'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


     12. பைந்தமிழ்பாமணி இரா. அழகர்சாமி

தமிழ்த்தாய் வாழ்த்து

மின்னும் பொன்னோ மிகைப்படு பொருளோ
என்னைக் கவரும் எதுவும் வேண்டா
அன்னைத் தமிழே! அறிவின் ஊற்றே!
என்றன் நாவில் என்றும் இருப்பாய்!

அவையோர் வாழ்த்து

தேன்தமிழ் தன்னைத் திறம்பட உரைக்கும்
ஆன்றோர் அமைந்த அவைக்கென் வணக்கம்!
வான்மழை போலே வளர்கவி வழங்க
நான்என வந்தோர் நற்கவி தருக!

தலைவர் வாழ்த்து

முக்கனிச் சுவையில் மூழ்கித் திளைக்கும்
இக்கவி யரங்கை இன்முகம் கொண்டே
சொக்கிடும் குரலார் சுந்தர வரதர்
அக்கரை கொண்டே அமைத்தார் வாழி!

என்ன_தவம்_செய்தோம் (தலைப்பு)

பாவலர்தான் பதியமிட்ட சோலை தன்னில்
    பாத்தெரிந்து கற்பதற்காய் முனைப்புக் கொண்டே
ஆவலுடன் வந்திணைந்த அன்ப ரூடே
    அடியேனும் வந்திங்குச் சேர்ந்தேன்! பூத்த
பூவெடுத்து நார்சேர்க்கும் நூத னம்போல்
    பொறுப்போடு பாக்களையும் கட்டு தற்கே
மாவரத ராசரிவர் கரங்கள் சேர
    மாதவமென் செய்தேனோ முற்பி றப்பில்!

ஆறுகளும் காடுகளும் சூழ்ந்த நாடு
    அளவில்லா வளம்பலவும் விளைந்த நாடு
ஏரெடுக்கும் நம்முழவர் வியர்வை தன்னில்
    எத்தனையோ கதிர்மணிகள் குவிந்த நாடு
ஊரடுத்த ஊருணிகள் நிறைந்து நின்றே
    ஒப்பற்ற நீர்வளத்தைக் கொடுத்த நாட்டில்
பேரெடுத்து நான்வாழப் பிறப்ப தற்குப்
    பெரியதொரு தவமென்ன செய்தே னம்மா!

தேனொழுகும் தீந்தமிழில் காவி யங்கள்
    தெவிட்டாத தெள்ளமுதாய் இனித்தல் கண்டே
வானவரும் விரும்பிவந்து வாழ்ந்த நாடு
    வடிவான தமிழுக்குச் சொந்த நாடு
கானமதும் கவிதைகளும் செழித்தே ஓங்கிக்
    கனிந்துருகும் அன்புமனம் நிறைந்த நாட்டில்
நானும்தான் பிறப்பெடுத்து வாழ்வ தற்கே
    நல்லதொரு தவமென்ன செய்தே னய்யா!

நாமணக்கும் தமிழ்வாழ்ந்து தழைத்த நாட்டில்
    நல்லறங்கள் சிறந்தோங்கிச் செழித்த நாட்டில்
பூமணக்கும் சொல்லெடுத்துக் கவிதை யாத்த
    பலவர்களும் கவிஞர்களும் வாழும் நாட்டில்
தேமதுரத் தமிழோசை தினமும் கேட்கத்
    தென்பாண்டி நாட்டினிலே நானும் வந்தே
சேமமுடன் பிறப்பதற்குச் செய்து வந்த
     செயற்கறிய தவமென்ன சொல்வீர் நீரே!

பல்லுயிராய்ப் பிறப்பெடுத்துப் புவியில் வாழ்ந்து
    படிப்படியாய் அறிவுதனை வளர்த்துத் தானே
சொல்லாலும் சிரிப்பாலும் சிறப்புக் கொண்டு
    சொல்வளமை பெற்றதொரு மாந்தர் ஆனோம்
வல்லமைகள் பலபெற்று வாழ்வ தற்கும்
    வானளவு புதுமைவந்து குவிவ தற்கும்
உள்ளபடி முன்னோரின் தவந்தான் என்றே
    உரைக்கின்றேன்! தவமென்ன செய்தோம் நாமே!

No comments:

Post a Comment