16. பைந்தமிழ்ச்சுடர் சோமு . சக்தி
என்ன தவம்செய்தோம் இங்கே பிறக்க
கன்னல் சுவைத்தமிழில் கவிதை யாக்க!
புண்ணிய மென்போம் புகழ்ந்து இன்றும்
பண்ணிடும் தவறைப் பாரா திருப்போம்!
காதல் கவிதை கண்டு களிப்போம்
சாதல் திணித்தால் சமரசம் கொள்வோம்!
முக்கண்ணன் எரிக்க முற்றும் கீரன்
ஊக்கம் பிடித்த உறுதியை மறப்போம்!
பாரதி போலொரு பாவில் பாடி
பாரதிர மீசை பார்த்து முறுக்கி 10
முழங்கு மிளைஞர் மோகம் கலையும்
வழக்கம் போலே மாறா நிலையும்!
என்ன தவம்தான் இன்னும் செய்வோம்?
ஏன்தான் கேள்வியை எழுப்பா திருப்போம்?
கூனிக் குறுகி வாழும் கொள்கை
நாணிக் கவிழ ஞானமா வேண்டும்?
சுற்றி நடப்பதிற் சூழும் இடரை
முற்றும் களையவே முத்தமிழ் தீண்டும்!
சற்றும் விழிப்பிலை சாக்கில், கேடும்
பற்றும் நிலைவரும், பாராளக் கூடும் 20
வலைதளப் பக்கம் வரும்பல தடைகள்
தலையுடைக் கவிதை தளைபட நேரும்!
அரசியல் பேசா அடிமை மாக்கள்
முரசறை வேளை முந்தியிற் கிடப்பர்!
உலகப் பொருளியல் உறுத்தும் மந்தம்
கலகக் குரலா? காவு கொடுப்பா?
வேலை இல்லை! வேலையும் இழப்பு!
ஆலை மூடல் அடுத்து நிகழ்வு!
போரைத் திணிக்கப் போடும் முயற்சி
யாரைக் காக்கும்? யாவரே வெல்வார்? 30
மண்ணைக் காக்கவா மரபு தமிழே!
திண்ணைச் சிறைமீள் தெருவில் இறங்கே!
No comments:
Post a Comment