'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


21. கவிஞர் சொ. சாந்தி

புத்தன் காந்தி பூலித் தேவர்
கட்ட பொம்மன் உதித்த மண்ணில்
கர்வம் கொண்டே தோளினை உயர்த்த
கருணைக் கடவுள் நம்மை படைத்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!
விழிசெவி வாயொடு காலும் கையும்
அவயங்கள் அனைத்தும் இயக்கத்தில் இருக்க
கேட்டும் களித்தும் ஓடியும் ஆடியும்
புன்னகை புரிந்தே புவியினில் உலவிட
நல்ல தவம் செய்தோம் - நாம்
நல்ல தவம் செய்தோம்..!
சைகையில் பேசி மொழியின்றித் திரிந்தார்
ஒலியின்றி மொழியும் ஒளிந்தே கிடந்தது
முதன்மை மொழியாய்த் தமிழே தவழ்ந்தது
அமிழ்தத் தமிழை அள்ளியே பருகிட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!
வீட்டில் விசேடம் துக்கச் செய்திகள்
அறிவிக்க அடித்தோம் அந்நாள் தந்திகள்
சேரும் முன்னே செயல்களும் முடிந்திடும்
சொடுக்கும் காலம் செய்திகள் கொடுத்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!
கணினி படைத்தார் கைப்பேசிஅளித்தார்
கடலும் கடந்த உறவுகள் எல்லாம்
நினைக்கும் நேரம் கைக்குள் தோற்றம்
நேரலைப் பேச்சினில் நெஞ்சம் நெகிழ்ந்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!
சந்தைக் கென்றே நேரம் ஒதுக்கி
ஓடி அலைந்தோம் பொருள்களைத் தேடி
காய்கறி யோடு உணவும் உடையும்
கதவைத் தட்டி வந்தே கொடுத்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..?
காவிரி பொன்னி கருகிடும் நிலையினில்
கைகளை விரித்தது கருநா டகமும்
கபினியில் குதித்து மிரட்டிட மழையும்
கருணையில் ஆறுகள் ஏரிகள் நிறைந்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!
நவீன உலகில் வஞ்சம் பஞ்சம்
எட்டு வழிக்காம் வயல்வெளி தெய்வம்
நிலத்தைப் பறித்தார் நட்டார் கல்லை
எட்டத் தூக்கி நட்டதை எரிந்திட
இன்னும் தவம் செய்வோம் - நாம்
இன்னும் தவம் செய்வோம்..!
எத்தர்கள் எங்கிலும் நிறைத்தார் கோடி
சத்தியம் யாவும் ஒளிந்தது ஓடி
காமராஜர் பாதையைத் தொடர்ந்து
நாமும் நாட்டுக்கு நற்செயல் புரிந்திட
இன்னும் தவம் செய்வோம் - நாம்
இன்னும் தவம் செய்வோம்..!
தவங்கள் இன்னும் வளர்த்திட வேணும்
மதங்கள் பிடித்த மனிதர் நாட்டில்
நேயம் கொன்றார் தலைவன் என்றார்
மாயங்கள் புரியும் சாயங்கள் வெளுத்திட
நாளும் வதம் செய்வோம் - நாம்
நாளும் வதம் செய்வோம்..!

No comments:

Post a Comment