இளையபாரதி,
கந்தகப்பூக்கள்
"ஏய்
சீதாலட்சுமி தூங்கிட்டயா? இல்ல பசி மயக்கத்துல
கிடக்குறயா? இல்ல செத்து தான்
போயிட்டயா? அப்ப இருந்து கூப்பிட்டுகிட்டு
இருக்கேன் ஏன்னு கூட கேக்காம இருக்கியே''
கட்டில் பேசியது.
சத்தம்
கேட்டு நான் மெல்ல கண்
விழித்துப் பார்த்தேன். சமீப காலமாய் தான்
நானும், கட்டிலும் நல்ல இணை பிரியாத
நண்பர்களாக மாறியிருந்தோம். நான் சமீபமாய் கட்டிலோடு
தான் என் சுக துக்கங்களை
பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
எனக்கு
எழுபது வயதுக்கு மேல ஆகியிருக்கும். அந்த
எழவ நானு கணக்கும் பாக்குறது
இல்ல. இந்த வயசான காலத்துல
யாரு என்னத் தேடி வந்து கவலைகளை
காது குடுத்துக் கேக்குறாக. அப்படி புலம்பிகிட்டு இருந்த ஒரு நாள்லதான் கட்டிலு
என் கூட பேச ஆரம்பிச்சா.
அவ குரலு தான் கேட்கும். எங்க
இருந்து பேசுவான்னு தெரியாது. பேச்சு பொம்பள மாதிரி தான் இருக்கும்.
அதனாலயே
அவ கூட நல்லா பழக
ஆரம்பிச்சுட்டேன். அவளுக்கு என்னவிட வயசு கம்மியாத் தான்
இருக்கும். என் சின்ன வயசுல
நல்ல தேக்கு மரத்துல அப்பா அவள வாங்கிட்டு வந்தாரு.
நான் நடமாடிகிட்டு இருந்த வரை அவளுக்கு எந்த
நோக்காடும் வராம பாத்துக்குவேன். சமீபமாய்
தான் அவளை கவனிக்க முடிவதில்லை. மனம் விட்டு
பேசிக் கொள்வதோடு சரி.
"ஏய்
சீதாலட்சுமி எனக்கு நாலு கால்ல ஒரு
கால்ல பூச்சு குடைச்சல் தாங்க முடியல. எனக்குத் தான் வைத்தியம் எதுவும்
பாக்க மாட்டேங்கராங்க. உனக்குத் தான் உம் மவன்
உன்ன அன்பா கவனிச்சிக்கிறான்ல. பின்ன என்ன ஆறு நாளா
பச்சத் தண்ணி கூட குடிக்காம படுத்துக்
கிடக்க. எனக்கு அதரவா இருக்கிற நீயும் என்ன விட்டு போயிடுவ
போல. யாருக்காகனாலும் இல்லாட்டி பரவாயில்லை எனக்காகவாவது கொஞ்சம் சாப்பிட்டிட்டு இóன்னும் கொஞ்ச
நாள் இருக்கலாம்ல'' கட்டில் தெளிவாய் பேசியது.
"உனக்குத்
தெரியாதது மாதிரி பேசுறியேடி. நீயும் நானும் சமீபமா ஒரு நாலு அஞ்சு
வருசமா பழக்கமாத் தான இருக்கோம் உனக்கு
என்னனு தெரியாதா? அது சரி உனக்கு
அது நடந்திருந்தா தானே தெரியப் போகுது.
எவ்வளது வைத்தியம் பாத்தென்ன? எவ்வளவு பாசமா இருந்தென்ன? என்ன அப்படி ஒரு
வார்த்தையைக் கேட்டுப்புட்டானே. இந்த உசிரு எனக்கு
அவ்வளவு அவசியமா?'' சொல்லச் சொல்ல என் கண்களிலிருந்து கண்ணீர்
கொட்டத் துவங்கியது.
"அடியே
அழுவாதடி. புள்ள கேட்டுப்புட்டானாம் பெரிய கேள்வி. என்னமோ புள்ள மேல பாசமேயில்லாதவ மாதிரி
பேசாதடி. கோழி மெதிச்சு குஞ்சுக்கு
நோவா? தினமும் கரிச்சுக் கொட்டிகிட்டு படக்கு படக்குனு பேசுறாளே உன் பேரன் பொண்டாட்டிக்காரி
அவ கேட்காததயா உன் மவன் கேட்டுப்புட்டான்.
பேசாம முடிவ மாத்திகிட்டு எனக்குத் துணையா நீயும். உனக்குத் துணையா நானும்னு கொஞ்சநாள் உலகத்துல இருப்போம்.'' கட்டில் சமாதானம் சொன்னது.
"எனக்கு
வாழவே புடிக்கலடி. இந்தக் குடும்பத்துல நான் எப்படி ராணி
மாதிரி இருந்தேன். நேத்து மாதிரி இருக்கு இந்த குடும்பத்துக்கு மருமவளா
வந்தது. என் மாமனாரை கடவுளா
கும்பிடனும். ஊரு பூரா பொம்பளய
அடுப்பங்கரயிலேயே அதட்டி அடக்கி வச்ச காலத்துலயே அவருக்குப்
புடுச்சவராம், பெரிய கவிஞராம், பேரு கூட என்னவோ
ஆமா பாரதியாரு. அவரு பொம்பளய சமமா
மதிக்கனும்னு சொல்ராருனு வீட்டுக்கு மருமவளா இருந்த என்னையும், என் மாமியாரையும் ஆம்பள
மாதிரி நிர்வாகம் பாக்கச் சொல்லுவாரு.'' நிறுத்திவிட்டு சிறிது மூச்சு விட்டுக் கொண்டேன். பின் தொடர்ந்தேன்.
"நானும்
பின்னால அதிகாரி மாதிரியில இருந்தேன். இப்பக் காலம் வரைக்கும் கூட நான் வச்சது
தான சட்டம் இந்த வீட்டுல. ம்...ம்...ம்... பாழாப்போன
நோக்காடு வந்து படுத்தாலும் படுத்தேன் என் பேரன் பேத்தி
கூட மூக்கை பொத்திகிட்டு வருதுக, போவுதுங்க.'' நிறுத்தி நிறுத்தியே பேச முடிந்தது. கட்டில்
கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
"அதுக்குக்
கூட எனக்கு வருத்தம் இல்லடி. என் மவன் வாயிலிருந்து
வந்த வார்த்தைக்குக் கூட வருத்தம் இல்லடி.
அவன் வாயில இருந்து அந்த வார்த்த வந்திடதே
அது தான் வருத்தம். என்
சின்ன பேத்தி அவ கேட்காத கேள்வியா?
அவ பேச்சு தான இப்ப இங்க
எடுபடுது. இதுக எல்லாம் கிருச
கெட்டதுகனு தெரிஞ்சது தான. இவன் சொல்லு
தான் நெஞ்சுக்குள்ளயே நின்னுகிட்டு போவ மாட்டேங்குது.'' விட்டு
விட்டு ஒரு வழியாய் பேசி
முடித்தேன்.
"ஆமா
அவா பெரிய வாயாடில. வயசான காலத்துல நம்மால கவனிக்க முடியாது. பாட்டிய முதியோர் விடுதியில தள்ளிடலாம்னு சொன்னவ தான இந்தக் கலா.
மருந்து கொடுக்கச் சொன்னாக் கூட திட்டிக்கிட்டே தானக்
கொடுப்பா. உன் உடம்பு நாறுதுன்னு
பினாயிலக் கரைச்சு உன் மேலத் தெளிச்சவ
தான. அந்தக் கொடுமக்காரிய நீ தான பாத்து
உன் பேரனுக்கு கட்டி வச்ச. இதுக எல்லாம் விளங்குமா?
'' கட்டில் சாபம் விட்டது.
"அப்படியெல்லாம்
சொல்லாதடி. ஆயிரமிருந்தாலும் என் பேத்தி அவ.
நானு விட்டுக் குடுக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோ. இதுக்கு அவ மட்டுமா காரணம்.
சின்னஞ்சிறுசுக அப்படிதான் இருக்கும். நாம தான் கொஞ்சம்
அனுசரிச்சுப் போவணும். '' அடுத்தவர்களிடம் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அப்பொழுது என் பேத்தி சச்சு
அருகில் வந்தாள்.
"பாட்டி
நான் சச்சு பாலூத்தறேன்'' சச்சு சத்தமாக கூப்பிட்டு என் வாயில் சிறுது
பாலூத்தினாள். அவளிடம் சிறிது பேசலாமென்று வாயைத் திறப்பதற்குள் நகர்ந்து சென்று விட்டாள். விட்ட இடத்திலிருந்து கட்டிலிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.
"நீ
இந்த வீட்டுல எவ்வளவு மதிப்பா ராசாத்தி மாதிரி வாழ்ந்தவ. உன்னை இவுக அவமதிப்பா பேசிறத
என்னால பொறுக்க முடியல. கூட்டுக் குடித்தனத்துக்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டுருப்ப.
துண்டு துண்டா பிச்சிகிட்டுப் போறதுக்குனு அவா எவ்வளவு ஆட்டம்
ஆடியிருப்பா. நீ எவ்வளவு கோவிச்சிகிட்டாலும்
பரவாயில்ல. நான் சொல்லலுறத சொல்லத்
தான் செய்வேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்க '' கட்டில் தன் கருத்தில் பிடிவாதமாய்
நின்றது.
"சரி
விடு. என் பேத்தியா இபபடி
ஆடுறதுக்கு என்ன காரணம் என்
ன் தான... என்ன ஆசிரமத்துல சேக்கனும்
நினைக்கான். நம்ம வாழ்க்கையில எவவ்ளவு
மாறிட்டாலும் ஆம்பளை சொலறத அப்பயே தான கேக்கவும் வேண்டி
கிடக்கு. மத்தபடி அவ நல்லவ தான்
'' மனதில் உள்ளதைக் கொட்டினேன்.
"ஆமா
இதெல்லாம் சாதாரணமா எடுத்துக்குவயாம். உம்மவன் சொன்னது தான் ரொம்ப பெருசாப்
போயிடுச்சோ? ஏதோ ஒரு கோவத்துல
சொன்னது அது. அதப் பிடிச்சுக்கிட்டு
சாவுறதுன்னு ஒத்தக் காலுல நிக்குற. இன்னிக்கு விட்டா நாளைக்கு தாங்கமாட்ட. எனக்காக பச்சத் தண்ணியாவது சாப்பிடு. உடம்பொறப்பு மாதிரி கேக்ககுறேன். '' கட்டில் வார்த்தை மிகக் கவலையாய் இருந்தது.
"அடி
போடி. அதுதான் முடிவா நினைச்சாச்சுடி. வயசாயிடுச்சுனா காலத்துல போயிச் சேர வேண்டியது தான்.
இதுக்கு மேலயும் வாழ்ந்து என்னத்தக் கிழிக்கப் போறோம். கவலைப் பட்டுகிட்டு வாழ்றதுக்கு எனக்குப் பிடிக்கலடி. என் வீட்டுக்காரரு போனதுக்கப்புறம்
எம் புள்ள என்ன கண்ணு மாதிரி
பாத்துகிட்டான். ஒரு நாளு என்னை
கலங்க விட்டுருப்பானா? ஒரு சொல் கடுசா
பேசியிருப்பானா?'' மீண்டும் கவலை தலை தூக்கியது.
"மனசு
கஷ்டத்தையே எவ்வவு நேரம் பேசுவ. ஏதாவது பழசப் பேசி கொஞ்சம் கவலையை
கொறச்சுக்கலாமே. எனக்கு காலு வலி தாங்க
முடியல. இப்ப உடம்பு வலியும்
இருக்கு. நீ நல்லா இருந்த
காலத்துல நீ தான எனக்கு
அப்ப அப்ப வைத்தியம் பாப்ப.
இப்ப எங்னே உன் பாடே பெரும்பாடாக்
கிடக்கு. '' கட்டில் தன் வருத்தத்தைக் கூறியது.
"பின்ன
என்னடி சும்மாவா. நீயும் நானும் எவ்வளவு காலமா ஒன்னா இருக்கோம். நான் பெரிய மனுசி
யா ஆன காலத்துல இருந்தே
நீ என் கூடத் தான
இருக்க. உனக்கு ஞாபகம் இருக்கா? உன் மேல உட்காந்துகிóட்டு இருக்கும்போது தான
நான் வயசுக்கு வந்தேன். எனக்கு அப்பவே உன்னப் பிடிக்கும். பேசித்தான் பழக்கமில்ல. நீயும் அப்பெல்லாம் என் கூட பேச
மாட்டில. '' நான் குறைபட்டுக் கொண்டேன்.
"உனக்கு
ஞாபகம் இருக்காடி. உன் கல்யாணச் சீர்ல
என்னையும் அனுப்பி வைச்சாங்க. பாயி கொண்டு வந்தவுக
மத்தியில உனக்கு எவ்வளவு பெருமை. அப்ப உன் கூட
வந்தது. இன்னிக்கு வரைக்கும் உன் கூடத்தான் இருக்கேன்.
ஏன் இவ்வளவு வருத்தப்படுறயே எம் மவன் அப்படி
கேட்டுப்புட்டானு அவனக்கூட நீ எம்மேலதான பெத்த.
நான் கூட அவன தூங்க
வச்சி அழாம பாத்துப்பேன். ம்...ம்.. அதெல்லாம் அந்தக்
காலம். '' கட்டில் பழைய விசயங்களைக் கிளறியது.
"அதுதானடி.
இந்தப்பய ராசன் உன் மேல ஏறி
"தொம்முன்னு' கத்திகிட்டே குதிப்பான். ஒரு தடவ உன்
கால்ல முட்டி மண்டையை உடைச்சுக்கிட்டானே. அதெல்லாம் மறக்க முடியுமா? ஊருக்குள்ள தொட்டிலே கட்டாம கட்டில்லயே புள்ள வளத்தவ நான்தானடி.'' பெருமையாய் பேசிக் கொண்டேன். மூச்சு விடவே சிரமமாக இருந்தாலும் பேச வேண்டும் போல
இருந்ததால் மேலும் தொடர்ந்தேன்.
"அவருக்கு
அதான் என் வீட்டுக்காரருக்கு உன்ன அவ்வளவா
புடிக்காது. அஞ்சு நிமிசத்துக்கு மேல உன் மேல
இருக் மாட்டாக. தரைல படுக்குற சொகமே
தனினுவாக.'' நான் சற்று நிறுத்தி
விட்டு பழைய விசயங்களை கொஞ்சம்
யோசித்துவிட்டு தொடர்ந்தேன்.
"ஏன்டி
உனக்கு ஞாபகம் இருக்கா? உன் காலக் கழட்டிதான்
இந்த ரூமுக்குள்ள கொண்டு வந்தாக. அப்ப உள்ள வந்தவதான்
நீயு. இன்னும் வெளியில போவலியே.'' பேச்சு சுவரஸ்யமானது. ஆறு நாட்களாக சாப்பிடாத
வயிறு உள்ளே ஒட்டக்கொண்டு சகிக்க முடியாத வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
கண்களைச்
சரியாகத் திறக்க முடியவில்லை. உடம்பு முழுக்க ஒரு வித மதமதப்பு
வந்திருந்தது. நெஞ்சு மட்டும் பெருத்த ஓசையுடன் வேகமாக இறைந்து கொண்டிருந்தது. வெளியே சின்னமகன் குடும்பம், சம்பந்தார் கூட்டம். ராசன் குடும்பம் என எல்லோரும் கூடியிருந்தார்கள்.
முகத்தில் கவலையிருந்தது. ஏலே கூறு கெட்டதுகளா
எதுக்கு அழுவுறீக? முதுந்த கட்டை இருந்தாயென்ன? போனாயென்ன? கவலப்படாம இருங்கனு சொல்ல வேண்டும் போல இருந்தது.
அப்போது
பேரனின் மனைவி பேசுவது கேட்டது. ""பாத்தீங்களா. அந்த லூசு பழையபடி
கட்டில் கூட பேச ஆரம்பிச்சுடுச்சு.
ஒரு பேச்சும் புரியவும் மாட்டுக்கு. இன்னிக்கு அன்னிக்குனு இரண்டு நாளாச்சு. இப்ப அப்பனு எல்லாரும்
காத்துக் கிடக்கோம். இளனி ஊத்திப் பாத்திட்டோம்.
காசக் கரைச்சும் கொடுத்துட்டோம். ஓடிப் போன மவள நினைச்சுக்கிட்டு
இருக்காளோ என்னவோ? அவளுக்காத் தான் இழுத்துக்கிட்டு கிடக்கோ
என்னவோ? நல்ல வேளை என்
வீட்டுக்காரரு என் பேச்சக் கேட்டு
இது பேருல இருந்த வீட்ட மாத்தி எழுதிபுட்டாரு. இல்லனா டெத் சட்டிபிகேட்ட தூக்கிகிட்டு
திரியணும்.'' பேத்தி பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
இவ்வளவு
பேசினாலும் அவளுக்கு என் மகன் ராசன்
மீது பயம் உண்டு. அப்பொழுது
அவன் வந்தததும் பேச்சை மாற்றி ""பாட்டி இப்படி கெடக்கே. பாவமா இருக்கு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயி குளுக்கோஸôவது
ஏத்தலாம்ல மாமா?'' பேத்தி பேச்சை மாற்றினாள்.
"ஏண்டி
என்னிக்கும் இவ திருந்த மாட்டா
போல. என்னமா நடிக்கா பாரு'' கட்டில் பேசியது.
"நீ
போன வருசம் உன் பேர்ல இருந்த
வீட்ட கையெழுத்து போட்டுக் குடுத்தது தப்பு. போட்டுறுந்த பொட்டுத் தங்கத்தையும் அவளுக்குத் தான கொடுத்த?'' கட்டில்
அங்கலாய்த்தது.
"அதுமட்டுமா.
என் பேரனுக்கு என் வீட்டுக்காரரு எம்
பேர்ல போட்டு வச்சிருந்த அந்த ஒரு லட்ச
ரூபாயையும்ல கொடுத்தேன். அதுலதான அவன் இஞ்சீனியரு ஆனான்.''
பெருமையாகக் கூறினேன்.
"உனக்குனு
ஒரு பாதுகாப்புமில்லாம ஏன்டி அதெல்லாம் கொடுத்த? அதுதான் இதுக இப்படி நடக்குதுகளோ
என்னவோ? '' கட்டில் கோபமாய் பேசியது.
பேசப்
பேச வலித்தது. ஏன் வலிக்கிறது யோசிக்கத்
துவங்கினேன். சமீபமாய் அவ்வப்போது ஞாபகமறதி அதிகம் வந்து விடுகிறது. ஆனாலும் அவன் கேட்ட வார்த்தை
மட்டும் மறக்க மாட்டேன் என்றது. எவ்வளவு ஆசையான பையன் அவன். நம்ம கெடக்குறது பொறுக்க
முடியாமத் தான் அப்படி சொல்லியிருப்பான்.
இப்ப அவனுக்கு பெரும்சுமையா போயிட்டேன். பாவம் என்னால அவன் வருத்தப் படக்கூடாது.
அதனால நானு போயிûணும்.
கண்டிப்பா போயிரணும். அவன் நல்லாருக்கனும், குட்டிப்
புள்ளங்க நல்லாருக்கனும், நான் எல்லோருக்கும் பிரியமானவளாவே
இருக்கனும், எல்லோரும் நல்லபடியா இருக்கனும். பேச முடியவில்லை மனதில்
அழுத்தமாக நினைத்துக் கொண்டேன். வலி வலி இது
வரை அப்படி ஒரு வலி வந்தததில்லை.
"ஏன்டி
கலா நீ மட்டும் தான்
பாட்டிக்கு பாலு ஊத்தலயாம்ல. எல்லாரும்
பாட்டிக்கு பால் ஊத்திட்டாக. வீட்டுக்குள்ள
இருற்துகிட்டு பால் ஊத்தாம இருந்திருக்க.
பாட்டிக்கு பால் ஊத்து.'' என்
பேத்தியை யாரோ அழைத்தார்கள்.
"ஆமா
இது ஒன்னுதான் குறைச்சல். இந்த நாத்தத்துல கிடந்து
தொண்டூழியம் பாத்தது பத்தாது. பாலாம் பெரிய பாலு'' முனங்கிக் கொண்டே வந்தாள். பால் ஊத்திவிட்டு வெளியில
வேல கிடக்கு என்றபடி நகர்ந்தாள்.
இவர்களுக்கு
எங்கே தெரியப் போகிறது. என் மனம் விட்டுப்
பேசவும், என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ளவும் சமீபமாய் யாரும் வராததிற்கு நான் கவலையுடன் கிடக்கிறேன்
என்று. கட்டில் மட்டும் நல்ல தோழியா என்னோடு
பேச வில்லையெனில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். இவளோடு பழைய விசயங்களை பேசிப்
பேசியே என் மனசு நிறைஞ்சு
போச்சு.
தூரத்தில்
யாரோ அழைப்பது போல இருந்தது. ""ஏய் சீதா
லட்சுமி என்ன சத்தத்தை காணும்.
பேசிகிட்டே இருக்கேன் பதிலக் காணும்?''கட்டிலின் சத்தம் வெகு தூரத்தில் கேட்டுக்
கொண்டிருந்தது.
"புண்ணியவதி
பேத்தியா கலா பாலுத்தலனு தான்
கிடந்தா போல. பாட்டிக்கு இவ
மேலனா உசிரு.பேத்தியா பாலூத்துனதும் சிரிச்ச மாதிரியில் ஜீவன் போயிருக்கு'' வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
கட்டில்
கோபமாய் பல்லைக் கடித்தது கிரீச் கிரீச் என்று கேட்டபடி இருந்தது. எல்வோரும் ஓவென அழுதபடி கட்டிலைச்
சுற்றி நின்றிருந்தார்கள்.
சுமை
தாளாத கட்டில் காலுடைந்து விழுந்தது.