'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


கவியரங்கத் தலைமை :
மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
முன்னிலை :
பாவலர் கருமலைத் தமிழாழன்

தொடக்கக் கவிதை

என்ன தவம் செய்தோம்

இறை வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினில் நான்குணர்ந் தானைந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்
சென்றனன் தானிருந் தான்உணர்ந்(து) எட்டே!

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்குறு வேந்தனாய்க்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கமென் றேத்திடும் நாதனை நாடொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்(று) உன்னியான் போற்றுகின் றேனே

தமிழ்வாழ்த்து

நாப்பிளந்த போதே நற்றமிழ்ச் சொல்லெடுத்துப்
பாப்படைக்கும் பாவலனாய்ப் பக்குவமாய் ஆக்கிவைத்தாய்

பல்முளைக்கும் முன்னே பரிந்தெடுத்துப் பைந்தமிழாள்
சொல்முளைக்கச் செய்த துணிவால் தொடங்குகிறேன் 

பேர்வைத்த போதே பிணங்கா(து) எனையாண்டு
சீர்தந்(து) அணைத்த  சிறந்தவளே நீவாழி

காலாற நான்நடக்கக் கற்ற பருவத்தே
நாலா யிரந்தமிழை நாவினில் வைத்தவளே

அழுத்திக் கையூன்றி ஆடி எழும்போதே
எழுத்தெடுத்துத் தந்த இனியவளே! நாட்டில்

பசையோடு வாழும் பகைவர்க்(கு) இடையே
அசையோடு பாடும் ஆற்றல் அளித்தவளே

விளையாடும் போது விருப்போடு பாடும்
தளையாகி நின்ற தருவே இறையே

முடியாத காவியமாய் முத்தமி ழில்நான்
அடியெடுத்துப் பாட அருகில்நீ வந்திடுவாய்

கவியரங்கத் தலைமை அறிமுகம்

நான்
விட்டகுறை தொட்டகுறை தொட்டுவர ஒத்துகவி
   வித்தையொடு கொட்டுகவிஞன்
இட்டமொடு சுற்றிவரும் அட்டியுடை நட்பவரை
   இச்சையொடு நத்திமகிழ்வேன்
பட்டதுயர் மற்றவர்கள் விட்டகலும் முற்றவொரு 
   பட்டறிவு கொட்டிஉயர்வேன் 
கட்டழகி  முத்தமிழ வித்தகியைக் கைச்சிறையில்
   கட்டியுளம் வைத்தவரதன்

செய்யதிரு மெய்யவளை உய்யுவழி கொள்வன்ஒரு
   சில்லரையும் கொள்வதிலையே
வெய்யமுளம் உள்ளவரின் பொய்யுரையும் செய்வினையும்
   மெய்யின்வினை நையஅழியும்
தய்யதக தய்யவென எள்ளிவரும் புல்லரவர்
   சல்லிமனம் மெல்ல அழியும்
கொய்யுமென துள்ளம்எழும் பொய்யில்அதும் நல்லறமும்
   கொள்ளியெனும் வல்லகவியே

பிஞ்சுமகன் என்றனையும் நஞ்சுமிகக் கொண்டவர்கள்
   பிஞ்சிடவும் நந்தி வருவீர்
அஞ்சுகிற மந்தனென எண்ணியெனை அஞ்சுவதும்
   அந்தமிழே என்றுகொளுவீர்
தஞ்சமென மென்றமிழ மண்டினில் அலைந்துவரும்
   தங்கமிவன் அஞ்சலிலையே
கொஞ்சுபவன் துஞ்சுவது செஞ்செவிய செந்தமிழின்
   கஞ்சநிகர் கொஞ்சுமடியே

கைக்காசைச் செலவழித்துப் புகழைச் சேர்க்கும்
   கவிஞர்கள் பலபேரில் ஒருவன் அல்லன்
மொய்க்கின்ற வண்டாக விருதைத் தேடி
   முனைப்போடு சுற்றுகின்ற சிறுமை கொள்ளேன்
பைக்குள்ளே பணத்தோடும் புகழ்ப்பாட் டோடும்
   பலரிடத்தே அடிவருடும் பண்பைக் கொள்ளேன்
தைக்கின்ற சொல்வீசிப் பகைவர் கட்குச் 
   சாட்டையடி கொடுக்கின்ற பாவ லன்நான்

விருதுக்கும் பதவிக்கும் பட்டத் திற்கும்
   விலைபோனால் நானெதற்கிங்(கு) எழுத வேண்டும்?
எருமைகளாய் நாலைந்து தடியர் தம்மை
   எம்மோடே அடியாளாய் வைத்தி ருந்தால்
பெருமைகளும் மாலைமரி யாதை யெல்லாம்
   பெற்றிடுதல் மிகவெளிதே அதைநான் வேண்டேன்
கருத்துள்ள கவிதைகளால் குமுகா யத்தின்
   களைகளைதல் மட்டுந்தான் என்றன் வேலை

சிறப்போடு நான்வாழ வேண்டு மாயின்
   திரைத்துறையில் எப்போதோ நுழைந்தி ருப்பேன்
பிறகெதற்கிங்(கு) இலக்கணத்தைக் கற்க வேண்டும்
   பிதற்றலெனும் எதைஎதையோ எழுத லாமே
முறையாகப் படித்திங்குப் பட்டம் பெற்ற
   மூங்கைகள் பலருக்கும் வாய்க்க வில்லை
சிறப்பான செந்தமிழின் மரபைக் காக்கும்
   சிலபேரில் ஒருவன்நான் அதுவே போதும் 

அவை வணக்கம்

பூத்தொடுத்தால் அழகான மாலை யாகும்
   புனைந்துரைத்தால் அதுநல்ல கவிதை யாகும்
பாத்தொடுத்தால் கம்பனது காவி யம்போல்
   பார்போற்றிப் புகழ்கின்ற பனுவல் ஆகும்
நாத்தொடுத்துச் சொல்வீசி உங்கள் முன்னே
   நலந்தொடுத்துப் பேசவந்தேன் என்றன் பாட்டில்
வாய்த்துடுக்காய் எதுவரினும் பொறுப்பீர் என்று
   வண்டமிழ் அவையோரை வணங்கு கின்றேன்

என்ன தவம் செய்தோம்

என்னதவம் செய்தோமோ என்று சொல்ல
   ஏழெட்டுப் பாவலர்கள் வந்துள் ளார்கள்
என்னதவம் நாம்செய்தோம் இவற்றைக் கேட்க
   என்றுநமைச் சொக்கவைக்கும் கவிதை செய்வார்.
கன்னலெனும் தேன்கவியைச் சுவைப்ப தற்குக்
   கைப்பேசி இயக்கத்தை நிறுத்தி வைப்பீர்
கண்களினைக் காதுகளாய்த் திறந்து வைத்துக்
   காசில்லை பணமில்லை கவிதை கேட்போம் 

No comments:

Post a Comment