Nov 16, 2019
ஆசிரியர் பக்கம்
அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள், இலக்கண,
இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிர்
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலாமாண்டில் பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. பல சிறப்பான படைப்புகளை உருவாக்கித் தமிழ்க்குதிர்
மின்னிதழுக்கு ஆதரவு அளிக்கும் படைப்பாளர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நன்றி
தெரிவித்து மகிழ்கிறேன்.
நீதியொளிர் செங்கோலாம் திருக்குறள்
உலகப் பொதுமறையாகும். அதனை உன்னுடையது என்றோ, என்னுடையது என்றோ பிரித்துப் பார்ப்பது
பேதைமை. வள்ளுவன் சொன்ன, எல்லார்க்கும் பொதுவான கருத்துகளை விடுத்து, வள்ளுவனை மட்டும்
உடையவனாய் உரிமை கொண்டாடுதலும் பேதைமை. தேரை இழுத்துத் தெருவில் விட்டாற்போல் அரசியல்
காரணங் களுக்காக, ஒருசார்புடைமை பேசும் எவரும் திருக்குறளை எக்காலும் புரிந்துகொள்ளப்
போவதில்லை. வீண் விளம்பரங்களுக்காகவும் விவாதங்களுக்காகவும் வள்ளுவரை இழிவு படுத்துவதும்
ஏற்புடையதன்று. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் வழியில் வாழக் கற்றுக் கொள்வது
எல்லாருக்கும் நலம் பயக்கும்.
பொதுமைப்படாத சமூகத்தால்
விளைவன வெல்லாம் அறமற்றவையே என்பதை மனத்துட் கொண்டு வள்ளுவர் காட்டிய வழியில் சிந்தையைச்
செலுத்திச் சீரும் சிறப்புமாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
மேலிருந்தும் மேலல்லார்
மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
வாழ்க
தமிழ்! பரவுக மரபு!
தமிழன்புடன்
மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
என்னவளின் கண் - பைந்தமிழ்ச் செம்மல் மன்னை வெங்கடேசன்
ஒரு பா ஒருபஃது! (வெண்பாமாலை)
வில்லினின் றம்பு விடுபடாக் காலையும்
கொல்லுதே என்ன கொடுமை - மெல்லியளால்
விற்புருவக் கீழே விழியம்பு கொண்டென்னை
இதுவென்ன விந்தை இருண்ட திராட்சை
மதுவாலே வாரா மயக்கம் - பதுமை
அவளின் திராட்சை அருவிழியி ரண்டால்
அவனியோர்க் கேகுமே யாங்கு! 2
ஆங்கொருக்கால் மீனும் அருங்குளத் தினின்றேக
நீங்கும் தனதுயிரை நீணிலத்தில் - ஈங்கு
முகக்குளத்து மீனோ முகத்தினதே தங்கிச்
செகுத்திடுதே திண்மை உளம். 3
அந்தா மரைமூழ்கி ஆழ்வண்டு தேன்குடித்(து)
அந்தோ மயங்கிய தாங்கென்பர் - செந்தாமரை
அன்ன முகத்தில் அருவிழி வண்டுகள்தாம்
என்னை மயக்குவ தென்? 4
என்ன வொருவிந்தை இவ்வுலகில் தாமரை
தன்னிலை பச்சை தனிலேக - பொன்னார்
கமல முகத்தில் கருப்புவெள்ளை யாய்க்கண்(டு)
இமைக்க மறந்தான் இவன் 5
இவனுக்கோ ரையம் இருநிலத்தீர் தீர்ப்பீர்
அவனியில் ஆதவன் அல்லோன் - உவந்தே
ஒருசேரக் கண்டதிலை ஒண்டொடியா ளுக்கோ
இருசுடரும் சேர்ந்திருப்ப தென்? 6
இருப்பதனை நன்றாய் இளகவைக்கத் தீயில்
உருக்கவும் வேண்டா உலகீர் - கருப்பு
விழியாள் விரிபார்வை நோக்க இரும்பும்
உருகாதோ உள்ளே கனிந்து 7
கனிவுள பார்வையில் காயைச் சுவையாம்
கனியாக்கும் கன்னி விழிகள் - பனித்திடக்
காணின் மனமும் கரைந்து புவிவாழ்வு
வீணென் றுணர்த்தின வே! 8
வேலை நிகர்த்த விழியினாள் - நீலக்கரு
வேலை நிகர்த்த விழியினாள் - பாலை
நிலமதும் நீரூற் றதனால் நிரம்பும்
சிலையவள் சீர்விழி பார்த்து 9
பார்த்தன் கணையோ மதன்கைச் சிலையம்போ
சீர்த்தமால் சீறு சகடமோ - வார்த்த
சிலையவள் சீர்விழிகள் என்று மயங்கி
வளையுமோ வாட்புருவ வில் 10
நிலையாமை - கவிஞர் ச. பாலாஜி, சோளிங்கர்
(வண்ணப்பா)
வந்தது மேனோ சென்றது மேனோ
வந்துள நாமே - தெளியோமே
வந்தவ(ர்) மேலே சென்றிடு(ம்) நாளே
வந்துள நாமே - அறியோமே
சொந்தமு மேதோ பந்தமு மேதோ
தொந்தர வானா(ல்) - விலகாதோ
சிந்தையி னாலே இன்பம தாலோ
துன்பம தாலோ குலையாதே
தந்தது தானோ கொண்டது தானோ
இங்குள தாமே - பதறாதே
தங்கிடு மாறே வந்தவர் நாமே
என்பதை நீயே - மறவாதே.
நிந்தனை யாலோ வந்தனை யாலோ
கொஞ்சமும் நீயே - தளராதே
நொந்திடு மாறே வன்பகை யேனோ
அன்பினை நீயே – பொழிவாயே
பெண்களை மதிப்போம் - பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
விருத்தமாலை
வனப்பினில் மயங்கி நின்று
வன்மைகள் செய்யு முலகில்
மனத்தினி லுறுதி கொண்டு
மங்கையர் நலமாய் வாழ
அனைவரும் உதவ வேண்டும்
அநீதிகள் குறைந்து போகும்
தனிமையில் வீதியில் செல்லத்
தயக்கமும் விலகும் வாழ்வில் 1
வாழ்வினில் துன்பம் நீங்க
வகையாக உதவு நன்று
தாழ்வினில் சோர்ந்து செல்லத்
தாங்கியும் வலிகள் நீக்கிச்
சூழ்ச்சிகள் செய்வோர் முன்னே
துணிவுடன் நின்று தாக்கி
வீழ்ச்சிகள் யடைய முன்னர்
மீளவே அகற்று கறையை 2
கறைகளை நீக்கிப் பெண்ணின்
கவலைகள் முற்றாய்த் தீர்ப்பாய்
குறைகளைச் சுட்டிக் காட்டிக்
குற்றமும் தணிக்க வேண்டும்
அறிவினால் உயர்த்திப் பேச
அனைத்தையும் கேட்பாள் நன்றே
பிறருடன் பேசும் போதும்
பெண்மையின் உயர்வைக் காண் 3
காண்பதைக் கூற முன்னே
கனிவினை மெல்லக் காட்டு
சீண்டலைச் செய்து பெண்ணைச்
சீரழித் தேங்க வைப்பர்
தீண்டிட நெருங்க முன்னர்
தீயவர் நட்பைத் தள்ளி
ஆன்றோர் மொழிந்த சொல்லைக்
அகத்தினில் கொள்வ தறிவு 4
அறிவினில் சிறந்த பெண்ணை
அகிலமும் போற்ற வைக்க
நிறைகளை எடுத்துக் கூறி
நெஞ்சினில் வீர மூட்டி
நெறிகளை நன்றே சொல்வாய்
நிறைவினை மனத்தில் நல்கித்
திறன்களை வளர்க்க உதவித்
தீயவை மெல்ல அகவு 5
அகவுமால் இருந்தால் ஏதும்
ஆங்கவை எல்லாம் தீர்ப்பாய்
அகவையை எடுத்துச் சொல்லி
அனைத்தையும் தெளிய வைப்பாய்
நிகழுமோர் காட்சி கொண்டே
நிறைவினைக் காணச் செய்வாய்
இகழ்வதை தவிர்த்து என்றும்
இனிதாகக் கூறு மேன்மை 6
மேன்மைகள் கூறி நன்று
சான்றுகள் பலவும் காட்டித்
தனிவழி தையல் சென்றால்
மான்றிட வேண்டாம் என்றே
மாதைக் காக்க நிற்பாய்
தோன்றுபல் இடர்கள் நீக்கித்
துயரினை வைப்பாய் மறக்க 7
மறப்பது நல்ல தென்று
மனத்தினில் தெளிவைக் காட்டு
அறிவினைக் கொடுத்து நல்ல
அன்பினில் மகிழ வைப்பாய்
அறத்தினை எண்ணி நாளும்
அணங்கினை வாழ வைக்க
உறுதிகள் பலவும் நல்கி
உயிரென அன்பாய்ப் பழகு 8
பழகிடும் நண்ப ரெல்லாம்
பண்பினில் மிளிரச் செய்தால்
அழகுற அறிவும் கூடும்
அன்பினில் நனைவாய் நன்றே
விலகிச் செல்லும் பெண்ணை
விரட்டித் துன்பம் செய்து
வலிகளைச் சுமக்க வேண்டா
மகிழ்வினைக் கொடுப்பாய் வாழ்வில் 9
வாழ்வினில் உயர வைப்போம்
வசந்தமும் வீசச் செய்வோம்
சூழ்ச்சிகள் செய்யும் போதே
சூழவே நின்று தடுத்துத்
தாழ்வினில் கைகள் கொடுப்போம்
தர்மதைப் போற்ற வைப்போம்
வாழ்வியல் கூறும் வழிகள்
வருமிடர் நீக்கு மன்றோ 10
மரத்தனைய மாந்தர் - மாறுரையும் - நேருரையும் - பொன் இனியன்
அரம்போலுங் கூர்மைய ரேனு
மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா
தவர் (997)
திருக்குறள் பண்புடைமை அதிகாரத்தில்
உள்ள இப்பாடலில், முதல் உபமான உபமேயங்களுக் கிடையேயான ஒத்த பண்பு ‘கூர்மை’ என்பது தெரியக்
காட்டப்பட்டது. அதனால் பொருட்களை அறுத்துக்
கூறுபடுத்தற்குரிய அரத்தின் கூர்மை, பொருட்களைப் பகுத்தறிய வல்ல மக்களின் அறிவுக்
கூர்மைக்கு ஒப்புக் கூறப்பட்டது நன்கு விளங்கு கின்றது. ஆனால், அடுத்ததில் அவ்வாறான
குறிப்பேது மின்மையால் அவற்றுக்கிடையேயான பலப்படவாயுள்ள பொதுமைகளுள் ஈண்டு இயைபுடையதானதைக்
குறிப்பறிந்து புலப்படுத்த வேண்டியதொரு பொறுப்பு உரையாசிரியர்க் காயிற்று. அக்கடனறிந்த
உரையாளர்கள் அதன் பொருளைத் தாமுணர்ந்தவாறு காட்டியுள்ளனர். ஆயினும் பலர் அதைத் தவிர்த்தவாறாக
உரை செய்துள்ளனர். முந்தை உரைகளைச் சற்றே உரசி இது குறித்த உண்மையறியும் முயற்சியாக
அமைகிறது இக்கட்டுரை.
“உவமை இரண்டனுள் முன்னது, தான்
மடிவின்றித் தன்னையுற்ற பொருட்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது. ஏனையது, விசேட
அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாகிய மக்கட்பண்பு இன்மையின்,
அது தானும் இல்லை என்பதாயிற்று” என்கிறார் பரிமேலழகர்.
ஏலுமிடத்திலெல்லாம் இலக்கணஞ் சுட்டலும்
எடுத்துக்காட்டுகளோடு இலக்கிய நயம் பாராட்டலும் பரிமேலழகரின் உரைச்சிறப்புகளில் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
மேலும், ‘இதனை அதிகாரத்தால் பெற்றாம்; அவாய் நிலையால் பெற்றாம்’ எனத் தம் கருத்துக்கான ஆதாரத்தை உரைகளுக்கிடையில்
கோடிட்டுக் காட்டுவதும் உண்டு. இக்குறளுக்கான கருத்தாக, ‘விசேட அறிவின்மை’ என்பதை இவர்
அநுமானித்த தெவ்விதம் எனக் காட்டாது விடுத்தது நமக்குப் பெருங்குறையே.
உவமம் இரண்டனுள் முன்னது அறுக்குங்
கூர்மை பற்றியது; பின்னது அறுக்குங் கூர்மையின்மை பற்றியது எனுங் கருத்தில் உரைசெய்கிறார்
பாவாணர்.
வள்ளுவர் ஒரு பொருள் பற்றி (உடன்பாடாகவேனும்
மறுதலையாகவேனும்) இருமுறை கருத்தறிவிக்க நேர்கையில் அஃது எனும் சுட்டைப் பயன்கொண்டு
பாடல் அமைக்கிறார். குறள் நடையை உற்றுக் கருதுவார்க்கு இது உடன் புரியவரும். அஃது என
15 பாக்களிலும், அஃதே என 3 பாக்களிலும், அஃதிலார் என 2 பாக்களிலும், அஃதில்லார் என
5 பாக்களிலும், அஃதின்றேல் என 3 பாக்களிலும் அமைத்திருக்கக் காண்கிறோம். பாவாணர் காட்டுவதுபோலக்
கூர்மையின்மை என்பதை வள்ளுவர் குறிக்கக் கருதியிருப்பின் இப்பாடலிலும் அந்நடையைக் கையாண்டு,
அரம்போற்கூர்த் தாரேனு
மஃதில் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா
தவர்
எனுமாறு அமைத்திருக்கக் கூடுமென்க.
“ஓரறறி வதுவே உற்றறி வதுவே”
எனும் தொல்காப்பியச் சூத்திரத்தை
யுட்கொண்ட வாறாக, உணர்வை அறிவாக மயக்குரைக்கிறார் பரிமேலழகர்.
காலமும் இடமும் ஒரு நாணயத்தின்
இருபக்கங்கள் போலிருந்து ஒன்றாலொன்று சுட்டப்பெறுதல் போல உணர்வு அறிவு ஆகியனவுமாம்.
எனினும், இவ்விரண்டிற்கிடையே மெல்லிதும் ஆனால் தெள்ளிதுமான வேறுபாடுண்டாம். அறிவும்
உணர்வும் ஒன்றன்றாம். உணர்வின் பயனாவது அறிவு.
உணர்வு முதனிலை; அறிவு முடிநிலை. அறிவில் கூர்மையும் உணர்வில் தெளிவும் வேண்டும்.
ஒன்று முதலாக்
கீழ்க்கொண்டு மேலுணர்தலின் ஓரறி வாதியா உயிரைந் தாகும்
எனும் தொல்காப்பியச் சூத்திரம்
உணர்தல் அறிதல் என வேறுபடக் காட்டியுள்ளது(ங்)
காண்க.
காலிங்கர் காட்டும் “ஒருபொருளை வகுத்து உள்புக்கு அறியும் அறிவின்
கூர்மை” என்பது அரம் என்னும் கருவிக்குப் பொருந்துவதின்றாம்.
இரண்டு உவமங்களையும் இணைத்தவாறாக,
‘பெரிய மரத்தை யறுக்கும் அரம் போன்ற கூர்மையான அறிவு’ என உரைத்து, இரும்பைத் தேய்க்கும்
அரத்தையும் மரத்தை யறுக்கும் வாளையும் ஒன்றாகக் காட்டுகிறார் முகிலை இராசபாண்டியன்.
கா.சு.பிள்ளையின், ‘மனிதத்தன்மை
யில்லாதவர்கள் தனிநின்ற மரத்தோ டொப்பர்’ என்பதில் அவன் அலகையா வைக்கப்படும் (850) என்னுமாப்
போன்றதொரு கருத்துப்படவாகிறது. தனிமரமா தோப்பில் உள்ள மரமா என்பதைக் காட்டுமாறான குறிப்பேதும்
குறளில் இல்லாத நிலையில் அது புறத்திருந்து கொண்டு பொருத்தியதே யாகிறது.
மரம் உவமமாகக் காட்டப்பட்டதன்
பொருட்குறிப்பு கவிராசர் போன்றோர் உரைகளில்
இல்லை. பாவாணர் போன்றோர் உரைகளில் பிறழவும் மாறுபடவும் காட்டப்பட்டுள்ளது.
அரம் என்னும் உவமத்துக்கான உரை,
‘அரத்தைப் போன்ற கூர்த்த புத்தியுடையவராயினும்’ என்பதே போதுவதாயிருக்க, ‘கூர்த்தமதியுடையார்
பண்பாடு பெறாது ஒழியின் தம்மைச் சார்ந்தார்க்குப் புத்திக் கூர்மையினால் தீமையே செய்வர்
என மேலும் நீட்டித்து விளக்குகிறார் குன்றக்குடி அடிகளார். இவர்தம் இக்கூற்று முற்றிலும்
உண்மையேயா மாயினும் ஈண்டு வேண்டற்பாலதன்றாம். இது இக்குறளின் கருதுகோள் மற்றும் நுவல்பொருட்குச் சற்றேனும் தொடர்பில்லது என்பதோடு அதன் உட்பொருளைத்
திசை திருப்புவதாகவும் உள்ளது. மரம் என்னும் உவமக் குறிப்பிற்கான கருத்தைத் தெளிவுபடுத்திக்காட்ட வேண்டியிருப்ப, அதைக் கூர்ந்து
அறிந்து புலப்படுத்திக் காட்ட ஒல்லாது தவிர்க்கிறார் குன்றக்குடியடிகளார்.
இஃதன்றியும், சில உரையாசிரியர்கள்
தம் உரை விளக்கத்தினூடே இக்குறளுவமங் குறித்து பெய்துவைத்திருக்கும் கருத்து(ம்) சற்றே துணுக்குறுமாறுள்ளது. “ஆழ்ந்து சிந்திக்கையில்
மக்கட் பண்பில்லாதவரை ஓரறிவுயிர்க்கே ஒப்பாகக் கூறுவது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை”
என்கிறார் பாவாணர். அவ்வாறாமாயின், அறிவுடைய மக்களை உயிரும் உணர்வுமற்ற அரத்தோடு ஒப்பிட்டது
மட்டும் பொருத்தமாவதோ எனும் இடரானதொரு கேள்வி எழுவது ஈண்டு தவிர்க்கவியலாததாகிறது.
இதே போன்றதொரு கருத்தைக் குறட்பா
600-க்கான உரை விளக்கத்தில், “ஊக்கமில்லாதவரை மரம் என்று இழித்தல் அறிவியலுக்கு உடன்பா
டுடையதல்ல; மரம் சூழ்நிலைக்குத் தாக்குப் பிடித்து நின்று வளர்ந்து பயன்தருவது அறிக”
எனக் குறிக்கிறார் குன்றக்குடியடிகளார்.
குறளில் உள்ள உவமத்தையே குறைகண்டு
சுட்டுவது போன்ற தொனியுடைய இவ்வாறான கருத்துகளால் குறளைத் தாம் சிறுமைப் படுத்துவதை
இவரெல்லாம் அறியாது போயினர் போலும்.
இவை யிவ்வாறாக,
மரம், மக்கள், பண்பு ஆகியவை குறித்த
ஒரு புரிதலுக்கு இப்போது வருவோம்.
உயிர்க்குங்கால் மனிதன் என்றழைக்கப்படுபவன்
மூச்சுநின்று போனால் பிணமென்று பெயர் மாற்றம் பெறுகிறான். ஆனால், கவையாகிக் கொம்பாகிக்
கவிந்த நிழலும் கனியும் தருகின்றபோது மட்டுமின்றி வேரற்று வீழ்ந்த பின்னும் பேர் மாற்றமின்றி
மரம் என்றே வழங்கப்படுவது அதன் பயன் கருதியதாலாம் என்க.
‘உத்திரத்துக்கு கட்டைவாங்க மரக்கடைக்குப்
போனான்’ என்பதில் கட்டை என்பது மரத்தாலான திம்மையைக் குறிப்பதாகும். அடி பருத்து கிளைகள் திண்ணிதாய் உள்ள மரங்களே இவ்வாறான பெயர்
பெறுகின்றன. திண்மையுடையனவாதல் கொண்டு அவை திம்மை எனப்படுகின்றன.
கள்ளுண்டு மெய்யறியாது வீழ்ந்து
கிடப்பவனை மரக்கட்டைபோல் விழுந்து கிடக்கிறான் எனும் சொல் வழக்கை உன்னுக. கைகால் மரத்துப்
போதல் எனுந்தொடரில் ‘மரம்’ என்பது உணர்வற்ற நிலையைக் குறித்தலை உன்னுக.
உயிரற்ற மரம் கட்டையாகிறது; உணர்வற்ற
மனிதன் கட்டை எனப்படுகிறான். இந்த ஒப்புமை பற்றியே இக்குறளில் மரம் என்பது மக்கட்கு
உவமமாய் ஆளப்பட்டது என்க.
இதனை, ஓரறிவிற்றாய மரத்தினை யொப்பர்
எனப் பரிமேலழகர் காட்டியுள்ளது ஈண்டு நினைதற் குரியது. அவ்வோரறிவாவது உற்று உணர்தலே
என்பதும், வானோங்கி வளர்ந்து நிற்கும் மரத்துக்கே
அவ்வறிவு உண்டென்பதும் உன்னுக. வள்ளுவர் குறிப்பது அவ்வோரறிவும் அற்ற நிலைமைத்தாகிய
மண்ணோடியைந்த (600) மரமேயாவதை அறிக.
‘மக்கட் பண்பு’ என்பதனை ஒரு கூட்டுச்சொல்லாகக்
கொண்டே உரைகள் யாவும் அமைந்துள்ளன. அவற்றுள், வள்ளுவர் குறிப்பதாக இவர்கள் கருதும்;
‘மக்கள்பண்பு’ எது என்பதற்கான ஒரு தெளிவு எவர் உரையிலும் காணோம்.
‘மக்கள்’ எனும் பன்மைக் குறிப்பை
ஒரு தொகுதியெனக் கொண்டு, சமுதாயப் பண்பில்லாதவர் அரம்போன்ற கூரிய அறிஞராயினும் மரம்
போல்வர் எனும் வ.சுப. மாணிக்கனார் உரை, ஒப்புர ஒழுகல் என்பதான சமூக அக்கறையை உள்ளடக்கியது
போலவும், ஒட்ட ஒழுகல் என்பதான சமூக இணக்கத்தைக் காட்டுவது போலும் தோற்றுகிறது. ஆயினும்
பண்பு எனும் குறள் குறிப்பைச் சமுதாயப் பண்பாகக் கொள்ளுதற்குரிய ஏது இன்னதென்றறியக்
கூடுவதில்லை.
பண்பு என்ற சொல்லமைந்த பாடல்கள்
திருக்குறள் தொகுதியுள் மொத்தம் 25ம் அவற்றுள் பண்புடைமை அதிகாரத்தில் 9ம் உள்ளன. குறட்பா 997ல் அல்லாது வேறெதனிலும் மக்கட்பண்பு
எனப் புணர்ச்சி கொண்டு அமைந்திலது.
மக்கட்பண்பு என்பதை, மக்களுக்குண்டாம்
பண்பு, மக்கட்குரிய பண்பு, மக்களுடைய பண்பு, என்றெல்லாம் விரிக்கத் தக்கவாறாகிறது.
மக்கட்கு வேண்டுவனவாகிய பண்பு நலன்கள் பல உண்டு. அவ்வக்காலத்துக்கும் இடஞ்சூழலுக்கும்
ஏற்ப ஒவ்வொரு பண்பும் தொழிற்பட வேண்டுவதாகிறது. மக்கட்கு வேண்டுவதாகிய நலன்கள் பல உண்டாயினும்,
நாநலன் என்னும் நலனுடைமையே பெரிதெனக் காட்டியதுபோல பண்புகள் யாவற்றினும் மேலானதாக அமைந்தாங்
கொழுகலைச் சுட்டுகிறது குறள். இது எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலையிலும் வேண்டப்படுவ
தொன்றாவதும் எல்லாராலும் நயக்கப்படுவது மாகும்.
இதனைப் பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் எனகிறது கலித்தொகை.
பண்புடைமக்கள் (62) என்பதன் மறுதலை
பண்பில்லா மக்கள் (997). பரந்து உலகியற்றியான் (1062) - உலகியற்றுப் பரந்தியான், கால்வல்
(496) - வல்கால், சிறுமையுள் (98) - உள்சிறுமை என்பன போல, பண்பில்லாத மக்கள் எனப் பொருள்கோள்
வைப்பில் இது மாறி நிற்பதாகும்.
பண்பில்லாத மக்கள் அரம்போலும்
கூர்மையரேனும் அவர் மரம் போல்வர் எனும் வைப்பிற்குரியது இப்பாடல்.
‘கூர்மையரேனும்’ என்பது கொண்டு போல்வரே என ஏகாரந் தொக்கதாகிறது.
கூர்த்த அறிவு உடையவராயிருப்பினும்
பண்பில்லாத மக்கள் (உணர்வற்ற) மரக்கட்டையை ஒத்தவரேயாம் என்பது இதற்கான எளிய தெளி பொருளாகிறது.
உயிரற்றதனால் மரம் உணர்வற்றுப்
போனவாறு அதனோடு ஒப்புக் கூறப்பட்ட பண்பிலாத மனிதன் உயிரற்றவன் போலாவான் எனினுமாம்.
மரக்கட்டை என்பது ஒரு பொருட்கிளவி.
மரம் என்னும் இக்குறளின் குறிப்பு உயிர்ப்பின்மை அல்லது உணர்வின்மையின் ஒரு குறியீடாகும்.
ஒத்ததறியான் செத்தாருள் (214)
வைக்கப்படுமாறு போல பண்பிலாதான் உயிர்ப்ப உளனாகான் என்றவாறு. ஒ.நோ: மரம்போல்வர் பண்பிலாதார்
(997). மா அன்னர் கல்லாதார் (814).
இயற்கையெழில் - கவிஞர் மதுரா
எண்சீர் விருத்தங்கள்
செங்கதிரோன் களைத்துமெல்லச் செவ்வானை நீங்கும்
சிறுமாலைப் பொழுதங்கே சிறகசைத்து
மிளிரும்
தங்கநிலா மேகத்தில் தலைநீட்டிப் பார்க்கும்
தள்ளிநின்று விண்மீன்கள்
தன்னெழிலா லீர்க்கும்
பங்கயங்கள் விடைகொடுத்துப் பகலவனை அனுப்பும்.
பறவையினம் கூடடையப் படபடத்துப்
பறக்கும்.
அங்கமதைத் தென்றல்வந் தாசையொடு தீண்டும்
அந்திமாலைப் பொழுதிலிந்த வின்பமென்றும்
வேண்டும்.
அல்லிமல ரிதழ்விரித்தே அகங்குளிரச் செய்யும்.
அங்குமிங்கும் கயலினங்கள்
அழகாக நீந்தும்
முல்லைப்பூ மலர்ந்துமணம் முற்றத்தில் வீசும்
முகம்பார்த்து நிலவொளியும்
முத்தமிட்டுப் பேசும்.
புல்நுனியும் பனித்துளியைப் பூரித்துத் தாங்கும்
புத்தம்புது நாடகங்கள் புவியெங்கும்
ஓங்கும்
சொல்லாத எழிலெல்லாம் சொர்க்கமென நிறையும்
சுற்றுகின்ற பூமிதனைச் சொந்தமாக்க
விழையும்..
எழுதுகோல் புரட்சி - கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்
அறுசீர் விருத்தம்
எழுதுகோல் மையால் எழுந்தது புரட்சி
எங்களின் சுதந்திரமே
முழுமையாம் எழுத்தால் மூழ்கியே
போச்சு
மூடநம் பிக்கைகளும்
வழுவிலா வாழ்நாள் வல்லமை கிடைக்க
பழுதிலா மூத்தோர் பண்பினைச்
சொல்லிப்
பதித்தது பாரினிலே
சத்திய வழியில் சதமெனச் சார்ந்து
சரித்திரம் ஆக்கியதே
நித்தமும் தருவார் நிம்மதிப் பாக்கள்
நிலைத்திடும் நீளுலகும்
புத்துயிர் அளிக்கும் புதுமை செய்யும்
புரவலா் எழுதுகோலே
எத்தரை வீழ்த்தி எரித்திடும்
வலிமை
எழுச்சியும் தருமெழுத்தே!
பட்டும் படாதன - பொன் இனியன்
கட்டுரைப்பீர் என்றார் படாரென - அட்டியின்றி
நான்முயன்றே னவ்வளவில் நன்கிதனை ஓர்ந்தினிது
சான்றுரைப்பீ றென்று படார்* 1
*படாரென்று என்பது பாடற் றளைகருதி மாறி நின்றது.
பட்டுப்போல் மேனி பவளச்செவ் வாயிதழ்
வெட்டுமிரு கண்களொடு விற்புருவம்
விட்டிழைத்த
கார்கூந்தல் வேய்தோற் கனங்குழை நூலுடைக்(கு)
யார்தா மடிமைப் படார் 2
பட்டனைய மென்மேனி பல்முத்து பண்மழலை
விட்டிசைக்கும் வேய்குழல் யாழென்ப வாங்கை
யளாவிய கூழே யமுது;பிற* வாகத்
திலாராங் கவைக்குட் படார் 3
* ஆகத்துப் பிற இலார் ஆங்கு அவற்றுக்கு உட்படார்
பட்டென்று போட்டுடைப்பான் கேட்ட மறையதனை
முட்டாள் தனத்துக்கே முன்வரிந்து பட்டயம்
கட்டுவான் பாரவன் தானோர் அறைபறையாம்
பெட்பவே உட்கப் படான் 4
பட்டென் றுரைப்பவன் பாரான் இடம்பொருள்
முட்டுப் படச்சொரியும் தன்மறை நட்டா
ரிடைப்பட்டும் நன்மையுறா னாவான்
அவனோர்
அறைபறை யாயுருப்ப டான் 5
பட்ட மரக்கிளையில் பைங்கிளி வந்தமரல்
கெட்டார்க்கு மற்றாங்கே கேளமைதல் முட்டாத
வாறாய் முயல்விலார் முன்னேறல் தானுண்டோ?
மாறாயர் மாணப் படார் 6
பட்டபின் வாராத புத்தி; படியாமல்
வி்ட்டநற் பண்பு; மனத்துளே நட்டநற்
கேண்மை விடலதும் கேடாவ; அன்னதோர்
பான்மையர் ஆற்றுப் படார் 7
பட்டது பாடன்றாம் பன்னாள் உழைப்பினில்
முட்டுப் படாத முயல்வுடையார் கெட்டும்
மனந்தளரார் கீழறுப்புக் கஞ்சாராய் ஊங்கும்
குணத்தால் உலைவு படார் 8
பட்டதெலாம் போதாதா பாராண் டிருந்தகுடி
கெட்டுந்தா னின்னும் கிளர்ந்தெழ முட்டுப்
படுவதுமென்? முன்னேற ஒட்டாமற் சாதி
சுடுவதால் சுற்றப் படார் 9
பட்டிற்காம் மென்மை; பளிங்கோ ஒளிவிடும்
கிட்டிப்புள் மேலேறிப் பாயுமே - மட்டிப்
பயலுக்கு மாங்குமாங்கென் றாலுமண் டைக்குள்
உயவாது ஊக்கப் படான் 10
குருவே வாழி! - கவிஞர் மொகைதீன் ஹாசன்
வருவாய் ஒருநாள் எனைத்தேடி
வண்ண நிலாவில் இசைபாடித்
தருவாய் நினைவி லொருகோடி
தமிழில் நனைவேன் புகழ்பாடி
கருவே யுனது கண்ணாகும்
கவியே அதனி னுயிராகும்
குருவே உன்னை மறவேனே
குணத்தா லுயர்ந்தாய் நீவாழி
தூர மிருந்தே தருகின்றாய்
துயிலுங் காலம் தொலைக்கின்றாய்
ஆரக் கிளிபோல் கதைப்பவளே
அழகாம் தமிழை விதைக்கின்றாய்
நேரங் காலம் பார்க்காது
நெஞ்சி லுறைந்தே நிற்கின்றாய்
ஓரப் பார்வை அழகேநீ
உயர்ந்தாய் மனத்தால் நீவாழி
சோலை மலரின் பூந்தேனே
சொந்த மெனநீ வந்தாயே
வேலைக் களத்தி லிருந்தாலும்
வேண்டும் வழிகள் செய்வாயே
காலைக் கதிரே கனியாளே
கவிதை சொல்லித் தருவாயே
மாலை நிலவே மைனாவே
மனத்தாற் புகழ்ந்தேன் நீவாழி
Subscribe to:
Posts (Atom)