கம்பனைப் போலொரு…
பகுதி – 6
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
இனி... இவர்களின் பின்புலமென்ன? அதற்கான ஏதுக்கள் எவை? கம்பரை இவர்கள் இழிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் காரணங்கள் எவை? என்பனவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இல்லாத திராவிடத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஈ.வெ.ரா. அவர்கள், விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுந்த தமிழுணர்வையும், விடுதலை வேட்கையையும் "திராவிட இனவெழுச்சி" என்ற பெயரில் முன்னெடுத்தார்.
திராவிடமே தமிழ்... தமிழே திராவிடம் என்பதை வலியுறுத்தித் தன்னிதழான விடுதலையில் தமிழ் என்று வருமிடங்களில் திராவிடம் என்றும், திராவிடம் என்று வருமிடங்களில் தமிழ் என்றும் அடைப்புக்குள் போட்டு எழுதித் திராவிடத்தை மக்கள் மனத்தில் வேரூன்றச் செய்தார்.
ஈ.வே.ரா. அவர்களின் சமூகப் பணிகளை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் மொழி, இனம் என்ற கருத்தியலில் அவருடைய பார்வை தமிழை விடவும், திராவிடத்தையே தூக்கிப் பிடித்தது என்பதே உண்மை.
திராவிடத்தின் முக்கிய கொள்கையே சாதியொழிப்பும், அதற்குக் காரணமான இறை மறுப்பும் ஆகும். இரண்டையும் ஒன்றாகக் கையாண்ட பெரியார், மிக எச்சரிக்கையாக இரண்டு செயல்களில் கவனமாயிருந்தார்.
1. இறைமறுப்பு என்பதில் இந்து மதத்தை மட்டுமே நிலைகொண்டார். இசுலாத்தையும், கிறித்துவத்தையும் கையில் எடுக்கவே யில்லை.
2. சாதியொழிப்பு என்பதிலும் மிகத் தாழ்ந்த சாதியினரைச் சற்றும் மேலேற விடாத சாதியொழிப்பை மட்டும் மேற்கொண்டார். அவருடைய சாதியொழிப்பு என்பது உயர் சாதியினராகத் தம்மைச் சொல்லிக் கொண்ட பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் இருந்ததே தவிர, தாழ்ந்த சாதியினரை மேலேற்றும் விதத்தில் அமையவில்லை. (வைக்கம் போராட்டமும் இவருடையதன்று. )
இவ்வாறாக இறைமறுப்புக் கொள்கையிலும், சாதியொழிப்பிலும் தன் இலக்காக இருந்த பார்ப்பனரை எதிர்ப்பதில் மட்டுமே குறியாயிருந்தார். இராமாயணம், மகாபாரதம் என்னும் இதிகாசங்களையும், பார்ப்பனர் கூறிய பல புராணங்களையும் எதிர்த்தார். (★ஆனால் அதே புராணம் கொடுத்த திராவிடம் என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டார்.★)
சிறுகடவுள் வழிபாடுகளை எதிர்க்கும்போது கண்டுகொள்ளாத பார்ப்பனர்கள், இராமனையும், கிருட்டிணனையும் எதிர்க்கும்போது பதறினர். இந்தப் பதற்றமே பெரியாரின் வெற்றிக்கு மூலமானது. இங்குத்தான் தொடங்குகிறது... அவருடைய கம்பராமாயண எதிர்ப்பு.
பெரியார் வகுத்துக்கொண்ட திராவிடம் என்ற கருத்தியலை ஆராயப் புகுவோமாயின் அஃதோர் தனித்த ஆய்வாக விரியும். எனவே, எம் கட்டுரைக்குத் தேவைப்படுமாறாக மிகச் சுருக்கமாகத் திராவிடத்தை ஆய்வோம்.
கி.பி.1856 ஆம் ஆண்டு ஆங்கிலேயரான இராபர்ட் கால்டுவெல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலில்தான் திராவிடம் என்ற சொல்லைப் பற்றி முதன்முதலில் குறிப்பிடுகிறார். அவர்க்கு முன்பு திராவிடம் என்ற கருத்தியல் இல்லை.
கால்டுவெல்லுக்கு முன்பு ஏ.டி. கேம்பல் என்பவர் எழுதிய "தெலுங்குமொழி இலக்கணம்" என்ற நூலின் முன்னுரையில் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கிடையேயுள்ள தொடர்பு களைச் சுட்டிக்காட்டி, அவை "தனிக்குடும்பம் சார்ந்தவை" என்கிறார்.
வடமொழியை ஆராய்ந்த ராஸ்க் என்பவர் அவற்றை "மலபார் சொற்கள்" என்றார். அவர்க்குப் பின்வந்த கிறிஸ்து லாசர், வில்லியம் கேரி, ஹாட்சன் போன்றோர் "தனிக்குடும்பம் சார்ந்தவை" என்றே குறிப்பிட்டனர்.
மேக்ஸ்முல்லர் "நிஷத மொழிகள்" என்றார்.
எனவே, கால்டுவெல் என்பாரே திராவிடம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவராவார். தன் நூலின் முன்னுரையில் கால்டுவெல் குறிப்பிடுவன வற்றைக் கூர்ந்து படித்தால் உங்களுக்குள் சில கேள்விகளும், சில ஐயங்களும், சில புதிர்களும், சில விடைகளும் கிடைக்கலாம்.
திராவிடம் என்ற சொல்லைத் தான் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறும் கால்டுவெல் நூலின் இரண்டு பக்கங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன். மூலப்பக்கத்தை இணைப்புப் படமாக இணைத்துள்ளேன்.
★மனு கூறுகிறார்: பிராமிணர்களுடன் தொடர்பு கொள்வதும் புனிதக் கடனாற்றலும் மறைந்ததால் “பௌந்த்ரகர்கள், ஓடர்கள், திராவிடர்கள், காம்போஜர்கள், யவனர்கள், சர்க்கிகள், பரதர்கள், பகலவர்கள் (பல்லவர்?), சீனர்கள், கிரடர்கள், தரதர்கள மற்றும் கசர்கள்” ஆகிய இந்த க்ஷத்ரியர்கள் படிப்படியாக வ்ருஷாலர்கள் எனும் நிலைக்கிறங்கினார்கள்.
மேற்கண்ட இனங்களில், திராவிட இனம் தென்னிந்திய இனம். எனவே, இது மொத்தத் தென்னிந்திய இனங்களையும் குறிப்பிடும் சொல்லாகத் தோன்றுகிறது. இதில் எந்தத் தென்னிந்திய இனத்தையாவது விடுவது என்றால் அது ஆந்திரர்களும் உள்நாட்டுத் தெலுங்கரும் எனத் தொன்றுகிறது. இவர்கள் ஏற்கெனவே ஐதரேய பிராமணர்கள் என்ற மதிப்பிழந்த, விஸ்வாமித்தரக் குலத்தினராக புந்தரர்கள், சபரர்கள மற்றும் புளிந்தர்கள் ஆகியோருடன் இணைக்கப் பட்டுள்ளனர்.
மகாபாரதத்திலும் இதே செய்தி சொல்லப் படுகிறது. அங்குச் சொல்லப்படும் நிலையிறக்கப் பட்ட க்ஷத்ரியர்களாகக் கூறப்படும் இரு பட்டியல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களே தென்னிந்திய இனம் என்னும் திராவிடர்களே ஆகும்.
இதன் மூலம் பாண்டியர்கள், சோழர்கள் போன்ற குறிப்பிட்ட பெயர்கள் அக்காலத்திலேயே வட இந்தியாவில் அறியப்பட்டிருந்ததால், இது பொதுவான பெயராகவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்றே கொள்ளலாம். இந்த வகையிலேயே பாகவத புராணத்தில், சத்திய விரதன் “திராவிடக் கடவுள்” (Myhur’s “Sanskrit Texts”, v”vol. 1) என்பதில் ஐயமில்லை.
நான் எடுத்துரைத்த வண்ணமே, பிறகால மொழியியலாளர்கள் “திராவிட” எனும் சொல்லைக் கையாண்டுள்ளார்கள எனத் தோன்றுகிறது. பழங்கால இந்தியாவின் பேசுமொழிகளில், மகாராஷ்ட்ரி, சோரசேனி மற்றும் மகதி ஆகியவை முக்கியமானவை. சிறிய அல்லது அதிகமறியப் படாத பேச்சு மொழிகளில் திராவிடர்களின் மொழியான “திராவிடி” இணைக்கப் பட்டது.
ஒரு சமஸ்கிருத மொழியாளர் திராவிடத்தை “விபாஷா” அதாவது சிறிய பேச்சுமொழி என்கிறார் (Muir vol ii 66). மற்றொருவர் திராவிடர்களுக்குப் பொருந்தும் மொழி திராவிடியே என்கிறார் (பக்கம் 50). இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வடவிந்திய எழுத்தாளர்கள் தமிழையோ அல்லது மற்ற தென்னிந்தி மொழிகளையோ அல்லாது தென்னிந்தியர்கள் பொதுவான ஒரே மொழியைப் பேசுபவர்கள் என அனுமானித்தார்கள் என்பதே.
இவ்வகையில் திராவிடர்களின் மொழியானது, குறிப்பிட இடத்தில் வசிப்பவர்கள் பேசும் மொழியைக் குறிக்கும் பைசாச்சி ப்ரக்ருதி என்பதில் சேர்க்கப்பட்டது. இத்தகைய பைசாச்சு ப்ரக்ருதிகளுள் சொல்லப்பட்ட மொழிகள் பாண்டியர்கள் பேசும் மொழியிலிருந்து(தமிழ்) போதர்கள் பேசும் மொழி (திபேத்திய மொழி) என மிகவும் மாறுபட்டிருந்தன.
இவற்றிடையே உள்ள பொதுவான தன்மை ப்ராமண மொழியியலார்களின் காழ்ப்பாகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இவை பிசாசுகளின் மொழி எனப் பொருள்படும் பைசாச்சி எனப்பட்டன எனலாம். “திராவிடி” என்பது தற்காலம் வரை, அவ்வப்போது, வடவிந்திய அறிஞர்களால் மிகச் சரியான வகையில் பாவிக்கப் பட்டுள்ளது. 1854ல், இந்தி மொழியியல் அறிஞர் பாபு ராஜேந்திர லால் மித்ரா (quoted by Muir, vol.ii.127) திராவிடி மொழியை அங்கீகரிக்கப்பட்ட பராக்ரிதியாகவும், சௌரசேனி மொழிக்கொப்பாகவும், தற்கால இந்திய வழக்கு மொழிகளுக்குத் தாயாகவும் சொல்கிறார். இதிலிருந்து, “திராவிடிய” என்பதில் தோன்றிய “திராவிட” என்ற சொல் சிலநேரங்களில் தமிழுக்கு இணையாகக் குறுகிய வகையில் கையாளப் பட்டாலும், பொதுவான இனத்திற்கான சொல்லாகவே சாலப் பொருந்துகிறது. இவ்வாறு திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தும் முறையால், ‘தமிழன்’ என்ற சொல் தமிழுடன் சம்பந்தப்பட்டவர்களுக்காக மட்டும் என விடப்பட்டுள்ளது.
(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். பக். 4,5)★
(மொழிபெயர்த்து உதவிய தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்தம் பெயரர் திரு.நடராசன் அவர்களுக்கு நன்றி.
மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய முதன்மையான சாரங்கள்...
1. திராவிடம் என்னும் சொல் மனு சாத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட வடசொல்.
2. திராவிடன் என்றால் தாழ்த்தப்பட்ட அல்லது விலக்கப்பட்டவர்கள் என்று பொருள்.
3. சத்திரியர்களாகக் குறிக்கப்படும் இவர்களுடன் இன்னும் சில இனத்தார் தாழ்ந்த இனத்தவர்களாகக் குறிக்கப்படுகிறார்கள்.
4. ஆந்திரர்களும் இதே பட்டியலில் ஐதிரேய பார்ப்பனர்கள் என்று மதிப்பிழந்தவர்க ளாகக் குறிக்கப்படுகிறார்கள்.
5. திராவிடர்களின் மொழி பிசாசுகளின் மொழி.
6. பாகவதத்தில் குறிக்கப்படுகின்ற திராவிடர்களின் இறைவன் சத்தியவிரதன் என்பவன். (இவனுடைய வழிவந்த இக்குவாகுவின் வழித்தோன்றல்தான் இராமன். அப்படியானால் இராமனும் திராவிடனே.)
7. முந்தைய ஆய்வாளர்கள் பொதுத்தன்மை நோக்கிக் குறித்தவற்றைத் திராவிடம் என்று சொல்லத் தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல். (அஃதாவது அறுதியிட்டுச் சொல்லவில்லை.)
8. அக்காலத்தில் அதிகம் அறியப்படாத மொழிகள் பல இருந்தன. அவற்றை மொழியாராய்ச்சியாளர்கள் "விபாஷா" அதாவது சிறிய பேச்சுமொழிகள் என்றனர். இவற்றுடன் திராவிடத்துடன் இணைத்தனர்.
9. இந்தப் "பிசாசு மொழிகள்" பாண்டியர்கள் பேசும் மொழியிலிருந்து (தமிழிலிருந்து) மாறுபட்டிருந்தன.
10. திராவிட என்னும் சொல் பொதுவானது என்றாலும், தமிழுடன் ஒப்பாகக் கையாளப்பட்டாலும், திராவிடர் என்னும் சிறுபான்மையர் இனத்திற்கானது என்பதே பொருந்துகிறது.
11. ★சில பொதுமைகள் காணப்பட்டாலும் பயன்படுத்தும் முறையாலும், தமிழன் என்ற சொல் தமிழுடன் தொடர்புடையவற்றிற் காகத் தனித்து விடப்படுகிறது.★
எனவே, பெரியார் எடுத்துக்கொண்ட திராவிடன் என்னும் சொல் தமிழரைக் குறிப்பதன்று…
……தொடரும்…..
No comments:
Post a Comment