'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


   8. பைந்தமிழ்ச் செம்மல் சாமி.சுரேஷ்

(காவடிச்சிந்து)

தமிழ் வாழ்த்து

வானத்தி ருச்சுடர் முன்னே - மண்ணில்
வந்ததி ருத்தமிழ்ப் பெண்ணே - உன்னின்
வளமானவள் நிலமீதினில் இலையேபுகழ் நனிமேவிய
வனப்பே உயிர் கனப்பே

தானம்த வம்செய்த லாலே - தேவர்
தாளிணை பற்றுவார் போலே - உடல்
தடையேயெனும் முனிவோர்களும் துறவாபடி உணர்வாகிய
தாயே அருள் வாயே

தலைமை வாழ்த்து

அன்னைத்த மிழ்மகள் தாசன் - இங்(கு)
ஆயிரம் பாவலர் நேசன் - இவன்
அறமேவிய தமிழாளெமை அடைகாத்திட பனிசோலையில்
ஆழ்ந்தான் தமிழ்ப் போந்தான்

உன்னைய டைந்தவர் தேற்றி - யவர்
ஊர்மெச்சப் பாவலம் ஏற்றி - அந்த
உழவோனென தனியாட்படை உருவாக்கிய தனியாளுமை
உரவோன் எங்கள் குரவோன்

என்ன தவம் செய்தேன்?

கோடிபி றப்புள்ள உயிரில் - புகழ்க்
கொண்டதாம் மானிடப் பயிரில் - இவன்
கொடிவிட்டெழ இறைமைத்தமிழ் அடியைத்தொழ முளைவிட்டுருக்
கொண்டோன் தமிழ்த் தொண்டோன்

(கொண்டோன்-தலைவன்)

நாடிந ரம்பெலாம் உருக்கி - இவன்
நலம்பெற ஊனுடல் சுருக்கி - தன்
நாவிற்சுவை யாததிரு மேனிக்குழை வானப்பெரு
நலனே உயிர்க் கலனே

மன்னும்பு கழுள வேந்தர் - நல்
மாண்புறு காசறு மாந்தர் - பலர்
வளநாடிதில் நடமாடினர் அவர்மேவிய அறமாநிலம்
வந்தேன் என்ன தந்தேன்

(காசு-குற்றம்; காசறு-குற்றமற்ற)

என்னத வஞ்செய்த லாலே - இங்(கு)
எய்தினேன் மாமழை போலே - பலர்
எச்சிற்பட நச்சத்தமிழ் முச்சிற்புடை வுற்றுத்திரு
ஏற்றேன் என்ன நோற்றேன்

(எய்துதல் - அடைதல், பொருந்துதல்; முச்சில் -முறம்; நோன்பு - தவம்)

ஆதிம னிதர்கள் தோற்றிக் - கதிர்
ஆடும்வ ரைப்புக ழேற்றி - என்றும்
அழியாதவள் நிலையானவள் அமிழ்தானவள் அவள்மாமடி
அமர்ந்தேன் என்ன தமர்ந்தேன்

(தமர்தல்-இணங்குதல்; விரும்புதல்)

மேதிநு ழைந்தவோர் வாவி - அதன்
மேனியில் செந்நிறம் தூவி - மலர்
வேடந்தர ஆடம்பர மானங்கரு மேதின்நிலை
மேவும் இவன் நாவும்

(மேதி-எருமை)

அன்னையின் ஆகூழால் தோன்றி - நல்ல
ஆண்மகன் என்றேமண் ணூன்றிக் - கொடும்
அழிவைத்தரும் அடிமைத்தனம் ஒழியப்பெரு குடியைச்செய
அன்னை செய்தா ளென்னை

(ஆகூழ்-நற்வினைப்பயன்)

முன்னையான் செய்தவோர் தவமே - உங்கள்
முன்னர்யான் நிற்கின்ற வரமே - செப்பும்
மொழியேதரும் வளமேவிய நனிசோலையை மறவாதிரு
மனமே நந்த வனமே

No comments:

Post a Comment