'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


       15.  பைந்தமிழ்ச்சுடர் நடராசன் பாலசுப்பிரமணியன்

அன்னைத் தமிழாம் அணங்கு வாழி!
கன்னற் தமிழின் கவிகுழாம் வாழி!!
முன்னர் பிறந்த மொழியின் மரபை
முகநூல் வழியே முனைந்து கற்பிக்கும்
தலைவ வாழி!!!

பிறப்பெனில் மனிதப் பிறப்பாதல் வேண்டும்
சிறப்பதில் சொல்லாடச் செந்தமிழ் வேண்டும்
அறத்தமிழ்ப் பாக்கள் அனைத்தும் பாடி
இறவாப் புகழும் எய்திடல் வேண்டும்
என்னதவம் செய்தோம் இவ்வனைத்தும் கூட!

பைந்தமிழ்ச் சோலை பாவலர் மூலம்
செந்தமிழ்ப் பாவகை செழுமையாய்க் கற்றே
கந்தனின் கருணையால் கவிஞரானோம் நாமும்
எந்தம் மொழியை ஏட்டினில் வடிக்க
என்னதவம் செய்தோம் என்றே இன்புறுவோம்நாம்!

மரபுமா மணியாம் வரதராசர் வழியில்
தரமுடன் பாடுவோம் தமிழை பாவலர்
பரம்பரை கவிஞரெனப் பலரும் அழைக்க
இரண்டறக் கலந்தே இன்தமிழ் சுவைக்க
என்னதவம் செய்தோம் இவ்வரங் கேறிட!

சிந்தையில் வைப்போம் சீருடன் வாழ்வோம்
விந்தியம் தெற்கே வீணாய்ப் போகுதென்று
அந்தக ராயாக்கும் அரசியல் தவிர்த்து
இந்திய னென்றே இறுமாப் பெய்திட
என்னதவம் செய்தோம் என்று கொண்டாடு வோம்!

குமரிமுதல் வேங்கடக் குன்றுவரை பரந்த
தமிழ்நாடு வந்துபிறக்கும் தகைமை பெற்ற
தமிழனென் றுரைத்து தலைநிமிர்ந்து நடக்க
இமைப்பொழுதும் சோராது எந்தமிழின் புகழ்காக்க
என்னதவம் செய்தோம் என்றுரைத்து அமர்கின்றேன்

No comments:

Post a Comment