Feb 15, 2020
ஆசிரியர் பக்கம்
மரபு கவிதைகள், இலக்கண,
இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச்
சோலையின் தமிழ்க்குதிர் பதினான்காவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
மண்புழு மண்ணைக் குடைந்து
அதிலிருந்தே உணவுண்டு பின் அங்கேயே மடிந்து அந்த மண்ணுக்கே உரமாகிறது. மண்ணைக் குடைந்து
அதைப் பக்குவமாக்குகிறது. அது உதவி செய்யவில்லை. ஆனால் அதன் வாழ்வே பிறருக்குப் பேருதவியாக
அமைகிறது.
மீன்கள் ஆற்று நீரிலுள்ள
அழுக்கைத் தின்று அந்த ஆற்றைச் சுத்தமாக்கு கின்றன. அவை உதவி செய்யவில்லை. ஆனால் அவற்றின்
வாழ்வே மற்றவர்க்கு உதவியாக அமைகிறது. எந்தப்பயனையும் எதிர்பார்க்காமல் இன்றைக்கு நாம்
செய்யும் சிறு உதவி பிற்காலத்தில் நமக்குப் பேருதவியாக வந்து உதவும்.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்
அந்நன்றி
என்று தருங்கொல் எனல்வேண்டா
- நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட
நீரைத்
தலையாலே தான்தருத லால்.
என்கிறாள் ஔவைப் பாட்டி. ஆம்… புவி என்ற புள்ளியைப் பிடித்துக்கொண்டு
அந்தப் புவியின் தன்னலமற்ற சுழற்சியால் நிலைத்து நின்றுவாழும் நாம், நம்மால் ஆன சிறுசிறு
உதவிகளைச் செய்து வாழவேண்டும். அவ்வாறு வாழும் வாழ்வே வாழ்க்கை… மற்றவை சீழ்க்கை.
தன்னலமற்ற விடுதலைப் போராட்ட
வீரர்களால்தான் நாம் இன்று சுதந்திரமாக வாழ்கிறோம். தன்னலமற்ற தலைவர்களின் உதவியால்தான்
நாம் இன்று கல்வியைப் பெற்றிருக்கிறோம். களப்பிரரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் இருண்டகாலம்
என்பர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், வாழும் முறைமையை, மக்களின் சிக்கலைத் தீர்த்து
வாழும் நெறியை எடுத்துக் கூறிய அறநூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய அந்தக்
காலக்கட்டம்தான் தமிழ்நாட்டுக்குப் பொற்காலம்.
அந்தப் பொற்காலத்தில் தோன்றிய திருக்குறள் மலைமேலிட்ட விளக்காக நின்று
நமக்கு வாழும் முறையைக் காட்டி இன்றைக்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒளியில்
நம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டு நம் வாழ்வைப் பயனுள்ள வாழ்வாக வாழ்வோமாக.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
சற்றே நோக்கு
பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
எண்சீர் விருத்தப் பத்து
துன்புறுத்தி
வாட்டுகின்ற கயவ னேகேள்
துடிக்கின்ற பெண்ணவளைக் கொஞ்சம் நோக்கு
வன்மையொடு கொடுமைகளைச் செய்யும் வேளை
வாட்டமுற்றுப் போராட்ட மின்றி வீழ்வாள்
இன்பங்கள் வாழ்வினிலே மடியு மன்றோ
ஈன்றவளின் நெஞ்சமதில் வெறுப்புப் பொங்கக்
கன்னிப்பெண் அச்சமின்றி வீதி செல்லக்
காமமுற்றுச் சீரழித்துத் திளைக்க லாம 1
துடிக்கின்ற பெண்ணவளைக் கொஞ்சம் நோக்கு
வன்மையொடு கொடுமைகளைச் செய்யும் வேளை
வாட்டமுற்றுப் போராட்ட மின்றி வீழ்வாள்
இன்பங்கள் வாழ்வினிலே மடியு மன்றோ
ஈன்றவளின் நெஞ்சமதில் வெறுப்புப் பொங்கக்
கன்னிப்பெண் அச்சமின்றி வீதி செல்லக்
காமமுற்றுச் சீரழித்துத் திளைக்க லாம 1
திளைத்திடநீ விளையாடும் பொருளு மன்று
தீந்தமிழால் சாடுகின்றேன் கேட்பாய் நன்றே
வளைத்துநின்றே ஒருபெண்ணைக் காம முற்று
மகிழுவதால் பயனென்ன வுண்டு சொல்வாய்
களைத்தவளைத் தீண்டுவதில் இன்ப முண்டா
காமமுற்றுத் திரிவதால் வாழ்வு மங்கும்
இளமையினில் சிந்தனையை வளரக் கற்றால்
என்றென்றும் அவ்வழியில் இனிமை உண்டு 2
உருகிவேண்டும்
பெண்ணினது நிலையைக் காண்பாய்
உள்ளமது துடித்திடவே வாடி நிற்பாள்
அருகினிலே சென்றவளைச் சூழ நின்றால்
அழுகுரலால் மன்றாடி நிற்கப் பார்ப்பாய்
இருளினிலே இதயமற்றுக் கொடுமை செய்ய
இன்னலுற்று மாய்ந்திடுவாள் தேவை தானா
பெருந்துயரில் மாள்கின்ற வேளை உன்றன்
பெருமைகளும் அழிந்துவிடும் அறிவா யாக! 3
உள்ளமது துடித்திடவே வாடி நிற்பாள்
அருகினிலே சென்றவளைச் சூழ நின்றால்
அழுகுரலால் மன்றாடி நிற்கப் பார்ப்பாய்
இருளினிலே இதயமற்றுக் கொடுமை செய்ய
இன்னலுற்று மாய்ந்திடுவாள் தேவை தானா
பெருந்துயரில் மாள்கின்ற வேளை உன்றன்
பெருமைகளும் அழிந்துவிடும் அறிவா யாக! 3
அரிவையவள் தனித்திருக்க உதவி செய்தால்
அச்சமின்றி வீதியினில் நடந்து செல்வாள்
அறிவற்றுத் திரிபவர்கள் கூடச் சேர்ந்தால்
அழிவுபாதை நீசெல்ல வழிகள் காட்டும்
குறுக்குவழி இன்பமெல்லாம் விதியை மாற்றக்
குடும்பத்தார் மன்றினிலே அவமாய் நிற்பர்
இறைவனவன் என்றென்றும் நின்று கொல்வான்
ஏடுதன்னை படித்துப்பார் துயரும் தோன்றும் 4
துயருற்று மாள்பவளை
நோக்கா வண்ணம்
துரிதமென இழுத்தவளைக் காயம் செய்ய
உயிரற்ற பிணமெனவே சாய்ந்து வீழ
ஒருவருக்கும் கருணையுள்ளம் வருவ தில்லை
மயக்கமுற்றுக் கிடக்கின்ற மேனி தன்னை
மதுவருந்திக் காமத்தில் மகிழ வாட்டி
இயல்பாக வருகின்ற காதல் தன்னை
இரக்கமற்றுத் தீவழியில் களிப்ப துண்டா 5
துரிதமென இழுத்தவளைக் காயம் செய்ய
உயிரற்ற பிணமெனவே சாய்ந்து வீழ
ஒருவருக்கும் கருணையுள்ளம் வருவ தில்லை
மயக்கமுற்றுக் கிடக்கின்ற மேனி தன்னை
மதுவருந்திக் காமத்தில் மகிழ வாட்டி
இயல்பாக வருகின்ற காதல் தன்னை
இரக்கமற்றுத் தீவழியில் களிப்ப துண்டா 5
உருக்குலைந்து மயக்கமுற்றுக் கிடக்கும் பெண்ணின்
உடல்தன்னை வருத்திநீயும் மகிழ லாமா
அருவருக்கும் செய்கைகளைத் தொடர்ந்து செய்ய
அவனியிலே கொடூரங்கள் மலிந்து போகும்
இரக்கமற்ற செய்கையெலாம் வாழ்வில் வேண்டா
இதயத்தில் கருணைதனை வளர்க்க லாமே
கருக்கிவிடப் பெற்றவர்கள் மனத்தில் வலிகள்
காலமெல்லாம் மறையாது சற்றே நோக்கு 6
சற்றேனும் கருணையின்றிப் பெண்ணைக் கொன்று
சாய்த்துவிடக் கூட்டமாக நிற்க லாமா
குற்றங்கள் மறைப்பதற்குக் கருக்கும் மேனி
கொல்லையினில் புதைப்பதனால் தப்ப லாமா
கற்பழிக்கும் கூட்டமென்றே ஊரே தூற்றும்
காசினியில் அழியாமல் நிற்கு மன்றோ
வற்புறுத்திச் சிற்றின்பம் அடைய லாமா
வாழ்வினது மகத்துவத்தை உணரு வாயா 7
அருகினிலே சூழ்ந்துநிற்றல் கொடுமை யன்றோ
அழுகுரலால் கெஞ்சியழ அடித்தல் நன்றா
உருகிவேண்டும் பெண்ணினது நிலையும் அந்தோ
உள்ளமது துடித்திடவே கதறி நிற்க
இருளினிலே இதயமற்றுக் கொடுமை செய்ய
இன்னலுற்று மாய்ந்திடுவாள் எண்ணிப் பார்ப்பாய்
பெருந்துயரில் மாள்கின்ற வேளை உன்றன்
பெருமைகளும் அழிந்துவிடும் அறிவாய் நன்றே 8
நன்றெனவே
வளர்த்துவிடும் உன்றன் அன்னை
நன்மைகளைச் செய்திடவே விரும்பி நிற்பாள்
அன்பதனால் உலகினிலே அமைதி ஓங்கும்
அகிலமதில் பெண்களெல்லாம் வாழ வேண்டும்
இன்னல்களைக் கொடுத்துவிட மடிந்து செல்வர்
ஏக்கங்கள் நீங்கிவாழ ஆண்கள் என்றும்
இன்பமுடன் கரங்கொடுத்துத் தூக்கி விட்டால்
இதயத்தால் என்றென்றும் போற்று வாரே 9
நன்மைகளைச் செய்திடவே விரும்பி நிற்பாள்
அன்பதனால் உலகினிலே அமைதி ஓங்கும்
அகிலமதில் பெண்களெல்லாம் வாழ வேண்டும்
இன்னல்களைக் கொடுத்துவிட மடிந்து செல்வர்
ஏக்கங்கள் நீங்கிவாழ ஆண்கள் என்றும்
இன்பமுடன் கரங்கொடுத்துத் தூக்கி விட்டால்
இதயத்தால் என்றென்றும் போற்று வாரே 9
ஏற்றங்கள் வாழ்வினிலே வந்து விட்டால்
இளமையில்நீ விடுகின்ற தவறெல் லாமே
தோற்பதற்கு வழிவகுக்கும் என்றும் வாழ்வில்
துயரங்கள் மனத்தினிலே கொடுக்க நீயும்
சேற்றுக்குள் விழுந்தவனைப் போல நல்ல
செயல்களையும் செயவிடாது தடுத்து நிற்கும்
தேற்றுவார்கள் எவருமின்றி வாழ்வில் நித்தம்
திருப்பங்கள் வாராமல் வாடு வாயே! 10
ஓர்ந்துசெய் வஃதே உரை
(மாறுரையும் நேருரையும்
- பாட பேதம்)
பொன் . இனியன்
8015704659
வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு (632)
இக்குறட்பாவில் அமைச்சருக்குரியதாகக்
குறிக்கப்பட்ட பண்புகள் அல்லது வினைகள் ஐந்து என்பது தெரிகிறது. ஆனால் இதில் அமைந்துள்ள
சொற்களைக் கொண்டு அவற்றை அறிவது அத்துணை எளிதாயில்லை. ஐந்து எவை என்பது குறித்த தேடலில்
உரையாசிரியர்களின் மாறுபட்ட போக்குகளைப் பற்றிய ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.
இக்குறளில் கூறப்பட்ட ஐந்து எவை
என்பதில் உரையாளர்கள் மூவகையாய் வேறுபட்டுள்ளனர். வன்கண், ஆள்வினை என்பவை பண்புத் தொகையாகி
நின்றமையின் அவை ஒருசொல் நீரதாயின. குடிகாத்தல், கற்றறிதல் என்பன கூட்டுச் சொற்களாயினமையின்
இவற்றுள் ஒன்றைப் பகுத்து இரண்டாகக் காட்ட முயன்றனர். ஐந்தைத் தொகைக் குறிப்பாக்கி
‘ஐம்பொறித் தூய்மை’ என ஒரு சாரரும், ‘பஞ்ச தந்திரம்’ எனப் பிறிதொரு சாரரும் உரைத்தனர்.
உரையும் குறையும்
மேற்கண்டவாறமைந்த முத்திற உரைகளின்
வாசிப்பால் எழும் ஐயங்களையும் அவற்றின் துணைகொண்டு திருக்குறளின் உட்கிடக்கையை உணர்ந்து
கொள்வதில் உள்ள சிரமங்களையும் சற்றுக் காண்போம்.
குடிகாத்தல் என்பதை இரண்டாகக்
கொண்டு காட்டினாருள் மணக்குடவர், குடிகாத்தலும் இந்திரியங்களைக் காத்தலும் எனவும்,
பாவாணர், நற்குடிப் பிறப்பும் குடிகளைக் காத்தலும் எனவும், காளிங்கர் குடிகளின் வன்மை
மென்மை வழக்கறிதல், காத்தலாகிய நாடுகாத்தல் காடுகாத்தல் எனவும் மு.வரதராசனார் குடிப்பிறப்பும்
காக்கும் திறனும் எனவும் உரைத்தனர் .
தற்காத்தல் (56), கதங்காத்தல்
(130), சினங்காத்தல் (301) என்பவை போல, குடிகாத்தல் எனற்கும் குடிகளைக் காத்தல் என்பதே
நேரிய தெளிந்த பொருளாகிறது. குடிகாத்தல் எனற்குக் குடிகளைக் காத்தல் எனக் குறித்துக்
காட்டியதன் பின்னும், இந்திரியங்கள் என்பதை மணக்குடவர் எவ்வாறு பெற்றார் என்பது விளங்குதலில்லை.
பாவாணரும் குடிகளைக் காத்தல் எனும் குறள் மூலத்தை உரையில் வைத்துக்கொண்டு குடிப்பிறத்தல்
என்பதை மேலும் பெய்கிறார். இது புறத்திருந்து கொணர்ந்து பொருத்திய இடைச்செருகலாவதன்றிக் குறளின் கிடக்கையாக் கொளற்காதலில்லை.
காளிங்கர், காத்தல் என்பதை நாடு
காத்தல், காடு காத்தல் என இரண்டாக்கியது ஒப்புதற்குரிதேயாயினும் அவ்விரண்டும் மக்களைக்
காத்தல் பொருட்டே என்பதும் அதனை மூலத்தில்
உள்ள குடிகாத்தல் என்ற சொல்லே திருந்த உணர்த்தி
நிற்பது கருத, காளிங்கர் கொண்ட சொற்பகுப்பு வேண்டற்பாலதின்றாம். மேலும் அவ்வாறான பகுப்புக்குப்
பின் குடி எனுஞ்சொல் கருத்துப் புலப்பாடற்றுத் தனித்து நிற்றலைக் காண்க. அதனைக் ‘குடிகளின்
வழக்கறிதல்’ என வலிந்து விரிக்கிறார். குடிகளின்
வழக்கறிதல் அமைச்சர் கடனே யாயினும் இக்குறளில் அதற்கான குறிப்பு ஏதுமில்லை. குடிப்பிறத்தல்
(681), குடியோம்பல் (390), குடிசெய்வல் (1023) என்பன போன்றதே குடிகாத்தல் என்பதும்
அதனால் இரண்டுபடக் கோடற்கு அதில் இடமில்லை என்க.
குடிகாத்தலை ஒருசொல் நீரதாக் கொண்டு
கற்றறிதலைப் பகுத்தாருள் பரிதி முன்னோடியாய்க் காணப்படுகிறார். அதனைக் ‘கல்வி அறிவுடைமை’
எனக் காட்டுவார் அவர். கற்பன கற்றல், உலகியல்
அறிவு மிகுதல் என இளங்குமரனும், நீதி நூல்களைக் கற்றல் செய்ய வேண்டுவன செய்யத் தகாதன
என்பவற்றைத் தெளிவாக அறிதல் உடையவன் எனச் ச.வே.சுவும் காட்டினர்.
கற்றல் என்பது முதனிலை தொடக்கம். அதற்குத் தக நிற்றலே அதன் பயனிலையும்
முடிநிலையுமாகும். கற்றது அறியாமை உய்க்கின்
அது கல்வியாகாது (440) என்பதை ஈண்டு எண்ணுக. கற்றறிதல் என்பது பகுபதமேயாயினும் ஈண்டு
அது ஒரு பொருள் குறித்து நிற்பதேயாம். இவை ஒன்றால் ஒன்றும் ஒன்றோடொன்றும் ஆகி இணைபிரியாதன.
ஒரு நாணயத்தின் இருபுறம் போல்வனவாம். என்னை எனில், கற்றனைத்து அறிவு ஊறுதலானும்
(396), அறிதொறும் அறியாமை காண்டலின் (1110) மேலும் கற்க வேண்டுதலானுமாம்.
“இதனை ஈண்டு எண்ணியவற்றுக்கே தொகையாக்கிக்
குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும்,
கற்றறிதல் என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் ‘உடன்’ என்பதனை முற்றும்மைப்
பொருட்டாக்கியும் ‘குடி’ என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப” எனக் குறிக்கிறார் பரிமேலழகர்
.
தொழில் செய்யுங்கால் மனந்தளராமையும்,
குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்று நல்லன தீயன அறிதலும், முயற்சியும் ஆகிய
ஐந்தும் சிறப்பாக உடையவனே அமைச்சனாவான் என்பதில், எண்ணும்மை நான்கை மட்டுமே வைத்துத்
தொகையை ஐந்து எனக் குறித்துள்ள முனிசாமியார் உரையில் ஓர் உறுதியின்மை தோற்றுகிறது.
நீதி நூல்களைக் கற்று நல்லன தீயன அறிதலும், என முனுசாமியார் குறித்துள்ளதைத் தொடர்
வினையாகக் கொள்வதா அன்றி இருவேறாகக் கொள்வதா என்பது தெரியவில்லை. பேணிக் காப்பாற்றுதல்
எனக் குறித்துள்ள கு.ச.ஆனந்தன் உரையும் ஐந்தைத் தெளிவு காட்டாமலேயே அமைந்துள்ளது. ஐந்தைத்
தொகைக் குறிப்பாகக் கொண்டு ஐம்பொறிகளின் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்சனாவான்
என்பது குழந்தை உரை. ஐந்து தந்திரங்களும் சேர்ந்த சிறப்புடையதுதான் மந்திரிகளின் தன்மை
எனக் குறித்தார் வெ.ராமலிங்கம்.
ஐந்து என்பவை குறள் 27-இல் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. பிறவிடங்களில் பொறிவாயில் ஐந்து
(6), ஆற்றல் ஐந்து (25), பூதங்கள் ஐந்து (271), புலம் ஐந்து (343) எனக் குறிக்கப்பட்டன. இக்குறளில் மட்டுமே ஐயத்திற்கு இடங்கொள்ளுமாறு அமைய நின்றது ‘ஐந்து’ . .. .. ஒளி
என்று ஐந்தும் (939), ..... .. . இடனொடு ஐந்தும்
(675), .. .. வாய்மையொடு ஐந்து (983) என்புழி இக்குறளிலும் கொள்ளத் தகுவது ‘ஐந்து’.
இதைத் தொகைக்குறிப்பாகக் கருத வேண்டுவதின்றாம் .
மற்றெல்லா உரையாளர்களும் ‘ஐந்து’
என்பது இக்குறளுள் எண்ணப்பட்டவற்றின் தொகையே
எனக் கொண்டு அதற்கான கருத்தை இதற்குள்ளிருந்தே வருவித்துக் காட்ட முயன்ற நிலையில் பரிமேலழகர்
இக்குறளில் வள்ளுவர் குறித்தவை நான்கே எனுங் கருத்துடையவராகிறார். அவையும் இவற்றோடு
கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், இந்நான்கினையும் மேற்(குறளில்) கூறியவற்றோடு தொகுத்துக்
கூறியது எனக் காட்டும் பரிமேலழகரின் உரை வரைவில் மூன்று முரண்பாடுகள் காணப்படுகின்றன
.
1) ஒவ்வோரு குறளும் ‘சொல்-பொருள்’
ஆகியவற்றைக் கொண்டமைந்த தனித்தனி கருத்து முழுமையுடையதே என்பதும் எந்த ஒரு குறளும்
பிறிதொரு குறளைத் தன் வாக்கியத் தொடக்கமாகவோ அன்றித் தொடராகவோ கொண்டிருக்கவில்லை என்பதும்
திருக்குறள் முற்றோதலான் பெறப்படும் ஓருண்மையாகும். குறட்டொகுதி முழுவதிலும் ஒவ்வொரு
குறளும் ஒரு தனித்த கருத்துடையதாகவே அமைந்துள்ளதன்றி ஓரிடத்தும் இருபாக்களின் கருத்தை
ஒன்றுகூட்டிப் பொருள்கொள்ளும் வகையில் இல்லை என்பது வெள்ளிடைமலையாதலின் பரிமேலழகரின்
கூற்று ஏற்புடையதன்றாம்.
2) இதை ஒருவாறு ஒப்புவமெனிலோ,
மேற்குறளில் கூறப்பட்டவை(யும்) நான்கேயாயிருக்க, ஐந்தெனும் தொகை காணவேண்டிக் ‘கருவி’யைத்’
தானையும் பொருளுமாக வலிந்து இரண்டாக்கிக் காட்டியது இயல்பாயில்லை. ‘கருவி’யை ஈண்டுத் தானையும் பொருளும் என விரித்துக்
காட்டிய பரிமேலழகர் குறள் 483-க்கான உரையில் கருவியை மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம்’
எனக் குறித்துள்ள முரண்பாட்டினையும் கருதுக.
அஃதன்றியும், மேற்குறளில் (631) வள்ளுவர் குறித்தது மாட்சியையன்றாம்
என்பதும் உன்னுதற்குரிதாம். அருளாள்வார் (245), நட்பாள்பவர் (791), நாணாள்பவர்
(1017), ஒற்றாளுதல் (589) என்பவற்றுள் போல கருவி, காலம், செயற்பாடு மற்றும் அரிதாய
வினைகளை ஆளத் தக்கவன் அமைச்சன் என்பதே மேற்குறளில் குறிக்கப்பட்டன என்பதும்
இக்குறளில் குறித்த ஐந்தால் அமைச்சுப் பணி மாண்புறும் என்பதுமாம். முன்னது ஆட்சி
பின்னது மாட்சி என்பனவாம். அதனால் இரண்டையும் ஒன்று கூட்டியது பிறழ உணர்ந்தவாறாம்.
3) இன்னொன்றையும் ஈண்டு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. காலத்தால் முந்தியவராகக் கருதப்படும்
மணக்குடவருரையில் இப்பாடலே அதிகாரத்தின் முதற்பாடலாகவும் ‘மேற்சொல்லிய’ என்று பரிமேலழகர்
குறிப்பிடும் பாடல் ஐந்தாவதாகவும் வரிசைகொள்ளப்பட்டுள்ளதைக் கருத்தில் கொளின் அவ்வைந்து
எனுஞ் சுட்டு வருவித்துக் கொள்ளும் பொருட்டே குறள் வரிசையில் (இவரால்) மாற்றம் செய்யப்பட்டதோ
எனும் ஐயுறவுக்கு(ம்) இடமுண்டாகிறது.
இதுகாறும் இக்குறளுக்கு அமைந்த
உரைகள் சிலவற்றில் காணப்படும் மாறுபாடுகள் குறித்தும் அவற்றின் கருத்தும் பொருளும் குறளோடு பொருந்தாமையும்
அவற்றை திருக்குறளின் எண்பொருளவாக் கொள்வதில் உள்ள தயக்கத்துக்கான கூறுகளையும் கண்டோம்.
இனி இதன் உண்மைப் பொருளைக் குறளின்
துணை கொண்டே அறியத் தலைப்படுவோம்.
‘ஓர்தல்’ மறைத்த ‘உடன் ஓடு’
குறட்டொகுதியில் பிறவெதனிலும்
இல்லாதவாறாக ஓடு உடன் ஆகிய மூன்றனுருபு இருமுறை பயிலப் பட்டுள்ளதுபோல் அமைந்த ‘ஆள்வினையோடைந்துடன்’
எனும் சொற்றொடரே இக்குறளின் பொருள் காண்பதில் பெரிதும் முட்டுப்பட அமைந்து நின்றது.
திருக்குறளின் அதிகார வைப்பு,
பாக்களின் வரிசை முறை பற்றிய மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், அதன் இற்றை வடிவம், அமைப்பு வள்ளுவர் வைத்த வகையில்
இல்லை; மாறுபட்ட நிலையதே என்பதில் எவரும் உடன்பட்டு நிற்பர்; இப்போது நமக்குக் கிடைத்துள்ள
திருக்குறள் பாடங்கள் படியெடுத்தவர் களின் பாடங்களே. குறள் பன்னெடுங் காலமாய் ஓலை வடிவில்
இருந்த நிலையில், படிஎடுக்கும்போது ஏற்பட்ட பிழைகளால் சுவடி வேறுபாடுகள் உண்டாயின.
இது படி எடுப்பவர் அறியாமலேயே நிகழ்ந்தும் இருக்கலாம். படி எடுத்தவரெல்லாம் இலக்கணம்
திருந்த அறிந்தவரா யில்லாதும் இருந்திருக்கக் கூடும்.
பழைய உரையாசிரியர்களான மணக்குடவர்
பரிதி காளிங்கர் பரிமேலழகர் முதலானோர் உரைகளில் பாட பேதங்காட்டி அவற்றிற்கு உரிய தகவும்
கூறி யிருப்பதைக் கருத, பாட பேதங்கள் அறிந்தேயும் உரையாசிரியர்களால் ஓதப்பட்டன என்பது
தெரிய வருகிறது. இவ்வாறு உரையாசிரியர்கள் பாட வேற்றுமை கொண்டது இரு வகையாலாம்.
1) கால நீட்சியில் சுவடிகளில் ஏற்பட்ட சிதலத்தால் எழுத்துகள் சிதைந்த நிலையில் உரையாசிரியர் உணர்ந்தவாறு இலக்கண
நெறிப்படத் தாமே ஒரு பாடங்
கற்பித்துக் கொள்ளுதல் ஒன்று.
2) ...... ‘என உரைப்பாரும் உளர்’ எனக் குறித்து, மாறுரைத்து அப்பாடற்குத்
தாம் கண்ட பொருட்கியைய ஒரு பாடத்தைக் கற்பித்துக் காட்டுதல் மற்றொன்று.
உரையாசிரியர்கள் தாமே உணர்ந்து
ஏற்படுத்திய பாட வேறுபாடுகள் சற்றேறக்குறைய 516 ஆகப் பட்டியலிடுகிறார் முனைவர் ச.வே.சுப்ரமணியம்..
இவ்வாறான பின்புலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் கீழ்க்கண்ட இருவகையான வாய்ப்புகளால்
இக்குறளில் மாறுபாடு நேர்ந்திருக்கக் கூடும் எனும் ஊகத்திற்கு இட்டுச் செல்கிறது.
சுவடி வடிவில் இருந்தபோது, இக்குறளில், 4-ஆவது சீரின் கடை மற்றும் 5-ஆவது சீரின்
முதற்பகுதியில் ஏதேனும் சிதைவு நேர்ந்து ‘ஆள்வினையோ’ ‘ந்துடன்’ என்றிருந்ததை ஓடு எனவும்
ஐந்துடன் எனவும் இலக்கண நெறிப்பட ‘ஆள்வினையோ டைந்துடன்’ எனக் காட்டியிருக்கலாம். இது
ஒன்று
மூலப்படியில் இருந்த ஆள்வினை‘யோர்
வைந்து’டன் என்பதை ‘ஓரைந்து’ம் (24) என்புழிப்
பொருள்கொண்டு ஓர்’ என்றிருந்ததை ஓடு என எவரோ திருத்தி இருக்கவும் கூடுவதாம். இது மற்றொன்று.
மணக்குடவர் உரை செய்திருப்பது
‘ஆள்வினையோ டைந்துடன்’ எனும் பாடம் கொண்டே யாதலின் அவர் காலத்துக்கு முன்னரே இந்தப்
பாட மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும் எனக் கருத வேண்டியுள்ளது. தக்க சான்றுகள் இன்மையின்
இது வெறும் ஊகமும் கணிப்புமே யாதல் அன்றி இதை உறுதியாய்க் காட்டக் கூடுவதில்லை என்க.
எனினும், இக்குறட்பாவில் குறிக்கப்பட்ட
ஐந்தாவதை இக்குறளுக் குள்ளிருந்தே கண்டு தேருமுன், ஓர்வின் சிறப்பு மற்றும் அமைச்சர்க்கு
அதன் இன்றியமையாமை குறித்த வள்ளுவரின் பார்வை
எவ்வாறானது என்பதைச் சற்று எண்ணுவம்.
ஓர்ந்து யார் மாட்டும் கண்ணோடாது
இறைபுரிந்து தேர்ந்து செய்வஃதே முறை (541) என்றும் எண்பதத்தான் முறைசெய்யா மன்னவன்
ஓரா தன்பதத்தால் தானே கெடும் (548) என்பதும் செங்கோன்மை அதிகாரத்தில் காட்டப்படுகின்றன.
அரசு வினைகள் யாவும் அமைச்சன் வாயிலாகவே நிகழ்த்தப்படுதலும், மன்னன் தன் செயலாற்றலுக்கு அமைச்சனையே சார்பு கொண்டிருத்தலும்
ஆட்சிமுறையின் இயற்பு. ஒற்றுரையும் நூல் சான்றினையும் மன்னனுக்கமைந்த (Annexed
vision) தெற்றுக் கண்களாகக் (581) காட்டுகிறார் வள்ளுவர். நூல் சான்றுகளைத் தக்கவாறு
ஓர்ந்து காட்ட வல்லவனாய் அமைச்சர் உடனிருக்கிறார். இது மன்னன் நாடொறும் நாடி முறை செய்யுங்கால்
ஓர்தல். சூழாது கோல்கோடி அல்லவை செய்யுங்கால் முறை செய்யுமாறு மன்னற்கு எண்பதங் காட்டி
ஓர்வு ஊட்டுங் கடமையும் அமைச்சர்க்கே உரியதாயிற்று.
பொச்சாப்பு உடையார் தம் வினை நன்றாகா
(534). பொச்சாந்திருக்கும் அமைச்சரால் தம் கடமைகளை முறைப்பட ஆற்றுதல் ஏலாது. வினை செய்வார்க்கு
வேண்டப்படும் கருவிகளுள் தலையாயது பொச்சாவாமை (537). கெடுவார்க்குரிய கலங்களுள் ஒன்றாக
மறவியைச் சுட்டிய வள்ளுவர், ஆகாத அரிய என்று
இல்லை பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின் (537) எனக் குறிக்கிறார். அருவினையும்
ஆள்பவராகிய (631) அமைச்சர்க்கு அது எத்துணை இன்றியமையாது வேண்டப்படுவ தென்பது சொல்லாமலே
பெறப்படும்.
அரசியலில் பொச்சாவாமைக்கென ஓரதிகாரம்
வைத்துக் காட்டியுள்ளதையும் உட்கொண்டு இக்குறளை
அணுகினால் நான்காவது மற்றும் ஐந்தாவது
சீர்களின் (Phonotic) ஒலிக்கூறுகளோடு இயல்பாய்ப் பொருந்தி நிற்பதாக, ‘ஆள்வினையோர் வைந்துடன்’ எனப் பாடங் கொள்ளுதற்குரிய
ஏரணம் எவர்க்கும் எளிது விளங்கும்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோர்
வைந்துடன் மாண்ட தமைச்சு
(ஆள்வினை + ஓர்வு + ஐந்துடன் - ஆள்வினையோர்வைந்துடன்)
எண்திடம், மக்கள்நலம், கல்வியறிவு,
செயல்திறன், ஓர்ந்துசெயல் ஆகிய ஐவகையாலும் அமைச்சரின் பணி மாண்புற்று விளங்கும் என்பது
இதன் நேரிய நிரை பொருளாயமைகிறது.
ஓர்வு - ஓர்தல் எனற்கு (கற்றது
மறவாமை) நினைவு கொளல் என்பது பொதுக் கருத்து. ஆழ்ந்து நினைதல், அறிந்து ஆய்ந்து உணர்தல்
என்பது சிறப்புப் பொருள். ஈண்டு ‘ஓர்வு‘ என்றது அறநூல் மற்றும் ஆட்சி நூல் பற்றிய நுண்ணறிவைக்
குறித்தது.
இது பாட பேதம் காட்டும் முயற்சியன்று
என்பதும் இப்பாடலுக்கு உரை கொள்வதில் முன்னிருந்த முட்டு நீக்குவான் பொருட்டு வேண்டியதொன்றா
யாதலுங் கருதுக. இப்பாடத்தால் குறளின் சீர்மை மிகுதலன்றி அதன் சிறப்பு கெடுதல் இல்லையாம்.
இதற்கான தகவும் தரவும் தருவது குறளேயாவதால் இதைப் பாடமாற்றம் எனக் கொள்ளாமல் பாடமீட்சி
எனக் கருதுமாறு குறளாய்வாளர்களையும் அறிஞர்களையும் வேண்டுகிறோம்.
காதலால் காதல் செய்க
மணிமாறன் கதிரேசன்
பட்டயக் கணக்காளர்
(Chartered Accountant)
காதல்…
காதல் என்னும் வாழ்க்கை எவருக்கும்
வராமல் இருந்ததில்லை. வராமல் இருந்தால் அவர்கள் மனிதனின் பிறவிக்கும் மேல்.
ஆம்…
காதல் இல்லாது வாழ்க்கையே இல்லை.
அனைத்தையும் துறந்த முனிவர்கள்கூடத் துறவறத்தின் மீதுள்ள காதலால்தான் சாத்தியமே தவிர
காதலில்லா வாழ்க்கை இல்லை. காதல் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமானதென்று
இக்காதலைக் கட்டுப்படுத்திவிடாதீர்கள். காதல் ஒரு மிகப்பெரிய சக்தி, இந்த சக்தி நம்
வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்குக் காரணமாகவும் இருக்கலாம் அல்லது தோல்விக்கான
காரணமாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு காதலியின் கதையை ஆரம்பிக்கிறேன்.
என்னுடைய நான்காம் வயதில் எல்லோரையும்போல
என்னையும் பள்ளியில் சேர்த்தார்கள். முதன்முதலாகக் கல்வி எனும் தோழி எனக்கு அறிமுகமான
தருணம். எனக்கும் அவளுக்குமான நட்பு நகமும் சதையும் போல நன்றாகவே வளர்ந்தது. இருப்பினும்
அந்த நட்பு தொடர்வதில் பல சிக்கல்கள். கல்வித் தோழிக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னுடன்
பழகுவதைத் தவிர்க்க ஆரம்பித்தாள். எனக்கும் அவளுக்குமான நட்பு நீடிக்கவில்லை. அதன்
காரணமும் ஏனோ புரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் கல்வியெனும் நட்புக்கு இடமில்லையென்றே
தீர்மானம் ஆனது. நானும் ஐந்தாம் வகுப்புவரை எதிரியாக மாறிய கல்வியிடம் பலமுறை தோற்றாலும்
இறுதியில் படிப்பை முடிக்கும் அளவுக்கு எதிர்த்தே போட்டியிட்டேன்.
என்னுடைய ஆறாம் வகுப்பில் எனக்குள்
சில மாற்றங்கள். இதுவரை எதிரியாக நினைத்த கல்வி என்னும் தோழிமீது ஏனோ ஒருவித காதல்.
காதல் மோதலில் மலரும் என்று சொல்வார்களே, அதுபோல எனக்குள்ளும் எதிரியாகத் தெரிந்த கல்வித்
தோழி பல மோதல்களுக்குப் பிறகு காதலியாகத் தெரிந்தாள். என்னுடைய காதலை வெளிப்படுத்த
முயன்ற பல முயற்சிகளுக்குப் பின்னரும் ஏனோ அவள் ஏற்கவில்லை. அவளிடம் பலமுறை எடுத்துக்
கூறியும் என் காதலை உதாசினப்படுத்தியவாறே இருந்தாள். நானும் அவளும் எல்லா நேரத்திலும்
ஒன்றாக இருந்தாலும்கூடத் தாமரை இலையில் உள்ள நீர்போல எங்களது உறவும் ஒட்டியும் ஒட்டாமலே
இருந்தது. என்னுடைய பத்தாம் வகுப்புவரை அவளுக்காகக் காத்திருந்து அவளை அடைய முடியாதெனத்
தீர்மானித்த தருணம். எனக்கும் அவளுக்கும் உள்ள காதலென்ன, நட்புக்கூடத் தொடராதென முடிவெடுத்தேன். ஆக எனக்கும்
படிப்பு வரவில்லை. எனவே வெளிநாட்டிற்குச் சென்று பிழைப்பைத் தேட ஆயத்தமானேன். அதற்கான
வேலைகளை வெகுவிரைவாகச் செய்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இது ஒரு காதல் தோல்வியில்
எடுக்கப்பட்ட உச்சக்கட்ட நடவடிக்கை. கண்டிப்பாகக் காதல் தோல்வியில்தான் முடியும். ஏனெனில்
அது ஒருதலைக் காதலே. ஆக என்னுடைய முடிவும் சரியென நானே உறுதிகொண்ட தருணம்.
ஆனால், வாழ்க்கையில் மாற்றங்கள்
கண்டன. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்களே அதைப்போல. என்னுடைய வாழ்க்கையிலும் அந்த மாற்றம்.
ஆம்… கல்வித்தோழியோ காதலியாக மாறிய தருணம். என்னுடைய பத்தாம்வகுப்பு பள்ளித் தேர்வில்
அவளின் காதலை உணர்ந்தேன். தேர்வே ஆக முடியாத என்னைத் தேர்வாக்கி விட்டுச் சென்ற அவளின்
காதலை உணர்ந்தேன். இருப்பினும் ஏனோ அவளின் காதலை ஏற்க மனமில்லாமல் வெளிநாட்டிற்குச்
செல்லவே முற்பட்டேன். ஆனால் கடவுளால் அமைக்கப்பட்ட விதியை மாற்றவா முடியும். அவ்விதியின்படி
குடும்ப உறுப்பினர்களின் கட்டளைப்படி என்னுடைய மேல்படிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் உண்மையில்
எனக்கு அவளின் மீதான காதலில் நம்பிக்கையற்றே இருந்தேன். மாறாக அவளோ என்னிடம் காதல்
மொழியைக் கொட்டித் தீர்த்தாள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனமோ அந்தக்
காதல் அனுதாபக் காதலோ என வருந்தியது. இருப்பினும் அவளின் உண்மைக் காதலை அறிந்துகொள்ள
மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பல வருடங்களாக வராத காதல் எப்படி இப்பொழுது மட்டும்
சாத்தியம். என் மனம் பெரும் குழப்பத்திற்கிடையே இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. கல்விக்
காதலியும் காதல் மழை பொழிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. என்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத்
தேர்வில் காதலியின் வெற்றி மதிப்பெண்ணில் தெரிந்தது. நானும் என்னுடைய படிப்பை மற்றவர்கள்
போலவே கல்லுரி வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கலானேன்.
கல்லுரியில் சேர்ந்த தருணம் வயதும்
வரம்பை அடைந்த தருணம், காதலை உணரும் வயதும் வந்தது. கல்விக் காதலியின் உண்மைக் காதலை
உணர்ந்து அவளின் காதலை ஏற்ற தருணம். காதலியின் காதலுக்காக ஏங்கியிருந்த காதலுனுக்கு
இதைவிட வேறென்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகின்றது. கல்லுரி வயதில் தொடங்கிய காதலியினுடனான
காதல் இன்றளவும் பல வருடங்கள் தாண்டிச் செம்மையுடனும், செழிப்புடனும் எவ்வித சண்டை
சச்சரவுகளுமின்றி இருவருக்குமிடையே உள்ள காதலின் பந்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிநாள் வரை அவளுடனான காதல் தொடரும்.
ஆம்…
கல்வியே என்னுடைய காதலி. கல்வி
என்னும் காதலியைக் கைப்பிடிக்கக் காதலென்னும் ஆயுதத்தைப் பயன்படுத்திக் காதலால் காதலை
வென்றேன்.
காதலால் காதலியைக் காதல் செய்க.
காதல் என்றும் உன்னைக் கைவிடாது;
நீ அக்காதலை முழுவதுமாக நம்பும்வரை.
காதலால் காதல் செய்க.
புலம்பெயர் நாடும் வாழ்வும்... 9
இணுவையூர் வ.க.பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து
முதியோர் வாழ்வு
இந்நாட்டில் வாழும் ஒருவர் 65 அகவையடையும் போது தனக்கான ஓய்வூதியத்
தொகையினைப் பெற உரிமையுடையவராகிறார். அனைவருக்கும் அடிப்படை ஓய்வூதியத் தொகையானது ஒரே
மாதிரியாக விருக்கும். ஒவ்வொருவரும் தாம் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட
தொகையினையும், அதே போல பணி வழங்குவோர் ஒரு குறிப்பிட்ட தொகையினையும் பணிபுரியும் காலத்தில்
வழங்குகின்றனர். இத்தொகையானது ஓய்வூதிய அகவையினை அடையும்போது முழுமையாகவோ அல்லது மாதாமாதக்
கொடுப்பனவாகவோ, ஓய்வூதியம் பெறுபவரின் வேண்டுகோளுக்கேற்ப வழங்கப்படும்.
ஓய்வூதிய அகவைக்கு முன் ஒருவர் வேலைசெய்யும் காலத்தில் நோய்வாய்ப்பட்டோ
அல்லது உடலூனமுற்றோ இருப்பாரானால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
மேலும் 65 அகவையில் ஓய்வூதியத்தினைப் பெறும் ஒருவர் 80 ஆயிரம் குறோனருக்கு
மேற்படாத சொத்துக்களைக் கொண்டிருக்குமிடத்து அவருக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக வாடகை வீட்டிலிருப்பவராக இருந்தால் வாடகைப் பணத்திற்காகவும், வீட்டினை
வெப்பமூட்டுவதற்கான செலவிற்காகவும் குறிப்பிட்ட தொகை அரசால் வழங்கப்படும். இது மட்டுமில்லாமல்
ஆண்டு முடிவில் 16 ஆயிரம் குறோனர் மேலதிகமாகவும் வழங்கப்படுகின்றது.
இங்கு கட்டணமில்லா மருத்துவம் என்பதால் நோயுறும்போது போக்குவரத்து உட்பட
அனைத்தும் கட்டணமின்றிக் கிடைக்கின்றது. மருத்துவ மனையில் உணவு, மாற்று உடை அனைத்தும்
வழங்கப்படுகின்றதினையும் குறிப்பிடலாம்.
ஓய்வூதியம் பெறுவோர்கள் தனித்து அல்லது கணவன் மனைவியாக மட்டுமே வாழ்கின்றார்கள்.
இவர்கள் பிள்ளைகளுடன் வாழ்வதினை விரும்புவதில்லை. பிள்ளைகளும் பெற்றோரினைத் தம்முடன்
வைத்திருப்பதினை விரும்புவதில்லை. இப்போது எமக்கு ஒரு கேள்வி எழும்... ஒருவர் நோயுற்று
வீட்டிலிருக்கும்போது அவருக்கான தேவைகள் எப்படிக் கிடைக்கும்... ஆம் இதனையும் அரசே
மேற்கொள்கின்றது.
தான் வசிக்கும் வீட்டினைச் சுத்தம் செய்வது, பயன்படுத்திய உடைகளை சுத்தப்படுத்துவது,
நேரம் தவறாமல் மருந்தினை உட்கொள்வது, உணவு உண்பது இப்படிப் பல தேவைகள் இருக்கும். இவற்றினை
நிறைவேற்றிக் கொடுப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட உதவியாளர்கள் ஒவ்வோர் கிராமசபைகளிலும்
பணிக்காக அமர்த்தப் படுகின்றார்கள். இவர்கள் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள்,
ஒவ்வொருவரும் அவசர அழைப்புக்காக உருவாக்கப்பட்ட கருவியினைக் கழுத்தில் அணிந்திருப்பார்கள்.
தேவையேற்படும்போது இக்கருவியினை அழுத்தினால் போதும். உதவியாளர் விரைந்து வந்து தேவையினைப்
பூர்த்தி செய்வார்.
வாடகைக் குடியிருப்பில் இருக்கும்போது மிகவும் இயலாத்தன்மையினை ஒருவர்
பெற்றால் அவர் உடனடியாக முதியோர் இல்லத்திற்கு மாற்றப்படுவார்.
இயலாத்தன்மை, மாறாட்டம், உடலூனமுற்ற தன்மை போன்ற அடிப்படையில் முதியோர்
இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுப் பராமரிக்கப் படுகின்றார்கள்.
இப்படியான வாழ்வுப் போராட்டத்தில் மாட்டித் தவிக்கும் முதியோரினைப்
பிள்ளைகள் கைவிட்டு விடுகின்றார்களே என்ற என்ணம் எமக்குத் தோன்றும். இதுபற்றி எனது
வெள்ளைக்கார நண்பர்களுடன் கதைத்திருக்கின்றேன். அவர்களின் கருத்துச் சரியாகத்தான் தோன்றுகின்றது.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லுமிடத்து இவர்களின் தேவைகளை எப்படிப்
பூர்த்தி செய்வது. தாய் தந்தை முதியவர்களாக இருப்பினும் அவர்களின் தனித்தன்மையில் எப்படித்
தலையீடு செய்வது.
நாம் சாப்பிடுவதினைத்தான் நீயும் சாப்பிட வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்துவது.
என் மனையாளுக்கு, என் தாய் தந்தையினைப் பார்க்க வேண்டும் என்று என்ன
கட்டாயம்?
இப்படிப் பல கேள்விகளை முன்வைக்கின்றார்கள். இதே போன்று முதியவர்களும் தம் கருத்தினை முன் வைக்கின்றார்கள்.
என் தனித்தன்மையினை எப்போதும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.
அவர்கள் வாழ்க்கையினை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்
கணவன் மனைவிக்கிடையில் உள்ள ஊடல் கூடலுக்குத் தடையாக இருக்கக்கூடாது.
இப்படித் தம் கருத்தினை முன் வைக்கின்றார்கள்
இப்படியான கோட்பாடுகளுக்குள் இவர்கள் உள்வாங்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்ட
நிலையில் இதுவே பண்பாடாகவும் மாறியுள்ளது எனலாம்.
பாட்டியற்றுக 13
அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக
ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.
2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில்
வெளியிடப்படும்.
3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.
4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும்
எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.
தடுமாறி வாழாதே! தடம்மாறித் தாழாதே!
குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 12
கலிவிருத்தம்
1. கந்தையா நடனபாதம்
முயற்சி நிறைய முகமுந் திளைக்கும்
அயற்சி புகுந்தால் அமைதி விலகும்
செயலைச் திருந்தச் செயலே சிறப்பாம்
வியந்து நயக்க விலகு மிருளே !
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
2. வ.க.கன்னியப்பன், மதுரை
கயமையை நீக்கிக் கனிவுடன் வாழ்தற்
குயரிய கொள்கையை யுள்ளத்தி லெண்ணிச்
செயமு மடைந்திடச் சிந்தையிற் கொண்டு
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்
3. மெய்யன் நடராஜ்
பயிலா ததுவைப் பயின்று முறையாய்
முயலும் வகையோர் முயற்சி யெடுத்து
வியக்கார் வியக்க விருந்து படைக்கும்
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்
நேரிசை வெண்பா
4. செல்லையா வாமதேவன்
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்
அயலுந் திருந்தும் அதனால் - முயல
வயலும் மலரும் வறுமை கருகும்
துயரைத் துடைக்கத் துணி.
5. பூங்கா சண்முகம், புதுச்சேரி
நயன்தூக்கி நன்மை விளைப்பன வேனும்
வியனுலகின் மேன்மைக் கெனினும் -- உயர்வாம்
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்
பயனிலவாம் பண்பிற் பிழை
நடுப்பக்க நயம்
மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
இனவுணர்வு கொள்
உயிர்களை ஆறாகப் பகுத்துக் காட்டியதுடன், அவை இன்னின்ன என்று தொகுத்தும் காட்டி, மரம், செடி, கொடிகளுக்கும் உயிருண்டு; அவற்றிற்கும் உணர்வுண்டு என்றும் கூறியவர் நம் தாத்தா தொல்காப்பியர். (19ஆம் நூற்றாண்டில் ஜெகதீஸ் சந்திரபோஸ் என்னும் இந்தியர் (தமிழரல்லர்) செடிகளுக்கு உயிருண்டு என்பதைக் கருவி மூலம் நிறுவி "சர்" பெற்றார்.)
உயிர்களை உற்றுநோக்கி வாழ்வியலை வகுத்த நம் முன்னோர் அவற்றின் செயல்பாடுகளிலிருந்து தம் வாழ்வியலையும் முன்னேற்றிக் கொண்டனர்.
மீன்களைக் கண்டு நீந்தக் கற்றவன், குதிரையைக் கண்டு தேரைக் கண்டவன் வாழ்வில் கற்ற பாடங்கள் அதிகம்.
வாழ்வியல் மட்டுமா? எத்தனை கண்டுபிடிப்புகள்?
பறவையின் இயக்கத்தைப் பார்த்தவன் வானூர்தியைக் கண்டான்.
கால்நடைகள் சேற்றில் நடந்த அடிச்சுட்டைப் பார்த்து "அச்சு இயந்திரத்தைக்" கண்டான்.
பறவையும், விலங்கும் தங்களுடன் பரிமாறிக் கொண்டதைப் பார்த்தவன் "அலைபேசி, வானொலி, தொலைக்காட்சி" என்று ஆயிர மாயிரமாய்க் கண்டுபிடித்தான். இன்று அறிவியலின் உச்சத்தில் நாம் உலவிக் கொண்டிருக்கிறோம்.
சிந்திக்கத் தெரிந்ததால் ஆறாவது அறிவு பெற்றவனான மாந்தன் முற்றிலுமாகக் கற்றானா? இல்லையென்கிறார் பேராசான்.
புழுக்கள் தின்னும் இலைகள்தான் இரசாயனம் அற்றவை என்பதைப் புரிந்துகொண்டானா? இல்லையே. இரசாயனம் தெளித்த இலைகளைப் புழுக்கள் உண்பதில்லை. புழுக்கள் கொறித்த இலைகளை நாம் ஒதுக்கிவிடுகிறோம்.
என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் வயிறு சரியில்லையென்றால் நாய்கள் உண்பதில்லை. இதைக் கற்றானா மனிதன்? இல்லையே… கிடைத்தவற்றை அள்ளிப்போட்டு வயிற்றைக் கொல்லும் செயலைத் தானே செய்கிறான்?
இந்த உலகத்திலேயே முதல் கட்டடப் பொறியாளர் காக்கைதான் என்பதை அறிந்த மனிதன், அவற்றின் இனக்காப்புணர்வை ஏனோ கவனித்துத் தொடர மறந்துவிட்டான்.
காக்கை கரைந்துண்ணும்போது பாருங்கள். நல்ல உணவை உண்ணும்போது அவை தன் இனத்தை அழைத்துண்ணும். ஆனால், செத்த எலி போன்ற இரையை உண்ணும்போது அழைத்துண்பதில்லை. தனக்குக் கேடுற்றாலும் தன் இனத்தார் நலமாயிருக்கட்டும் என்ற இனவுணர்வு.
இந்த அரிய செயலைக் கண்டுணர்ந்த ஐயன் திருவள்ளுவர் அழகாக அதைத் தன் பனுவலில் சுட்டுகிறார்.
"காக்கை தானுண்ணும் இரையை மறைத்து வைக்காமல், தன் இனத்தையும் அழைத்துண்ணும்" என்று சொன்னவர். “ஆக்கமும் அந்தப் பண்புடையவர்க்கே வாய்க்கும்” - என்றோர் உம்மையைக் கூறித் தொக்கவைக்கிறார்.
ஆம்… ஆக்கமானபோது இனத்தை அழைத்து உண்ணும் காக்கை, கேடுறும் உணவென்னும்போது தன் இனத்தை அழைப்பதில்லை. அதுபோல, தன் சுற்றத்தார்க்கு நன்மை தருமெனின் அரவணைத்தும், கேடுறுமெனில் அவர்களை விலக்கி அக்கேட்டைக் களைய வேண்டும் என்ற பேருண்மையைக் காக்கையை வைத்து நமக்குக் கூறுகிறார்.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள.
(குறள்.527 சுற்றந்தழால்)
சரி... இது உன்னுடைய கருத்தாகாதோ? என்று நீங்கள் ஐயுறலாம். சான்றேதேனும் உளதா? என்றென்னை வினவவும் கூடும்.
இல்லாமலா? திருமந்திரத்தில் இருக்கிறது... இதற்கு விளக்கம்.
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே (திருமந். 250)
காக்கை தன் இனத்தை அழைத்துண்ணும் "காலத்தை" அறிிந்து கொள்ளுங்கள் என்கிற திருமூலரின், காலம் என்ற சொல் எப்போது இனத்தை அழைத்துண்ணும்? அழையாம லுண்ணும் என்ற மறைகுறிப்பைக் காட்டும்.
காக்கை தன் இனத்தை அழைத்துண்பதுபோல் நீங்களும் பிறருக்குப் பகிர்ந்து உண்ணுங்கள் என்று பொருளாகாதா? என நீங்கள் கேட்கலாம்..
ஆயின், காலம் என்னும் சொல்லுக்குப்பதில் பண்பை என்ற சொல்லை அவர் ஆண்டிருந்தால் அந்தப் பொருள் மிக எளிதாக வருமே. ஆனால், "காலம்" என்னும் சொல்லாலும், ஐயனின் "உம்மை"யாலும் நமக்குக் கிடைக்கும் செய்தி இதுதான்...
உனக்குக் கேடுவந்துற்றாலும் உன் இனத்தைக் காக்க வேண்டும்! ஆனால் இன்றைய தமிழினம்...?
Subscribe to:
Posts (Atom)