பாவலர் மா.வரதராசன்
கம்பன் கவிநயம்! -4
வாலிவதை நல்வழியா? அல்வழியா?
கம்பராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்ற விவாதம். வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியான முறையா? தவறான முறையா?
பலரும் அது தர்மத்தின்பாற்பட்டதே என்பர். ஏறத்தாழ இராமன் செய்தது சரியே என்பதற்குப் பல காரணங்களை அடுக்குவர். அவன் கடவுளாயிற்றே!
சிலர் அதர்மமே என்பர். ஆனால் அதை நிறுவ ஏதேனும் சான்று கேட்டால் அவரிடம் இருக்காது.
இப்போது நாம் விளக்கத்திற்குப் போகலாமா.!?
★
இல்லறம் துறந்த நம்பி
எம்மனோர்க் காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன்
தோன்றலால் வேத நன்னூல்
சொல்லறம் துறந்தி லாத
சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்த(து) என்னா
நகைவர நாணுக் கொண்டான்"
(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1-2)
தன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்ன காரணத்தால், தனது இல்லற தர்மத்தைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட இராமன், குரங்கு இனத்தவராகிய எமக்காக, விற்போருக்கு என்று அமைந்துள்ள தர்மத்தைக் கைவிட்டு மறைந்து நின்று எம்மீது அம்பு எய்த வந்து பிறந்த காரணத்தால், பெருமைக்குரிய சூரிய குலமும் தனது நல்லறத்தைத் துறந்து விட்டதே என்றெண்ணி ஏளனமாக நகைத்த வாலி, எப்பேர்ப்பட்ட இராமன் தனது குலப் பெருமையையும், தனது விற்போர் தர்மத்தையும் குரங்கினத்தானாகிய தனக்காகக் கைவிட்டான் என்பதை நினைத்து வெட்கப்பட்டான்.
தேவியைப் பிரிந்த பின்னைத்
திகைத்தனை போலுஞ் செய்கை
(கிட் ; வாலிவதைப்படலம் :78 :4) என்றும்.
வலியவர் மெலிவு செய்தாற்
புகழன்றி வுசையு முண்டோ
(கிட் ; வாலிவதைப்படலம் : 80 : 4)
என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விக் கணைகளால் துளைக்கிறான் வாலி.
அதற்கு இராமனோ, தன் செயலைச் சரியெனக் காட்டுதற்குக் காரணங்களைக் கூறுகிறான்.
"தவறு செய்யாத தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலமென்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது, அறத்துக்குப் புறம்பாக உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்தது ஆகிய காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னைப் பயிருக்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன்" என்றெல்லாம் வாலி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இராமன் பேசுகிறான்.
வாலி இவற்றை மறுத்து, "எங்களுக்கு மனம் போனபடி வாழ்கின்ற முறையும், குணமும் அமைந்தன. வேத நெறியும், கற்பு நிலையும் வானரர்களுக்குக் கிடையாது. எனவே எங்கள் பிறப்புக்குரிய தன்மைகளின்படி, நான் யாதொரு குற்றமும் செய்தவனல்லேன். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாலி கூறினான்.
வாலியின் இந்த பதிலைக் கேட்டு இராமன் கூறுகிறான், "வாலி! நீ தேவர்களைப் போல பிறந்து, அறங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்று, நீதிகளை உணர்ந்தவன். ஆதலின் உன்னை மிருக இனமாகக் கருத முடியாது." என்று சமாளிக்கும் இராமனை நோக்கி இறுதியாக, இராமனை ஊமையாக்கும் கணையைத் தொடுக்கிறான் வாலி.
"நீ கூறிய அனைத்தும் உண்மையே ஆகட்டும். ஆனால் போர்க்களத்தில் நேருக்குநேர் நின்று போரிட வராமல், காட்டில் விலங்குகளை மறைந்து நின்று கொல்லும் வேடனைப் போல என்மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தது என்ன நியாயம்? சொல்!" என்றான்.
இதற்கு இராமன் பதில் சொல்லவில்லை, இளவல் இலக்குவன் இடையில் புகுந்து பதில் கூறுகிறான்: "முதலில் உன் தம்பி சுக்ரீவன் வந்து இராமனிடம் சரணாகதி என்று அடைக்கலம் புகுந்தான். முறைதவறி நடந்து கொண்ட உன்னைக் கொல்வேன் என்று சுக்ரீவனிடம் இராமபிரான் வாக்குக் கொடுத்தார். தீமைகளை அழித்து அறத்தை நிலைநாட்டவே இராமன் உறுதி பூண்டவர் என்பதும், அறத்துக்குப் புறம்பான எதையும் அவர் செய்யமாட்டார் என்பதையும் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பதே தனது தலையாய கடனாகக் கொண்டவர் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னோடு நேருக்குநேர் நின்று போர் செய்ய இராமன் வந்தால், நீயும் இராமனிடம் சரணடைந்து விட்டால், தனது வாக்குறுதியி லிருந்து மாறுபட நேருமென்பதால், சுக்ரீவனுக் களித்த வாக்குறுதிப்படி உன்னை மறைந்திருந்து கொன்றார்" என்றான்.
இறுதியில் வாலி ஒருவாறாக மனம் அமைதியடைகிறான். .
"தாயென உயிர்க்கு நல்கி
தருமமும் தகவும் சார்வும்
நீயென நின்ற நம்ப
நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்பால்
நவைஉறல் உணர லாமே
தீயன பொறுத்தி என்றான்
சிறியன சிந்தி யாதான்".
★★★
இதுவரையே அனைவரும் வாலிவதம் பற்றிய கருத்து எல்லைக்குள் நிற்பர். சிக்கலான இவ்விவாதத்தை ஒருசார்புடைத்தாய் ‘இராமன் செய்தது சரியே’ என்றும், கம்பரையும் ஒருசார்புடைத்தவராய்க் காட்டுவர்.
ஆனால், உண்மையிலேயே கம்பருக்கு அப்படிப்பட்ட உள்ளமில்லை. இராமன் செய்தது மிகப்பெருந்தவறு என்பதே கம்பரின் உள்ளம்.
உலகத்தார் என்னென்ன ஐயங்களை எழுப்புவர்? என்று எண்ணியெண்ணிப் பார்த்துத் தன் பனுவலை நகர்த்திய கம்பருக்கு, இராமனை நல்லவனாக்கி அவன் செய்த செயலைச் சரியென்று நிறுவி நடுவுநிலை தவறும் எண்ணம் இல்லாததால், இராமன் வாயாலேயே 'தான் செய்தது தவறு, அறமற்ற செயல்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைக்கிறார்.
ஆம். குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தீர்ப்பு எவ்வாறு அமையும்? குற்றம் செய்தவன் குற்றவாளியென்றுதானே தீர்ப்பு அமையும்?
இதோ அந்தக் காட்சி.
வாலிவதம் முடிந்தபிறகு சுக்ரீவனுக்கு முடிசூட்டியும் முடிந்தபின், "இராமா! இன்னும் சிலகாலம் கிட்கிந்தையில் தங்கிச் செல்ல வேண்டுகிறேன்" என்கிறான் சுக்ரீவன்.
அப்போது இராமன் அவனுடைய வேண்டுகோளை மறுத்து அதற்கான காரணத்தைக் கூறுகிறான். ஆம். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறான். பாருங்கள் அந்தப் பாடலை!
★ (ஏனோ தெரியவில்லை, இலக்கிய வல்லார்கள் எவருடைய பார்வைக்கும் இந்தப் பாடல் தெரியாமல் போனது வியப்புதான்! நான் சொல்லவேண்டும் என்று இதுநாள் வரை இருந்ததோ? )★
இல்லறம் துறந்தி லாதோர்
இயற்கையை இழந்தும், போரின்
வில்லறம் துறந்தும் வாழ்வேற்(கு)
இன்னன மேன்மை இல்லாச்
சில்லறம்; புரிந்து நின்ற
தீமைகள் தீரு மாறு
நல்லறம் தொடர்ந்த நோன்பின்
நவையற நோற்பல் நாளும்”
(வாலி.வதை. 4137)
“இல்லறத்தைத் துறக்கக் கூடாத இயல்பான நிலையை இழந்தும் (இல்லறத்தை நீங்கியும்), போரில் மீறக் கூடாத வில்லறத்தைத் துறந்தும் (வாலியை மறைந்துநின்று கொன்றது), வாழ்விற்கு 'இவையிவை’ மேன்மையெனச் சொல்லப்பட்ட எவையும் செய்யாமல் சிறுமைபூண்டும், நானிழைத்த தீமைகளெல்லாம் தீர்ந்தொழிய வேண்டி நன்மை தரக்கூடிய நோன்பு நோற்கப் போகிறேன். எனவே, நான் இங்குத் தங்கவியலாது”. இதுதான் இராமன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.
"போரில் தான்செய்தது அறமற்ற செயல், அந்தப் பாவம் தீரத் தவம் செய்யப்போகிறேன்" என்று "அறமே வடிவான இராமனே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன முடிவுக்கு வருவது?
நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!
★★★
கூடுதல் விளக்கம்
***********************
விசுவாமித்திர முனிவா், தாடகையைக் கொல்லுமாறு ஆணையிட்டபோது, இராமன் தயங்குகிறான். முதன்முதலில் ஒரு பெண்ணைக் கொல்வதா என்று நினைக்கிறான். தாடகை அரக்கியானாலும், அவள் ஒரு பெண்தானே? என்ற எண்ணமே அவன் மனத்தில் ஓடுகிறது. முனிவாின் வற்புறுத்தல் காரணமாகவே அவளை, இராமன் கொல்கிறான். இதைக்கூட வில்லறம் துறந்த செயலாக இராமன் கருதியிருக்கக் கூடுமல்லவா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம்.
ஆம். நல்ல ஐயம். தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். உண்மைதான். அவள் ஒருபெண் என்பது அதற்குக் காரணமே. ஆனால் முனிவரின் விளக்கத்தை ஏற்கும் இராமன் அவளைக் கொல்கிறான். எப்படி?
பாறையைப் போன்ற வைரம்போல் இறுகிய உடலைக் கொண்ட கொடிய அரக்கியாம் தாடகையில் மார்பில் பாய்ந்த அம்பு, கல்லாதவர் உள்ளத்தில் நில்லாத அறிவுரையைப் போல் அவளுடைய மார்பில் குத்தி நில்லாமல் துளைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றதாம். அவ்வாறாயின் எத்துணை வேகத்துடன், வலிவுடன் இராமன் கணையைச் செலுத்தியிருக்க வேண்டும்? தயக்கத்தை ஓட்டியபின் இராமனின் உள்ளத்தில் எந்தச் சலனமுமில்லை. எந்தத் தயக்க உணர்வும் குற்றவுணர்வுமில்லை என்று காட்டும் காட்சியிது.
அவன் தாடகையை வீழ்த்தியபின் தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்துரைக்கிறார்கள்.
யாமுமெம் மிருக்கை பெற்றோம்
உனக்கிடை யூறு மில்லை
என்று முனிவரையும் இராமனை வாழ்த்துகிறார்கள்.
***
வில்லறம் எனில் வீரத்தைக் குறிக்கும். வீரமெனில் எதிரெதிர் நின்று போரிடலாகும். தாடகைப் போரில் இராமன் செய்தது போர். (காகுத்தன் கன்னிப்போர்)
ஆனால், வாலியிடம் செய்தது சூழ்ச்சி. எதிர்நில்லாமல், வில்லறத்தை நீக்கி மறைந்துநின்று அம்பெய்தியது வில்லறம் பிழைத்தலாம்.
***
தாடகையின் வதம் சிறப்பான இடம் பெற்றதாலன்றோ விசுவிமித்திரரையே கவர்ந்தது அந்தப் போர். அதுவும் எங்கே? அகலிகைப் படலத்தில்.
இராமனின் கால்பட்டு அகலிகை உரூக்கொண்டெழுந்ததும் விசுவாமித்திரர் இராமனின் மாண்பை வியந்து,
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனியிந்த வுலகுக் கெல்லாம்
. . . . .
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்.
என்று தாடகையை அழித்த செயலைக் 'கையின் ஆற்றலாகக்' காட்டுவார் கம்பர்.
தாடகையுடன் இராமன் நிகழ்த்தியது போர் என்கிறார் கம்பர். அது இராமனின் கன்னிப்போராம்.
வாசநாள் மலரோன் அன்ன
மாமுனி பணி மறாத,
காசுலாம் கனகப் பைம்பூண்,
காகுத்தன் கன்னிப் போரில்,
கூசிவாள் அரக்கர் தங்கள்
குலத்(து)உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும்,
சுவைசிறி தறிந்த தன்றே.
உயிரைக் குடிக்கும் கூற்றுவனும் அந்தப் போரினால் சிறிதளவு உயிரைக் குடித்துச் சுவை பார்த்தானாம். எப்பேர்ப்பட்ட அரக்கி. அவள் உயிரைக் கொன்றதே சிற்றளவுதானாம்.
இங்குக் 'கன்னிப்போர்' என்று வாழ்த்தும் கம்பர், வாலி வதையை அவ்வாறு வாழ்த்தாமல், இராமன் செய்தது பெருங்குற்றமே என்ற மனவோட்டத்தாலேதான். .
இல்லறந் துறந்தி லாதோர்.
.....
. . .. . புரிந்து நின்ற
தீமைகள் தீரு மாறு. . .
என்று குறிப்பிடுகிறார்.
எனவே, வில்லறம் துறந்தும் என்று ஈண்டு குறித்தது வாலி வதையே. என்று நன்குணரலாம்.