'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

இணைய வழி இலக்கியக் கூடல்


பைந்தமிழ்ச்சோலை தலைமை இலக்கியப் பேரவையின் இலக்கியக் கூடல் 05/07/2020 அன்று இணையவழிக் கூடலாக Zoom செயலி வழியாக நடைபெற்றது. பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுவில் நேரலையாக வழங்கப்பட்டது.

பாவலர் விவேக் பாரதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்க, விழா இனிதே தொடங்கியது. தொடர்ந்து பாவலர் மா வரதராசனார் அவர்கள் அறிமுக உரையாற்றினார், தொடர்ந்து வானவில் க.இரவி அவர்கள் மணிப்பெயர் காதலி என்னும் தலைப்பில் இனிக்க இனிக்கக் கவிதை கலந்த சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, பாவலர் இலந்தை சு.இராமசாமி  அவர்களின் தலைமையில் எதுவரை போகும் இது என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. புலவர் இராமலிங்கம், பாவலர் மா.வரதராசனார், சுந்தரராசன், வள்ளிமுத்து, சியாமளா ராஜசேகர், விவேக்பாரதி, விஜய் ஆகியோர் இக்கவியரங்கில் கலந்துகொண்டு கவிமழை பொழிந்தனர்.

நிகழ்ச்சியைப் பாவலர் விவேக்பாரதி அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கினார். நிகழ்ச்சியைக் கண்ணுறும் அன்பர்களுக்கு ஓர் அரிய போட்டியும் நடத்தப்பட்டது. கவியரங்கத்தில் பாடப்படும் ஒவ்வொரு கவிஞரின் கவிதையிலிருந்தும் சிறப்பான ஓரடியைத் தலைவர் எடுத்துக் கொடுக்க, அந்த அடியைப் பாடுபொருளாக வைத்து நேரலைப் பதிவின் பின்னூட்டத்திலேயே ஒரு கவிதையை எழுத வேண்டும். அதேபோல் ஏழு கவிதைக்குப் பின்னும் ஒரு போட்டி. ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுத்துச் சோலை விழாவில் 500 உருபா மதிப்புள்ள (இலக்கண, இலக்கிய) நூல்கள் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்துப் பாவலர் மா.வரதராசன் அவர்கள்  பைந்தமிழ்ச்சோலை, கவியோடை குழுக்களின் சார்பாகக் கவியரங்கத்தைத் தலைமையேற்று நடத்தித் தந்த பாவலர் இலந்தை சு.இராமசாமி அவர்களுக்கு  நன்றி தெரிவித்தார்.

நிறைவாகப் பாவலர் விவேக்பாரதி அவர்கள் இணையத்துக்கும், பார்த்திருந்த அனைவருக்கும் ஆன்றோருக்கும், Zoom  செயலி வழிசெய்த கவியோடை குழுவுக்கும், தமிழ் பேசவைத்த நாவுக்கும், தலைமைக்கும், உரைசெய்த தகைமைக்கும் கவி தந்த கவிஞருக்கும் பாட்டின் அடிகேட்டுக் கவி படைப்போருக்கும், ஆட்டுவிக்கும் சக்திக்கும் நன்றி தெரிவித்தார். விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment