பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
நக்கீரர்: கடம்ப மாலையை மார்பில் அணிகின்ற காரணத்தால் கடம்பன் எனப் பெயர் பெற்ற
முருகன், தலையில் சூடிக் கொள்ளும் கண்ணி (மாலை) யாது தெரியுமோ? அஃது எங்கிருந்து வருகிறது
தெரியுமோ?
புலவர்: நக்கீரரே! கேட்க ஆவலாக உள்ளேன். கூறுங்கள்.
நக்கீரர்: அதோ பாருங்கள். அந்த மிக உயரமான மலையில் பெரிய மூங்கில்கள் வளர்ந்துள்ளன.
அம்மலையின் வளத்தை அறிந்தவருக்கே அந்தக் கண்ணியின் அருமை புரியும்.
புலவர்: ஓ... அப்படியா! அம்மலையின் சிறப்பு யாது?
நக்கீரர்: அம்மலையில் வாழும் தேவ மகளிர் எப்படிப்பட்டவர் தெரியுமோ?
புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
நக்கீரர்: அம்மகளிர் செம்மையான சிவந்த சிறு பாதங்களையும், உறுதியான திரண்ட கால்களையும்,
நுட்பமாக வளைந்துள்ள இடையையும், மூங்கிலையொத்த தோள்களையும் உடையவர்கள். 'கிண் கிண்'
என்று எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் கிண்கிணியை அவர்கள் கணுக்காலில் அணிந்திருக்கின்றனர்.
செயற்கையான சிவப்புநிறக் குழம்பில்
தோய்க்கப் படவில்லையாயினும் 'இந்திர-கோபம்' எனப்படும் ஒருவகை சிவப்பு நிறப் பூச்சியின்
நிறத்தை ஒத்த செந்நிறப்பூக்கள் போன்ற வடிவங்கள் பொறிக்கப் பெற்ற ஆடைகளை அணிந்திருக்கின்றனர்.
பல்வேறு வகை மணிகளை ஏழு வடங்களாகக் (சரங்களாகக்) கோக்கப்பட்ட மேகலையை இடையில் அணிந்திருக்கின்றனர்.
இயல்பிலேயே அழகுடைய அவர்கள் உயர்தரப்
பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்திருக்கின்றனர். நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போதும்
ஒளி பொருந்திய குற்றமற்ற மேனியழகுடன் தோற்றம் அளிக்கின்றனர்.
‘நல்ல நெய்ப்புடைய கூந்தல்’ என்று
தோழியர் புகழ்ந்துரைக்கும் கூந்தலை உடையவர்கள். சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப்
பூக்களைக் கூந்தலின் நடுவே வைத்துப் பசுமையான குவளை மலர்களின் இதழ்களைக் கிள்ளி அந்தக்
கூந்தலில் இட்டிருக்கின்றனர்.
மேலும் 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும்
தலைக்கோலங்களை வைத்திருக்கின்றனர். அழகிய நெற்றியில் திலகமிட்டிருக்கின்றனர். அதனால்
நறுமணம் பொருந்திய அந்நெற்றியில் வாயைத் திறந்திருக்கும் சுறா மீனின் வடிவுடைய தலைக்கோலத்தை
வைத்திருக்கின்றனர்.
முற்ற முடித்த குற்றமற்ற கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகியிருக்கின்றனர். கரிய புற இதழையும் உள்ளே துளையையும்
உடைய மருதின் ஒள்ளிய பூங்கொத்துகளை அதன் மீது இட்டிருக்கின்றனர். கிளையிலிருந்து தோன்றி
நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில்
வளைய வைத்திருக்கின்றனர்.
இரு காதுகளின் பின்புறத்தில் அசோக
மரத்தின் ஒளியுடைய தளிர்களை இட்டுச் செருகித் தொங்க விட்டிருக்கின்றனர். அத்தளிர்கள்
நுட்பமான பூணினை அணிந்த மார்பின் மீது அசைந்து கொண்டிருக்கும்.
வயிரமுடைய சந்தனக் கட்டையைத் தேய்த்துப்
பெற்ற நறுமணமிக்க சந்தனக் குழம்பினை, மருத மரத்தின் மஞ்சள் நிறப் பூவினை அப்பியது போன்று,
கோங்கினது அரும்பினை யொத்த இளமுலையில் அப்பி, அச்சந்தனக் குழம்பின் ஈரம் புலர்வதற்கு
முன்பே விரிந்த வேங்கை மலரின் நுண்ணிய மகரந்தத் தாதினையும் அப்பி, அதன்மேல் விளாமரத்தின்
சிறிய தளிர்களைக் கிள்ளித் தெறித்திருக்கின்றனர். இத்தகு கோல முடையவர்கள் அவர்கள்.
புலவர்: அடடா! அந்த மலை பலவகையான மரங்களையும் அவற்றின் மலர்களையும் மற்றவற்றையும்
தாங்கி மிகுந்த வளமுடையதாக விளங்குகிறதே. அவ்வளவு அணிகளையும் மலர்களையும் சூடி அம்மகளிர்
அழகுக்கு அழகாய்க் காட்சி அளிப்பாரே! அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள்?
நக்கீரர்: ‘கோழிக்கொடி நீண்ட காலம் வாழ்வதாக' என்று வாழ்த்தி, மலைகள்தோறும் எதிர்
ஒலி உண்டாகும்படி அவர்கள் ஒருங்கே கூடிப் பாடி ஆடுகின்றனர்.
புலவர்: கோழிக்கொடி என்பதென்ன?
நக்கீரர்: கோழியின் உருவம் வரையப்பட்ட வெற்றிக்கொடிக்குக் கோழிக்கொடி என்று
பெயர்.
புலவர்: அவர்கள் ஏன் கோழிக்கொடியை வாழ்த்திப் பாடி ஆடுகிறார்கள்?
நக்கீரர்: அது போரில் வெற்றி கொள்ளும்
திருமுருகப் பெருமானின் கொடியாகும்.
புலவர்: நன்று நன்று. அம்மலையின்
சிறப்புகளை இன்னும் சொல்லுங்கள் ஐயனே!
நக்கீரர்: அம்மலை மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடையது. மரம் ஏறுவதில்
வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு அறியாத வகையில் அமைந்திருப்பது. வண்டுகளும் மொய்க்க இயலாத
அந்த அதிக உயரத்தில் செங்காந்தள் மலர்கள் மலர்ந்திருக்கும்.
புலவர்: அடடா. கண்கொள்ளாக் காட்சி. நன்று நன்று. முருகப் பெருமான் தலையில்
சூடிக் கொள்ளும் கண்ணியைப் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே.
நக்கீரர்: அதைப் பற்றித்தான் கூறுகிறேன் புலவரே! தீயைப் போன்ற நிறமுடைய
அந்தச் செங்காந்தள் மலர்களால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய பெரிய மாலையைத் தலையில் சூடிக்கொள்பவன்
திருமுருகப் பெருமான்.
புலவர்: நன்றி ஐயனே! அருமை அருமை! முருகனின்
கையில் இருக்கும் வேலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
நக்கீரர்: பாறைகளை உடையதும், முற்றும் பனியாக உறைந்திருப்பதும் ஆகிய கடலின் உள்ளே
புகுந்து, அக்கடலின் உள்ளே மாமரமாய் ஒளிந்து நின்ற அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மனைக்
கொன்றது அந்த நீண்ட வேல். அஃது இலையைப் போன்ற ஒளி பொருந்திய தலைப் பாகத்தை உடையது.
புலவர்: நன்றி ஐயனே!
நக்கீரர்:
தேவ மகளிர் பூச்சூடி ஆடியதைக் கண்டோம். போர்க்களத்தில் பேய்மகளிர் ஆடுவது
பற்றித் தெரியுமோ?
(தொடரும்)
No comments:
Post a Comment