கவிஞர் செந்தில் குமார்
ஞால முதல்வ நினதொரு பாகத்து நங்கையினை
ஆல ரவெயிற் றருந்துயர் போலவிங்(கு) அல்லலுறும்
பால கனொருவன் பாயுந் துயர்தீரப் பாடுகின்றேன்
மூல மெனும்நீயே முன்னின் றெனக்குள் முழங்குவையே 1
செல்லும் வழியெலாந் தீதுற நின்றேன் செயலறியேன்
புல்லெ னவேபுறந் தள்ளி நகைக்கும் புறத்தினரை
வெல்ல வரத்தொடு வாழ்விக்க உன்னை வணங்குகின்றேன்
வல்லிநீ வந்தென்றன் வல்வினை நீக்கி வரமருளே 2
கூடற்ற புள்ளாய்க் குடியி டமின்றிக் குமைந்திருந்தேன்
மாடி மனையொடு் வாழ்வ ருளிய மலைமகளே
நாடி வருமென்றன் நஞ்சுடை உள்ளம் நடுங்குதம்மா
பீடற்றுப் போகா தருள்வாய் அடிதொழும் பித்தனுக்கே 3
உன்றன் விரைகழல் வீழ்ந்து வணங்கி உயர்வையெண்ணி
மன்னு புகழுடை மாமகள் நின்னை மனந்தொழுத
பின்னும் மனத்துயர் ஏனோ வியனில் பெரியவளே
உன்னு முளத்தின் உணர்வுகள் ஓர்வாய் உமையவளே 4
நாற்றச் செழுந்தாழை சென்னியில் சூடிய செஞ்சடையாள்
போற்றித் துதித்தேற் றமடையத் தானே புலம்புகிறேன்
ஆற்ற வியலா அருந்துயர் வந்தெனை ஆழ்த்துதம்மா
மாற்றிப் புறந்தள்ளி மீட்கத் தடையோ மணிமதியே 5
ஆண்டகை உள்நோவப் பெண்டோ புறத்தில் அருமைமகள்
ஈண்டு டலம்நோவ இன்னுங் கலங்குதே யில்லறந்தான்
நீண்ட வெருவலை நீக்கி நிறைநெஞ்சு நின்றவளே
யாண்டும் இரங்காத காரணம் சொல்லி யருளுமையே 6
வன்னி மரத்தடி யான்வது வைகொண்ட வண்டமிழா
ளுன்னி யுருகி உளமார வேண்டி உருகுவனே
என்னை! பிறகேனு மெண்ணா திருப்போர்க்கே ஏற்றமிலை
கன்னியை யெண்ணிக் கலக்க முறுவார்க் கருளருளே 7
கீழ்த்திசை நோக்கின் குடதிசை நோக்கின் கிளர்ந்தெரியும்
பாழ்படு மாமே வடதிசை தெற்குமுன் பார்வைபடச்
சீழ்படு பூமி சிதையா திருக்கவே சீர்மிகுந்த
காழ்தரு பார்வை நெடுங்கூரை மேவக் கடந்தனையே 8
அங்கம் நிறைந்தாளு மங்காளி யுன்ற னடிதொழுதேன்
பங்க மெதும்நேராக் காக்கக் கடிது பணிகுவனே
எங்கும் நிறைந்தாளே ஏழ்மை அகற்ற எழுந்திடுக
சங்கம் முழக்கிப் பறைகொட்டி நின்புகழ் சாற்றுவனே 9
பெருவெளி யேவுடல் கோள்சுற்றும் பாதைப் பெருவயிறாம்
பரப்பு லவுமி ருவொளி யுமிரண்டு பாவைகளாம்
பொருதும் பொருப்பிரண் டைப்போ லுமிந்த பெருந்தனத்தாள்
மருகு நிலையழித் தால்நாம் மகிழ்வுடன் வாழ்த்துவமே 10
நூற்பயன்
மனக்கவல் போமுழக்கு மால்போ மொழுகி
தினந்துதிக்கத் தீத்துயர்போம் திண்மை -மனத்தொடு
மேல்மலைய னூராளை இப்பத்தால் பாடநேரும்
கோள்சூழ் இடருக் கிடர்
No comments:
Post a Comment