பகுதி - 5
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
வயல்வளம்
முன்னாடிப் பின்னாடிக் கெண்டை விளையாடும்..!
கால்வாய் அரும்பவிழக் கால்வாய் சுரும்பமர்த்திக்
கால்வாய் பொடிதழுவக் கள்ளருந்திப் பண்பாடும்
பொய்கை வருந்தண்ணீர் மெய்காட்ட மெய்தானா..!?
கைதொட்டா யும்..கடுவன் அஞ்சக் கயல்புரளும்
சங்குவளை யோடக்கைச் சங்குவளை யாடப்பா
சங்குவளை யாடமால் சங்குவளை வண்டூதும்
கொக்கொத்த மொக்கோஒ மொக்கொத்த கொக்கோஒ
திக்கெங்கும் கொக்குமொக்காம் திக்கெங்க மீனாயும்..!
பட்டுக்கால் ஈப்பிடிக்கப் பாழும் வலைபின்னும்
எட்டுக்கால் பூச்சி இழையாடி மேலேறும்
காளை வளைக்கும் கரும்புவில் கண்டஞ்சி
வாழை இடையொளியும் வாத்து பலவுண்டாம்
நன்செய் களையெடுக்கும் நங்கையர்கள் மையெழுதும்
கண்செய் எழிலழகைக் கண்டுகண்(டு) ஐயுற்றுப்
பூவென்று வண்டாடும் மீனென்றே புள்ளாடும்
பூவையர்கண் ஏனென்(று) அறியாப் புரண்டாடும்.!
காய்ந்தநெல் வாழை கமுகுதென்னை நாருரித்து
வேய்ந்தசிறு கூட்டிலூஞ்சல் தூக்கணா வி..ளையாடும்
போதவிழும் பூவிதழில் தாதுவிழ..மாதெழிலாய்
ஏதேதோ தும்பிவந்து தோதாய்ப்பொன் கோலமிடும்..!
ஆமை வரப்புறங்க நண்டதன் மேலுறங்க
ஊமைச்சி ஊர்ந்தேறி உச்சியிற்போய்க் கொம்பாட்டும்..!
கோஒரைப் புல்நுனியில் குந்திநிற்கும் தட்டானைச்
சாஅரைப் பாம்பு சரசரத்துத் தட்டிவிடும்..!
தூங்கா(து) இரவெல்லாம் பல்குரலில் பாமுடித்து
நீங்காத் தவளையது நீரின்மேல் ஓய்வெடுக்கும்..!
ஆயிரங்கால் பந்தலிட்ட ஆலமரக் கண்மாயில்
பாயிரம் பாடிக் குயிலெல்லாம் பாட்டிசைக்கும்..!
பீர்க்கம் கொடிமேல் பெரும்புடலை காய்த்ததுபோல்
பார்த்து வியந்திடவே பாம்பொன்று தூங்கிநிற்கும்..!
செந்நெல் பொதிவெடித்துச் செம்மாந்து பாலடைத்துப்
பொன்னெல்லாய்த் காய்ந்து பொலிந்திருக்கும் காட்சியுண்டாம்..!
ஊற்றுவளச் சேற்றுவயல் ஊர்ப்பசியைத் தீர்த்துநிற்கும்..
பச்சைக் கழனிவயல் பட்டாடை பார்த்தாலே
இச்சைவரும் உள்ளுக்குள் யாவருக்கும் தப்பில்லை..!
நஞ்சை வயல்தாண்ட வஞ்சியவள் ஊர்வரும்
கொஞ்சும் வளைகுலுங்கக் கோலநிலாத் தேர்வரும்..!
கொல்லும் ஆயுதத்தைக் கூற்றுவன் இங்குமட்டும்
வில்லேற்றிப் பெண்கள் விழியாக்கி வைத்திருப்பான்..!
கற்றைக் குழல்சரியக் காமன்தேர்ச் சக்கரம்போல்
ஒற்றைநிலா மண்ணிலத்தில் ஊர்ந்துவரும் விந்தையுண்டு..!
வீடெல்லாம் வானுரச வீட்டுமாடி முற்றத்தில்
ஆடலாம் என்றுமுகில் ஆங்கே திரண்டிருக்கும்
(ஊமச்சி - நத்தை)
தூது தொடரும்...!
No comments:
Post a Comment