறப்பாகும். 

சட்டம் என்பது அரசனுக்கும் ஆண்டிக்கும் பாகுபாடு காட்டுவதாக இருப்பதில்லை. நாட்டின் வாழ்வியலை ஒழுங்குபடுத்துவதற்கான தேவையே சட்டமாகக் கருதப்படுவதால், அங்குள்ள ஓட்டைகளின் வழிக் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாதவாறு அவ்வப்போது சட்டங்களில் விதிமுறைகள் புகுத்தப்படுவதும் உண்டு. இவ்வகையில் தவறு நேருமிடத்தில் சட்டத்தின் கையில் சிக்குப் படாவிடினும் அதற்கான தார்மீகப் பொறுப்பை, ஒருவர் எப்பெரிய பொறுப்பிலிருப்பினும் தானே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் பண்பும் இங்குண்டு என்பதையும் சுட்டிக் காட்டலாம்.

ஆட்சியில் அமர்பவர்கள் எதனையும் செய்யலாம் என்ற எண்ணத்தையும் செயற்பாட்டினையும் *தமிழர் வழக்கு* (1989 இல்) புரட்டிப் போட்டது. இதன் காரணமாக ஓர் ஆட்சி கலைக்கப்பட்டதும், அக்கட்சியின் நீதி அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டதும் டென்மார்க் அரசியலில் கறுப்புப் புள்ளியாகவே இருந்து வருகின்றது.

ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்து ஆயிரக் கணக்காகத் தமிழ் மக்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். இலங்கை அரசும் இதனை ஊக்குவித்தது என்பதே உண்மை. ஏனெனில் 99 வீதமானவர்கள் விமானம் மூலமாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தார்கள். இலங்கையரசு நினைத்திருந்தால் அனைத்து வழிகளையும் அடைத்திருக்க முடியும்.

1986ஆம் ஆண்டு 3000 தமிழர்கள் இந்நாட்டிற்கு ஏதிலியாக வந்தனர். இக்காலப் பகுதியில் பல நாடுகளிலிருந்தும் ஏதிலிகள் வரத் தொடங்கினர். ஏதிலிகளின் அதிகரிப்பினால் குடியேற்றச் சட்டம் பற்றி விவாதம் எழுந்தது. இக்காலப் பகுதியில் தமிழர்கள் உண்மையில் ஏதிலிகள்தானா என்னும் ஐயப்பாடு எழுந்தது. ஏனெனில் ஈழத்தமிழர் பிரச்சனைகளை உலகு சரியாக அறிந்திருக்க வில்லை. இதனால் தமிழர்களுக்கான குடியுரிமை யைத் தடுத்ததோடு குடும்ப இணைவுக்கு விண்ணப் பித்தோர் விண்ணப்பங்களும் செயலிழக்கும் நிலையினை எட்டியது.

1987 அன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எட்டாமல் இந்த விவகாரத்தை விவாதித்தது. இதனால், தமிழர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதா அல்லது இங்கு வாழ அனுமதிப்பதா என்பது  குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் குடும்ப இணைப்பிற்கான வழக்கு ஒன்றும் பதிவாகியிருந்தது. ஏதிலியாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள் குடும்ப மறு ஒருங்கிணைப்புக்கு உரிமை பெற்றிருந்ததனால் நீதி அமைச்சர் தனது அதிகாரிகளுக்கு வழக்கை நிறுத்துவதை நோக்க மாகக் கொண்ட நிர்வாக மற்றும் சட்டவிரோதமான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு ரகசியமாக உத்தரவிட்டார்.

இக்காலப் பகுதியில் டெனிஸ் ஏதிலிகள் சங்கம், மனித உரிமைகள் அமைப்பு போன்றவை தகுதி வாய்ந்த ஒரு சட்டத்தரணி மூலம் வழக்கினைச் சந்தித்தது. இதற்கு ஏற்பத் தமிழ்த்தரப்பு உண்மை நிலையினையும் தகவல்களையும் ஆதாரங்களுடன் காட்டியதோடு அமைச்சில் நடந்த நடைமுறை களையும் வெளிக்கொணர்ந்தது. இதனால் ஆட்சி கலைக்கப்பட்டு நீதி அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டார். எமது ஆசிய நாடுகளில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பேயில்லை. தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான அனைத்தை யும் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கிறது. அதனால்தான் உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் என்னும் பட்டியலில் டென்மார்க் முதலிட்த்தைப் பெற்றுள்ளது என்பதனைக் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment