நிறைவு கவிதை
மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
பட்டுச் சிறகாலே ஒத்தி எடுக்கின்ற
பட்டுக் கவிதந்தீர் பாவலர்காள் வாழ்த்துகிறேன்
கட்டிக் கரும்போ கனகமணி யாரமோ
கட்டிவைத்த பூச்சரமோ என்றயர்ந்து பார்க்கின்றேன்
முட்டச் சிறகிலிட்டு மூடிநமைக் காப்பாற்றும்
மட்டில்லாத் தாய்ப்பாசம் உம்கவியில் பார்க்கின்றேன்
சொட்டச்சொட்டத் தேன்குடித்தும் சோர்வில்லாத் தீந்தமிழில்
கொட்டிக் கவிதந்தீர் கோடிமுறை வாழ்த்துகிறேன்
தட்டுப்பா டின்றித் தமிழாலே மேலோங்கி
எட்டா உயரத்தை எட்டுங்கள் முட்டுங்கள்
முன் தோன்றி வந்தவினம் என்கின் றார்கள்
மூத்தகுடி நம்குடியாம் பெருமை தானே
மண்தோன்றா முன்தோன்றி உலகோர்க் கெல்லாம்
வாழ்வியலைத் தந்தமொழி தமிழே என்றார்
பண்பாட்டை உலகிற்கே கற்றுத் தந்த
பண்பாட்டுத் தொட்டிலென்றார் தமிழி னத்தை
இன்றிந்தத் தமிழ்க்குடியில் பிறப்ப தற்கே
என்ன தவம் செய்தோமோ தெரிய வில்லை
மருத்துவத்தை பக்தியிலே மறைத்து வைத்து
வாழ்வாங்கு வாழும்வழி சொல்லி வைத்தான்
கருத்தான தத்துவங்கள் வாழ்விற் கேற்ற
கணக்கியலும் அறிவியலும் கொட்டித் தந்தான்
ஒருபந்தை ஒன்பதுகோள் சுற்று தென்ற
உண்மையினைக் கண்டறிந்தான் இப்பேர்ப் பட்ட
எருவான தமிழ்க்குடியில் பிறப்ப தற்கே
என்னதவம் செய்தோமோ தெரிய வில்லை
சிக்கல்கள் பலவற்றில் தீர்வு கண்டான்
சிந்தனைக்கு வித்திட்டான் தியானம் யோகம்
தக்கபடி உளவியலும் உணர்வும் இன்னும்
தமிழென்ற மொழிதந்தான் இவன்சொல் லாத
எக்கருத்தும் இங்கில்லை சொல்லப் போனால்
இப்படித்தான் வாழவேண்டும் என்று சொன்ன
இக்குடியில் நாம்வந்து பிறப்ப தற்கே
என்ன தவம் செய்தோமோ தெரிய வில்லை
நம் பெருமை அறியாமல் வாழு கின்றோம்
நட்டத்தை உணராமல் வாழு கின்றோம்
தம்குடும்பம் தம்இன்பம் போதும் என்று
தமிழ்க்குடும்பம் என்பதையே மறந்து விட்டோம்
பம்மாத்து வேலைகள் செய்து செய்தே
பகட்டாக வாழ்கின்றார் பல்லோ ரிங்கே
இம்மாந்த ரோடு வந்து பிறப்ப தற்கே
என்ன தவம் செய்தோமோ தெரிய வில்லை
எழுத்தினிலும் பேச்சினிலும் தமிழைக் கொல்வார்
ஏன்பேச வேண்டுமென்று வாதம் செய்வார்
கழுத்துக்கு நேராகக் கத்தி வந்தும்
காணாமல் கதறாமல் திரிய லானார்
வழுவாகப் பிழையாகத் தமிழ்கற் பித்து
வண்டமிழை அழிப்பதையே குறியாய்க் கொள்வார்
நழுவுகின்ற தமிழறிஞர் பலராய் ஆனார்
நரிக்கூட்டம் நாட்டாமை செய்யு தையா
மொழிவாழ்ந்தால் இனம்வாழும் இனத்தின் மேன்மை
முற்றாக வேரூன்றும் பிற்கா லத்தில்
வழித்தோன்றல் தமிழினமாய் நின்று வாழும்
வரலாற்றில் தமிழினமே முதன்மை என்று
அழியாமல் எழுதட்டும் செயல்ப டுங்கள்
அன்னைமொழி தமிழாவாள் அவளுக் கென்றும்
பழியொன்றும் நேராமல் பாது காப்போம்
படைசேர்ப்போம் அணிசேர்ப்போம் வாரீர் வாரீர்
எனக்கூறிக் கவியரங்கை முடிக்கின் றேன்நான்
இதுவரையில் துணைநின்ற கலைவா ணிக்கும்
பிணக்கின்றி என்நாவில் வந்த மர்ந்த
பீடுடைய தமிழ்த்தாய்க்கும் நன்றி நன்றி
மனக்காட்டுத் தேனடையாம் கவிஞர்க் கென்றன்
வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவிக் கின்றேன்
எனக்கிந்த வாய்ப்பளித்த தமிழ்ச்சோ லைக்கும்
இன்றமிழ நண்பர்க்கும் நன்றி நன்றி!
No comments:
Post a Comment