'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 15, 2019

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 7


வெண்பா

1.       கவிஞர் பொன். இனியன்

பூநக்கிக் காறுகால்; போக்கிரிக்கோ மாறுகால்;
வானோக்குங் காலைந்து மாம்பூதம்; ஒல்லான்
செயலுக் குதவாதார்க் கேனிருகால்; மூடன்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று    

2.       கவிஞர் F. Hamdun

தன்குறைக்கு வாதிட்டும் தாங்கா மனத்துடன்
வன்மத்தால் மற்றவரை வாரிடுவார் - இன்னும்
வயமிழந்து மிக்க பிடிவாதம் கொண்டு
முயலுக்குக் காலெண்ணின் மூன்று.

3.       கவிஞர் பே.வள்ளிமுத்து

முயலுக்குக் கால்நான்கு முன்னோஒர் சொன்னார்
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்றே போட்டி
முயலுக்குக் காலில்லை முற்றாய்ந்து சொன்னேன்
முயலென்னும் சொல்லில்  முயல்..!

4.       கவிஞர் சுந்தர ராசன்

முயலுக்குக் காலெண்ணின் மூன்று! நிலம்வாழ்
கயலுக்குக் கண்ணெண்ணின் ஒன்று! மயலாழ்த்தும்
மான்விழியாள் இல்லாள் மணிவாக்கை ஏற்பவர்க்கே
தேன்வாழ்க்கை இல்லையெனின் தீ!

5.       கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்

சேரா ரெவருடனும் தேர்ந்தார் சொலக்கேளார்
பாரா ரெதையும் பகுத்தறிந்தே - ஓரார்
முயலுக்குக் காலெண்ணின் மூன்றெனும் மூடர்
செயலிலு முண்டோ சிறப்பு

6.       கவிஞர் செந்தில் பாபு 

சொல்புத்திக் கேளார் சுயமதியு மில்லார்
வல்லாரைப் போற்றாது மாய்வாரே - புல்லர்
வயமிழந்து பொய்யெழுதி வண்டமிழை மாய்ப்பார்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று

7.       கவிஞர் இரா. அழகர் சாமி

காதல் மனையாள்தன் காதருகே சொல்வதெலாம்
தீதாய் இருப்பினும் தேனாகும்! - போதும்
நயமாகப் பேசியே நம்பவும் வைப்பாள்
முயலுக்குக் காலெண்ணில் மூன்று!

8.       கவிஞர் அழகர் சண்முகம் 

முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்ற மூடர்
கயல்மேயு மென்பாரே காட்டில்-உயர
வியர்வைசிந் தென்றால் விளங்கார் வெயிலின்
துயர்நனைவார் வீணில் துவண்டு

9.       கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ

மனம்கட்டுப் பட்டு மதியுடமை பெற்றுக்
கணத்திலும் பேணுதலே கல்வி - குணத்தின்
சுயம்மாறாத் தன்னுணர்வுத் தொட்டதையே மீட்டின்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று !

10.     கவிஞர் செஞ்சோலை

தன்சொல் பெரிதென்பார் தன்முனைப்பில் ஓங்கியே
இன்சொல் அறியா இயல்புடையார்-வன்சொல்
வயப்பட்டே தீயென வாய்ச்சொல் உரைக்கும்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று.

11.     கவிஞர் வ.க.கன்னியப்பன்

கற்றோர் நிறைந்ததோர் கல்விச் சபைதனிலே
உற்ற அறிவில்லா உன்மத்தன் - பெற்றிச்
செயற்பா டறியாச் சிறுவன்றான் சொல்வான்
முயலுக்குக் காலெண்ணின் மூன்று!

வெண்கலிப்பா

12.     கவிஞர் புனிதா கணேசு

முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்பர் மண்ணிற்றம்
முயலாமை யாலழிவர் முற்கோபங் கொண்டுபிறர்
துயர்கொள்ள வேமுனிவர் துட்டரேகாண் புறங்கூறித்
தயவேதுங்  கொள்ளாதுந்  தான்

வஞ்சி விருத்தம்

13.     கவிஞர் மன்னை வெங்கடேசன்

வியத்தக்க செய்தாலும் கொளாது
முயலுக்குக் காலெண்ணின் மூன்றென்(று)
அயர்வேதும் இல்லாது சொல்லல்
நயத்தக்க தன்றென்று சொல்வேன்

தமிழ்குதிர் - 2050 மடங்கல் மின்னிதழ்

 தமிழ்குதிர் -9 மடங்கல்

Sep 14, 2019

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

பைந்தமிழ்ச்சோலையின் நான்காமாண்டு விழா மிகமிகச் சீரும் சிறப்புமாக நேற்று நிகழ்ந்து முடிந்தது.

கட்டுக்கோப்பான நிகழ்ச்சியமைப்பும், அந்தக் கட்டுப்பாடுகளைப் பொன்னேபோல் போற்றிய சோலைக் குயில்களின் ஒத்துழைப்பும், தமிழ்த் தாயின் அருளும் ஒருங்கேயமைந்ததால் இந்த வெற்றியை நாம் நிகழ்த்த முடிந்தது. 100 விழுக்காடு மனநிறைவு எனக்கு. உங்களுக்கும் நிறைவாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டின் புதுமையாக முழு நிகழ்வையும் காணொலியாக யூடியூபில் நேரலையாகப் பார்க்கும் வசதியைச் செய்திருந்தோம். அரங்கத்தின் சால்பிலேயே அதைச் செய்து தந்தார்கள். அயல்நாட்டில் வாழும் சோலைச் சொந்தங்களும், நிகழ்வில் பங்கேற்க இயலாத வர்களும் கண்டுகளித்தனர் என்பதில் மகிழ்ச்சியே.

எம் சோலை அன்பர்களுக்கு நன்றி கூறுவது நம்மை நாமே பிரித்துக்கொள்வதைப் போன்றது தான் ஆயினும் "நன்றி மறப்பது நன்றன்று" என ஐயன் கூற்றுக்கேற்ப மரபின்படி நன்றி கூறுவதே சிறப்பாகும். சோலை விழா என்று அறிவித்தவுடன் தொடங்கி, எனக்குப் பக்கத் துணையாக நின்று பல பணிகளைத் தானே சுமந்து, இவ்விழா அரங்கம் உட்பட இன்னும்… இன்னும்... என் இலக்கிய வாரிசு விவேக்பாரதிக்கு என் ஆசிகலந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பன்மணியந்தாதி என்றதோர் வழக்கிலில்லாத புதிய சிற்றிலக்கியத்தைத் தொகுத்தளிக்கத் தலைமையேற்ற என் பாசத்திற்குரிய மன்னையார்க்கு நன்றி என்ற ஒற்றைச்சொல்லால் கூறினால் அதில் நிறைவேற்படாது. என் மனங் கலந்த நன்றியைக் கூறி மகிழ்கிறேன்.

ஒருவிழாவின் வெற்றிக்கு முதன்மையான பொருளாதாரச் சூழலே காரணமாகிறது. அவ்வகையில், இவ்விழாவைத் தங்கள் குடும்பவிழாவாகக் கொண்டு அதற்காகத் தங்களாலியன்ற நிதியளித்துதவிய சோலைவாழ் குடும்ப உறவுகளுக்குத் தலைமேலேந்திய கைகளால் நன்றி மலர்களைக் காணிக்கை யாக்குகிறேன். விழா அரங்கில் நேரத்திற்கு முன்பே வந்திருந்து உதவிய நடராசன் ஐயா, சிதம்பரம் மோகன் ஐயா, சுந்தரராசன், விஜய், ஜோதிபாஸ், வள்ளிமுத்து, அர.விவேகானந்தன் சியாமளாம்மா உள்ளிட்ட மற்றவர்கட்கும் என் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

தலைமையேற்று நடத்திய அமர்வு தலைவர்கட்கும், இயலாச் சூழலிலும் வந்திருந்து சிறப்புரையாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன் ஐயாவுக்கும், இசைக்கவியார்க்கும், கருமலைத் தமிழாழன் ஐயாவுக்கும், விருதுகளை யேற்று மகிழ்வித்த ரவி ஐயாவுக்கும், இளவல் தமிழகழ்வனுக்கும் உள்ளார்ந்த உவகையைத் தெரிவித்து மகிழ்கிறேன். பார்வையாளராகவும், பங்கேற் பாளராகவும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்த அனைத்துக் கவிஞர் பெருமக்களுக்கும் நன்றி. . நன்றி... நன்றி…!

நிகழ்வின் செய்தியை வெளியிட்டுதவிய தினத்தந்தி, தினமலர், தினமணி, தி ஹிந்து ஆகிய நாளிதழ்கட்கும், அமுதசுரபி சிற்றிதழ்க்கும் என் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். விழாவில் நினைவாக அனைவருக்கும் மரக் கன்றுகளைத் தன் மகளின் திருக்கையால் கொடுத்த பசுமை நாயகன் விஜயகுமார் வேல்முருகனுக்கும் நன்றி…நன்றி... இன்னும் யாருடைய பெயராவது விடுபட்டிருப்பின் அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

வாழிய சோலை! வளர்க நற்றமிழ்!

இன்ப நிறைவுடன்…
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

வாழ்க்கை


பைந்தமிழ்ப் பாமணி இரா. அழகர்சாமி

எத்தனைக் காலம் இத்தரை வாழ்வு
    எதுவும் தெரியவில்லை
நித்தமும் நடக்கும் நிகழ்வுக ளெதுவும்
    நிம்மதி தருவதில்லை
சொத்துசு கங்கள் சூழ்நிறை சுற்றம்
    சுகப்பட வைக்கவில்லை
பித்தனைப் போலே பிதற்றிடத் தானோ
    பிறப்பெனும் மாயங்கள்!

வானம் பூமி வளர்கதிர் மதியும்
    வந்தெனை ஈர்க்கவில்லை
கானம் கவிதை கலைகள் எதுவும்
    கைவச மாகவில்லை
நானும் எல்லாம் நடப்பது போலே
    நடித்திட முனைகின்றேன்
ஏனோ எதுவும் என்வச மில்லை
    இறைவா அருள்வாயே!

என்னைப் படைத்தே இப்பெரு முலகில்
    இயங்கிட வைத்தவனே
எண்ணம் போலே இன்னும் வாழ
    இயலா திருக்கின்றேன்
சின்னச் சின்னக் கனவினைக் கூடச்
    செதுக்கவோர் திறனில்லை
வண்ணம் குழைத்தே வாழ்வினை அமைக்க
    வழியார் சொல்வாரோ!

தொடுவா னம்போல் தொடரும் வாழ்வைத்
    துரத்தித் தவிக்கின்றேன்
மடுவாய் இன்பம் மலையாய்த் துன்பம்
    மனத்தில் சுமக்கின்றேன்
வடுவாய் நெஞ்சில் வாழ்ந்திடும் துயரம்
    வடியவும் வழியில்லை
விடுவாய் இறைவா வாழ்ந்தது போதும்
    விளங்கா உலகத்தே!

வணிகத் தமிழ் – அவசரமும் அவசியமும்


பா. ஞான பிரகாசம், தணிக்கையாளர்

உலகின் முதன்மொழியாம் தமிழ்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்ட தமிழ்கூறும் நல்லுலகிற்கு, நீங்கள் சிறுபான்மையினராய் ஆகித் தமிழ்மொழியின் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் ஓர் அறைகூவல் விடுக்கிறோம். 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று கூறும் தமிழனே! எங்கே இருக்கிறது உன் தமிழ்? உங்கள் தமிழ் நவீன அறிவியல் யுகத்துடனும், வணிக யுகத்துடனும் இணைந்திருக்கிறதா? மேலும் அதிலே இணைந்து உலக அளவில் பேசப்பட்டு வளர்ச்சி யடைந்திருக்கிறதா? என்று சிந்தித்து பாருங்கள். நம் தமிழ்மொழி அறிவியல் துறையிலாவது சற்று எட்டிப் பார்த்திருக்கிறது. ஆனால் நாம் செய்யும் வணிகத்தில் இருக்கிறதா? அது இல்லை என்பதுதான் பதில். நம் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தமிழன் நடத்தும் தொழில்நிறுவனங் களிலும், அலுவலகங்களிலும் தமிழ்மொழி முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறதா? இல்லையே. உண்மையாகத் தமிழ்மொழிமீது தமிழனுக்கு அக்கறை இருக்குமேயானால் அவன் தமிழைத்தான் தன் வாணிப மொழியாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாகத் திரையுலக வழிவந்த கலைஞர்களால் (கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா) ஆட்சி நடத்தப்பட்ட தமிழகத்தில், ஆட்சியாளர்களால் இயல், இசை, நாடகத் தமிழைத் தங்கள் கவிதை, கதை, வசனம், நடிப்பு மற்றும் பேச்சுகள் மூலம்தான் வளர்க்க முயன்றார்கள். தமிழிலேயே கவிதை, கதை, கட்டுரை எழுதிவிட்டால் தமிழ்மொழி நவீன யுகத்திற்கேற்ப வளர்ந்துவிடுமா? அவர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) உண்மையிலேயே தொலைநோக்குப் பார்வை இருந்திருந்தால் அவர்கள் தமிழை அறிவியல் துறையிலும், வாணிபத் துறையிலும் அல்லவா புகுத்தி வளர்த்திருக்க வேண்டும். தற்போதைய யதார்த்த நிலை என்ன? தமிழர்கள் எல்லாம் ஆங்கிலம் கற்றால்தான் பொது அறிவு கிடைக்கும், வேலை கிடைக்கும் (அல்லது) தொழில் நடத்த முடியும் என்று நம்புகிறார்கள். இத்தகு கேவலமான நிலைக்கு அரசாங்கமும் தனியார் தொழிற் துறையும்கூட ஆதரவாகத்தான் இருக்கிறது.

இதற்கு யார் காரணம்? மக்கள் மட்டுமல்லர். தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் தான். மக்களைக் குறைசொல்லிப் பயன் இல்லை. அரசு எந்த மொழியை ஆதரிக்கிறதோ அதைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். ஒருமுறை, தமிழறிஞர் திரு.தமிழண்ணல் அவர்கள் தன்னுடைய 'தினமணி' நாளிதழ்க் கட்டுரையில் கூறியதுபோல், 'எந்த மொழி சோறு போடுமோ அந்த மொழிதான் தொடர்ந்து நவீன யுகத்தில் நிலைத்து நிற்கும். மற்றவை எல்லாம் பேச்சுவழக்கற்று 'சமஸ்கிருதம்' போன்று காலப்போக்கில் வழக்கற்று அழிந்து போகும்' என்று கூறினார். நம் தாய்மொழியான தமிழ்மொழி நமக்குச் சோறு போடுமா (வருமானத்தை ஈட்டித் தருமா)? என்பதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. ஆனால் நாம் தமிழ்மொழி சோறு போடாது, நம் வாழ்க்கைக்கு வருமானத்தை ஈட்டித் தராது (அல்லது) வாழ்வு தராது என்று நம்பி நம் குழந்தைகளை மழலைப் பள்ளியிலிருந்து உயர்கல்விவரை தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்காமல், ஆங்கிலவழிக்கல்வி கற்க அனுமதித்துத் தமிழையே ஒழுங்காகப் பேச, எழுத வராத (ஆங்கிலத்தையும் சேர்த்துத்தான்) எந்த மொழியிலும் ஒழுங்காகத் தேர்ச்சிபெறாத உணர்வற்ற தமிழர்களை உருவாக்கி வருகிறோம்.

இன்னும் எத்தனை நாளைக்குத் தமிழர்களைத் தங்கள் தமிழ் எழுத்து, பேச்சுத் திறமை மூலம் இந்த அரசியல்வாதிகள் ஏமாற்றப் போகிறார்கள்? திரைக்கலைஞர்களை நீக்கிவிட்டு அறிஞர்கள் ஆட்சி செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒரு பிரச்சினையின் 'மூலவேரைக்' கண்டறிய வேண்டுமானால் நிர்வாகத்தில் ஒரு வழிமுறை யாக 'ஏன் ஏன் என்று' (Why Why Analysis Theory) கேள்விகேட்டு வரும் விடைகளுக்குள் திரும்பத் திரும்ப 5 முறை கேட்டுபார்த்தால் கடைசியாகச் சரியான விடை (அல்லது) தீர்வு கிடைக்கும் எனச் சொல்வார்கள். இதன்படி தமிழன் தமிழ்மொழி மூலம் கற்காமல் ஏன் ஆங்கில வழியில் கற்கிறான்? என்று 5 முறை உங்களுக்குள் வரும் விடைகளுக்குள் வைத்துக் கேட்டுக்கொண்டே வந்தீர்களானால் தமிழ்மொழிக்கான தேவை நிறுவனங்கள் செய்யும் வணிகத்தில் இல்லை என்பதால்தான் நம் தமிழ்மொழி நவீன யுகத்துக் கேற்ப வளரவில்லை எனத் தெளிவாகப் புரிவதுடன் தேவைக்கும் அளிப்புக்குமான (Demand & Supply) கோட்பாட்டைப் புரிந்துகொள்வீர்கள்.

இங்கே ஆங்கில மொழிக்கான தேவைதான் (Demand) வணிகத்தில் இருக்கிறது. தமிழுக்கு இல்லை. எங்கே தேவை இருக்கிறதோ அதற்குத்தான் அளிப்பு (Supply) வந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொழிற்துறையில் (போதாக்குறைக்கு உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்பு வேறு!) ஆங்கிலம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் தமிழுக்கான தேவை எங்கிருக்கும்? எனவே தமிழ்மொழி மூச்சுத் திணறி எழுத்து, பேச்சு வழக்கற்றுப் போகாமல் இருக்கவும, சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பெறவும் மொழிப் பிரச்சினையைக் கீழிருந்து மேலாகப் (Bottom to Top Approach) பார்க்காமல், மேலிருந்து கீழாகப் (Top to Bottom Approach) பார்க்க வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ்வழிக்கல்வி கொடுத்து அளிப்பை (Supply) உருவாக்கும் முன்பு தமிழ்வழி தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்கான தேவையை (Demand) முதலில் உருவாக்க வேண்டும். ஒரு இடத்தில் 'தேவை' ஏற்பட்டுவிட்டால் 'அளிப்பு' தானாகவே எங்கிருந்தாலும் (மேட்டிலிருந்து பள்ளத்திற்குத் தானாக நீர் பாய்வதைப் போல) வந்து சேர்ந்துவிடும். இதனால் தமிழ்மொழிவழிக் கல்விக்கான தேவை தானாகவே உருவாகிவிடும்.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும், வியாபாரத்திலும் அதன் நடைமுறைகளிலும் உடனடியாகத் தமிழை வற்புறுத்த அமல்படுத்தி (வரிச்சலுகை தந்து) தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதற்காகத் தமிழக அரசை வலியுறுத்தி எல்லாத் தமிழ் இயக்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவன முதலாளியும் மற்றும் அதன் நிர்வாகமும் தமிழைத் தன் அலுவல் மொழியாகத் (Official Language) தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டு, தமிழை ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கியத் துறைகளான 'கணக்கியல் மற்றும் நிதி' (Accounting & Finance), 'உற்பத்தி அல்லது சேவை' (Production or Service), 'விற்பனை' (Sales & Marketing),  'மனித வளம்' (Human Resource) மற்றும் 'செயலகம் மற்றும் சட்டம்' (Secretarial & Legal) ஆகிய துறைகளில் அமல்படுத்தித் தமிழுக்கான தேவையை, ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்தித் தமிழ்வழி மூலம் மட்டுமே நிறுவனத்தை நடத்தி வருமானத்தை ஈட்ட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படிச் செய்தால் மட்டுமே ஒவ்வொரு வணிகச் செயல்களிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு அதனைச் செயற்படுத்தத் தேவையான தமிழ்வழிக் கல்வியை நாம் அனைத்துப் படிப்புகளிலும் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டு அதனை முழுமையாக நிறைவேற்ற முடியும்.

இதனைப் புதிய தொழிற்கொள்கையாக - மொழிக் கொள்கையாகத் தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்துவதுடன் தொழிலகக் கூட்டமைப்புகளையும், இனி, புதிதாகக் களத்தில் இறங்கும் தொழில்முனைவோர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே நமக்கு முன் உள்ள சவால் நிறைந்த பணியாகும். இதனை ஆரம்பக் கட்டத்தில் செய்யத் தமிழ்ப்பேராசிரியர்களின் (அல்லது) அறிஞர்களின் உதவியைத் தனியார் நிறுவனங்களும் அரசும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். ஆரம்பக் காலங்களில் இது மிகவும் கஷ்டமாகவும், முடியாத காரியமாகவும் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இது பழகிவிடுவதால் தமிழறிஞர்களின் உதவி யில்லாமல் சாதாரண தமிழறிவு உள்ள தமிழனே செய்துவிடுவான்.

மேலும் முக்கியமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள [Articles 344(1) and 351] 22 மொழிகளையும் தேசியமயமாக்க நாம் மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். குறைந்தபட்ச நடைமுறையாக ஒவ்வொரு மாநிலத்தில் வழக்கிலுள்ள பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிகளைப் பாராளுமன்றத்தின் தீர்மானம் மூலம் 8-வது அட்டவணையில் திருத்தம் கொண்டுவந்து இதைச் செய்திட வேண்டும். இதன் பலன் எப்படி இருக்க வேண்டுமானால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் அவரவர் வியாபார எல்லைகள் மற்றும் தொடர்புக்கு ஏற்ப அவரவர் தாய்மொழியிலேயோ (அல்லது) இந்தி (அல்லது) ஆங்கிலம் தத்தமது வணிகத்தில் (அல்லது) வியாபாரத்தில் பயன்படுத்துவதோடு அலலாமல் ஆண்டுதோறும் வருமானவரிக் கணக்கு மற்றும் செயலகப் பணிகளை அவரவர் விருப்பப்பட்ட மொழியில் தாக்கல் செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்கவேண்டும்.

சுருங்கச் சொன்னால் ஒரு நிறுவனம் அரசாங்கத்துடன் செய்துகொள்ளும் பரிவர்த் தனைகள் மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் முழுக்க முழுக்க அவரவர் விருப்பட்ட மொழிகளில் அதாவது மத்திய அரசானால் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும், மாநில அரசானால் தமிழ் மூலம் மட்டுமே தாக்கல் செய்யவதாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை ஒரு நிறுவனம் தனது வாணிபத்தைச் சர்வதேச அளவில் செய்துவந்தால் அதன் அலுவல் மொழியாக (அனைத்துத் தகவல்களிலும்) தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் இருக்க வேண்டும். எனவே ஒரு நிறுவனம் பயன்படுத்தும் அலுவல் (அல்லது) வணிக மொழியானது அது எந்த எல்லைக்குட்பட்டுத் தன் வியபாரத்தைச் செய்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அமைய வேண்டும். இதையே வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனத்தின் அலுவல் மொழியானது (Official Language) உற்பத்தி செய்யும் பொருள்கள் (அல்லது) செய்யும் சேவைகள் தொடர்பான தகவல்கள் மாநில அளவில் மட்டுமேயானால் அவை தமிழிலும், அதன் வியாபாரம் இந்திய அளவில் இருந்தால் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் ஒருசேரப் பயன்டுத்த வேண்டும். அதுவே நிறுவனம் சர்வதேச அளவில் வியாபாரம் செய்து வந்தால் அலுவல் மொழியாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் ஒருசேர அமல்படுத்த முன்வர வேண்டும்.

இது எப்படிச் சாத்தியப்படும் எனக் கேட்பவர்களுக்குச் சீனப் பொருட்களையோ, ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பொருட்களையோ வாங்கிப் பாருங்கள். அப்பொருள்களில் அவரவர் தாய்மொழியுடன் ஆங்கிலத்திலும் தகவல்கள், விளக்கக் குறிப்புகளிலும், கையேடுகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆக, அவர்களால் அதைத் திறம்படச் செய்யும்போது நம்மாலும் மனமிருந்தால், (மனமிருந்தால் மார்க்கம் உண்டு) நம் தமிழ்மொழி மறைந்தொழியாமல் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். எங்கே அடித்தால் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தி நம் தமிழ்மொழியின் ஆதிக்கத்தைக் கொண்டுவர முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இது ஒன்றுதான் தமிழை 'இனி, தமிழ் மெல்லச் சாகாமல் தடுக்கும்' ஒரு ஆராய்ந்தறிந்த தீர்வாக இருக்க முடியும். இது கடினமான வழியாக முதலில் தோன்றலாம். ஆனால் எந்த ஒரு விஷயமும் கொஞ்சம் காலம் பழகிவிட்டால் பின்னர் நடைமறைக்கு எளிதாக வந்துவிடும். எனவே நாம் 'தாய்மொழிவழிக் கல்விக்கு' முன்னுரிமை கொடுப்பதைவிடத் 'தாய்மொழிவழி வணிகத்திற்கும் அறிவியலுக்கும்' முன்னுரிமை கொடுத்து அதைச் செயல்படுத்திட வாருங்கள் என்று அழைக்கிறோம்.

தமிழுக்கான தேவையைத் தமிழ்நாட்டில் உருவாக்காமல் நாம் தாய்மொழி (தமிழ்) வழிக்குக் குரல் கொடுப்பதாலோ, தூய தமிழில் எழுத, பேச வற்புறுத்துவதாலோ தமிழிலேயே வணிகக் கடைகளுக்குப் பெயர்ப்பலகை வைக்க வற்புறுத்துவதாலோ, தமிழிலேயே பெயர்வைக்கும் திரைப்படங்களில் 'கேளிக்கை வரிச்சலுகை' கொடுப்பதாலோ, தமிழ்த்தாய்க்குச் சிலை வைப்பதாலோ, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழறிஞர்களுக்குப் பொற்கிழி தந்து பாராட்டிவிடுவதாலோ தமிழைச் செத்துவிடாமல் பாதுகாத்து வளர்க்க முடியாது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தெளிய வேண்டும். இவையெல்லாம் தமிழுக்கு மிகப் பரவலான அளவில் தேவையை வணிகத்திலும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் உருவாக்கி விட்டுப் பின்பு செய்ய வேண்டியவையாகும். மற்றவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வேலையே அன்றி வேறென்ன சொல்வது. நம் தமிழ்நாட்டு அரசாங்கமே தமிழை அலுவல் மொழியாக அரசு அலுவலகங்களில் அமல்படுத்தி நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும்போது ஏன் நம் தனியார் நிறுவனங்களால் நடத்த முடியாது?

தமிழ்வழிச் சமச்சீர்க்கல்விக்குக் குரல் கொடுக்கின்ற நாம் அதே வேளையில் வணிக நிறுவனங்களை (அல்லது) வியாபாரத்தைத் தமிழ்வழியில் செயல்படுத்த / ஏற்படுத்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் திருத்தம் செய்து, மொழிக்கொள்கைக்கெனத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்வழியில் செயல்படும் வியாபார/தொழில், சேவை நிறுவனங்களுக்கு (அது எந்த வகையான வியாபாரம் மற்றும் சேவை நிறுவனமாக இருந்தாலும்) வரிவிலக்குச் சலுகைகள் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ்மொழிக்கான தேவையைத் தமிழ்நாட்டில் நாம் உருவாக்கிவிட்டால் புலிக்கு (இந்திக்கு) பயந்து சிங்கத்திடம் (ஆங்கிலத்திடம்) மாட்டிக் கொண்டு அடிமைப்பட்டு அல்லல்பட்டு மெல்ல மெல்லச் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் மொழியை அப்போதுதான் காப்பாற்ற முடியும்.

அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையில் சிறிது மாற்றம்செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தைச் சர்வதேச வாணிபத்திலும், தமிழ் மற்றும் இந்தியை (இந்தியாவில் பெரும்பான்மையாகப் பேசும் மொழியாக இருப்பதால், மற்றபடி வேறு காரணமில்லை) இந்திய அளவில் நடைபெறும் வாணிபத்திலும் பயன்படுத்தித் தமிழைச் சோறுபோடும் மொழியாக நாம் மாற்ற முன்வர வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இனியாவது விழித்துக் கொண்டு தங்கள் தாய்மொழியாம் தேன்தமிழைத் தங்கள் வேலைகளிலும், தொழில்களிலும் மற்றும் அனைத்துவகைத் தகவல் தொடர்புச் சாதனங்களிலும் (அலைபேசி, இணையம் உட்பட) பயன்படுத்த முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒவ்வொரு தமிழனும் (தமிழ் பேசத் தெரிந்த எவரும் கூட) தங்கள் தாய்மொழியான தமிழ்மொழியில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். ஏனென்றால் உலகம் கணினியில் அடங்கிவிட்ட பிறகு தமிழ்மொழியில் தட்டச்சு செய்யத் தெரிந்துவிட்டால் நாம் நம் தமிழ்மொழியை மின்னஞ்சலிலும், மற்றும் இணையத்திலும் கணிப்பொறித் தட்டச்சு மூலம் எளிதாகப் பயன்படுத்தத் தொடங்கிவிடலாம். இல்லையென்றால் ஏற்கெனவே 'தமிங்கிலிஷ்' (ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசி வருவது) பேசி வரும் தமிழர்கள் முழுக்க முழுக்க வருங்காலத்தில் ஆங்கிலேயேர்களாக்கப்படுவார்கள் என்பதையும், 'தமிழ் பேசு, தங்கக் காசு அள்ளு' என்ற மானக் கேடான போட்டி நடத்தும் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்துவரும் வேலையை எதிர்காலத்தில் நம் தமிழக அரசே செய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கின்றோம். இன்றைக்கு தமிழ்மொழி பேசுபவர்கள், பயன்படுத்துபவர்கள் உலகளவில் அதிகமாக (சுமார் 10 கோடிக்கு மேல்) இருப்பதால்தான் 'Discovery, National Geographic Channel' போன்ற வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளும், 'Facebook, Wikipedia' போன்ற இணையத் தகவல்தொடர்புகளும் தமிழ் மொழியில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் நாம் இங்கே தமிழர்களை ஆங்கில வழிக் கல்வி கொடுத்து ஆங்கிலேயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதற்குச் சமீபத்திய உதாரணமாகத் தமிழக அரசு சுமார் 3000 அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வியை ஆங்கிலவழியில் சொல்லிக் கொடுக்கத் துவங்கியிருக்கிறது என்ற செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் இருக்கிறது. இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றாக ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டும்.

தாய்மொழியில் ஒரு குழந்தை சிறுவயது முதல் கல்வி (குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வியாவது) கற்றால்தான் சுயசிந்தனையுடனும், சிறந்த பலவகை ஆற்றலுடனும் திறனுடனும் விளங்க முடியும் என்பதைப் பல உலக மொழியியல் அறிஞர்கள் மற்றும் மனவியலறிஞர்கள் அறிவியல் பூர்வமாக நிருபித்தும் கூறியும் வருகின்றனர். இதனைப் பொதுமக்களும், அரசும் உணர்ந்து உடனே நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். நோயுற்று மரணத்தின் வாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தமிழன்னையை அணிகலன்களால் (இலக்கிய தொண்டாற்றி) அழகுபடுத்தவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைத்துவிட்டு அவளின் நோயை நீக்க முன்வருமாறு தமிழக அரசையும், தமிழ் மக்களையும் அழைக்கின்றோம். தமிழாட்சியை வணிகத்துறையிலும், அறிவியல் மற்றும் நீதித்துறையிலும் அமல்படுத்தி 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலையை ஏற்படுத்துமாறு நம் மண்ணின் மைந்தர்களை அழைக்கின்றோம்.

உலகமயமாக்கல், தராளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் அம்சமாக விலைவாசி ஏற்றம் மட்டும் தமிழனின் கழுத்தை நெறிக்கவில்லை, அவன் பேசும் தமிழையும் நெறித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தனது நீண்ட உறக்கத்திலிருந்து (மௌனத்திலிருந்து) விழித்தெழுந்து நம் தமிழ்மொழி அழிந்துவிடாமல் தொடர்ந்து வெற்றிநடைபோடத் 'தோள்கொடு தோழா' என்றழைக்கிறோம். ஆங்கிலவழிக் கல்விக்கு எதிராகப் போராட்டம் நடத்த முன்வருமாறும், தமிழ்வழியில் தொழில் மற்றும் சேவை நிறுவனங்களை ஏற்படுத்த முன்வருமாறும் உண்மையான தமிழ் ஆர்வலர்களையும், மண்ணின் மைந்தர்களையும் தமிழ்மொழி கொண்ட தாய்ப்பாசத்தால் 'காந்திய மக்கள் இயக்கம்' சார்பாகத் தங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

என் தாயைவிட அதிகமாக நேசிக்கும் என் தாய்மொழியாம் தமிழ்மொழி சுவாசத்துடன்,
                                                          பா.ஞான பிரகாசம்,
            தணிக்கையாளர்,
                                               திருநின்றவூர், சென்னை

புலம்பெயர் நாடும் வாழ்வும் – பகுதி 5


பைந்தமிழ்ச் செம்மல் இணுவையூர் வ.க. பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

சென்ற தொடரின் தொடராகச் சில தகவல்களை, உண்மையாக நடந்ததை  எழுத முனைகிறேன்.

இங்குள்ள பாடசாலைகள், 8 ஆம் மற்றும் 9 ஆம் வகுப்புப் பிள்ளைகளின் பெற்றோர் அனைவரையும் அழைத்துப் பிள்ளைகளின் செயற்பாடுகளுள் தேவையற்ற பிரச்சனைகள் எவ்வாறு உள்நுழைகின்றன என்பதனையும் அதனால் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்லும் ஆபத்து உண்டு போன்ற தகவல்களையும் அதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மூலமாக விளக்கி, சட்டதிட்டங்களுக்குள் எவ்வாறு பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டு என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நான் இப்படியான ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அங்கு அறிந்தவற்றினை  இங்கு உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

நகர்ப்புறத்திற்குச் சற்று உள்ளேயுள்ள வீடொன்றில் வசித்துவரும் சிறுமி தன் வகுப்புப் பிள்ளைகள் ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொள்ளும் ஒர் இரவு நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளார். அனைவரும் 15 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டவர்கள். மாலை 4 மணியளவில் அவ்வீட்டில் எல்லோரும் சந்திப்பதாகவும், சிறுமியின் பெற்றோர் அன்றிரவு வீட்டில் இருக்க மாட்டார்கள் என்றும், ஆகையினால் அனைவரும் இரவுக் கொண்டாட்டத்தின் பின் அங்கேயே உறங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

பெற்றோர் வீட்டினை விட்டு நீங்கியதும் வகுப்பு மாணவர்கள் வரத்தொடங்குகிறார்கள். மதுபானம் அருந்தலுடன் நிகழ்வு ஆரம்பமாகின்றது. நேரம் செல்லச் செல்ல, பல வேறு இளைஞர்கள் (ஆண்,பெண்) வரத் தொடங்குகிறார்கள். வீட்டிற்குள் ஆட்டம் பாட்டம் என்று ஒரே மகிழ்ச்சிக் கூத்து. ஆண் பெண் என்பதனால் காதலர்களாகவும் சிலர் அங்கே இருந்திருக்கிறார்கள். அனைவரினதும் பலமான சத்தமும், பலர் புகைபிடித்ததனால் ஒரே புகை மூட்டமாகவும் வீடு மாறத் தொடங்குகின்றது. காதலர்களாகவுள்ளவர்கள் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அவ்வீட்டிற்குரிய சிறுமிக்குப் பீதி ஏற்படுகிறது. எதற்காகக் கூடினார்களோ அது திசைமாறிச் செல்வதனையும், யாரையும் வெளியேற்ற முடியாத சூழலுண்டானதையும் உணர்ந்த அச்சிறுமி பயத்தோடு வீட்டிற்கு வெளியே வருகின்றாள். தன் பெற்றோருக்கு அழைப்பினை ஏற்படுத்தி உதவி கேட்க முனைகிறாள். பெற்றோரின் தொலை பேசி இயங்கவில்லை. சிறுமிக்கு இன்னும் பயம் அதிகமாகின்றது.  அவள் அழுகிறாள், உதவிக்கு யாரை அழைப்பது என்று யோசித்த போது நகர பாதுகாவலரை (Police) அழைப்பதே சிறப்பு எனவுணர்ந்து, தொலைபேசியழைப்பில் அவர்களை வரவழைக்கிறாள்.

நகர பாதுகாவலர்கள் உள்ளே புகுந்து எவரெவர் அழைப்பின்றி வந்தார்களோ அவர்களை வெளியே அனுப்பியதுடன் அச்சிறுமிக்கு ஆறுதலளித்து அவ்வீட்டிற்கு காவலாகவும் இருந்துள்ளார்கள்.

இத்தகவலை எம்மோடு பகிர்ந்து கொண்டவர், பிள்ளைகளை இது போன்ற நிகழ்வுகளில் தனியே விட்டுச் செல்வதாயினும், அடிக்கடி பிள்ளையுடன் தொடர்பு கொண்டு அங்கு நடப்பதனை அறியவேண்டும், அல்லது வீட்டில் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று எம்மை அறிவுறுத்தினார்.

மேலும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் இரவு நேரங்களில் இரவுக் களியாட்டம் நடைபெறுமிடங்கள் உட்பட, 18 அகவைக்குட்பட்டவர்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைக் கண்காணித்தபடி இருப்பார்கள். இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமிடத்து அவர்களுக்கு வேண்டிய உதவியினைச் செய்து கொடுப்பார்கள். எடுத்துக்காட்டாக ஒரு பிள்ளை (ஆண்,பெண்) அளவுக்கு அதிகமாக மது அருந்தி ஒவ்வாமை (vomiting) ஏற்பட்டு வீதியில் காணப்படுமிடத்து அப்பிள்ளைக்கு வேண்டிய உடனடித் தேவையினைச் செய்து கொடுப்பதோடு பிள்ளையின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து, அவர்களை அழைத்துப் பிள்ளையினை ஒப்படைப்பார்கள். பெற்றோரினைத் தொடர்பு கொள்ள முடியாது போயின் நகர பாதுகாவல் நிலையத்திற்குத் (Police station) தகவலினைக் கொடுத்து,  தம்முடனே அப்பிள்ளையினை அழைத்துச்சென்று பாதுகாப்பளிப்பார்கள்.

18 அகவைக்குட்பட்ட பிள்ளைகளுக்குப் பெற்றோரினால் துன்புறுத்தல் ஏற்படுத்தப் படுமானால் அவர்களைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, அரசால் தேர்ந்தெடுக்கப்படும் வேறு குடும்பத்துடன் இணைத்து வளர்க்கப்படுவதற்கான சட்டவாக்கமும் உண்டு.  18 அகவைக்குப் பின் தாம்விரும்பும் விதத்தில் வாழ்வதற்கான அனைத்துச் சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

நான் டென்மார்க் நாட்டு நடமுறையினைப் பார்த்து பல இடங்களில் பிரமித்துப் போயுள்ளேன்.

தொடரும்….

உத்தம குரு – பகுதி 4


பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி

கவிமண்டபப் படலம்

சீர்வளரும் இத்தகைய சிறப்பைப் பெற்ற
   செந்தமிழ்க்கோ நாட்டினிலே தூதன் ஓர்நாள்
போர்நிகழும் அறிகுறியைச் சொல்வ தன்ன
   பொங்கிவழி கின்றபெரும் வியர்வை யோடு
தேர்ப்புரவி மிசையோடி அவைக்கு வந்தான்
   தென்னவனே நீர்வாழ்க வாழ்க ஆட்சி
ஊர்வாழ்க நம்நாடும் உயர்க! ஐய
   ஓர்செய்தி கொண்டுவந்தேன் அனும திப்பீர்!

எனப்பதறி தடுமாற்றம் நிறைய வெய்தி
   இளைப்போடு மன்பதிலை நோக்கி நின்றான்!
மனத்தமைதி மிகக்கொண்ட மன்னன், செய்தி
   வழங்கிடுக! நீமுதலில் பற்றம் தீர்கென்
றனுமதிக்க போரூழிப் புறப்பா டன்ன
   புதுமைதிகழ் நமதுநகர் நோக்கி அந்த
மனிதவுரு கொண்டவிலங் கேகு தைய
   மாற்றார்நாட் டொற்றனிவை பகர்ந்தான் என்றான்!

சீரேந்து மன்னனுக்கும் மற்றும் புத்திச்
   சிறப்புடைய அமைச்சர்மார் யாவ ருக்கும்
யாரந்த மனிதவுரு கொள்வி லங்கு
   யாதவன்றன் செய்கைகள் எதற்கிவ் வச்சம்?
ஊரெந்த ஊரென்றும் அவன்யா ரென்றும்
   உளத்திலெழும் ஐயங்கள் கண்ணில் தோன்ற
காருந்து மின்னலெனப் பாடும் மக்காள்
   கதையிதனைக் கேட்டவனை அறிவீ ரென்றான்!

நம்மூர்க்குச் சிலகாதம் தொலைவில் உள்ள
   நல்லரசங் கோட்டையிலே ஆண்டு முன்னம் 
தம்மூரின் புலவர்கு ழாத்தைக் கூட்டித்
   தனிவேந்தன் இவைசொன்னான்! புலமை சான்ற
செம்மொழியின் புலவோரே நமத வைக்குள்
   செருக்குடைய வொருபுலவன் தோன்றி யுள்ளான்
எம்மொழிக்கும் நிகராகா தவனின் பாட்டென்
   றெக்காள மிடுகின்றான் உணர்க வென்றான்!

ஆங்குடனே கலித்துறைசெய் புலவன் சொன்னான்
   அரசேநீர் கவலற்க எனதந் தாதி
ஓங்குகையில் அவன்கொற்றம் அடங்கும் என்றான்
   ஒழிப்போமென் றேவெண்பாப் புலவன் சொன்னான்!
நாங்களொரு பாட்டெடுத்து விருத்தம் பாட
   நாடானோ தாய்மடியை அழுதற் கென்று
தூங்கலிசை வஞ்சிப்பா புலவன் சொன்னான்
   தோள்நிமிர்த்தி அவ்வரசன் அவைபு குந்தான்!

அரசனுக்கு நிகரான இருக்கை கொண்டு
   ஆங்கந்த புலவனவன் வீற்றி ருந்தான்
முரசறையப் பக்கத்தில் ஒருவன், இன்னும்
   முதுகுக்குப் பின்னாலோ தம்பு ராவில்
சுருதிசெய இன்னொருவன் இடது பக்கம்
   சுகயாழை மீட்டுபவன் இவர்க ளோடு
கருதியொரு முடிவோடு வீற்றி ருந்தான்
   கவிஞரவை தொடங்கிற்று மன்னன் சொன்னான்

பலநாட்டை உம்பாட்டால் வென்றீர் என்றும்
   பாட்டுசுவை வானவர்க்கு விருப்பம் என்றும்
உலகத்தை நிறுத்தவல்ல சொல்லீர் என்றும்
   ஊரார்கள் புகழ்வதையாம் கேட்டுள் ளோமே
அலகில்புகழ் உடையதமை அவையில் பாட
   அழைப்புதர லாமென்றே ஆலோ சித்தோம்
சிலதினத்தில் நீர்நேரே விஜயம் செய்தீர்
   சிந்துகிறோம் எம்வணக்கம் முதலில் நாங்கள்!

போர்செய்து பேர்பெற்ற மன்ன ருண்டு
   பொன்னாலே புகழ்பெற்ற மன்ன ருண்டு
நேர்செய்த பக்தியினால் நிறைமை எய்தி
   நெடுங்காலம் புகழ்பெற்ற மன்ன ருண்டு
ஏர்செய்து பேர்பெற்ற அரசும் உண்டு
   எம்பக்க அரசெல்லாம் சுவைகொள் பாட்டுச்
சீர்செய்து பேர்பெற்ற தறிவீர்! இந்தச்
   சிறந்தவவை எய்தியதென் உரைப்பீ ரென்றான்!

யான்பெற்ற செல்வமெலாம் தமிழுக் காக
   யாழ்செய்யும் இசைக்காக கலைகட் காக
வான்பெற்ற நீரள்ளி வழங்கல் போலே
   வாரியிரைத் தெம்முடைய கவிதா மன்றம்
தேன்பெற்ற பூக்கள்போற் றெளிந்த பாக்கள்
   தெறிக்கின்ற வகைசெய்து வைத்தோம்! இங்கே
ஏன்பெற்ற செல்வமெலாம் போதா தென்னும்
   ஏக்கத்தால் வந்தீரோ தருவோம்! பாடும்!

சோவென்று தொடங்கியதும் சொற்கள் கூட்டிச்
   சொல்லென்று முடியும்முன் இசையில் அஃதை
ஆவென்னும் ஆகாரம் தேற்றப் பாடி
   அலங்காரம் செய்கின்ற புலவோர் மன்றில்
பாவொன்று கற்றிடலாம் என்னும் ஆசைப்
   பாய்ந்திடவே வந்தீரோ பயிற்று விப்போம்
காவென்ற தன்முன்னம் பாடும்! உங்கள்
   கானத்தின் திறன்கேட்போம் வாய்தி றங்கள்!

பக்கத்தில் இசைசேர்க்கும் கூட்டம்! ஓஹோ
   படையாக வந்தால்தான் சிறப்பென் றெங்கோ
துக்கத்தில் திகழ்ந்திருந்த ஏழை யேரைத்
   தோற்றுவித்து வந்தீரோ! சொல்லும்! என்றான்!
வெட்கத்தில் தலைகுணிந்தார் வாத்தி யத்தார்
   வெஞ்சினம்கொண் டானந்தப் புலவன், சாய்ந்து
பக்கத்தில் இருந்தவரைத் தேற்றித் தன்றன்
   பாடுகுர லாலிதனைப் பகர லானான்!

ஈரேழு பதினான் குலகத்தையும் ஒற்றை
   இசையில் தகர்க்க வல்லேன் - அந்த
இந்திரனை என்னுடைய கற்பனையின் சக்தியால்
   இங்கே நிறுத்த வல்லேன்
கூரான ஈட்டிகள் குத்தாமல் சொல்கொண்டு
   கூரை படைக்க வல்லேன் - தீய
கூற்றையும் என்னுடைய கூற்றினால் சாய்க்கின்ற
   கொழுந்துக் கவிதை சொல்வேன்
பாராளும் வேந்தனுக் கித்தனை கருவமா
   பாடம் புகட்டு கின்றேன் - அவன்
பாட்டெழுது கூட்டமும் சேர்ந்தெழும் ஆட்டமும்
   பறவைக ளாகிப் போக!
சீராரும் செந்தமிழில் மந்திரச் சொல்கூட்டிச்
   சித்தி படைக்க வல்ல - செல்வச்
சித்தமுத் தன்சொல்லின் சத்தியம் வெல்கென்று
   சிந்துகருள் காளி ஓம்!ஓம்!

என்றவன் பாடிட எழுந்த கூட்டமும்
அன்றிருந் தாடிய அரசன் கொற்றமும்
தென்றலில் மெல்லிய சிறக சைத்திடும்
அன்றிலும் நாரையும் ஆகிக் கூவின!

மந்திரச் சொல்லுடன் வகுத்த பாடலின்
சுந்தரம் ஓர்புரம் சுருக்கு போல்விழு
தந்திர சாபமும் தடையும் ஓர்புரம்
வந்தவர் யாவரும் வழிம றந்தனர்

சித்தமுத் தன்கவி சிறிது சிந்தினான்
வித்தையில் கர்வமும் விளங்கி நின்றவர்
அத்தனை பேர்களும் அலகில் மண் தரை
கொத்திடும் புட்களின் கோலம் பூண்டனர்

பாவலர் கூறிய பகட்டில் ஆடிய
காவலன் பேச்சினில் கனன்ற பேச்சினன்
நாவல மந்திர நலத்துப் பாடலைத்
தூவினன் மானுடர் சிறகு கொள்ளவே

பின்னவர் கூவிய பிதற்றல் கேட்டவன்
மன்னவர் தம்மொடு மதியின் புலவரை
அன்னவர் முன்னிலை அமைந்த வண்ணமே
சொன்னலப் பாடலைச் சொல்லி மீட்டனன்!

நல்லவன் என்றுளார் நினைக்க வன்னவன்
சொல்வளர் பாவலர் சூழி டத்தினில்
வல்வலி கொண்டுயான் வென்று ளேனெனச்
சொல்லிய வர்களின் தலைக விழ்த்தனன்!

நுங்களின் கோலது நுழையும் ஓலையும்
மங்கலப் பாசெயும் வளமும் என்னிடம்
சங்கையி லாதுச மர்ப்ப ணஞ்சொலித்
தங்கியென் தாள்களில் தலைகள் தாழ்த்துக

இன்றுமு தல்கவி இயம்பி டோமென
நின்றொரு சத்தியம் நிறைந்த மக்களூர்
மன்றிடை வைத்துநின் மதிப்பு தீர்ந்தொரு
குன்றிடை சேர்கெனக் குறையி லேசினான்

தீயவன் அன்றுபோல் திசையெ லாம்நிறை
தூயவர் நாட்டிடை சொல்லின் வன்மையால்
போயவர் முன்னிசை பொழிதல் உற்றனன்
ஆயிரம் பாவலர் அடிப ணிந்தனர்!!

-தொடரும்