முனைவர் சரஸ்வதி இராமநாதன்
தேவகோட்டை மாதரசி! தேமதுரச் சொல்லரசி!
தேவதைபோல் எழில்கொஞ்சும்
தெய்வீக இசையரசி!
பாவனமாய் மணம்பரப்பும்
பைந்தமிழின் பாட்டரசி!
சேவைசெயும் பெண்ணரசி
! திறமைமிக்க உரையரசி!
இலக்கிய வானில் மின்னும் தாரகையாய்த் தமிழர் உள்ளங்களில் நிறைந்திருக்கும் இவர் குரல் ஒலிக்காத இலக்கிய மேடைகளே இல்லை. எழில் கொஞ்சும் முகத்தில் புன்னகை இழையோட, அருள்நிறை விழிகள் மலர அனைவருடனும் பாசத்துடன் உறவாடும் முத்தமிழரசி திருமதி சரஸ்வதி இராமநாதன் அவர்களே இற்றைத் திங்கள் பைந்தமிழ்ச்சோலையின் “தமிழ்க்குதிரை” அலங்கரிக்க வருகிறார்.
இவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சமூகச் சிந்தனையாளர், பல்வேறு இலக்கிய அமைப்புகளோடு இணைந்து இலக்கிய மற்றும் ஆன்மிகத் தொண்டாற்றுபவர். கருமமே கண்ணாக எடுத்த காரியம் முடிக்கும்வரை மெய்வருத்தம் பாராது விடாமுயற்சியுடன் உழைப்பவர்.
திருமதி சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தேவகோட்டையில் 1939ஆம் ஆண்டு திரு. நாராயணன் - கோமதி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர். சிறுவயதிலேயே தமிழன்னை இவரை அரவணைத்துக்கொள்ளச் சகலகலா வல்லியாகத் திகழ்ந்தார். இசை, இந்தி தமிழ் ஆசிரியையாகவும், தமிழ்ப்பேராசிரியையாகவும், பொறுப்பு முதல்வராக 40 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்தார். கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்ற நடுவராகவும், இலக்கிய, ஆன்மிகத் தொடர் விரிவுரைகளும், ஆராய்ச்சி உரைகளும் நிகழ்த்தி வருபவர். 1536 குடமுழுக்கு வருணனைகள் தன் தெய்வீகக் குரலால் சிறப்பாக நிகழ்த்தியவர். 21 நூல்களும், பல நூறு கட்டுரைகளும், 50க்கும் மேற்பட்ட ஆய்வு தொகுதிகளும் வெளியிட்டவர்.
தமிழ் இலக்கியத்திலும் பத்தி இலக்கியத்திலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். கம்பனில் கரைந்து, திருக்குறளில் தோய்ந்து, ஔவையின் அறநெறிகளை உள்வாங்கிப், பாரதியைப் போற்றிக், கண்ணதாசனைச் சுவாசிக்கும் கவிக்குயில்! புகழ் உச்சியில் இருந்தாலும் எள்ளளவும் தலைக்கனம் இன்றிக் குழந்தை மனத்துடன் எல்லோரிடமும் அன்புடன் அளவளாவும் குணவதி!
இவரது துணைவர் திரு. இராமநாதன் அவர்கள் மனைவியின் வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்தவர். இவர் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். திருமணத்திற்குப் பின்னர் படிப்பைத் தொடர்ந்த திருமதி சரஸ்வதி அவர்கள் இளங்கலை, முதுகலைப் பட்டத்துடன் நில்லாது முனைவர் பட்டமும் பெற்றார்.
தெள்ளிய அறிவோடு, ஆழ்ந்த புலமையாலும், அற்புத நினைவாற்றலாலும், மொழி ஆளுமையாலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கினார். தன் இனிய பண்புகளாலும், விருந்தோம்பலாலும் எல்லோர் மனத்திலும் இடம்பிடித்தார். “செட்டிநாட்டுச் செண்பகப்பூ” என்று கவியரசரால் அன்புடன் அழைக்கப்பட்ட திருமதி சரஸ்வதி இராமநாதன் அவர்கள் ஏறிய மேடைகளிலெல்லாம் கண்ணதாசன் புகழ் பாடத் தவறியதில்லை. கண்ணதாசன் கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும், ஏனைய படைப்புகளிலும் மனத்தைப் பறிகொடுத்தவர், பேச்சில் மட்டுமா? மூச்சிலும் சிறுகூடற் பட்டியாளே! இந்தத் தேமதுரச் சொல்லரசியின் தமிழ்விருந்தைச் சுவைக்க இரு செவிகள் போதாது. அரங்கே அதிரும் வண்ணம் இவர் சொற்பொழிவில் முத்தமிழும் கலந்துறவாடும். விழிகளும் பேசும்; உடலும் நாட்டியமாடும்; அரை நூற்றாண்டுக்கும் மேலாய் இயலிசைப் பணியாற்றும் இந்தத் தேவதையின் குரலின் கம்பீரமும், மிடுக்கும் அகவை எண்பதைத் தாண்டியும் இன்னும் சிறிதும் குறையவில்லை.
இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தமகன் திரு. வெங்கட சுப்பிரமணியம். விவசாயத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளைய மகன் திரு. சங்கர நாராயணன். டி.வி.எஸ். நிறுவனத்தின் சுந்தரம் பைனான்ஸில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அன்பான குடும்ப உறவுகளின் உள்ளத்தில் நிறைந்தவர்.
சரஸ்வதி இராமநாதன் அறக்கட்டளை நிறுவிப் பலருக்கும் படிப்பு, மருத்துவம், திருமணம் போன்ற தேவைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். இயற்கைச் சீற்றத்தால் பேரிடர் நேர்ந்த போது இரக்கக் குணத்துடன் உதவிகள் அள்ளி அளித்துள்ளார். பல தலங்களுக்கு அன்னதான நிதியும், அழகம்மை ஆச்சி தொடக்கப் பள்ளிக்கு ஒரு லட்சம், தேசிய பாதுகாப்பு நிதிக்கு 5 லட்சம் மற்றும் ஸ்ரீ மாதா கேன்சர் கேர் அமர்சேவா சங்கம் போன்ற சமூக நல அமைப்புகளுக்கும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான முதலமைச்சர் நிதிக்கு 1 லட்சம் வழங்கினார் கருணை மனத்துடன்!
திருவாரூர் இசைப்பிரியா, சென்னை கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், திருவையாறு ஔவைக் கோட்டத்தின் மதிப்புறு தலைவராகவும் விளங்குகிறார். தமிழகத்தின் 5 முதல்வர்கள், கோவா, புதுவை முதல்வர்களால் பாராட்டப்பட்ட பேச்சாளர் இவர்.
இவர் பெற்ற பட்டங்கள்:
·
காவியக் கலைமாமணி - காஞ்சி மகாசுவாமிகள்
·
செந்தமிழ்த் திலகம் - குன்றக்குடி
அடிகளார்
·
சொல்லரசி - ஜஸ்டிஸ் இஸ்மாயில்
·
அமுதச் சொல்லருவி - சௌந்தரா கைலாசம்
·
செட்டிநாட்டுச் செண்பகப்பூ - கவிஞர் கண்ணதாசன்s
·
கண்ணதாசன் இசைக்குயில் - எம்.எஸ்.
விஸ்வநாதன்
·
இசைவாணி - வாணி விலாஸ் சபை, கும்பகோணம்
·
இயலிசைத் தமிழ்வாணி - இலண்டன்
சிவயோகம் அறக்கட்டளை
·
இயலிசை அரசி - திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்
·
இசைஞான இலக்கிய பேரொளி - திருப்புறம்பியம்
தேன் அபிஷேகக்குழு
·
ஆன்மீக அமுதசுரபி - ஜி கே மூப்பனார்
ஐயா
·
பல்கலைச் சிகரம் - புதுக்கோட்டை இலக்கியப் பேரவை
·
இன்முகத்தென்றல் - புதுக்கோட்டை இலக்கியப் பேரவை
·
முத்தமிழ் அரசி - தேசிய ஒருமைப்பாட்டுக்குழு
திருச்சி
·
உபன்யாச திலகம் - சேலம் தியாகராஜ
ஆராதனை
·
கம்பராமாயண நவரச திலகம் - பாளையங்கோட்டை
கம்பன் விழா
·
சொல்லின் செல்வி - திருவையாறு கம்பன் விழாக்குழு
·
ஞான வித்தகி - யாழ்ப்பாணம் நல்லூர்
ஆதீனம்
·
ஞானவாணி - கரமனை முத்துமாரியம்மன்
தேவஸ்தானம் நூற்றாண்டு விழா
·
முத்தமிழ் வித்தகி - யோகிராம்
சுரத்குமார் இவை தவிர ஏழிசை வல்லி, எழிலுரை அரசி, ஞானத்தமிழ் வாரிதி, சிலம்புச் செம்மல்,
கவிச்சுடர் போன்ற பல பட்டங்கள் பெற்றுள்ளார்.
விருதுகளில் சில:
·
கம்பன் அடிப்பொடி விருது - பாரத
ரத்னா எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் அறக்கட்டளை
·
கம்பன் மாமணி - புதுக்கோட்டை கம்பன்
கழகம்
·
கம்பன் சீர் பரவுவார் - காரைக்குடி
கம்பன் கழகம் 50-வது இலக்கியப் பணியைப் பாராட்டி
தருண்விஜய் எம்.பி வழங்கியது
·
அண்ணா விருது - நவி மும்பை தமிழ்ச்
சங்க அண்ணா நூற்றாண்டு விழா விருது
·
ஔவை விருது - ஔவைக் கோட்டம், கோவா
கொங்கணி தமிழ்க்கவிஞர் சங்கமம்
·
பாரதி விருது - அனைத்திந்திய எழுத்தாளர்
சங்கம்
·
சிறந்த பெண்மணி - மெகா டிவி
·
சிறந்த பெண்மணி - மகளிரணி, கனிமொழி, எம்.பி(பா.உ.)
·
வாழ்நாள் சாதனைப் பெண்மணி - காங்கிரஸ்
மகளிர் தின விருது
·
வாழ்நாள் சாதனைப் பெண்மணி - லயன்ஸ்
மண்டல மாநாடு கோவை
·
FOR THE SAKE OF HONOUR - ரோட்டரி
மேளா, கும்பகோணம்
·
சேக்கிழார் விருது - சேக்கிழார்
ஆராய்ச்சி மையம், சென்னை
·
சுந்தரர் விருது - மெய்கண்டார்
ஆதீனம் விருதாச்சலம்
·
இலக்கிய விரிவுரை விருது - 23வது
குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை
·
சுந்தரர் விருது - 24 ஆவது குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை
·
கண்ணதாசன் விருது - கண்ணதாசன்
- விஸ்வநாதன் அறக்கட்டளை
·
கண்ணதாசன் விருது - சிட்னி தமிழ்
சங்கம்
·
கண்ணதாசன் விருது - சிங்கப்பூர்
தமிழ் எழுத்தாளர் சங்கம்
·
தமிழ்ச்சான்றோர் விருது - ஆர்.எம்.வி.
பிறந்த நாள் அன்னை ராஜலட்சுமி விருது - பத்மஸ்ரீ கமல்ஹாசன்
·
உமாமகேசுவரனார் விருது - கரந்தைத்
தமிழ்ச் சங்கம்
·
சிறந்த பேராசிரியை விருது - அழகப்பா
பல்கலைக்கழகம்
·
சிறந்த பேராசிரியை விருது - துணைவேந்தர்
பொன்னவைக்கோ
·
சாயிமாதாபிருந்தாதேவி விருது
- திலகவதியார் ஆதீனகர்த்தர், புதுக்கோட்டை.
இன்னும் பல…
சமீபத்தில் தமிழக அரசு இவருக்குக் "கம்பர் விருது" வழங்கிச் சிறப்பித்துள்ளது.
பழகுதற்கினிய பள்ளத்தூர் மாதரசி பல்லாண்டு நலத்துடனும், வளத்துடனும்
வாழத் தமிழன்னையை வேண்டுவோம்.
கலைமகளின் பெயர்கொண்ட
கனிவான அன்னையிவள்
அலையில்லா ஆழ்கடல்போல்
அமைதியான அறிவரசி !
மலைக்கவைக்கும்
பண்பரசி ! வானளவு பேரிருந்தும்
தலைக்கனமே இல்லாத
தகைமைமிகு கவினரசி !
கணக்கில்லாப்
பட்டிமன்றம் கவியரங்கம் கண்டவரின்
இணையில்லாத்
தனிச்சிறப்பை எடுத்தியம்ப சொற்களில்லை
அணங்கிவரின்
அரும்பணிகள் அளவிடவே முடியாது
வணக்கத்துக்
குரியவரை மனம்கனிந்து வாழ்த்திடுவோம் !
- பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment