'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

திருமுருகாற்றுப்படை - உரையாடல்

 பகுதி – 4

பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்

நக்கீரர்: தேவ மகளிர் பூச்சூடி ஆடியதைக் கண்டோம். போர்க்களத்தில் பேய் மகளிர் ஆடுவது பற்றித் தெரியுமோ?

புலவர்: பேய் மகளிரா? யார் அவர்கள்?

நக்கீரர்:  அவர்கள் எண்ணெய்ப் பசையின்றி உலர்ந்த பரட்டைத் தலைமுடியுடையவர்கள்; வரிசையற்ற பற்களும் பிளந்த பெரிய வாயும், பிறரை அச்சுறுத்தும் வகையில் சுழலும் பச்சை நிறக் கண்களும் உடையவர்கள்; சொரசொரப் பான வயிறும், காண்பவர்கள் அஞ்சும்படியான நடையும் உடையவர்கள்; பெரிய ஆந்தையைக் குண்டலமாகக் கொண்ட காதணி அணிந்த காதுகளை உடையவர்கள்; மார்பின் மீது வீழ்ந்து வருத்துகின்ற தொங்கும் பாம்பைக் கயிறாகக் கொண்டவர்கள்.

புலவர்: அப்பப்பா. எண்ணிப்பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளதே. அவர்கள் என்ன செய்வார்கள்?

நக்கீரர்: போர்க்களத்தில் வீழ்ந்து மாண்ட அசுரரின் தலையைக் கிள்ளி எடுத்து அதன் கண்ணைத் தோண்டித் தினபார்கள். அப்படி உண்பதனால் கூரிய நகங்களைக் கொண்ட விரல்களில் அரத்தம் பூசிக் கொண்டிருக்கும். அது மட்டுமன்றி நாற்றமுடைய அத்தலையைத் தன் பெரிய கைகளில் ஏந்தியவாறு பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்து செல்வார்கள்.

புலவர்: அவர்கள் அப்படிச் செய்வது ஏன்?

நக்கீரர்: துணங்கைக் கூத்து ஆடுவதற்காக.

புலவர்: துணங்கைக் கூத்தா? அப்படி என்றால் என்ன?

நக்கீரர்: அசுரர்கள் போன்ற தீயவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் அமைவது பேய் மகளின் துணங்கைக் கூத்து. தன் தோளை அசைத்தவாறு அசுரர்களின் நிணத்தைத் தின்ற வாயுடன் துணங்கைக் கூத்து ஆடுவாள் அவள்.

புலவர்: அவர்கள் ஏன் துணங்கைக் கூத்து ஆட வேண்டும்?

நக்கீரர்: முருகப் பெருமான் போர்க்களத்தில் அசுரரை வீழ்த்தி அடைந்த வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டாடுவதற்காக.

புலவர்: நக்கீரரே! என்னை மிகுந்த அச்சமடையச் செய்தீர். போர்க்களக் காட்சியை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது.

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். குதிரைத் தலையோடு கூடிய பெரிய மனித உடல் போன்ற உருவம் எடுத்துக் கடலிற் புகுந்து ஒரு மாமரம் போல் நின்றான் அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மன். அவ்வாறு மாமரமாய் நின்ற சூரபன்மனை, அறுவகை வடிவங்களெடுத்து அச்சுறுத்தி அவனுடைய ஆற்றலை அடக்கி, இரண்டாகப் பிளந்து கொன்ற குற்றமில்லாத வெற்றியைப் பெற்றுப் புகழ்பெற்ற சிவந்த வேலும் திருமேனியும் உடையவன் திருமுருகப் பெருமான்.

புலவர்: அடடா. திருமுருகப் பெருமானின் வெற்றி போற்றத் தக்கது.

நக்கீரர்: ஆம் புலவரே! அத்தகு திருமுருகப் பெருமானின் சிவந்த திருவடிகளை அடைவதற்குரிய செம்மையான உள்ளத்துடன் நன்மைகளையே செய்யும் கொள்கையுடன் மெய்ப்பொருளை உணர்ந்து அவனைக் காணச் செல்ல விரும்பினால் நீர் கருதிய வினையின் பயனை இப்போதே பெறுவாய்.

புலவர்: ஆம் ஐயனே! அம்முருகனைக் காண விரும்பி இவ்விடம் விட்டு நீங்கும் முடிவோடு வந்துள்ளேன். அவன் அருளைப் பெற எங்குச் செல்ல வேண்டும் எனக் கூறுவீர்.

நக்கீரர்: முருகன் உறையும் இடங்கள் ஒன்றா? இரண்டா? சொல்கிறேன் கேளுங்கள்.

மதுரை மாநகரின் நுழைவாயிலில், போரை விரும்பி மிக உயரமான நெடிய கொடிகளின் அருகில் பந்தும் பாவையும் வரிந்து கட்டப்பட்டுள்ளன. அவற்றை அறுத்துப் போரிட முன்வருவோர் யாரும் இல்லாமையால் அவை தொங்கிய வண்ணம் உள்ளன. அம் மாநகரின் கடை வீதிகளில் திருமகளே வீற்றிருப்பது போல செல்வம் கொழிக்கின்றது. மாளிகைகள் அமைந்திருக்கும் வீதிகளும் அங்கு உள்ளன.

அந்நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கும். பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்திருக்கும். கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும். அத்தகு அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப் பெருமான் மனம் விரும்பி அமர்ந்துள்ளார். அங்கே சென்று காணலாம். அதுமட்டுமன்று…     

               (தொடரும்)

No comments:

Post a Comment