4. பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர. விவேகானந்தன்
தமிழ் வாழ்த்து!
தானாய் வளர்ந்தவளே! தாகம் தணிப்பவளே!
ஊனாய்க் கலந்தவளே! ஊக்கந் தருபவளே!
தேமாவைத் தந்தவளே! தீஞ்சுவைக் கன்னலே
தாமாக வந்தருள்வாய்! தண்டமிழ் தந்திடுவாய்!
பூமாலை சூட்டினேன்! பொன்னாவாய் பூந்தமிழே!
பாமாலை செய்வாய் பரிந்து!
தலைமை, அவை வணக்கம்!
வாய்திறந்தால் செம்பா வாசம் மணந்தோங்கும்!
நோய்துறந்தே உள்ளம் நுவன்றிடு மின்பம்
பூவுரைந்தே பாடுகின்ற பாவலரே! போற்றினேன்!
நாவிரந்தே வேண்டுகிறேன் நற்பா எனக்குவேண்டும்
நற்சொல் தருவீர் நயந்து!
தேனொத்த கானத்தைத் தேக்கும் மனத்தோரை
வானொத்த வண்மையோரை வண்டெனவே
சுற்றி வணங்கினேன்! சொல்லைப் பொறுத்திடுவீர்!
வெற்றி தருவீர் விரைந்து!
பாவலரே! என்ன தவம் செய்தேன்!
பாட்டெழுதப் பலருமிங்கே சோலை வந்தார்
பண்போங்கிப் பாவோங்கிச் செழுமை தந்தார்
நாட்டினிலே எங்கதைபோல் ஏது மில்லை
நற்கவியே! பாவலரே! சொல்வேன் உண்மை!
வேட்டைக்காய்த் துரத்துகின்ற வேடன் போலும்
வேகங்கொண் டேயின்னல் துரத்தும் வேளை
கோட்டையெனும் சோலைதன்னில் இணைத்துக் கொண்டாய்
குளிர்ந்தவுளம் குழந்தைமனம் கொஞ்சித் தந்தாய்!
வெள்ளாட்டுப் பால்குடித்து வீதி சுற்றி
வெற்றென்னும் மனங்கொண்டு கிடந்த வென்னைச்
சொல்லாட்டிச் சுவையேற்றிச் சூடாய் மாற்றிச்
சுரும்பெனவே தமிழ்த்தேனைச் சுவைக்கச் செய்தாய்!
பொல்லாட்டம் ஆடுகின்ற புவியில் நன்றாய்ப்
புதுத்தமிழாட் டம்பொலியப் புதுமை செய்தாய்
வில்லாட்டி விரைகின்ற கணையைப் போலும்
வியன்மீதில் என்னுயிரை இயங்கச் செய்தாய்
உந்தியிலே பசிநெருப்பும் எரிந்த வேளை
பந்தியிலே அழைத்துவந்து விருந்து வைத்தாய்
சந்துபொந்தில் கவிப்பெண்ணால் கவிழ்ந்த நாளில்
சகடறவே சந்தமெல்லாம் கற்றுத் தந்தாய்
அந்தியிலே படர்கின்ற அழகாய் நின்றாய்
ஆண்டாண்டு நிலைக்கின்ற சோலை தந்தாய்
வெந்துவுடல் வீழும்வரை ஓய மாட்டேன்
வியன்சோலை விட்டிமையை மூட மாட்டேன்
தோல்விலைக்குப் பசுவைக்கொன் றுவாழும் நாட்டில்
தோள்மீது பைந்தமிழைச் சுமந்து கொண்டாய்
ஆல்போலே வளர்வதற்காய் அகத்தை விட்டே
ஆசைக்காய் அழிவினையே நாடு மூரில்
நால்வகையாய்க் கவிகூட்டும் கலையை நெய்தாய்
நானிலத்தில் உமக்கிருக்கும் உறவைக் கேட்டால்
தால்தளர்ந்து மூச்சடைக்கத் தமிழாள் சொல்வாள்
தவமென்ன செய்தேனோ உன்னைச் சேர
வரம்வேண்டிக் கேட்கவில்லை வாரித் தந்தாய்
வருந்தியேதும் உழைக்கவில்லை வளமை சேர்த்தாய்!
சுரங்கொண்ட வாழ்வினிலே சுயத்தைத் தந்தாய்!
சுட்டெரிக்கும் பகையெல்லாம் ஓடச் செய்தாய்
அருந்தமிழைக் குழைத்தெடுத்தே ஊட்டி விட்டாய்
அகமெல்லாங் குளிர்கின்ற மரபைத் தந்தாய்
பரம்பொருளாய் என்னுள்ளே நிலைத்து விட்டாய்
பாவலரே என்னதவம் செய்தேன் இங்கு!
No comments:
Post a Comment