Oct 17, 2020
ஆசிரியர் பக்கம்
அன்புடை நண்பரீர், வணக்கம்!
செம்மொழியாம் நந்தமிழ் இனிய சொல்வளம் கொண்டது.
காலப் படிமங்களுக்கும், வழக்கிற்கும் ஏற்பப் புதிய சொற்களையும் தன்னகத்தே உள்ளடக்கியது.
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ என்னும்
தொல்காப்பியர் கூற்றிலுள்ள ஆழத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். பொருள் குறித்து அமையும்
பெயர்ச்சொற்கள் எக்காலத்துக்கும், எத்துறைக்கும் சமமாகப் பொருந்துமாறமைந்த நுட்பத்தை
உள்ளடக்கியது அந்நூற்பா.
சான்றாக, இன்றைக்கு கணினித்துறை சார்ந்த எத்தனையோ
சொற்களுக்குப் பொருந்துமாறான தமிழ்ச்சொற்கள் அமைந்து நம்மை வியப்பி லாழ்த்துகின்றன.
மடிக்கணினி, கட்செவியஞ்சல், புலனம், அலைப்பேசி, வலையொளி, வலைத்தளம், மின்மடல்... என
எதற்கும் சளைக்காத தமிழ்ச்சொற்கள் வழக்கிற்கு வந்துவிட்டன.
எனவே, நந்தமிழ்ச் சொற்களிலுள்ள தெளிவையும்
பொருளையும் உணர்ந்து போற்றி அவற்றைத் தொடர்வதே தமிழை வளர்க்கும் படிநிலையாகும். அதைவிடுத்து,
ஆங்கிலமே உலகப்பொதுமொழி... அதில்தான் பழக வேண்டும் என்றும், வடமொழிச் சொற்களைத் தாராளமாகப்
பயன்படுத்தலாம் என்றும் ஒருசாரார் இணையத்தில் பதிவிடுவதைப் பார்க்கும்போது மனம் மருகுகிறது.
இதற்குத் தீர்வும் இருக்கிறது. பொதுமக்களுக்கு
ஒரு சொல் போய்ச்சேர்வது ஊடகத்தால் மட்டுமே. எனவே ஊடகம்சார் நண்பர்களும், எழுத்தாளர்
களும் குறிப்பாகப் புதுக்கவிதை என்றழைக்கப் படும் வசனக்கவிதை எழுதும் நண்பர்களும் தங்கள்
எழுத்தில் பிறமொழிச் சொற்களைக் கலவாமல், புதிய புதிய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவதுடன்,
பழந்தமிழ் இலக்கியச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும்.
மொழிக்கு நாம் செய்யும் தொண்டு நம் அன்னைக்குச்
செய்யும் தொண்டெனக் கருதி அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவையேற்று நடைமுறைப்படுத்த
வேண்டும்.
வாழ்க செந்தமிழ்! வாழிய நம்மினம்.!!
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர்
மா.வரதராசன்
அரங்கேற்றம்
1. நீரின் மேன்மையும் சேமிப்பும்
இரட்டை மணிமாலை
வெண்பாக்கள் ஆக்கம்: பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்
ஆசிரிய விருத்தம்: பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
காப்பு
நீரினது மேன்மையை
நெஞ்சில் பதிக்கவே
பேரவாக் கொண்டு
பிழையிலாது – சாரல்
மழையெனத் தூவ
மனங்கொண்டோம் அன்னாய்
விழைந்தருள்வாய்
மென்றமிழே காத்து
நூல்
புவியினில் காணும்
பொருள்கள் அனைத்தும்
அவியும் மழையின்றி
யாங்குத் - தவிக்கும்
எவர்க்கும் இரங்கும்
மழைநீர்ப் பெருமை
உவப்ப உரைப்பன் உரத்து 1
உரைப்பன் உரத்துத்
தண்ணீரை
உருக்க மின்றி வீணாக்கும்
அருமை அறியா மானிடனே
அலைந்து திரியும் உலகினிலே
இருப்பில் இருக்கும்
தண்ணீரை
எடுத்தே அளவாய்ப் பாவிப்பாய்
இரக்க மின்றி
வீணர்களாய்
இடரைக் கொடுத்தே அழிப்பதுமேன் 2
இழைப்பதும் நீரே எனலாம்
- வழிப்பணம்
போல உதவும் பொருளதும்
நீர்தானே
கால முழுதும் கவர்ந்து 3
துளிகள் கொட்டிச்
சிந்தினாலும்
துயரம் கொள்வாய் எந்நாளும்
தெளிவு வேண்டும்
தண்ணீரைத்
தீர்த்து விட்டால் நிலைமையினை
ஒளியும் அற்றுப்
போய்விடுமே
உணர்ந்து செயலை நீயாற்றி
இளையோர் மனத்தில்
பதிந்துவிட
இனியும் தண்ணீர் சிந்தாதே 4
தேனென்று கார்முகில் சிந்தித்
தெளிக்கின்ற
வானீயும் மாரி வளநீரைத்
- தேனென்றே
சொல்வன் புவிதன்னில்
சோர்வகற்றும் நீரன்றோ
வல்வினை நீக்கும்
மருந்து 5
மருந்தாய் நோக்கத்
தண்ணீரை
மகிழ்வுன் வாழ்வில் பொங்காதோ
அருந்தும் நீரின்
தூய்மையதே
அழகு படுத்தும் உன்னுடலை
இரத்த லின்றிக் கிடைக்கும்நீர்
இனிமை தருமே நம்வாழ்வில்
கருக்கல் தோன்றிப்
பொழியும்நீர்
கண்ணாய்ப் போற்றி நீகாப்பாய் 6
காக்கும் கடுநிலை
காட்டும் வறட்சியைப்
போக்கும் புதுவெள்ள
நீராகி - ஏக்கம்
தவிர்த்துச் செழிப்பைத்
தருநல நீரே
புவிக்குச் சிறப்பென்று
போற்று 7
போற்று நீரைப்
புவியினிலே
பொய்கை யெல்லாம் பாதுகாப்பாய்
ஆற்று நீரைச் சேகரிப்பாய்
அழித்து நாளும் புலம்பாதே
ஊற்றைத் தேடிக்
கிணறுகளை
ஒன்று சேர்ந்து வெட்டிடுவாய்
மாற்ற முண்டேல்
வழிபிறக்கும்
மகிழ்வு பொங்கும் வாழ்வினிலே 8
வாழ்வினில் நம்மை
வளப்படுத்தும் நீரினைத்
தாழ்வாய் நினையாதே
தம்பிநீ - வீழ்வம்
உலகினில் ஒண்ணீர்
இலையேல் அதனால்
தலைமேலிட் டாங்கதனைத்
தாங்கு 9
உலகில் தண்ணீர்
இல்லையெனில்
உயிர்கள் வாழ வழியில்லை
அலைந்து திரிந்து
வாடுமிங்கே
அழிந்து போகும் பயிரும்தான்
பலரும் வாழத் துணையாகும்
பருகும் நீரை அழிக்காதே
கலக்கம் வேண்டா
மனத்தினிலே
கண்ணும் கருத்தாய்ப் பேணிடுவோம் 10
பேணுநற் றாயின் பெருமை
தனக்கீடாய்க்
காணுவாய் நீரின்
கருணையை - ஆணென்றும்
பெண்ணென்றும் ஏதும்
பிரித்துப் பகுக்காத
தண்ணீர் தரத்தில் இறை 11
இறைவன் அளிக்கும் கொடையினையே
இழந்து தவித்துக் கலங்காதே
சிறுகச் சேர்க்கும்
தண்ணீரே
தினமும் உன்னைக் காப்பாற்றும்
பொறுமை யோடு
சிந்திப்பாய்
புனலின் மகிமை உணர்ந்திட்டால்
வறுமை மறையும்
நாட்டினிலே
வளமாய் நீரைக் காத்திடவே 12
காக்கும் கடவுளாம்
தண்ணீரின் சீரதை
நோக்கும் திறனும்
நுமக்குண்டேல் - வாக்குரைப்பீர்
நீரைச் சிறிதாய்
நினையாமல் சேமிப்பீர்
நீரிதனை என்றும்
நினைந்து 13
நினைவில் கொண்டு
செயல்படுங்கள்
நீரின் மகிமை யாதென்றே
மனத்தி லிருந்தால்
வீணாகா
வளமாய்ச் சேர உதவிடுமே
தினமும் நீரை அழிக்காது
சிறுகச் சிறுகச் சேர்த்தால்தான்
புனலும் என்றும் வற்றாதே
புதுமை பொங்க எழிலாகும் 14
எழிலதைக் கொண்ட இயற்கையாம் வானம்
பொழியுது நீரைப் புவியில் - வழிகண்
டதனைநீர் சேமித்தால் அண்டமே வாழும்
இதனை மறவாதீர் இங்கு 15
குன்றி லிருந்து வரும்நீரில்
குப்பைக் கழிவைச் சேர்க்காதே
நன்மை கருதிக் காத்திட்டால்
நாளும் பெறுவாய் குறையாமல்
தண்ணீர் மகிமை புரிந்திட்டால்
தவித்து நிற்றல் மறைந்துவிடும்
இன்றே தொடங்கு செயற்படுத்த
என்றும் வாழ்வு சிறந்திடுமே 16
மேனின்று வீழ்ந்து விரைவதால் நீரது
வானின் அமிழ்தென வாழ்த்துவரே - காண
உலகில் அரிதாய் உளநீரை வீணாய்க்
கலக்க விடலேன் கடற்கு 17
கடலும் வற்றிப் போவதில்லை
கண்ணீர் சிந்தி அழுவதில்லை
இடரை நீக்கி வாழ்ந்திடவே
இதமாய் கிடைக்கும் தண்ணீரும்
விடாமல் மழையும் பொழிந்திடவே
விரைந்து நடுங்கள் மரங்களையே
கெடுதல் இன்றித் தண்ணீரும்
கெதியாய்க் கிடைக்கும் யாவருக்கும் 18
யாவர்க்கும் நன்மை
அளிக்குமொரு தண்ணீர்க்குத்
தேவனை ஒத்த சிறப்பன்றோ
- ஆவலாய்ச்
சேமிப்பீர் செம்மையுள
நீரைச் சிறப்பாகச்
சேமமாய்ச் சீருண்
டுமக்கு 19
சீருண் டுமக்கே நீரையென்றும்
செம்மை யாகச் சேமித்தால்
நீரா டுகையில்
குளத்தினின்று
நெகிழிப் பையை வீசியெறி
சாரல் துளிகள் தாமென்றே
தாண்டிச் செல்லல் தவறாகும்
வாராத் தெய்வம் வந்ததென
மழைநீர் சேர்த்தல் வளமாமே! 20
அரங்கேற்றம்
2. முருகப்பெருமான் அருள்
பைந்தமிழ்ச் சுடர் பா. நடராசன்
கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
விநாயகர்
வணக்கம்
கொம்பொரு எழுது கோலாய்க்
கொண்டுநற் காவி யத்தை
அம்மலை மீதி லெல்லாம்
ஆக்கினான் கழல்கள் போற்றி
செம்முகம் ஐந்து ளானின்
சேயவன் பெருமை தன்னை
அம்பலந் தன்னில் ஏற்றி
அளிக்கின்றோம் அருளி னாலே!
அவை வேண்டுகோள்
சரவணப் பொய்கை தன்னில்
தாமரை மலர்கள் போல
சிரங்களோர் ஆறும் ஆக
சிசுக்களாய்ப் பிறந்த சேயின்
அரும்பெரும் விளையாட் டெல்லாம்
ஆறுசீர்ப் பாட்டில் சொல்வேன்
விருப்புடன் கேட்க வேண்டி
விடுக்கின்றேன் வேண்டு கோளே!
1. முருகப்பெருமான் தோற்றம்
சூரனை வதைக்கத் தேவர்
சுடுசரம் போல வேலை
வீரமாய் வீசும் சேயை
விரைந்திறை அளிக்க வேண்டப்
பேரிருள் விலக்கி ஓங்கும்
போரொளிக் கதிரைப் போல
ஆறிரு கரங்க ளோடே
அறுமுகன் தோன்றி னானே!
2. முருகப்பெருமானின் பெருமை
மண்ணொடு தீயும் நீரும்
மதியுள வானும் காற்றும்
எண்ணிலா உயிர்கள் யாவும்
ஏத்திடும் இறைவ னன்றோ
பன்னிரு கரமும் கொண்டான்!
பரமனின் மகனாய் வந்தான்!
விண்ணுளார் வியக்க நின்றான்!
விரும்புவார் உளத்து ளானே!
3. பழனி மலை சென்றான்
அரியவன் பெயரைக் கூறி
ஆங்கொரு கனியை ஏந்தித்
திரிபுர முனிவன் ஈயத்
திருநுதல் விழியான் ஏவ
விரிந்தவிவ் வுலகந் தன்னை
வேலவன் விரைந்து சுற்றிப்
பெரியவன் வெல்லக் கண்டு
பிரிந்ததும் பெருமை தானே!
4. பழனி மலையின் பெருமை
தன்வழி தனித்த தென்று
தரணியில்
முதலில் சொன்னான்
விண்ணவர் முதலாய் யாரும்
விரும்பிடும்
ஈசன் மைந்தன்
மண்ணிலே மலையென் றாலே
வள்ளலின்
பழனி யன்றோ!
கண்ணுளார் கண்டால் போதும்
கடலெனக்
களிக்க லாமே!
5. ஒளவைக்கு அருளினான்
ஆயிரம் பாடி விட்டேன்
அதிசயம்
செய்து விட்டேன்
ஏயெனும் முன்னர் பன்னூல்
எடுத்தியான்
இயம்பி விட்டேன்
தாயவள் ஒளவை யெண்ணி
தருக்குற்ற
போதில் வந்து
தூயவன் முருகன் வந்தான்
துரும்பவள்
பணியென் றானே!
6. ஞானம் கொடுத்தான்
தன்றிறம் எண்ணி நாளும்
தடையின்றிப் பாக்கள் சொல்லி
வண்டமிழ் வளர்ப்பார்க் கெல்லாம்
வாதினால் புரிய வைத்தான்
விண்டதோர் நாவல் ஒன்றால்
விளக்கினான் ஞானந் தந்தை
கொண்டதோ பால கோலம்
கொடுத்ததோ ஞானந் தானே!
7. பிரம்மனிடம் கேட்ட கேள்வி
மூலமந் திரத்தைக் கூறி
முடுகியே ஞாலம் செய்யும்
கோலநான் முகனை நோக்கிக்
கூறுக பொருளை யென்றான்
மாலவன் பெற்ற சேயும்
மலைப்பொடு விழித்து நிற்க
வேலனோ கரத்தால் குட்ட
வியந்தன உலகெ லாமே!
8. பிரம்மனைச் சிறைசெய்தான்
அடைத்தொரு சிறையில் பூட்டி
ஆங்கயன் பிரண வத்தால்
படைத்திரும் தொழிலும் ஏற்றான்
படைத்தனன் உயிர்கள் எல்லாம்
விடைகொளும் நாதன் தோன்றி
விடுத்திட வேண்ட ஏற்றே
தடையிலை என்றே வேலை
தந்தனன் பிரம்ம னுக்கே!
9. ஈசனிடம் விளையாட்டு
அயனிடம் கேட்ட கேள்வி
அறிவையோ பொருளை என்றே
மயக்கறு ஈசன் கேட்டான்
மறுப்பிலா தறிவேன் என்றான்
தயவுடன் பணிவாய் நின்று
தடக்கையால் வாயும் பொத்தி
முயன்றுநீர் கேட்டால் சொல்வேன்
முருகன்யான் குருவாய் என்றே!
10. பரமனின் ஒப்புதல்
மாதுமை பாகத் தானை
மனத்தினில் இருத்தி நாளும்
மாதவர் கருதித் தேடும்
மண்ணுளார் வருந்தி நாடும்
காதணி குழையும் தோடும்
கரத்தினில் ஓடும் சூடும்
போதெலாம் புலவர் பாடும்
புண்ணியன் உடன்பட் டானே!
11. குருவும் சீடனும்
மெய்தனை விளக்கி நன்றாய்
மேனியில் நீறும் பூசிக்
கைமுதல் வாயும் பொத்திக்
கலிங்கமும் அடக்கி உள்ளம்
பொய்யிலா உணர்வி னோடு
புவனங்கள் போற்று மீசன்
ஐயனே அருள்க வென்றான்
அறுமுகன் விளக்கி னானே!
12. சுவாமிமலை தலப்பெருமை
அறுமுகன் குருவாய் நிற்க
அரனவன் பணிந்து கேட்க
உறுதுணைச் சாமி நாதன்
உற்றவோர் படைவீ டன்றோ
மறுப்பிலா துலகோர் ஒப்பும்
மண்ணக உயிர்கட் கெல்லம்
சிறுமையைப் போக்கி நாளும்
சீர்வளர் ஊரென் பேனே!
13. பேரறிவின் பிறப்பிடம்
வெற்றியும், புகழும், ஊரை
வென்றிடும் வளமும், செல்வம்
பெற்றிடும் வாய்ப்பும், என்றும்
பெருஞானத் தகுதி யன்றாம்!
கற்றது கைம்மண் ணென்றும்
கடலள வுளதென் றெண்ணும்
உற்றவோர் அறிவே யன்றோ
உறுதுணை உயிர்க ளுக்கே!
14. வேல்பெற்றுச் சூரனை அழித்தான்
(சிக்கல் / திருச்செந்தூர் /
திருப்பரங்குன்றம்)
அன்னையின் சக்தி வேலை
ஆண்டகை முருகன் வாங்கி
முன்னையோர் வரத்தால் தேவர்
முதலியோர் தவத்தால் வென்று
தன்னுடன் பிறந்தா ரோடு
தவமுடைச் சூரன் கொண்டு
பெண்ணவள் தேவ யானை
பெருமணம் முடித்தான் அன்றே!
15. வள்ளியை மணந்தான் (திருத்தணி)
போரதில் வென்று நல்ல
பொன்னையும் மணந்த
பின்னே
வீரர்க்கு விடையுந் தந்தான்
விரைந்தவன் தணிகை சென்றான்
பார்புகழ் வேடப் பெண்ணாம்
படர்கொடி வள்ளி தன்னை
மார்பொடு கொண்டான் அண்ணன்
வேழவன் உதவி யாலே!
16. முருனின் அருட்செல்வம்
(குன்றுதோறாடல்)
பழமுதிர்ச் சோலை யன்றி
பார்க்கின்ற குன்றிற் கெல்லாம்
வழுவிலா பத்தி யோடு
வருபவர் குறைகள் தீர்ப்பான்!
அழிவுறும் ஆயுள் தன்னில்
அன்னையாய்த் தாதை தானாய்
விழியென நிற்பான்! தாளை
விரைவுடன் பற்று வார்க்கே!
17. கீரன் சொல்வான்
ஆக்குவான் அழிப்பான் பின்னர்
அன்புடன்
காப்பான் என்றே
வாக்கினால் கீரன் சொல்வான்
வல்லவன்
முருகன் என்றே!
பாக்களால் போற்றும் நூலாம்
படைநூலே
முதலாம் என்போம்
வாக்கது வழியாய்க் கொண்டால்
வளத்துடன்
வாழ்வார் தாமே!