'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

வெல்வதற்கே வாழ்க்கை

 பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


வாழ்க்கையினை வெல்வதற்கு வழிக ளெல்லாம்

    வாசலினில் உனக்காகக் காத்து நிற்கும்

ஆழ்த்துகின்ற மனக்கவலை உம்மை வீழ்த்த

    அசைகின்ற போதெல்லாம் துணிவு கொள்வாய்

சூழ்ச்சிவலை உனைச்சுற்றி விரித்த வாறே

    துட்டர்கள் காத்திருப்பர் விழித்து நாளும்

தாழ்கின்ற போதெல்லாம் விழித்து விட்டால்

    தற்கொலைகள் குறைத்திடலாம் பாரில் என்றும்              1


என்றென்றும் வெற்றிகளும் உன்னைத் தேடி

    ஏற்றமுற வைக்குமென்று நினைத்தல் குற்றம்

நன்முயற்சி நாளெல்லாம் எடுத்து வந்தால்

    நன்மையெல்லாம் உன்னிடமே கோரும் தஞ்சம்

துன்பங்கள் தொடர்கின்ற நாள்க ளெல்லாம்

    சோர்வின்றி எழுந்திருந்தால் துயர மோடும்

புன்முறுவல் பூத்தவாறு தடைகள் நீக்கப்

    புத்துணர்ச்சி மனமெல்லாம் நிறைந்து நிற்கும்  2


நிறைகளினைப் போற்றாமல் குறைகள் சுட்டும்

    நெஞ்சமுள்ளோர் உலகினிலே எங்கு முண்டாம்

அறவழியில் பயணித்தே இலக்கைத் தொட்டால்

    அச்சமின்றி வாழ்ந்திடலாம் உம்மைக் காத்துச்

சிறப்புற்ற பாதையினில் தொடர்ந்து செல்ல

    சிந்தையினில் மகிழ்ச்சியது பொங்கி நிற்கும்

புறஞ்சொல்லும் மானிடர்கள் பேச்சைக் கேட்டு

    பொன்போன்ற காலமதை வீணாக் காதே            3


ஏற்றங்கள் பொறுக்காமல் குறைகள் கூறி

    ஏளனங்கள் பேசிநிதம் வருத்தி நிற்பர்

தூற்றுவோரின் வார்த்தைகளைக் கேட்கும் உள்ளம்

    துன்பத்தைச் சுமக்குமென்று எண்ணு வாரே

ஆற்றல்கள் அடக்கிடவே நெருங்க முன்னே

    அச்சமின்றிப் பயணித்து வெற்றி கொள்வாய்

போற்றுவோர்கள் போற்றட்டும் என்றே வாழ்ந்து

    பொய்மையின்றிப் போராடி வெற்றி காண்பாய்               4


வெற்றிகாணும் பாதையினில் பயணம் செய்ய

   விரைவினிலே இலட்சியத்தைத் தொட்டு நிற்பாய்

குற்றமற்ற உள்ளமதில் தாழ்வின் எண்ணம்

   குடியிருக்க இடமெதுவும் அளிக்க வேண்டா

தற்புகழ்ச்சி பேசுவோரின் சொல்லைக் கேட்டுத்

   தளர்ந்துநின்(று) ஏக்கமது கொள்ள வேண்டா

நற்செயலைச் செய்திட்டால் குறைகள் சொல்ல

   நாணமுடன் பின்வாங்கிச் செல்ல வேண்டா        5


ஆமென்று தலையாட்டும் நிலையை மாற்றி

    அச்சமின்றித் தீயவற்றைத் தவிர்த்து நிற்பாய்

ஏமாற்றும் உலகினிலே உன்னை வீழ்த்தி

    எளிதாக தோற்கடித்து வெற்றி காண்பர்

ஊமையாக இருந்திட்டால் கோழை என்றே

    உற்றவர்கள் கேலிசெய்தே ஒதுக்கி வைப்பர்

தாமதமாய்ச் செய்கின்ற பணிகள் யாவும்

    தன்னியல்பைக் குறைத்துவிடும் என்றே நம்பு    6


நம்புகின்ற உறவெல்லாம் நம்மை விட்டு

    நழுவுகின்ற காலமதில் வாழ்ந்து காட்டு

வெம்மைதனைக் காட்டுவோரின் உள்ள மெல்லாம்

    விளக்கமதை ஏற்பதற்குப் பின்னே நிற்கும்

செம்மையாகத் திகழ்வதற்கு மனத்தை வாட்டும்

    தேராரின் நினைவுதனை விரட்டி யோட்டு

தெம்புடனே வாழ்வதற்கு வழியைத் தேடச்

    சிந்தையது மகிழ்வாக விருக்கு மன்றோ               7


இருக்கின்ற பொருளதனில் நிறைவைக் கண்டே

    ஏற்றங்கள் அடைவதற்கு முயற்சி செய்வாய்

கருணையின்றி உள்ளமதைக் காய மாக்கக்

    கலக்கமுற்று வாடுவதை நிறுத்திக் கொள்வாய்

கருமேகம் நிலையாக நிற்ப தில்லை

    காலம(து) உணர்த்திடுமே உண்மை தன்னை

உருள்கின்ற பூமியதில் இருளு முண்டே

    உணர்ந்திட்டால் வாழ்வுதனில் தொல்லை யில்லை     8


இல்லாத பொருள்களினில் ஆசைப் பட்டே

    இதயமதைப் புண்ணாக்கி மாள வேண்டா

சொல்லம்பு விடுவோரின் பேச்சைக் கேட்டுத்

    துயரமது மனத்தினிலே கொள்ள வேண்டா

வெல்வதற்குத் தடையில்லை முயற்சி வேண்டும்

    விழுகின்ற போதெல்லாம் எழுதல் வேண்டும்

எல்லையில்லா உலகமதில் நன்றே வாழ

    எண்ணற்ற வழிகளெல்லாம் இருக்கு மன்றோ     9


இருள்சூழும் வேளையினில் தோன்றும் திங்கள்

    இருளதனில் ஒளியேற்றித் துலங்கி நிற்கும்

உருண்டோடும் காலமதில் தாக்கும் துன்பம்

    ஒளிர்கின்ற வழியதனைக் காட்டி நிற்கும்

அருள்கின்ற இறைவனவன் துணையாய் நிற்க

    அச்சமென்ன? வாழ்வதற்குத் தடையாய் நிற்கும்

வருகின்ற இடரெல்லாம் உயர்த்தும் உன்னை

    வாழ்வாங்கு வாழ்ந்திட்டால் வெல்ல லாமே       10

No comments:

Post a Comment