(ஒயிற்கும்மி)
பைந்தமிழ்ச்செம்மல் இணுவையூர் வ-க-பரமநாதன்
நல்லவ ராள்கின்ற நாடென மாறிடும்நாளது வந்திடும் பாருங்க டா
நறும்தேனெனும் தமிழாமது
நயமேமிகு நிலையேயுற
நானிலம் போற்றிட வாழ்ந்திடு மாம்.
வல்லவர் நம்தமி ழர்களா மென்றிடும்
வாழ்வது வந்தினிச் சேர்ந்திடு மாம்
வளமோபெரு கிடவேயதில்
அளவேயிலை யெனவேபுகழ்
வந்தணைத் தாடிட நின்றிடு வோம்
சொன்னதைச் செய்திடும் தோள்வலி கொண்டவர்
சூழ்ந்தெமைக் காத்திடும் நாள்வரு மாம்
தொடுவாரெவர் தடுப்பாரெவர்
சுடுவாரெவர் துயரேயிலை
துள்ளிக்கு தித்தங்கு வாழ்ந்திடு வோம்
நன்னெறி தோன்றிடும் நம்மூர்செ ழித்திடும்
நாய்களும் பேய்களும் போயொழி யும்
நடையோதனி எழிலோவுய
ரெனவேதினம் மகிழ்வாடிட
நம்தமிழ் நாடுசி றந்திடு மாம்.