'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

நடுப்பக்க நயம்



பாவலர் மா.வரதராசன்

அந்தக் கற்களை இழுத்துச் சென்ற ஆறு எது தெரியுமா?
இந்த ஆறு மலையினின்று தோன்றியதன்று. ஏற்கனவே கரைபுரண்டு சுழித்தோடிக் கொண்டிருந்த தமிழினம் என்ற பேராற்றின் ஓட்டத்தில் ஆங்காங்கே பிரிவினை மேடுகளால் பிரிந்தோடிய பல கிளைகளில் தனித்துப் பிரிந்த திராவிடம் என்ற கிளையாறுதான் அது.
அது காலப்போக்கில் தன் பொல்லாத காட்டுப் பயணப் போக்கில் மூலத்தைச் சிதைத்துத் தன்னுள் அடக்கித் "தானே பேராறு" என்று காட்சிப் படுத்திய ஆறு. அந்த ஆற்றின் போக்கைச் செலுத்திய ஈர்ப்பு விசைதான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற கன்னடர்.
பொதுவாகவே தமிழ்மொழிக்கு ஒரு அவல நிலையுண்டு. தமிழனாய் இருப்பவன் படைப்பாளியாய் இருப்பான். அதன் பேரைச் சொல்லிப் பிழைப்பவன் பிறமொழியாளனாய் இருப்பான். ஆனால் பெரும்பாலும் அவனே "தமிழ் என் மூச்சு, பேச்சு " என்றெல்லாம் வெற்று முழக்கம் முழங்குவான். தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு அதன்வழியே தன் நிலையை உயர்த்திக் கொள்ளவும், அரசு பணிகளில் அமரவும், தன் பிள்ளைகளை அயல்நாட்டில் அமர்த்தவுமே தமிழ் முழக்கத்தைப் பயன்படுத்துவான்.
நான் பொய் சொல்லவில்லை. இன்றைக்குக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் .… நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் "தமிழறிஞர்" என்ற சிறப்பு நிலையுடன் வலம்வரும் பலரும் தமிழல்லாத பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே!
ஓங்கி உயர்ந்து முழுவீச்சுடன் தமிழுக்கான எழுச்சி ஒன்று உண்டாகிவிட்டால் மறைமுகமாக அதை அழிக்க முற்படுவார்கள். அல்லது அந்த எழுச்சியின் பயனை அடையும் பதவிகளிலோ, அவ்வெழுச்சிக்குப் பதில்கூறும் பதவிகளிலோ தமிழல்லாத பிறமொழியாளர்களே இருப்பர்.
இவர்களுடைய முதன்மையான நோக்கமே தங்கள் தாய்மொழி வளர்ச்சி மற்றும் தன்னின உயர்வு மட்டுமே. அதனால்தான் இன்றைக்கும் நாம் தமிழை உயர்த்தப் போராடிக் கொண்டிருக்கி றோம். இன்னும் போராடிக் கொண்டேயிருப்போம்.
இவ்வாறான நிலையில்தான்..
இல்லாத திராவிடம் என்ற சொல்லைச் சொல்லிச்சொல்லியே திமிறியெழுந்த தமிழர் எழுச்சியை அடக்கிய, மடைமாற்றம் செய்த மாபெரு மனிதராக உருவெடுத்தார் ஈ.வெ.ரா.
ஓரினம் இருக்கிறதென்று கொள்வது அவ்வினத்தார் வாழ்விடமாகிய நாடு, அவ்வினத்தார் பேசும் / எழுதும் மொழி, மற்றும் பண்பாடுகள் முதற்பொருளாகின்றன.
வேப்பம்பூ பூத்தால் அது வேப்பமரம்...
மாங்காய் காய்த்தால் அது மாமரம்...
மாமரத்தைப் பலாமரம் என்று சொல்வதில்லை... தென்னையை வாழைமரம் என்று சொல்வதில்லை.
அதே நேரத்தில் இல்லாத ஒன்றைச் சொல்லி "இதுதான் திராவிட மரம்" என்று சொல்வது எத்துணை அறிவீனம்?
மலையாள மொழியைப் பேசும் இனத்தார் மலையாளிகள். அவர்கள் வாழும் நாடு மலையாளம் (கேரளம்).
தெலுங்கு மொழி பேசும் இனத்தார் தெலுங்கர். அவர்கள் வாழும் நாடு தெலுங்கானா (ஆந்திரம்).
கன்னட மொழி பேசும் இனத்தார் கன்னடர். அவர்கள் வாழும் நாடு கன்னட நாடு (கர்நாடகம்).
தமிழ் மொழியைப் பேசும் இனத்தார் தமிழர். அவர்கள் வாழும் நாடு தமிழ்நாடு.
இப்போது சொல்லுங்கள்...
திராவிடம் என்பதென்ன? அவர்களின் மொழியெது? அவர்கள் வாழும் நாடு எது?
திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழ் என்பது இவர்களின் வாதம். தமிழம் என்ற சொல்லே திராவிடம் எனத் திரிந்தது; தமிழ் என்பது திராவிடத்தின் திரிபே என்று திரித்துக் கூறுவார் 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர்.
தமிழ் திராவிடம் என்றானதற்கு அவர் காட்டும் திரிபு நிலையைப் பார்ப்போம்.
தமிழம் - த்ரமிளம்
த்ரமிளம் - த்ரமிடம்
த்ரமிடம் - த்ரவிடம்
த்ரவிடம்- திராவிடம்
(ஒப்பியன்மொழிநூல். பக்.15)
அறிவுக்கு ஒவ்வுகிறதா இந்தத் திரிபு? அட... வழக்கிற்காவது பொருந்துகிறதா?
பாவாணர் மொழியாய்வாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அவருடைய தமிழ்ப் பணிகள் போற்றற்குரியன. போற்றுவோம். அதற்காக அவருடைய திராவிடக் கருத்தியல் கொள்கையைத் தமிழுணர்வுடன் பொருத்திப் பார்ப்பது எவ்விதத்தில் பொருந்தும்.? ஒருவேளை பாவாணர் தன் கொள்கையை அரசியல் சாராதவாறு வைத்திருப்பின் ஒரோவழி ஏற்கலாம். ஆனால் திராவிடக் கொள்கையில் ஊறிய அவர் தமிழால் பெற்ற மேனிலையைத் திராவிடக் கொள்கைப் பரவலுக்கு பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.
மரூஉதல் எப்படியமையும்?
"ஒருசொல்லின் ஒலிப்புமுறை மக்களின் பேச்சு வழக்கில் உருப்பெற்று ஒலிக்குங்கால் இயல்பான ஒலித்திரிபுகளுக் கேற்ப மாற்றமடைந்து வேறு கொள்வதே மரூஉ எனப்படும்."
சான்றாக...
வேண்டும் - வேண்ணும் - வேணும்
ஓவியம் - ஓவயம் - ஓவம்
இயலும் - எயலும் - ஏலும்
ஒரு சொற்றொடரைப் பாருங்கள்.
யார் எக்கூத்து ஆடினாலும் -
யாரு எக்கூத்து ஆடினாலும் -
யாருஎக் கூத்தாடினாலும்-
ஆரியக் கூத்தாடினாலும். ..
இவ்வாறாகத்தான் மருவுதல் அமையும்.
சரி... இப்போது மொழிஞாயிற்றின் வழியிலேயே, திராவிடன் என்ற சொல் மரூஉ இயல்பின்படி இயல்பாக எவ்வாறு திரியும் என்று பார்ப்போமா?
திராவிடன் - த்ராவிடன்
த்ராவிடன் - த்ராவ்டன்
த்ராவ்டன் - த்ராடன்
த்ராடன் - த்ரடன்
த்ரடன் - திருடன்
அடப்பாவமே... திராவிடன் என்றால் இயல்பு திரிபின்படி திருடன் என்றல்லவா வருகிறது!
அப்படியானால்...
...தொடரும்...

No comments:

Post a Comment