'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

குதிர் 2-கதிர் 11-மடங்கல்

 


ஆசிரியர் பக்கம்

அன்புடை நண்பரீர், வணக்கம்!

பைந்தமிழ்ச்சோலை முகநூற்குழு ஐந்தாண்டுகளை முடித்துவிட்டு ஆறாம் ஆண்டில் தன் செயற்பாடுகளைச் செய்யத் தலைப்பட்டுள்ளது.

இந்த இனிய நிகழ்வையொட்டி இணையம் வழியில் நடைபெற்ற சோலைவிழா மிகமிகச் சிறப்பாக அமைந்தது என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்காது என்றெண்ணுகிறேன். குறித்த நேரத்தில் தொடங்கவில்லையெனினும் குறித்த நேரத்திற்கு முன்னரே நிகழ்ச்சியை முடித்தோம். அதிலும் திட்டமிட்ட நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடைபெற்றன என்பதும், பங்கேற்ற அனைவரும் சோலையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

நுணுகி செயலி வழியே இவ்விழாவை நடத்தப் பேருதவி செய்த பைந்தமிழ்ச்சுடர் நடராசன் பால சுப்பிரமணியன் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்தும், தொழில்நுட்பத் தடைகளை விலக்கியும் உதவிய பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி அவர்களுக்கும் என் உள்ளார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறேன். அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்ற அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஒருங்கிணைந்த இந்த விழா (எல்லா விழாக்களுமே)  சிறப்பாக நடைபெற்றது முதலாண்டு சோலை மாணாக்கரின் ஆர்வத்தாலும், குருபக்தியாலும், அளவற்ற தமிழ்க் காதலாலுமே என்றால் அதில் மிகையில்லை. என்னுள் எப்போதும் கலந்திருக்கும் முதலாண்டு மாணாக்கரைப் போல் அடுத்தடுத்த ஆண்டுகளில் இணைந்தவர்கள் இல்லை யென்பதும் வருத்தமான செய்தியே… (இரண்டாமாண்டு மாணாக்கரும் ஓரளவு என்னைக் கவர்ந்தவர்கள்.)

இனிவரும் காலங்களில் அனைவரும் இணைந்து ஒருமித்த செயற்பாட்டுடன் சோலையில் பயணிப்போம். அதற்குத் தக உங்களைத் தகவமைத்துக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் விழாவில் பயணித்தோர்க்கும், பார்வையிட்டோர்க்கும் மகிழ்வுகலந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். நன்றி!  நன்றி!!  நன்றி!!

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இடர்தீர் பதிகம்

 கவிஞர் செந்தில் குமார்

 

ஞால முதல்வ நினதொரு பாகத்து நங்கையினை

ஆல ரவெயிற் றருந்துயர் போலவிங்(கு) அல்லலுறும்

பால கனொருவன் பாயுந் துயர்தீரப் பாடுகின்றேன்

மூல மெனும்நீயே முன்னின் றெனக்குள் முழங்குவையே                                 1

 

செல்லும் வழியெலாந் தீதுற நின்றேன் செயலறியேன்

புல்லெ னவேபுறந் தள்ளி நகைக்கும் புறத்தினரை

வெல்ல வரத்தொடு வாழ்விக்க உன்னை வணங்குகின்றேன்

வல்லிநீ வந்தென்றன் வல்வினை நீக்கி வரமருளே                                          2

 

கூடற்ற புள்ளாய்க் குடியி டமின்றிக் குமைந்திருந்தேன்

மாடி மனையொடு் வாழ்வ ருளிய மலைமகளே

நாடி வருமென்றன் நஞ்சுடை உள்ளம் நடுங்குதம்மா

பீடற்றுப் போகா தருள்வாய் அடிதொழும் பித்தனுக்கே                                      3

 

உன்றன் விரைகழல் வீழ்ந்து வணங்கி உயர்வையெண்ணி

மன்னு புகழுடை மாமகள் நின்னை மனந்தொழுத

பின்னும் மனத்துயர் ஏனோ வியனில் பெரியவளே

உன்னு முளத்தின் உணர்வுகள் ஓர்வாய் உமையவளே                                     4

 

நாற்றச் செழுந்தாழை சென்னியில் சூடிய செஞ்சடையாள்

போற்றித் துதித்தேற் றமடையத் தானே புலம்புகிறேன்

ஆற்ற வியலா அருந்துயர் வந்தெனை ஆழ்த்துதம்மா

மாற்றிப் புறந்தள்ளி மீட்கத் தடையோ மணிமதியே                                        5


ஆண்டகை உள்நோவப் பெண்டோ புறத்தில் அருமைமகள்

ஈண்டு டலம்நோவ இன்னுங் கலங்குதே யில்லறந்தான்

நீண்ட வெருவலை நீக்கி நிறைநெஞ்சு நின்றவளே

யாண்டும் இரங்காத காரணம் சொல்லி யருளுமையே                                    6

 

வன்னி மரத்தடி யான்வது வைகொண்ட வண்டமிழா

ளுன்னி யுருகி உளமார வேண்டி உருகுவனே

என்னை! பிறகேனு மெண்ணா திருப்போர்க்கே ஏற்றமிலை

கன்னியை யெண்ணிக் கலக்க முறுவார்க் கருளருளே                                         7

 

கீழ்த்திசை நோக்கின் குடதிசை நோக்கின் கிளர்ந்தெரியும்

பாழ்படு மாமே வடதிசை தெற்குமுன் பார்வைபடச்

சீழ்படு பூமி சிதையா திருக்கவே சீர்மிகுந்த

காழ்தரு பார்வை நெடுங்கூரை மேவக் கடந்தனையே                                    8

 

அங்கம் நிறைந்தாளு மங்காளி யுன்ற னடிதொழுதேன்

பங்க மெதும்நேராக் காக்கக் கடிது பணிகுவனே

எங்கும் நிறைந்தாளே ஏழ்மை அகற்ற எழுந்திடுக

சங்கம் முழக்கிப் பறைகொட்டி நின்புகழ் சாற்றுவனே                                       9

 

பெருவெளி யேவுடல் கோள்சுற்றும் பாதைப் பெருவயிறாம்

பரப்பு லவுமி ருவொளி யுமிரண்டு பாவைகளாம்

பொருதும் பொருப்பிரண் டைப்போ லுமிந்த பெருந்தனத்தாள்

மருகு நிலையழித் தால்நாம் மகிழ்வுடன் வாழ்த்துவமே                                     10

 

நூற்பயன்

மனக்கவல் போமுழக்கு மால்போ மொழுகி

தினந்துதிக்கத் தீத்துயர்போம் திண்மை -மனத்தொடு

மேல்மலைய னூராளை இப்பத்தால் பாடநேரும்

கோள்சூழ் இடருக் கிடர்

அம்மானை

கவிஞர் செந்தில் குமார்

 

வைக்காவூர் வாழ்வீரன் மால்மருகன் வாக்கிங்குப்

பொய்க்கா துடையோர்க்கும் பொய்க்காதே அம்மானை

பொய்க்கா துடையோர்க்கும் பொய்க்காதே ஆமாயின்

உய்க்காதி ருப்போரும் உண்டேயேன் அம்மானை

        உள்ளம் அவனிடத்(து) ஒன்றாமை அம்மானை

 

பேரண்டம் தானாகிப் பேருருவம் என்றாகி

ஓரிறைவன் கந்தனென்றே ஓர்ந்தேன்யான் அம்மானை

ஓரிறைவன் கந்தனென்றே ஓர்ந்ததுவும் உண்மையெனப்

பாரில் பலகடவுள் பாடலுமேன் அம்மானை

        பாழ்மனத்தில் இல்லாத பக்குவமே அம்மானை

 

(வைக்காவூர்-பழனியின் பழம் பெயர்)

முடியரசென முதன்மை யடைவமே

 கவிஞர் செந்தில் குமார்

தரவு கொச்சகக் கலிப்பா

 

மலையென வளங்குவித்த மறத்தமிழர் நிலைமாறிச்

சிலையென நிற்பதுவோ சிறப்பிழந்து திரிவதுவோ

முலைப்பாலின் உரமனைத்தும் முறைகெட்டுப் போனதுவோ

விலையில்லாப் பொருளினுக்கே விலைபோகத் துணிவதுவோ

மக்களெல்லாம்

படிய ரிசியைப் பணிந்தேற் கின்ற

அடிமை நிலைய ழிந்து

முடிய ரசென முதன்மை யடைவமே

மருத்துவ வெண்பா – ஈசெல்

 வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவற்றின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப் பற்றியும், மருந்து களையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நான் சிறுவனாக எங்கள் ஊர் சோழவந்தானில் வளர்ந்த போது, பக்கத்தில் அமைந்த குடிசைகளில் வாழ்ந்த வசதி குறைவான பெண்கள் அல்லது குழந்தைகள் மழைக்காலத்தில் ஈர மணலில் ஏற்பட்ட துளைகளில் இருந்து வெளிவரும் ஈசல்களைத், துளைகளுக்கருகில் வாய்வைத்துக் குரலெடுத்துக் கூவி, ஈசல்களைப் பிடித்துத் தண்ணீரில் போடுவார்கள்.

இறகுகள் உதிர்ந்த ஈசல்களை அப்படியே வாயில் போட்டும் சாப்பிடுவார்கள் அல்லது சட்டியில் போட்டு வறுத்தும் சாப்பிடுவார்கள். சைவ உணவு சாப்பிடும் எங்களுக்கு இது வியப்பாகவும், அருவருப்பாகவும் இருக்கும்.

ஈசெல் (Esal or winged white ants)

நேரிசை வெண்பா

நாறுங் கிராணியொடு நாடிவரும் உட்காய்ச்சல்

கூறுமது மேகங் குடிபுகின்கேள் – மீறுமதன்

மாசெல்லாந் தானொழிக்கும் மாதரசே! போகமுறும்

ஈசெலதை உண்டவர்க்கிங் கே.


குணம்: ஈசெலை உண்பதினால் கிராணி (irritable bowel syndrome), தேக வெப்பம், மதுமேகம், வெகுமூத்திரம், பவுத்திரம் முதலிய ரோகங்கள் போகும். போக சக்தி அதிகப்படும். தாது பலம் உண்டாகும்.

என் பாட்டு:

ஈசல் பிடித்துண்ணும் ஈனப் பிறவியெனப்

பூசலாய்ச் சொல்லாதே; போகசக்தி – ஆசை

அதிகம்; வயிறுளைச்சல் ஆகாது தீர்க்கும்;

அதுபொரித்(து) உண்பவர்க்கே ஆம்.

                                       - கவிஞர் வ.க.கன்னியப்பன்

அற்றது அற்றாக

 (மாறுரையும் நேருரையும்)

                 பைந்தமிழ்ப் பாமணி பொன். இனியன்

kuralsindhanai@gmail.com            

     8015704659

 

உடையார்முன்  னில்லார்போ  லேக்கற்றுங் கற்றார்

கடையரே  கல்லா  தவர்                                       (395)   

கற்பாற்கு வேண்டப்படுவதாகிய (ஆர்வமென்னும்) பண்பைக்  குறிக்கும் இப்பாடலுக்கு அமைந்த உரைகள் இதனைப் பொருட்படுத்திய விதம் குறித்தான ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.

இக்குறட்பாவில் உள்ள ஏக்கற்று எனும் சொற்குரிய  பொருளைத் தெளியக் காட்டியவாறான உரையொன்றும் காணக் கிடைத்திலது. உரைகள் பலவற்றையும் நோக்க, மூவகைத்தாயுள்ளதை அறியலாம்.  அவை :-- 

1.       ஏக்கற்று எனக் குறளில் உள்ள மறுதலைக் குறிப்பைக் கருத்தில் கொள்ளாதவாறா ஏக்கத்தோடு கற்றல் எனல்.

2.       அச்சொல்லுக்கான ஓர் கருத்து வரைவைத் தாமே  வைத்துக் காட்டுதல்

3.       அதைப் பொருட்படுத்தாதவாறாகக்  கருத்துரைத்தல்.

ஏக்கு/ஏக்கம் = தன்னிடம் ஒன்றின்மையால் உண்டாகும் எதிர்ப்பார்ப்பு உணர்வு, வேண்டியது எய்தாமையால் உண்டான மனவெறுமை, கருதிய பொருளை அடையாமல் ஆவலித்து நிற்கும் கவலை என்றெல்லாம்  இதற்குப் பொருள் காட்டலாம்.

ஏக்கு+அற்றும் என்பது ஏக்கற்றவாறாக,  ஏக்கற்றிருந்தும், ஏக்கமில்லாமலும் என்றே கொள்ளத் தகுவதாகிறது.

இதற்குக் காட்டப்பட்டுள்ள பதவுரைகள் ஒரு சில:--

குழந்தை: ஏக்கறுதல் - விரும்பி நிற்றல்.

முனிசாமியார்: ஏக்கற்றும் - தாழ்ந்து நிற்றல்.

ராமலிங்கம் பிள்ளை:  ஏக்கு என்பது ஒரு பொருள் இல்லை என்ற ஏக்கம்.

ஏக்கற்று என்பதை ஏக்குற்று எனக் கொண்டார் போல, அறிவு மிகுதியாக உடையவர்முன் அஃதில்லார் அவரைப்போல் பேரறிவு அடைய வேண்டும் என்னும் ஏக்கத்தடன் கற்பதுபோல் கற்றவரே கற்றவர். அவ்வாறு கல்லாதவர் கீழானவர் என்கிறார் இளங்குமரனார்.

பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார் என்பது  மணக்குடவருரை.

ஆசிரியர் முன்ஏக்கற்றுநின்றும் கற்றார் தலையாயினார் என மூலத்தில் உள்ளவாறே உரையில் வைத்தாண்டு கொண்டு, ஏக்கறுதல் - ஆசையால் தாழ்தல் எனும் பதவுரையைத் தனித்துக் காட்டுகிறார் பரிமேலழகர்.

பாவாணரோ, செல்வர்முன் வறியார் போலத் தாமும் ஆசிரியர்முன் ஆசையால் தாழ்ந்து நின்று கல்வி கற்றவரே தலையானவராவார் என உரைத்து, ஏக்கம் எனற்கு இயைபில்லாத ஆசையைக் காட்டியுள்ளார். ஆசிரியரிடம் விரும்பி நின்றும் கற்றவரே உயர்ந்தவராவார் என்கிறார் குழந்தை.

கடையர் என்றதனான் அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது எனப் பரிமேலழகரும், கடையர் என்பதன் மறுதலையான தலையானவர் எனுஞ் சொல் தொக்கு நின்றது எனப் பாவாணரும் குறித்துக் காட்டினர்.

தலையாயர் எனலைப் புறத்திருந்து வருவித்துரைத்தமைக்கான நெறிகாட்டிய அவ்விருவருமே, குறள் குறிப்பாகிய ஏக்கற்றும் என்பதன் நேர்ப்பொருளாகிய ஏக்கமின்மை என்பதை விடுத்து ஆசையால் தாழ்ந்து நிற்றல் எனக் குறித்தற்கான ஏது எது எனச் சுட்டாமலே அமைதி காத்தது ஈண்டுக் கருதற்பாலதாம்.

அருந்தியது அற்று (942), துளக்கற்ற (699), விளக்கற்றம் (1188), நடுக்கற்ற (654), பற்றற்ற (521) என்பவற்றுள் போல ஏக்கற்று என்பதிலும்ஏக்கமின்மை’ என்பதே பொருளாகப் புலப்பட்டு நிற்றலைக் காண்க.

பொருளுடையார் முன்பு, பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமின்றித் தாழ்ந்து கற்றாரிடத்தாவர் கல்லாதார் எனும் மணக்குடவர் உரையில் உபமானத்தில் குறிக்கப்பட்ட பொருளில்லாதாரின் ஏக்கநிலை என்பது சுட்டப்படவில்லை. செல்வந்தர் முன் ஏழை நிற்பது போல, கற்றவர் முன் பணிந்து கற்றவர் உயர்ந்தவர் என்னும் பெரியண்ணன் உரையும் ஏக்கம் என்ற குறள் குறிப்புக்கு எவ்வாற்றானும் இயைபில்லாத வகையில் பணிவை முன்வைக்கிறது.

முன்என்பதைப் பிறரெல்லாம் உழிப் பொருளாக் கொண்டிருக்க, .சி.கந்தையாப்பிள்ளை அதனைக்  காலத்தின் பொருட்டாக்கினார். இப்பொழுது கல்வி யுடையவரா யிருப்பவர் தாம் கல்வியுடையராதற்கு முன் வறுமைப்பட்டவர் எவ்வாறு பல துன்பங்களுக் குள்ளாவார்களோ, அவ்வாறு வருத்தப்பட்டுக் கற்றவரேயாவர் என்பது வலிந்துரைப்பதாகும். உடையார் என்பதை இல்லார் என்பதன் மறுதலை யான செல்வ(முடையா)ர் எனக் கொள்வதே  இயல்பாகும். சான்றாக, உடைமையுள் இன்மை (84); இன்னமையின் இன்னாது உடைமை (558) என்பவற்றைக் கொள்க.

குறட்டொகுதியுள் பிறவற்றைக் குறிக்கையில்  அறிவுடையார் (179), கேள்வியுடையார் (413), ஊக்கமுடையான் (486), ஒழுக்கமுடையார் (415) எனும்படி சற்றேறக்குறைய 40 பாடல்களில் வைத்துக் காட்டியும் அது பொருளை மட்டும்  குறிப்பிடும் நான்கு பாடல்களில் உடைமை என்று மட்டுமே அமைந்துள்ளதும் ஈண்டுக் குறிப்பிடத் தகுவதாம்.

இவை இவ்வாறாக, இப்பாடற்கான நேரிய கருத்துரையை வெளிக்காட்டுவதில் உள்ள முட்டு எது என்பதும் அது அறுக்கும் ஆறு குறித்தும் எண்ணுவம்.

இக்குறட்பாவின் இரண்டாவதடி, கல்லாதவர் மதிக்கப்பெறாது மன்றில் கடையுறுவர் என எளிதிற் பொருள்படுமாறு அமைந்துள்ளது. முதலடியில், இல்லார் (தன்னிடம் பொருளில்லையே என) உடையார்முன் ஏக்குற்று (இரந்து) நிற்பவராகிறார். இவரோடு சேர்த்தெண்ணப்படுபவர் கல்லாதவரே யாவர். ஆனால் குறளில் கற்றார் என உள்ளது மட்டுமன்றி ஏக்கற்றும் என்பதனோடும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

செல்வர்முன் வறியார் போல ஏக்கத்தொடு படித்தவரே மேல்; படியாதவர் கீழ் எனும் .சுப. மாணிக்கனார் உரைக்கருத்து சுருக்கமாகவும் திருத்தமாகவும் அமைந்துள்ளது. இதுவே இயல்புரையாகத் தோற்றுகிறது. ஆயினும்  ஏக்கற்று எனும் குறளின் மறுதலைக் குறிப்புக்கு மாறுபட்டு  இருப்பதும் கருதவேண்டுவதாகிறது.

ஏக்கற்று என்பது ஏக்குற்று எனப் பாடமாவதோ எனும் ஐயுறவுக்கு இடமாகிறது. ஏக்குற்று எனப் பாடங் கொளினும், உடையார் முன்னில்லார் போல் ஏக்குற்றுங் கற்றார் என அமைந்து பொருள் முடிவு காட்டாது தொக்கி நிற்பதாகிறது.

ஏக்கற்றுங் கற்றார் என்பதைப் பொருட்படுத்துங் கால் அதிலுள்ள உம்மை எதன் பொருட்டாம் என்பதை எவரும் கருதிலர் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

ஏக்கற்றங் கற்றார்(*) என்றே மூலத்தில் இருந்திருக்க வேண்டும். எதனாலோ றகரம் றுகரமாய்த் திரிந்ததென்று கருதத் தோன்றுகிறது. இவ்வாறமைகையில் இயற்புக்கும் ஏரணத்துக்கும் இயைந்த குறட்பொருள் பெறப்படுகிறது.

ஏக்கற் றங்கற்றார் என்பது சொற்பகுப்பில் ஏக்கற்று அங்கு அற்றார் எனவாகிறது. பொருள்கோள் வைப்பில், கல்லாதவர், உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்று அங்கு அற்றார் கடையரே என நிற்பதாகிறது. இவ்வைப்பில் இல்லாதாரோடு  கல்லாதவர்  உவமிக்கப் படுதலும் அக் கல்லாதவரே கடையராதலும் கற்றவர் பற்றி இக்குறட்பாவில் ஏதும் சொல்லப்பட வில்லை என்பதும் ஆகிறது.

இப்பாடற்குக் கொண்ட ஏக்கற்று அங்கு அற்றார் எனக் கொண்டவாறான சொற்பகுப்பு கூற்றங் குதித்தலும் (269) என்பதிலும் கூற்று அங்கு உதித்தலும் என உள்ளது  ஒப்பு நோக்கவும்.

கல்லாதவர் அங்கு அற்றது எதை எனில் கல்வியை. அவ்வாறானது எதனாலாம் எனில் கற்பதில் அவர்க்கு  ஏக்கமின்மையினாலாம். ஏக்கம் இல்லாத விடத்துக் கல்வி கிட்டாது போயிற்று. கற்றார்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்புண்டாதலைக் கொண்டு கல்லாதார் கடைமை அருத்தாபத்தி யாகக் காட்டப் பட்டது.

செல்வன் முன் (இரந்து) நிற்கும் வறியவனிடத்திற்  காணப்படும் ஏக்கம் போல கல்லாதானிடத்து இல்லாமையால் (பெறத்தக்க கல்வி) அற்றுப் போய்க் கடையனாகிறான். ஏங்கி இரந்தவன் பொருள் பெற்றான்; கற்பதில் ஏக்கமில்லாதவன் அறிவை இழந்து போனான் என்றவாறு.

வறியவனிடத்திற் காணப்படும் ஏக்கம்போல கல்லாதானிடத்து இல்லாமையால் (பெறத்தக்க கல்வி) அற்றுப் போய்க் கடையனாகிறான்.

ஏங்கி இரந்தவன் பொருள் பெற்றான்; கற்பதில் ஏக்கமில்லாதவன் அறிவை இழந்து போனான் என்றவாறு.

***

அடிக்குறிப்பு: (*) திருக்குறள் ஆய்வறிஞர் .வே.சுப்ரமணியன் அவர்கள் சுவடி வேறுபாடுகள் மற்றும் பாட வேறுபாடுகள் எனத் திருக்குறளில் சற்றேறக்குறைய 516 இருப்பதாகக் கண்டறிந்து பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவைபோல இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுவதோ என்பதை குறளார்வலர்களும் ஆய்வறிஞர்களும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.