பைந்தமிழ்ச்சோலையின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா 13.09.2020 அன்று இணையத்தின் வழியாக இணைந்த இதயங்களால் மிகமிகச் சீரும் சிறப்புமாக நிகழ்ந்து முடிந்தது. பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள் தமிழ்வாழ்த்துப் பாடினார். பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் வரவேற்புரை வழங்கினார். பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு அவர்கள் ஆண்டறிக்கை வழங்கினார். பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி விழாவைத் தொகுத்து வழங்கினார். மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கிச் சோலை உருவானதன் நோக்கத்தை எடுத்துரைத்துச் சிறப்பான உரையாற்றினார். கவிஞர் கல்யாணசுந்தரராசன் காளீசுவரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
எப்போதும் ஆண்டு விழாவில் ஏதேனும் ஒரு புதுமையைப் படைக்கும் பைந்தமிழ்ச் சோலையில் இவ்வாண்டின் புதுமை நிகழ்வான அரங்கேற்றம் என்னும் நிகழ்வில் பைந்தமிழ்ச்செம்மல்கள் வெங்கடேசன் சீனிவாசகோபாலன், நிர்மலா சிவராச சிங்கம் ஆகிய இருவரும் ‘நீரின் மேன்மை மற்றும் சேமிப்பு’ என்னும் தலைப்பில் இரட்டை மணிமாலையை அரங்கேற்றினர். பைந்தமிழ்ப் பாமணி சுந்தரராசன், பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி ஆகிய இருவரும் ‘பராசக்தி விளக்கம்’ என்னும் தலைப்பில் இரட்டை மணி மாலையை அரங்கேற்றினர். பைந்தமிழ்ச்சுடர் நடராசன் பாலசுப்பிரமணியன், கவிஞர் சிதம்பரம் சு.மோகன் ஆகிய இருவரும் ‘முருகப்பெருமான் அருள்’ என்னும் தலைப்பில் கவிதைகளை அரங்கேற்றினர். பைந்தமிழ்ச்செம்மல்கள் சியாமளா ராஜசேகர், வள்ளிமுத்து, தமிழகழ்வன் ஆகிய மூவரும் ‘அறம் பொருள் இன்பம்’ எனும் தலைப்பில் மும்மணி மாலையை அரங்கேற்றினர்.
அடுத்து, யாப்புத் திறனும் உள்ளத் துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்னும் அறிவிப்புடன் ஆசுகவிப்போட்டி தொடங்கியது. இந்த ஆசுகவி அரங்க அமர்வுக்குப் பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
அடுத்துப் பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கல் அரங்குக்குப் பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர.விவேகானந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். கடந்த ஓராண்டாகப் பைந்தமிழ்ச் சோலை நடத்திய யாப்புப் பயிற்சிகளில் பங்கேற்றுப் பாவலர் பட்டத் தேர்வை எழுதி வென்ற இருபது கவிஞர்களுக்குப் பட்டமளிப்பு நடைபெற்றது. அதேபோல் ஆண்டு முழுவதும் நடந்த வெண்பா வேந்தர், அகவலரசர், காரிகை வேந்தர், விருத்த வேந்தர் ஆகிய போட்டிகளில் பங்கேற்று இறுதிப் போட்டியில் வென்ற கவிஞர்களுக்கு விருதளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கவியரங்க அமர்வுக்குப் பைந்தமிழ்ப் பாமணி நடராசன் பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமை ஏற்றார். இக்கவியரங்கத்தில் சுமார் பதினைந்து கவிஞர்கள் பங்குகொண்டு எழுச்சிக் கவிமழை பொழிந்தனர்.
பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம் அவர்கள் நன்றியுரை யாற்றினார். விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment